Jul 6, 2017

சனிக்கிழமை வந்துடுங்கய்யா..

சனிக்கிழமை மாலை ஐந்து மணி, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கை நினைவூட்டுவதற்காக இப்பதிவு.

பதினைந்து பள்ளிகள் இறுதி செய்யப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த பன்னிரண்டு பள்ளிகளைவிடவும் மூன்று கூடுதல். இறுதியாக சிங்கப்பூரில் இருக்கும் சிலம்பரசனின் நண்பர்கள் குழு ஒரு பள்ளிக்கும், அதே சிங்கப்பூரைச் சார்ந்த வலசை அமைப்பினர் இரண்டு பள்ளிகளுக்குமான பணத்தை அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆக, பதினைந்து பள்ளிகள். சற்றே பெரிய பட்டியல் இது. கடந்த முறை இதே திட்டத்தைச் செயல்படுத்திய சில பள்ளிகளிலிருந்து கிடைக்கப்பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் இம்முறை பள்ளிகளைத் தேர்வு செய்து வைத்திருக்கிறோம். இனி பதினைந்து பள்ளிகளிலும் நூலகத்திட்டத்தை எப்படிச் செயல்படுத்துகிறார்கள் என்பதன் அடிப்படையில் அடுத்த கட்டச் செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பதினைந்து பள்ளிகளும் ஏதாவதொரு விதத்தில் சிறப்பு வாய்ந்தவை என நிச்சயமாகச் சொல்ல முடியும்.

திரு.உதயச்சந்திரனிடம் ‘நிகழ்வில் தங்களுடன் ஒரு கலந்துரையாடல் வைத்துக் கொள்ளலாமா?’ என்று வினவியதற்கு சரி என்று சொல்லியிருக்கிறார். மாலை ஏழரை மணிக்கு நூலத்தை மூடிவிடுவார்கள் என்பதால் அதற்குள்ளாக நிகழ்வை முடித்துக் கொள்ள வேண்டியிருக்கும். பதினைந்து பள்ளிகளையும் பற்றிய சிறு அறிமுகத்தைச் சொல்லி அவர்களிடம் புத்தகங்களை வழங்க பதினைந்து முதல் இருபது நிமிடங்கள். பள்ளிக் கல்வித்துறைச் செயலர் பேசி முடித்த பிறகு கலந்துரையாடலை வைத்துக் கொள்ளலாம். பள்ளி கல்வித்துறை சார்ந்த கேள்விகளை அவரிடம் பார்வையாளர்கள் கேட்கலாம். கலந்துரையாடலுக்காக முப்பது முதல் நாற்பத்தைந்து நிமிடங்களை ஒதுக்கினால் சரியாக இருக்கும்.

திருவாரூர் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கு பத்து நிமிடங்கள். தாங்கள் எப்படி வாசிக்கிறோம் என்று காட்டவிருக்கிறார்கள். தெரு நூலகம் என்ற பெயரில் அட்டகாசப்படுத்திக் கொண்டிருக்கிற பள்ளி இது. புத்தகங்கள் கைவசம் இல்லாமலே கலக்குகிறவர்கள். அவர்களை மேடையேற்றி ரசிக்கலாம்.

அடுத்த பத்து நிமிடங்கள் அறக்கட்டளையின் செயல்பாடுகள் பற்றிப் பேசுவதற்காக எடுத்துக் கொள்கிறேன். அறக்கட்டளையின் செயல்பாடுகள் என்பதைவிடவும் பள்ளிகளிடமிருந்து என்னவிதமான ஒத்துழைப்புகளை எதிர்பார்க்கிறோம் என்று பேச வேண்டும். நூலகத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துகிற சில பள்ளிகளைச் சுட்டிக்காட்டி அவர்கள் எவ்வாறு அமுல்படுத்தியிருக்கிறார்கள் என்று பிற பள்ளிகளிடம் விளக்க வேண்டும். மற்றபடி, இன்றைய கல்வித்துறை பற்றிய கலந்துரையாடலை நிகழ்த்துவதற்கான ஒரு திறந்தவெளி மேடையாக இருந்தால் சிறப்பு எனத் தோன்றுகிறது.

