Jul 2, 2017

பார்ப்பானை அடி

‘பார்ப்பானுங்கதான் பிரச்சினை’ என்று நண்பர் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். சமீபத்தில் ஏழெட்டு பேர் சேர்ந்து குரல் எழுப்பும் ஒரு காணொளிக்காட்சியும் கூட வெளியாகி இருந்தது. தமிழகத்தின் பண்பாட்டு அரசியலைப் புரிந்து கொள்ளாமல் எழுப்பப்படுகிற ஒரு மேம்போக்கான வன்மக்குரலாகத் தான் இதைப் புரிந்து கொள்கிறேன். 

‘பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி’ என்று சொல்வார்கள். அதை அப்பட்டமாக நம்பிக் கொண்டிருந்ததும் உண்டு. அப்படி நம்புவதே கூட என் சுயசாதியின் அக்கிரமங்களை மறைத்து மொழுகுவதற்காகத்தான் என்று புரிந்து கொள்ள வெகுகாலம் ஆகவில்லை. எங்கள் பகுதியில் சக்கிலியர் மீதும் பறையர் மீதும் பார்ப்பான் செலுத்துகிற ஆதிக்கத்தை விடவும் கொங்குவேளாளர்களும் நாய்க்கர்களும் முதலியார்களும் செலுத்துகிற ஆதிக்கம் குரூரமானது. பிறகு ஏன் பார்ப்பானை மட்டும் எதிர்க்க வேண்டும்?

பார்ப்பான் மட்டும்தான் பிரச்சினையா என்ன? பிரச்சினைகளைப் பார்ப்பனர்களின் மீது போட்டுவிட்டு தம்மை உத்தமர்களாகக் காட்டிக் கொள்ளும் உயர் சூத்திரச் சாதியின் சூட்சமம் இது. கவுண்டர்களும், வன்னியர்களும், நாட்டுக்கோட்டைச் செட்டியார்களும், முக்குலத்தோரும், நாடார்களும் தம்மை விட தாழ்ந்த சாதியினரை தங்கத்தட்டில் வைத்துத்தான் குலாவுகிறார்கள். இல்லையா? பிறகு எந்த லட்சணத்தில் பார்ப்பனர்களை நோக்கிக் கை நீட்டுகிறோம்?

எங்கள் பகுதியில் ஒரு நம்பிக்கை உண்டு. கொங்கு வேளாளர்களிலிருந்து சில குடும்பங்களைப் பிரித்து ‘சவரம் பண்ணுறது, சடங்கு பண்ணுறதையெல்லாம் நீ பார்த்துக்க’ என்று நாவிதர்களைப் பிரித்து வைத்ததாகச் சொல்வார்கள். ‘நீயும் நானும் வேற சாதி இல்லடா’ என்று நாவிதர்களைக் குளுகுளுவென்று வைத்துக் கொள்வதற்காகச் சொல்லப்படுகிற கதை அது. அதே கொங்குவேளாளர்கள்தான் நாவிதன் எதிர்ப்பட்டால் ‘சகுனமாகிடுச்சு’ என்று திரும்ப வீட்க்கு வந்து தண்ணீர் குடித்துவிட்டு பிறகு செல்வார்கள். இது வன்மம் இல்லையா? இப்படி ஒவ்வொரு உயர் சூத்திரச் சாதியும் ஏதாவதொரு வகையில் தம்மை விட தாழ்த்தி வைத்திருக்கும் சாதிகளின் மீது தாம் செலுத்துகிற ஆதிக்கமும் அதிகாரமும் குலைந்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்தபடியே ‘பார்ப்பான் ஒழிக’ என்று குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் மண்ணில் ஒரு காலத்தில் பார்ப்பனர்களும் உயர் சூத்திரச் சாதியினரும் கைகோர்த்துத்தான் நில உடைமை, உள்ளூர் ஆட்சி அதிகாரம் என்றிருந்தார்கள். பழங்காலம் தொடங்கி ஆங்கிலேயேர்கள் காலம் வரையிலும் இதுதான் சூழல். மறுக்க முடியுமா என்ன? ஆதியில் மக்கள் முல்லை, மருதம், நெய்தல் என்று இடத்தின் அடிப்படையில்தான் மக்கள் பிரிந்திருந்தார்கள். அதன் பிறகு சாதிப் பிளவுகள் உண்டாகி நாடுகள் வடிவம் பெறுகிற போது அரசியல், இராணுவ நிர்வாகத்தை அரசன் பார்த்துக் கொள்ள உள்நாட்டு சிவில் நிர்வாகத்தை கோவில்கள் பார்த்துக் கொள்ளத் தொடங்கின. அந்தக் கோவில் நிர்வாகத்தில் இருந்த சாதிகள் என்றால் அவை பார்பனர்களும், உயர் சூத்திரச் சாதிகளும்தான். கூட்டு அதிகாரம்.

