Jul 11, 2017

மஜரட்டி

மஜரட்டி என்றொரு கார் இருக்கிறதா? இருக்கிறது. Maserati. முந்தாநாள் வரைக்கும் எனக்குத் தெரியாது. ஞாயிற்றுக்கிழமையன்று இயக்குநர் சசியைச் சந்திக்கச் சென்றிருந்தேன். கே.கே.நகரில்தான் அவரது வீடு. ‘கோபியில் ஒரு வேலை இருக்கு சார்..முடிச்சுட்டுத்தான் பெங்களூர்’ என்றதற்கு ‘சேலம் வழியாவா?’ என்றார். பேருந்து மாற்றி மாற்றி மறுநாள் காலையில் ஊரை அடைவதுதான் திட்டம். ‘இவங்க ரெண்டு பேரும் சேலம்தான் போறாங்க’ என்று அவரது நண்பர்களைக் கைகாட்டினார். ஒருவர் பால். அவரது இணை இயக்குநர். ‘ஐநூறு ஆயிரம் ரூபாயை ஒழிச்சுடலாம்’ என்று பிச்சைக்காரன் படத்தில் ஒரு வசனம் வருமல்லவா? அதை இயக்குநரிடம் சொன்னவர். அநேகமாக மோடிக்கும் அவர்தான் ஐடியா சொல்லியிருக்க வேண்டும். அவர்களது வண்டியில் தொற்றிக் கொண்டேன். அது மஜரட்டி இல்லை.

காரில் நிறையப் பேசிக் கொண்டிருந்தோம். என்னை ஓட்டுநரின் அருகில் அமரச் சொல்லிவிட்டார்கள். 

சேலத்துக்கு சற்று முன்பாகச் சென்று கொண்டிருந்த போது கருப்பு நிற மஜரட்டி கார் எங்களைத் தாண்டிச் சென்றது. மஜரட்டி இத்தாலிய கார். ஒன்றரை கோடி ரூபாய்தான் தொடக்க விலையே. இந்த மாதிரியான பணக்காரக்கார்களைப் பார்க்கும் போது ‘அப்படி என்னதான்யா இருக்கும்?’ என்று மனம் யோசிக்கும். அம்மாவும் அப்பாவும் சாலைப்பயணத்தின் போது உடனிருந்தால் ‘இந்த ஆடி கார் முப்பத்தாறு லட்சம்’ ‘அந்த பென்ஸ் நாற்பதைத் தாண்டும்’ என்று சொன்னால் வாயைப் பிளப்பார்கள். அவர்கள் வெளிப்படையாகக் காட்டிக் கொள்கிறார்கள் என்றால் நான் உள்ளுக்குள் வைத்துக் கொள்வேன்.
சிறுவயதில் ஊருக்குள் ஏதேனும் கார் வந்தால் அமர்ந்து பார்க்க வேண்டும் என்று தோன்றும். அம்பாஸிடர் காருக்குள்ளிருந்து வரக்கூடிய வாசத்திற்கு ஒரு ஈர்ப்பு உண்டு. அம்பாஸிடருக்கு மட்டுமில்லை- கிட்டத்தட்ட ஒவ்வொரு காருக்கும் ஒரு வாசனை. ‘சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசமுண்டு. கண்டதுண்டா’ மாதிரி தனித்த வாசனை. எல்லோரும் உள்ளே அமர அனுமதிப்பார்களா? கைகளைக் கண்ணாடி மீது குவித்து வைத்து உள்ளே எட்டிப் பார்த்துச் சந்தோஷம் அடைந்த வயது அது. வண்டிக்காரர் வந்துவிட்டால் ‘கண்ணாடியெல்லாம் வடவடன்னு ஆகும்..தொடாதீங்கடா’ என்று துரத்தியடிப்பார்.

‘மஜரட்டிக்கு என்னங்க இவ்வளவு விலை’ என்றேன். 

‘கார் விலையெல்லாம் மனசைப் பொறுத்தது. நயன்தாராவும் பெண்மணிதான். நம்மூர் பெண்ணும் பெண்மணிதான். ப்ராண்டுக்குத்தான் சார் வேல்யூ’என்றார் பால். என்னவொரு தத்துவம்? அதுவும் சரிதான்.

மஜரட்டி நூற்றைம்பது கிலோமீட்டர் வேகத்தில் தாண்டியது. சில வினாடிகள்தான். வ்ர்ர்ர்ரூரூரூம்.