நிகழ்ச்சி 7.30க்கு சரியாக முடிந்துவிடும். 

பதினைந்து பள்ளிகளில் நூலகம் அமைப்பது என்பது ஒரு கனவுத் திட்டம். அமைப்பதோடு நில்லாமல் அதன் விளைவுகளைப் புரிந்து கொள்வதும் அவசியமாக இருக்கிறது. இத்திட்டத்திற்கு கை கொடுத்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. பதினைந்து பள்ளிகளிலிருந்தும் ஒன்றிரண்டு ஆசிரியர்களாவது நிகழ்வுக்கு வருகிறார்கள். அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், திருப்பூர், சேலம், மதுரை, ஈரோடு, சிவகங்கை என்று தமிழகம் முழுவதிலுமிருந்து பரவலான பள்ளிகளைச் சேர்ந்த பள்ளிகள்.

எப்போதும் உடனிருக்கும் நிசப்தம் தளத்தை வாசிக்கிற அனைவருக்கும் நன்றி. நிகழ்வுக்கு வருக.

இதுவொரு பொதுவான மேடை. மாணவர்களுக்கு சிறகு பூட்டுவதற்காக சிறு உதவியைச் செய்கிறோம். புத்தகங்கள்தான் மாணவர்களின் கனவுகளுக்கு வர்ணம் பூசுகின்றன. வர்ணம் பூசுவதற்கான வண்ணக்கலவைகளை நாம் வாங்கித் தருகிறோம். ஆசிரியர்களும் மாணவர்களுமாகச் சேர்ந்து வர்ணம் பூசட்டும். சிறகுகளை விரிக்கட்டும்.

அனைவரும் வருக. 

7 எதிர் சப்தங்கள்:

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

அன்பின் மணி, அரும்பெரும் நிகழ்வான சனிக்கிழமை அன்று வர இயலாத எம் போன்றோரின் சார்பில் ஒரு உரிமை உடன் ஆன வேண்டுகோள்.. நிகழ்வு முழுவதும் கண்டு களிக்கும் வகையில் ஏற்றம் இட்டால் நலம். வாழ்க வளமுடன்.

Unknown said...

Dear Mani sir,

A request, please record the function and upload it in YouTube or in Nisaptham blog, since it will help to watch those who unable attend the function.

ulavan said...

சிறப்பு.

உங்கள் புத்தக தேர்வு அருமையாக இருந்தது. இவ்வளவு வேலையையும் இழுத்து போட்டு செய்யும் உங்களுக்கு எங்கள் அன்பும் ஆதரவும்.

எங்கள் ஊரின் இளைஞர்கள் சேர்ந்து எங்கள் கிராமத்து பள்ளிக்கு இந்த நூல்களை வாங்கித்தரலாம் என்று எண்ணம். அத்தனை நூல்களையும் யாரிடம் மொத்தமாக வாங்கலாம்? புத்தகம், தபால் செலவு எல்லாம் சேர்த்து (தோராயமாக) எவ்வளவு விலை?

நன்றி.

Vaa.Manikandan said...

புதியதொரு வேலை தருகிறீர்கள் :)

தன்னார்வலர் (Volunteer) கிடைத்தால் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்துவிடலாம். கிடைக்கவில்லையென்றால் மன்னிக்கவும். செய்ய முடியுமா என்று தெரியவில்லை.

Mohamed Ibrahim said...

I will be in the venue.

Dr A Govindaraju said...

I wish a great success in your venture

Amanullah said...

விழா சிறப்பாக நடக்கும், அட்வான்ஸ் வாழ்த்துக்கள்