இது வெறுமனே யூகத்தில் வைக்கப்படுகிற கருத்து இல்லை. பழங்காலத்திலிருந்து தமிழகத்தில் நிலவி வரும் இடங்கை-வலங்கைப் பிரச்சினை பற்றி சற்றே புரிந்து கொண்டாலும் கூடப் போதும். 

பார்ப்பனர்கள், வேளாளர்கள், வன்னியர்கள், பறையர்கள் ஆகியோர் வலங்கைச் சாதியினர். பறையர்கள் எப்படி இந்தக் குழுவில் வந்தார்கள் என்று குழம்ப வேண்டியதில்லை. பிற வலங்கை சாதியினருக்கான அடியாள் வேலையைச் செய்து கொடுப்பதற்காக அவர்களைத் தம்மோடு வைத்திருந்தார்கள். கடந்த ஐம்பதாண்டுகளுக்கு முன்பு வரையிலும் கூட ஊரின் கடைநிலைப் பணியாளர்களான தலையாரிகள் என்பவர்கள் பறையர்களாகத்தான் இருந்தார்கள் என்பதை கவனிக்கலாம். கம்மாளர்கள், குயவர்கள், அருந்ததியர் உள்ளிட்ட பிற சாதிகள் இடங்கைச் சாதிகள். ஆண்டவர்கள் வலது பக்கம். ஆளப்பட்டவர்கள் இடப்பக்கம். இவர்களுக்கிடையிலான பூசல்கள் என்பவை காலங்காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

வலங்கைச் சாதிகள் என்ற பெயரில் அரசர்களைக் கைக்குள் வைத்துக் கொண்டு உள்ளூர் சிவில் நிர்வாகத்தைக் கைக் கொண்டிருந்த உயர் சாதிக்குழுக்கள்தான் இடையில் தமிழகத்தில் இசுலாமியப்படையெடுப்பு நிகழும் போது உயர் சூத்திரச் சாதிகளின் அதிகாரம் கை நழுவியதை உணர்ந்து விஜயநகரப் பேரரசுவுக்கு ஆதரவளித்தார்கள். விஜயநகரப் பேரரசு தமிழகத்தில் கால் பதித்தவுடன் தமது உள்ளூர் அதிகாரத்தை தெலுங்கு உயர்சாதிகளுடன் தமிழ் உயர்சாதிகள் பகிர்ந்து கொள்ளத் தயாரானார்கள். இதுதான் ஆங்கிலேயே ஆட்சி அமையும் வரைக்கும் நடந்த கூட்டு அதிகார முறை. 

ஆங்கிலேயே ஆட்சியில் பெருமளவிலான பிராமணர்கள் ஆங்கிலேயர்களுடன் ஒத்துப் போகிறார்கள். அரசுப்பணிகளில் அவர்கள் இடம்பெறுகிறார்கள். அப்பொழுதிருந்துதான் ‘அவன் மேல போய்ட்டான் பாரு’ என்று பிராமணர்- பிராமணர் அல்லாதவர்களுக்கான பிரச்சினை வலுப்பெறுகிறது. பிரமாணர் அல்லாதவர்கள் கூட்டமைப்பில் தலித்துக்களுக்கு இடம் இருந்ததாகத் தெரியவில்லை. 

இப்படி வரலாறு முழுக்கவுமே சாதி அரசியல் என்பது தமது சுயசாதியின் வல்லாதிக்கத்தை விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்பதற்கான கயவாளித்தனம்தான். அதற்காக இவர்களுக்கு திராவிடம், தமிழ் என்று இன்னபிற அடையாளங்கள் தேவைப்படுகின்றன.