சாலைகளில் வாகனத்தை நாம் ஓட்டிச் சென்றால் அவ்வளவாகக் கற்பனை ரெறக்கை கட்டாது. அடுத்தவர்கள் ஓட்ட நாம் அமர்ந்திருக்க வேண்டும். ஒரு பாடலாசிரியர் பற்றிச் சொல்வார்கள். தனது மகிழ்வுந்திலேயே சிறிய Bar ஒன்றை வைத்திருப்பார். காலையில் வாகனத்தில் ஏறி அமர்ந்து குடிக்க ஆரம்பித்தால் ஆம்பூர் செல்வதற்குள் குடித்து முடித்திருப்பார். ஒரு பாடல் பிறந்திருக்கும். அங்கே ஒரு பிரியாணியை முடித்துவிட்டு சென்னை திரும்புவதற்குள் இன்னொரு போத்தல். இன்னொரு பாடல். அடுத்தவர்கள் ஓட்டிச் செல்கிற வாகனத்தில் அமர்ந்து சாலையை வேடிக்கை பார்ப்பதில் அலாதி இன்பம்.

கற்பனை கத்தரியில்லாமல் அலைந்து கொண்டிருந்தது.

மஜரட்டி மாதிரியான ஒரு வாகனத்தை வாங்குவதைவிடவும் அதில் அமர்ந்து பார்த்துவிட வேண்டும். ஓட்டுநர் வின்சென்ட்டுக்கு ஒரு முறையாவது ஓட்டிப் பார்த்துவிட என்று தோன்றியிருக்கக் கூடும். ‘நான் நல்லா ட்ரைவ் பண்ணுறேனா சார்?’ என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தார். ‘சூப்பருங்க’ என்று சொன்ன போதெல்லாம் ஒன்றரை இன்ச் நெருங்கி வந்து ஸ்நேகப்பூர்வமாகப் பேசினார்.  

பாதை நெடுகவும் வறட்சிதான். கிட்டத்தட்ட தமிழகமே காய்ந்து கிடக்கிறது. சேலத்துக்கு சற்று முன்பாக தலைவாசல் என்ற ஊரில் மட்டும் மழை ஆரம்பித்திருந்தது. சற்றே பலமான மழை. வின்சென்ட் வண்டியின் வேகத்தைக் குறைத்திருந்தார். சாலையில் நீர் தேங்கியிருந்தது. ‘மழை பெய்யாம இருந்தா அரை மணி நேரம் முன்னாடி போய்டலாம்’ என்றார். நன்றாகப் பெய்யட்டும். இரண்டு மணி நேரம் தாமதம் ஆனாலும் பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டேன். சாலையோரமாக இரண்டு வாகனங்களை ஓரங்கட்டியிருந்தார்கள். அதில் மஜரட்டியும் ஒன்று. அருகே நெருங்க நெருங்க விபத்து என்று புரிந்தது. மஜரட்டிதான். மழை ஈரத்தில் ப்ரேக் அடித்திருக்கிறார். வண்டி திரும்பி சாமையோரமிருக்கும் இரும்பிலாலான தடுப்புக் கம்பியில் அடித்திருக்கிறது. பெயர்ந்து வந்த கம்பி வாகனத்தின் முன்பக்கக் கதவைத் துளைத்துக் கொண்டு உள்ளே நுழைந்திருந்தது. பலூன் பிரிந்து ஆட்களைக் காப்பாற்றியிருந்தது.

வண்டியை ஓட்டி வந்தவர் உள்ளே சிக்கியிருந்தார். நாங்கள் வண்டியை நிறுத்திவிட்டு வருவதற்குள் வண்டியை விட்டு வெளியே வந்துவிட்டார். பதறியபடி இருந்தார். 

‘எந்த ஊர் சார் போகணும்?’.

‘திருப்பூருங்க’ என்றார். பாண்டிச்சேரியிலிருந்து கணவனும் மனைவியுமாக வந்து கொண்டிருந்தவர்கள் அவர்கள். திருப்பூரில் ஏற்றுமதி நிறுவனம் நடத்துகிறாராம். இணையத்தில் தேடிக் கண்டுபிடித்தேன்.

வின்சென்ட் ‘என்ன விலை சார் ஆகுது?’ என்றார். ‘இந்த நேரத்தில் விலையைக் கேட்கிறாரே’ என்று தோன்றியது. ஆனால் வண்டிக்காரருக்கு அந்தக் கணத்தில் யாராவது ஒருவருடனாவது பேசலாம் என்று தோன்றியிருக்க வேண்டும். ‘ஒன்னேமுக்கால் கோடிங்க....போச்சு’ என்றார். 

