என்னைவிட ஒரு வருடம் சீனியர் அவர். பொறியியல் கல்லூரி ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார். வாத்தியார் வேலை. சுமாரான சம்பளம். இப்பொழுது வேலையை விட்டுவிட்டார். சுயதொழில் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். ‘கொஞ்சம் டல்தான்..ஆனா அதுக்கு இது பரவால்ல’ என்றார். பிரச்சினை என்னவென்றால் பொறியியல் கல்லூரியில் சம்பளம் ஒழுங்காகத் தருவதில்லை. பல சமயங்களில் பதினைந்தாம் தேதிக்குப் பிறகுதான் சம்பளம் வருகிறதாம். சில சமயங்களில் இரண்டு அல்லது மூன்று மாதச் சம்பளங்களைச் சேர்த்துத் தருகிறார்கள் என்று புலம்பினார். அவருக்குத் திருமணமாகி குழந்தை ஒன்று என குடும்பம் ஆகிவிட்டது. சமாளிப்பது வெகு கஷ்டம். வேறு எப்படியாவது சம்பாதிக்கலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்.
‘அட்மிஷனே இல்லை என்பதுதான் பிரச்சினை’ என்பது அவரது புரிதல். அது மேல்மட்ட பிரச்சினை. கல்லூரியில் மாணவர்கள் ஏன் சேர்வதில்லை என்ற கேள்விக்கான பதில்தான் அடிப்படையான பிரச்சினை.
பல கல்லூரிகளில் நிர்வாகம் சரியில்லை. பொறியியல் கல்லூரி நிர்வாகம் என்பது பொன் முட்டையிடும் வாத்து என்பதைத் தாண்டி எதையுமே யோசிக்காத நிர்வாகத்தினர்தான் கணிசமாக இருக்கிறார்கள்.
சேலத்தில் பிரபலமான கல்லூரி அது. நிறுவனர்களுக்கு வேறு பல தொழில்கள் இருக்கின்றன. ஒரு வடக்கத்திக்காரரைச் செயலாளராக நியமித்து நிர்வாகத்தை ஒப்படைத்து வைத்திருந்தார்கள். அந்த மனிதர் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டையைப் போட்டுவிட்டார். நகரத்தை விட்டுச் சற்று தள்ளி பெரிய கல்லூரி ஒன்றைக் கட்டிவிட்டார். தமது கல்லூரிக்கு எந்தப் பொருள் வேண்டுமானாலும் தம் பொறுப்பில் இருக்கும் கல்லூரியின் பெயரில் பில் போட்டு பொருட்களை வாங்கி தம் சொந்தக் கல்லூரியில் நிரப்பியிருக்கிறார். முதலாளிகள் கண்டுபிடித்து அந்த மனிதரை வெளியேற்றுவதற்குள்ளாக வடக்கத்திக்காரர் வெகு வக்கனையாகச் சம்பாதித்துக் கொண்டார். அவர் மட்டுமில்லை- அவரோடு சேர்ந்திருந்த அல்லக்கை ஒருவருக்குச் தற்பொழுது சொந்தமாக இரண்டு பள்ளிகள் இருக்கின்றன. இன்னும் எத்தனை பேர் சுரண்டித் தின்றார்களோ தெரியவில்லை. வடக்கத்திக்காரரின் பொறுப்பில் இருந்த கல்லூரிக் கட்டிடம் பாழடைந்து கொண்டிருக்கிறது. முதலாளிகள் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
எந்தக் கல்லூரியைச் சொல்கிறேன் என்று யூகித்திருக்க முடியும். அதே கல்லூரிதான்.
வருடம் ஐநூறு ரூபாய் கூட சம்பள உயர்வு கொடுக்காத தனியார் கல்லூரிகள் ஏகப்பட்டவை இருக்கின்றன. மாணவர்களின் சேர்க்கை நிறைய இருக்கும். ஆனால் லாபத்தை எடுத்து வேறு தொழிலில் முதலீடு செய்வார்கள். அதற்கும் ஒரு கல்லூரியை உதாரணமாகக் காட்ட முடியும்.‘சேர்மேன் இருக்கிற வரைக்கும் பரவால்ல..பசங்க வந்துட்டாங்க..அவங்க சினிமா எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க’ என்று ஒரு கல்லூரி நிர்வாகம் பற்றிய மின்னஞ்சல் வந்திருந்தது. விசாரித்துப் பார்த்தால் அது உண்மைதான். பிறகு எப்படி சம்பளம் தருவார்கள்? வீண் புகழுக்கும் பெருமைக்குமாகச் செய்கிற விஷயங்கள் இவை. சினிமாத் தொழில் தெரியாதவர்கள் இந்தக் காலத்தில் எத்தனை பேர் சினிமாவில் சம்பாதித்திருக்கிறார்கள்? யோசிக்காமலா முதலீடு செய்திருப்பார்கள்? சினிமாவில் நடிகர்கள் சம்பாதிக்கலாம். தயாரிப்பாளர் என்றால் பழம் தின்று கொட்டை போட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் தலையில் துண்டு போட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
தொடக்கத்தில் சிறப்பாகச் செயல்பட்டு பிறகு இப்படி விதவிதமான காரணங்களால் நாசமாகப் போன கல்லூரிகளை வைத்து ஆவணப்படமே தயாரிக்கலாம்.