ஆங்கிலேயேர்கள் வெளியேறிய பிறகு ஆட்சி அதிகாரத்தில் வலுப்பெற்றிருந்த பார்ப்பனர்களை வலுவிழக்கச் செய்த உயர் சூத்திர சாதியினர் இன்று வரைக்கும் பல சாதிகள் மீது ஏதாவதொரு வகையில் குரூரமான ஆதிக்கத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். அது இனியும் தொடரத்தான் போகிறது. இப்படியான கட்டமைப்புதான் இன்றைக்கு வலுவான, தர்க்க ரீதியில் விவாதிக்கக் கூடிய, வாக்கு அரசியலுக்குப் பலியாகாத தலித் தலைவர்களுக்கான இடத்தை காலியாகவே வைத்திருக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக அப்படியொரு தலைவர் உருவாகவே இல்லை.

பார்ப்பனர்களை எதிர்ப்பது என்பதே கூட ‘நீ அவனைப் பாரு’ என்று கவனத்தைத் திசை திருப்பி நாம் நம்மை விடக் கீழே இருப்பவனை அடிக்கும் தந்திரோபாயம்தான் என்று தோன்றுகிறது. பார்ப்பனர்களுக்கு மேல்பூச்சு பூசுவதற்காக இதைச் சொல்லவில்லை. பார்ப்பனர்களை எதிர்ப்பதற்கு நமக்கு இருக்கும் காரணங்களுக்கு இணையான காரணங்கள் தமிழகத்தில் இன்னபிற உயர்சாதிகளை எதிர்ப்பதற்கு இருக்கின்றன. ஆனால் அதை நாம் கண்டுகொள்வதேயில்லை. எஸ்.வி.சேகரும், எச்.ராஜாவும் பேசக் கூடிய அபத்தமான கருத்துக்களைப் போலவே பிற சாதிக்குழுவினர் பேசிக் கொண்டும் தமது சாதிகளைச் சேர்ந்த இளைஞர்களைக் கொம்பு சீவிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். எச்.ராஜாவையும், சேகரையும் கண்டிக்க வேண்டியிருக்கிறதுதான். ஆனால் அதே சமயத்தில் தமிழகத்து இளைஞர்களிடம் ஆழமாக ஊடுருவிக் கொண்டிருக்கும் சாதிய உணர்வை(அல்லது) வெறியை நாம் எளிதாகக் கடந்து சென்று கொண்டிருக்கிறோம்.

பார்ப்பனீயத்தை எதிர்ப்பதற்கும் பார்ப்பானை எதிர்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.

மேம்போக்கான ஒரு சாதி சார்ந்த வன்மம் என்பது எந்தக் காலத்திலும் பலனளிக்காது. அது தமது குற்றங்களை மறைக்கும் பூச்சாகவே இருக்கும். நம் சாதியக் கட்டமைப்பு பற்றிய புரிதலும் விவாதமும் அறிவார்ந்த தளத்தில் மட்டுமில்லாமல் சாமானிய மக்களிடமும் உருவாக வேண்டும். முன்னோர்கள் செய்த அநியாயங்களிலிருந்து தம்மை விலக்கிக் கொள்வது பற்றிய தெளிவு உயர் சாதிக்குழுக்களிடம் ஏற்படுவதும் தமது முன்னோர்கள் அனுபவித்த கொடுமைகளுக்குக் இன்றைய தலைமுறையை முரட்டுத்தனமாக எதிர்ப்பதை பிற சாதிகளும் கைவிடுவதும்தான் இலகுவான சாதிய நீக்கத்திற்குக் வழிகோலும். அதைத் தவிர தீவிரமாக எதைச் செய்தாலும் சாதியக் கட்டமைப்புகளை இன்னமும் வலுவானதாகவேதான் ஆக்கிக் கொண்டிருக்கும். இன்றைக்குத் தொழில்நுட்பம் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது.

15 எதிர் சப்தங்கள்:

ADMIN said...

எப்பொழுது இந்நிலை மாறும்? யார் அதை மாற்றுவார்கள்? சாதி வெறியில் திளைத்துக் கொண்டிருப்பவர்கள் திருந்துவார்களா? விட்டுக் கொடுப்பார்களா?

மகேஸ் said...

என்ன சொல்றது, ஒரு அளவுக்கு வளர்ந்தவுடன் மேல்தட்டு பார்ப்பண வர்க்கத்துடன் பழக்க வழக்கம் ஏற்பட்டு இது போல் பதிவு வருகிறது.

சேக்காளி said...