எனக்கு திக்கென்றானது. அடிப்பட்டிருந்த வண்டி சாலையின் ஒரு பக்கத்தை மறைத்து நின்றது. ஓரங்கட்டவும் சாத்தியமில்லை. வண்டி கம்பியில் சிக்கி நகரவில்லை. ‘சர்வீஸ் ஸ்டேஷன்ல சொல்லுங்க’ என்ற போது தனது செல்போனைத் தேடினார். அது வண்டிக்குள் சிக்கியிருந்தது.

‘நெம்பர் சொல்லுங்க..டயல் பண்ணுறேன்’ என்றேன். அது silent mode.

‘உள்ள போய்த் தேடுங்க’ என்றார். எனக்குத் தயக்கமாக இருந்தது. உள்ளே அமர்ந்து பார்க்க விரும்பியிருக்கக் கூடாதோ எனத் தோன்றியது. குற்றவுணர்வு இல்லாமல் இல்லை. விதி நம்முடைய அற்பத்தனமான ஆசைகளை எப்படியாவது நிறைவேற்றி வைத்துவிடும்.

வேறு யாரும் அருகாமையில் இல்லை. கதவைத் திறந்து உள்ளே அமர்ந்தேன். ‘சேலை கட்டும் பெண்ணுக்கொரு’ பாடல் நினைவுக்கு வந்தது. நேரங்கெட்ட நேரத்தில் நேரங்கெட்ட நினைவுகள். மஜரட்டி பணக்காரப் பெண்ணாக இருந்தது. மழையில் தொப்பலாக நனைந்திருந்தேன். செல்ஃபோன் இருக்கைக்கு அடியில் வாகாகச் சிக்கியிருந்தது. எடுத்துக் கொடுத்த பிறகு செல்போனில் அவர் யாரையோ அழைக்கத் தொடங்கியிருந்தார்.

ஈரத்தோடு சேலம் வந்து சேர்ந்தேன். ‘உனக்கு உட்கார்ந்து பார்க்கணும்ன்னுதான ஆசை..உட்கார்ந்துட்டீல்ல..வாங்கணும்ன்னு ஆசைப்பட்டுடாத’ என்று கடவுள் சொல்வது போலவே இருந்தது. வாங்கிட்டாலும்..

பேருந்து நடத்துநர் ஒன்றேமுக்கால் ரூபாய் கொடுக்கவில்லையென்றாலும் கூட புலம்புகிற ஆள் நான். ‘உங்கள் வலி புரிகிறது....இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்’ என்று எஸ்.எம்.எஸ் அனுப்பி வைத்துவிட்டு பேருந்தில் ஏறிய போது வழக்கம் போலவே பேருந்தில் சிவ சிவ சிவகாசி என்று விஜய் ஆடத் தொடங்கியிருந்தார்.  

7 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//. ‘உனக்கு உட்கார்ந்து பார்க்கணும்ன்னுதான ஆசை..உட்கார்ந்துட்டீல்ல..வாங்கணும்ன்னு ஆசைப்பட்டுடாத//
அதெல்லாம் மனதை பொறுத்தது மணி.நமக்கு (என்னையும் சேர்த்து தான்) அந்த மனது அமையவில்லை.அதாவது பசிக்கு சோறு கிடைத்தால் போதும் ,பை நிறைய பணமிருந்தாலும் பர்கருக்கு ஆசைப்படாத மனம்.
நம்மால் நல்ல மனிதர்களாக வாழ முடியும். தேர்ந்த அரசியல் வாதியாகவோ, வியாபாரியாகவோ ஆக முடியாது.ஆகவே முடியாது.

Malar said...

Just then browsed and saw that car, logo looks like "Soolayutham" ...1.75 crores!!..cannot even imagine in Indian roads..

Unknown said...

"விதி நம்முடைய அற்பத்தனமான ஆசைகளை எப்படியாவது நிறைவேற்றி வைத்துவிடும்" - so True. Have experienced many times.

leny said...

Hello Malar, the vehicle logo is TRIDENT similar to THRISOOLAM & its the Weapon of Poseidon who the god of sea & water.

Jaypon , Canada said...

விட்ட 1.75 கோடியை மறுபடியும் சம்பாதிக்க உயிரோடு விட்டானே ஆண்டவன். அந்த கேட்டுக்கு முன்னாடி எந்த அப்பாவியும் நிக்க வெச்சு பார்க்காம விட்டானே அதுக்கு நன்றி.

Anonymous said...

மணி...அந்தக் காரை “மாஜராட்டி” என்று சொல்ல வேண்டும். ஜ என்பது zha என்று உச்சரிக்கப் படவேண்டும்!

K Siva said...

more info...
The trident prominent in the Maserati logo is the traditional symbol for Bologna, where the cars were originally made (they're now built in nearby Modena).