பெருமைக்கும் பீற்றலுக்குமாக கண்ட கண்ட பந்தாவையெல்லாம் செய்து கடைசியில் ‘பசங்க யாருமே சேர்றதில்லை’ என்றால் எப்படிச் சேர்வார்கள்? வெற்றிகரமான தனியார் கல்லூரிகளின் நிர்வாகத்தைக் கவனித்துப் பார்த்தால் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள முடியும். வருகிற வருமானத்தை எடுத்து கல்லூரியிலேயே முதலீடு செய்வார்கள். கல்லூரி சேர்மேன் சம்பளம் வாங்கிக் கொள்வார். மீதமிருக்கும் தொகை கல்லூரிக்குள்ளேயே முதலீடு செய்யப்படும். கல்லூரி விரிவடைந்து கொண்டேயிருக்கும்.
தமிழகத்தில்தான் சாராய வியாபாரி, கள்ளக்கடத்தல் செய்தவன், பாலியல் புரோக்கராக இருந்தவனெல்லாம் கல்வித்தந்தைகள். வள்ளல்கள். சமூகத்தை உய்விக்க வந்த கல்விக் கொடையாளர்கள். எப்படி விளங்கும்? கல்லூரி தொடங்கி வசூல் வேட்டையை நடத்தினார்கள். ‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டியதுதானே?’ என்று அவ்வப்பொழுது கஜானாவை வழித்து எடுக்கிறவர்கள்தான் அதிகம்.
‘எம்.டெக் முடிச்சுட்டு ஏழாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு இருக்கேன்..வேற ஏதாவது வேலை கிடைக்குமா?’ என்று ஒருவர் கேட்டிருந்தார். ஐந்தாயிரம் ரூபாய் சம்பளமே ஒழுங்காக வராத முதுநிலை படித்த கல்லூரி ஆசிரியர்களைத் தெரியும். வேலை தேடுவது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியமாக இல்லை. புதிய ஆசிரியர்களை எடுக்க எந்த நிர்வாகமும் தயாராக இல்லை. இருக்கிறவர்களை வைத்துக் காலத்தை ஓட்டலாம் என்ற முடிவில்தான் இருக்கிறார். இன்னமும் இரண்டொரு வருடங்கள் கழித்தால் நிலைமை மாறும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு.
சத்தியமாக மாறாது.
பொறியியல் கல்லூரிகளின் அடிப்படை நிர்வாகக் கட்டமைப்பு மாறாவிட்டால் எதுவும் சாத்தியமில்லை. தமிழகத்தின் முதல் ஐம்பது கல்லூரிகளுக்குப் பிரச்சினையில்லை. மாணவர்கள் சேர்ந்துவிடுவார்கள். மீதமிருக்கும் நானூற்றுச் சொச்சம் கல்லூரியும் இனி ஒவ்வொரு வருடமும் மூச்சுத் திணற வேண்டும். ஒவ்வொன்றாக மூட வேண்டியிருக்கும். பொன் முட்டையிடும் வாத்து இப்பொழுது அறுபட்டுவிட்டது. அறுத்துவிட்டார்கள்.
எம்.டெக் அல்லது எம்.ஈ முடித்துவிட்டு கல்லூரியில் ஆசிரியராகிவிடலாம் என்கிற தப்புக்கணக்கில் யாரேனும் இருந்தால் அதைவிட மடத்தனம் எதுவும் இருக்க முடியாது. இப்போதைக்கு நிலைமை சரியில்லை.
ஊர்ப்பக்கம் ஒரு சொலவடை உண்டு. ‘வெத்து பெருமைக்கு வெள்ளாட்டை அறுத்தவன் தம் புள்ளை கையில புடுக்கைக் கொடுத்தானாம்’ என்பார்கள். பெருமைக்காக வெள்ளாட்டை அறுத்தவன் தனது மகன் கையில் கடைசியில் மிச்சமான ஜிங்குனமணியைக் கொடுத்தான் என்று அர்த்தம். பெருமைக்காகவும் வருமானத்திற்காகவும் மட்டுமே கல்லூரியைக் கட்டினால் அங்கே பணிபுரிகிற ஆசிரியர்களுக்கும் படித்து வெளியே வருகிற மாணவர்களுக்குக் கடைசியில் அதுதானே மிஞ்சும்?