//தமது முன்னோர்கள் அனுபவித்த கொடுமைகளுக்கு //
இப்போதும் கொடுமைகள் நடந்து கொண்டுதானிருக்கிறது.

Prakash said...

அந்த ஒரு ஜாதிய தூக்கி பிடிக்க எத்தனை ஜாதிய மட்டம் தட்டி இருக்கீங்க???

பார்ப்பனர்களை பத்தி எழுத ஆரம்பிச்சிசா இத மாதிரி 100 பதிவு போடலாம்...

அன்பே சிவம் said...

ஜாதி!..?...
அது இருக்கட்டும்.!
தாராளமாய்....(+..or..-!)
குருதி வடிவில். நாம் இனியும் அதை நம்

அங்கீகாரமென கருதுதல்..
அவமானமே..

Sudhagar said...

//அதன் பிறகு சாதிப் பிளவுகள் உண்டாகி நாடுகள் வடிவம் பெறுகிற போது //

Saadhi pilavugal thaanaa vandhadhaa, illa Manu Sastra-padi vandhadha? Manu Sastram yaar thanthathu?

பொன்.முத்துக்குமார் said...

// பார்ப்பனர்களை பத்தி எழுத ஆரம்பிச்சிசா இத மாதிரி 100 பதிவு போடலாம்... //

போடலாங்க பிரகாஷ், போடணும். கூடாதுன்னு யாரும் சொல்லவே இல்லை. ஆனா அவங்களபத்தி “மட்டும்” விமர்சிக்காம அவங்க பண்ணின, பண்ணுற அயோக்கியத்தனத்துக்கு கொஞ்சமும் குறைவில்லாம - சொல்லப்போனா அதைவிட அதிகமாவே - செஞ்சிட்டு இருக்கிற எல்ல்ல்ல்லா சாதிகளைப்பத்தியும் “சேத்தே” விமர்சிக்கணும்-கிறதுதான் இந்த பதிவோட சாராம்சம்.

புரியலீங்களா ?

raja said...

நீங்கள் சொல்வது தான் நிஜம். கோயமுத்தூர் பக்கம் பட்டியில் அடைத்து அடிப்பார்கள். நான் ஊர் பெயர் சொல்ல விரும்ப வில்லை. எந்த கொம்பனும் அடுத்தவனை விட உசத்தி கிடையாது, பிறப்பால்!! இது இயற்கையின் விதி. கனவில் சுய இன்பம் பெறுபவனுக்கும், தான் அடுத்தவனை விட உசத்தி என்று நினைப்பவனுக்கும் வித்தியாசம் கிடையாது.

Anonymous said...

இன்னவரைக்கும் ஜாதி இல்லேன்னு எத்தினி பாப்பான் சொல்றான்னு பாரு, புரியும். அமேரிக்கா வரைக்கும் ஜாதி சங்கம் வச்சிருக்கான். சிலிகான் வாலி - ல பாப்பான் இல்லாத ஒருத்தனுக்கும் அங்க இருக்கிற ஸ்டார்ட்டப் இந்தியன் அசோஸியேஷன்ல உதவி கிடைக்காது. மத்தவன்லாம் உத்தமன்ன்னு நான் சொல்லல. மொதல்ல தலை ஜாதி இல்லேன்னு ஒத்துக்கிட்டா வாலு ஏன் ஆடுது?

Anonymous said...

மொதல்ல தலை ஜாதி இல்லேன்னு ஒத்துக்கிட்டா வாலு ஏன் ஆடுது.
APPA NEENGALE 'பாப்பான்' தலை INNU OTHUKIRINGALA. THAT MAY NOT BE YOUR INTENTION. IT MAY BE JUST A SLIP.
'PIRAPUKKUM ELLA UUIRKUM' ENDRU 2000 YEARS MUNNE SONNA 'VAUUVAR' PIRANDHA MANN IDHU.
IT IS THE PRESENT DAY POLITICIANS WHO ARE RESPONSIBLE. BRITISHERS DIVIDED US BY RELIGION. POLITICIANS DIVIDE US BY CASTE.
'THINNIYAM' MALAM THINNUM INCIDENT, LAW COLLEGE BEATING OF DALIT STUDENTS, NO DALIT SEATS IN MP/MLA IN OTHER THAN RESREVED CONSTITUENCIES ETC.
THE BLOG IS ESSENTIALLY TO SAY HAVING SO MUCH 'ALLUKKU' IN OUR 'MUDHUHU' LET US NOT BLAME OTHERS.
THE BLOG IS TO TELL 'THOSE WHO HAVE NOT SINNED CAST THE STONE'.
LET US ALL RESO LVE TO REMOVE CASTE FROM OUR MINDS/LIVES.
ANBUDAN,
M.NAGESWARAN.

shreyas-shares said...

அந்தணனை ஆரியனென்று அந்நியமாக்கி
அரிஜனனை என்றும் அடிமை ஆக்கி
அரசியல் அதிகாரத்தைப் பங்கு போட்டு
ஆதாயம் தேடும் உத்திதான் பார்ப்பன எதிர்ப்பு
அரிஜனனை அர்ச்சகர் ஆக்க சட்டம் போட்டாலும்
அரியணைக்கு தனயனைத் தானய்யா தயார் செய்கிறார்கள்
சமூக நீதியும் சமத்துவமும் சாத்தான் ஓதும் வேதங்கள் அல்லவா!

Unknown said...

//முன்னோர்கள் செய்த அநியாயங்களிலிருந்து தம்மை விலக்கிக் கொள்வது பற்றிய தெளிவு உயர் சாதிக்குழுக்களிடம் ஏற்படுவதும்... இலகுவான சாதிய நீக்கத்திற்குக் வழிகோலும்//

என்ன சொல்ல வரீங்கனு சரியா புரியல. முன்னோர்கள் செய்த அநியாயங்களிலிருந்து தம்மை முற்றிலுமாக உயர்சாதிக் குழுக்கள் விடுவித்துக்கொள்ள முடியாது. அப்படி செய்வதாலும், அந்த அநியாயங்களைப் பற்றி அறிந்தே கொள்ளாமலும், அறிந்தும் அவற்றைப் புறந்தள்ளிவைத்துத் தான் சிலர், இட ஒதுக்கீட்டை முற்றிலுமாய் ஒழித்துவிட்டு தகுதியின் அடிப்படையில் மட்டும் தான் வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும் என்று வாதிடுகின்றனர். தன் சாதியால் பிறருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பற்றித் தேடிப் புரிந்து கொள்வதும், Reparations என்கிற கருத்தாக்கத்தையும் தான் அவர்கள்/நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

Shankar said...

வா.ம மேலோட்டமாக சொன்னதை "ஜெமோ" நடுநிலையுடன் (without any prejudice) ஆழமாக அலசி இருக்கிறார்.

http://www.jeyamohan.in/67150#.WVzdDISGOUk

Excerpts from his article:

ஆனால் அடிக்கடி பெரியார் பிறந்த மண் என்ற பிலாக்காணம் வேறு. நண்பர்களே ஈரோட்டில்தான் இன்றும் தனிக்குவளை முறை இருக்கிறது. பெரியார் பிறக்காத, நம்பூதிரி பிறந்த கேரளத்தில் அதைக்கேட்டால் அதிர்ந்து கைநடுங்கிவிடுவார்கள். இந்த பாவனைகளைப்பற்றி இனிமேலென்றாலும் மனசாட்சி உடைய சிலராவது உடைத்து பேசிக்கொள்ளவேண்டாமா?