14 எதிர் சப்தங்கள்:
//..வருகிற வருமானத்தை எடுத்து கல்லூரியிலேயே முதலீடு செய்வார்கள்...// - Best Example VIT
ture
//மீதமிருக்கும் நானூற்றுச் சொச்சம் கல்லூரியும் இனி ஒவ்வொரு வருடமும் மூச்சுத் திணற வேண்டும். ஒவ்வொன்றாக மூட வேண்டியிருக்கும்//
அப்போது தான் பொறியியல் அதன் தரத்தை அடையும்.
அன்புள்ள திரு,
வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை மனதில் வைத்துக் கொண்டுதான் அந்த வரியை எழுதினேன். ஆனால் வெளிப்படையாக பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று தோன்றியது. நீங்கள் சொல்லிவிட்டீர்கள் :)
VIT also starts opening new campuses thus by killing their golden duck...
//எந்தக் கல்லூரியைச் சொல்கிறேன் என்று யூகித்திருக்க முடியும். அதே கல்லூரிதான்//
அப்போ இது?
True... majority engineering colleges don't pay. Many engineering students surviving somewhere else.
நீங்கள் குறிப்பிட்ட கல்லூரியின் பாலிடெக்னிக் தமிழகத்தின் மிக பிரபலமான ஒன்று. அந்த காலத்தில் இருந்தே வடக்கத்தியர் அங்கு தான் இருந்தார். எனக்கு தெரிந்தவரை அவருக்கு மிக நல்ல பெயர்தான். கல்லூரியின் உரிமையாளர் மிகப்பெரிய தொழிலதிபர். அவர்களுக்கு இங்கே பெங்களூரில் கூட தொழிலும் சொந்தமாக கட்டிடங்களும் உண்டு. ஒரு பத்து வருடம் முன்பு அவர் தொழிலில் முடங்கியபோது, அந்த நகரத்தில் உள்ள பல பெரிய மனிதர்கள் சொல்லியும் கேட்காமல் அவரின் வீட்டையே plot போட்டு விற்றவர்கள் தான் இவர்கள். வடக்கதிகாரரின் ஒரு மகன் அந்த ஊரிலேயே உள்ள ஒரு பெரிய ரியல் எஸ்டேட் மற்றும் ஆர்க்கிடெக்ட். அவரின் இன்னொரு மகன் US ல் இருந்தார். நான் gulf ல் இருந்து திரும்பிய வருடம். US கு அவர்கள் ஆள் அனுப்பிக்கொண்டிருந்த போது நான் மூவரையும் சந்தித்தேன். பலமுறை சந்தித்திருக்கிறேன். அவர்கள் ஒரு online university க்கு பிளான் செய்து கொண்டிருந்தார்கள். என்னை கல்லூரியில் சேரவும் சொன்னார்கள். மிக நல்ல சம்பளம்தான் பேசினார்கள். அதாவது US offer 3/4 மேட்ச்சாகும் வரை. சரி என்று சொல்லியிருந்தால் நான் ்எழுத்தாளரெல்லாம் என்னிடம்தான் படித்தார்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கலாம்.
கொங்கு பொறியியல் கல்லூரி - 20 வருடங்களுக்கு முன்னும், இப்போதும் பார்த்தால் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.
//எந்தக் கல்லூரியைச் சொல்கிறேன் என்று யூகித்திருக்க முடியும். அதே கல்லூரிதான்//
//அப்போ இது?//
Sona college to Dheeraj lal Gandhi engg college.
‘வெத்து பெருமைக்கு வெள்ளாட்டை அறுத்தவன் தம் புள்ளை கையில புடுக்கைக் கொடுத்தானாம்’ என்பார்கள். பெருமைக்காக வெள்ளாட்டை அறுத்தவன் தனது மகன் கையில் கடைசியில் மிச்சமான ஜிங்குனமணியைக் கொடுத்தான் என்று அர்த்தம்.. :) :) :) :)
😡💂👀🙏
அப்ப “ஜிங்குனமணி...ஜிங்குனமணி” -னு ஒரு பாட்டு வருமே! அதுக்கு இதுதான் அர்த்தமா? அடங்கொப்புரானே!
வெள்ளாட்ட அறுத்துப்போட்டு ஒருத்தன் சொன்னானாம்-- ”ஆடும் புடுக்கும் அடியோட போச்சு”னு!
"வடக்கத்திக்காரரின் பொறுப்பில் இருந்த கல்லூரிக் கட்டிடம் பாழடைந்து கொண்டிருக்கிறது. முதலாளிகள் திணறிக் கொண்டிருக்கிறார்கள்."
அவ்வளவு மோசமா போகவில்லை. இன்று அனைத்து கல்லுரிகளுக்கும் உள்ள பிரச்சனை தான் அதற்க்கும் ஆனால் மற்ற இடங்களை விட இங்கு பிரச்சினை குறைவு தான்
Post a Comment