====
இடதுசாரித் தொழிற்சங்கங்கள் 90கள் வரை பெரும்பாலும் சாதிய அடிப்படை அற்றவை. ஆகவே அங்கே மேலே சொன்ன முற்போக்குப் பிராமணகள் செயல்பட முடிந்தது. அவர்களின் ஈடிணையற்ற உழைப்பு இல்லையேல் தமிழகத்தில் தொழிற்சங்க இயக்கமே இல்லை. பெரும்பாலான தொழிற்சங்கங்களைக் கட்டி எழுப்பியவர்களில் பிராமணர்கள் முதன்மையாக இருப்பார்கள்.
====
1997 என நினைக்கிறேன். நான் தியாகராஜ உத்சவத்துக்காக திருவையாறு சென்றிருந்தேன். பெரும்பாலும் பிராமணர்கள் பங்குகொள்ளும் விழாவாக அது இருந்தது அப்போது. அங்கே தியாகராஜரின் பாடல்கள் மட்டுமே பாடப்படும். அவர் தெலுங்கில் மட்டுமே பாடியவர். அங்கே ம.க.இ.கவினர் வந்து “தமிழில் பாடு இல்லையேல் ஓடு’ என்று கூச்சலிட்டுக்கொண்டே இருந்தனர்.
அன்றைய நிகழ்ச்சியை அவர்கள் சிதைத்தனர். அதிகபட்சம் முப்பதுபேர். போலீஸ் அவர்களை அழைத்து கொண்டு வெளியே விடும். உடனே வேறுவழியாக திரும்பி வந்தார்கள். அங்கிருந்த ஐந்தாயிரம் பேரும் பொறுமையாகக் காத்திருந்தனர். சிலர் கண்ணீர்விட்டனர்.
அதேநாளில் அன்று கன்னட வொக்கலிக மாநாடு கோவையில் நடந்தது. தேவேகௌடாவும் சரோஜாதேவியும் கலந்துகொண்டார்கள் என்று நினைவு. ஒரு ம.க.இ.கவினர் அங்கே செல்லவில்லை. ஏனென்று அவ்வியக்க நண்பரிடம் கேட்டேன். ‘அந்த அளவுக்கு எங்களுக்கு நம்பர் இல்ல தோழர்’ என்றார்
ஈரமண்ணை தோண்டும் எளிய அரசியல் மட்டும்தான் இது. எவ்வகையான உண்மையான சமூக மாற்றத்தையும் இது உருவாக்கப் போவதில்லை. தன் சாதியை பண்பாட்டு ரீதியாக மேலும் மேலும் தொகுத்துக்கொண்டே செல்பவர்கள் பிராமணச் சாதியின் பண்பாட்டு அடையாளங்களை மட்டும் ஆதிக்கச்சின்னங்கள் என்று காண்பதைப்போல கீழ்மை பிறிதில்லை.
====
பாலைவன மக்கள் ஒரு சடங்குசெய்வார்களாம். வருடத்தில் ஒருமுறை ஒரு வெள்ளாட்டைப்பிடித்து கிராமத்திலுள்ள அத்தனை நோய்களையும் அதன்மேல் ஏற்றுவதற்குரிய சில பூசைகளைச் செய்தபின் அதை ஊரைவிட்டுத் துரத்தி பாலைவனத்தில் விடுவார்கள். அது நீரின்றி செத்து காய்ந்து அழியும். நோய்கள் ஊரைவிட்டு விலகிவிட்டதாக இவர்கள் எண்ணிக்கொள்வார்கள்
சாதிவெறியில் ஊறிய தமிழகம் அப்படிக் கண்டெடுத்த வெள்ளாடுதான் பிராமணர்கள். அதன்மூலம் இங்கே இன்னமும் தலித்துக்களை அடிமைகளாக்கி வைத்திருக்கும் பழியில் இருந்து இடைநிலைச்சாதிகளும் பிரமணரல்லா உயர்சாதியினரும் தப்பித்துக்கொள்கிறார்கள்.
====
‘பிராமணன் பீயள்ளுவதைக் கண்டதுண்டா’ என்று ஒருவர் கேட்டிருந்தார். ”இல்லை, செட்டியாரும் முதலியாரும் கவுண்டரும் தேவரும் நாடாரும் கூடத்தான் அள்ளுவதில்லை’ என்று நான் பதில் சொன்னேன்.
பிராமணன் உடலுழைப்பு செய்வதில்லை என்று இங்கே மேடைமேடையாகச் சொல்லப்படுகிறது. நான் கண்ட பிராமணர்களில் பாதிப்பேர் ஓட்டல்களில் இரவுபகலாக சமையல்வேலை செய்து வியர்குருவும் ஈரச்சொறியும் கொண்ட உடல்கொண்டவர்களே. ஆம் ‘சொறிபிடித்த பார்ப்பான்’ என்று பாவேந்தர் பாரதிதாசனார் அவர்கள் வசைபாடினாரே, அவர்கள்தான். ஆனால் வியர்த்து ஒழுக வெலைசெய்யும் வேளாளரைக் கண்டதில்லை, நாயிடுவைக் கண்டதில்லை.
====
பிராமண வெறுப்பு என்பது தலித்வெறுப்பின் மறுபக்கம். தலித் வெறுப்பு உள்ளடங்கி இருக்கிறது. பிராமண வெறுப்பு வெளிப்படையாக முற்போக்கு முகத்துடன் முன்வைக்கப்படுகிறது. பிராமண வெறுப்பு கொண்டவன் உறுதியாக தலித் வெறுப்பாளனே. தலித் வெறுப்பை கைவிடுபவன் பிறப்பு அடிப்படையில் எவரையும் வெறுக்கமுடியாதவன் ஆகிறான். அவனால் பிராமணர்களையும் வெறுக்கமுடியாது.

இன்றைய தமிழ்ச்சமூகத்தின் கீழ்மைகளில் முதன்மையானது அது கொண்டிருக்கும் சாதியவெறுப்பே. பிராமணர்களும் தலித்துக்களும் இருவகையில் அதன் பலியாடுகள். நாகரீகமறிந்த இளைஞர்கள், தாழ்வுணர்ச்சியில் இருந்து வெளிவந்த நவீன மனிதர்கள், தன் ஆற்றலிலும் அறிவிலும் நம்பிக்கை கொண்டவர்கள், இனிமேலாவது இக்கீழ்மையில் இருந்து வெளிவரவேண்டும்.
======
நன்றி.

பொன்.முத்துக்குமார் said...

// அமேரிக்கா வரைக்கும் ஜாதி சங்கம் வச்சிருக்கான். //

பெயர், ஆதாரத்தோட குறிப்பிட இயலுமா ?

// சிலிகான் வாலி - ல பாப்பான் இல்லாத ஒருத்தனுக்கும் அங்க இருக்கிற ஸ்டார்ட்டப் இந்தியன் அசோஸியேஷன்ல உதவி கிடைக்காது //

எவ்வளவு தூரம் உண்மை-ன்னு தெரியலை. என்ன மாதிரி உதவிய நீங்க குறிப்பிடுகிறீர்கள்-னு புரியலை. நீங்க அ-பிராமணரா இருந்து உதவி கேட்டு நீங்க அ-பிராமணரா இருந்த காரணத்துகாகவே உதவி மறுக்கப்பட்டீங்களா-ன்னு தெரியலை. இந்த நிலைமைல இது குறித்து எதுவும் சொல்ல இயலாது.

அடுத்த அபத்தம் இது. அது என்ன “தலை” ?

சரி, ஒரு வாதத்துக்காகவே வச்சிப்போம். பிராமணர்கள் நாளைமுதல் ஜாதி இல்லைன்னு ஒத்துக்கிட்டா அடுத்த நொடில இருந்து மத்த ஆதிக்க ஜாதிகள் ஜாதி இல்லை-ன்னு ஒத்துக்கிட்டு தான் செஞ்சிட்டு இருக்கிற ஜாதிக்கொடுமைகளை - தலித்துகளுக்கு இரட்டை டம்ளர், தலித்துகள் நடத்தும் கடவுள் ஊர்வலங்களை தமது தெருக்களில் மறுத்தல், தீண்டாமைச்சுவர், தீண்டாமையை காத்துக்கொள்ளும்பொருட்டு மாறின கிறித்தவ மதத்திலிருந்து மீண்டும் தாய் மதத்துக்குத்திரும்புதல், மலம் திணித்தல், தலித் இளைஞர்களை காதல்மணம் புரிந்துகொண்ட தமது ஜாதி பெண்களை ஆணவக்கொலை செய்தல் ........ - ஸ்விட்ச் ஆஃப் பண்ணின மாதிரி நிறுத்திடுவாங்க-ன்னு சொல்றீங்களா ?

ஏன், ஒரு மாறுதலுக்காக, நாம மொதல்ல நம்ம வன்கொடுமைகளை அடியோட ஒழிச்சிட்டு வக்கோடும் வாக்கோடும் தில்லோடும் நெஞ்சில் உரத்தோடு நேர்மைத்திறத்தோடும் பார்ப்பான பாத்து கேப்போமே, ‘நீங்க இன்னும் மாறலையாடா, திருந்தலையாடா ?’-ன்னு.. அதுக்கு ஏன் நம்மால முடியல ?

தான் செஞ்சிட்டு இருக்கிற தப்புக்கு பார்ப்பான் மேல பழிபோடற அதே மனநிலைதான் இது.

Anonymous said...

எல்லாம் சரிங்க.. வண்ணியர் இடங்கை சாதி என்பது தவறு.. இடங்கை வலங்கை புராணத்தை படித்து தெரிந்து கொள்ளவும். சூத்திர உயர் சாதி என்பதும் தவறு. ஒவ்வொரு சாதிக்குள்ளும் வர்ணம் உண்டு.