பொறியியல் கலந்தாய்வுக்கான தகுதிப்பட்டியல் வெளியாகிவிட்டது. அடுத்தது கலந்தாய்வுதான். இந்தச் சமயத்தில் குழப்பமாகத்தான் இருக்கும். எந்தக் கல்லூரி, எந்தப் பாடப்பிரிவு என்றெல்லாம் மண்டை காயும்.
கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை முடிவுற்று ‘இனி பொறியியல்தான்’ என்று இருக்கிற இத்தகைய தருணத்தில் தொடர்பு கொள்கிறவர்களுக்குக் பொதுவாகக் காட்டுகிற வழிமுறைகளை எழுதிவிடலாம் என்று தோன்றுகிறது.
1) பொறியியல் படிப்பைப் பொறுத்த வரையில் முதலில் பாடத்தை முடிவு செய்து கொள்ள வேண்டும். மாணவர்களின் ஆர்வத்தின் அடிப்படையில் பாடப் பிரிவுத் தேர்வு இருக்கலாம். ‘எந்தப் பாடத்தை எடுக்கிறதுன்னே தெரியலை’என்று இப்பொழுதும் குழம்பியிருப்பவர்களுக்கு எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், எலெக்ட்ரிக்கல், கம்யூட்டர் சயின்ஸ், ஐடி, மெக்கானிக்கல் என்பதுதான் என்னுடைய பரிந்துரை வரிசை. அதற்காக பிற பாடப்பிரிவுகள் மோசம் என்று அர்த்தமில்லை- தரமான கல்லூரிகள் எனில் பிறப் பாடப்பிரிவுகளைப் பற்றி யோசிக்கலாம். ஆகாவழிக் கல்லூரியென்றால் பிற பாடப்பிரிவுகளுக்குக் கும்பிடு போட்டுவிடலாம்.
2) பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்த பிறகு கல்லூரிகளின் பட்டியலைத் தயாரிப்பது இரண்டாவது முக்கியமான பணி. ஒவ்வொரு மாணவருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு கையேட்டை வழங்கியிருப்பார்கள். அந்தக் கையேட்டில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளின் விவரங்களும் இருக்கும். கையேட்டின் உதவியுடன் பட்டியலைத் தயாரிக்க முடியும்.
3) எப்படி கல்லூரிகளின் பட்டியலைத் தயாரிப்பது?
- அரசுக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு எனத் தனித்த பட்டியலைத் தயாரிக்க வேண்டும். சென்னை அண்ணா பல்கலைக்கழகம், பிஎஸ்ஜி, எம்ஐடி, அரசுத் தொழில்நுட்பக் கல்லூரி கோவை என்று கல்லூரிகளின் தரக் குறியீட்டின் அடிப்படையிலேயே இந்தப் பட்டியலைத் தயாரிக்கலாம்.
- இரண்டாவது பட்டியல் தனியார் பொறியியல் கல்லூரிகளை உள்ளடக்கியது. இப்பட்டியலும் கல்லூரிகளின் தரக் குறியீட்டின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
கல்லூரிகளுக்கான பட்டியல் தயாரிக்கும் போது ‘இது நல்ல கல்லூரியா’ என்கிற சந்தேகம் வரும். உதாரணமாக மதுரையில் இருப்பவர்களுக்கு சத்தியமங்கலத்தில் இருக்கும் பண்ணாரியம்மன் கல்லூரி பற்றித் தெரியாது. கூகிளில் Bannari amman engineering college review என்று தேடுவது மிகச் சுலபமான வழி. இரண்டு மூன்று தளங்களில் கல்லூரி பற்றி என்ன சொல்கிறார்கள் என்று படித்துப் பார்த்து முடிவுக்கு வரலாம்.
என்ன பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்பதை முடிவு செய்து கொண்டு மேற்சொன்னபடி கல்லூரிகளின் பட்டியலையும் தயாரிப்பதோடு வேலை முடிவதில்லை. நமக்கு பட்டியலில் இருக்கும் கல்லூரிகளில் இடம் கிடைக்குமா என்கிற தெளிவும் வேண்டும்.
4) உதாரணமாக 189.5 மதிப்பெண்களை(Cut-off) ஆகக் கொண்டிருக்கும் ஒரு மாணவன் கணிப்பொறி அறிவியல் படிக்க விரும்பினால் அவனுக்கு நிச்சயமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்காது. ஆகையால் தமது பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை வைத்திருப்பது அவசியமற்றது. நீக்கிவிடலாம்.
தமது மதிப்பெண்ணுக்கு எந்தக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று எப்படித் தெரிந்து கொள்வது?
5) கடந்த ஆண்டில் இதே மதிப்பெண்ணுக்கு அந்தக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறதா என்று தேட வேண்டும். TNEA 2016 Engineering Admission cutoff என்று கூகிளில் தேடினால் நிறையத் தளங்கள் வந்து விழுகின்றன. தமது கட்-ஆஃப், சாதிப்பிரிவு (OC, BC, MBC, SC) ஆகியவற்றின் அடிப்படையில் தேடினால் நமக்கு குறிப்பிட்ட கல்லூரியில் இடம் கிடைக்குமா கிடைக்காதா என்பதை தீர்மானம் செய்துவிடலாம். ஒரே தளத்தை மட்டும் நம்பாமல் ஒன்றிரண்டு தளங்களிலிருந்து விவரங்களை ஒப்பிட்டுக் கொள்ளலாம்.
6) தம்முடைய மதிப்பெண்ணைவிடக் குறைவான மதிப்பெண்ணுக்குக் கடந்த ஆண்டு இடம் கிடைத்திருந்தால் பச்சை நிறத்தில் குறித்து வைக்க வேண்டிய கல்லூரி அது. நிச்சயமாக இம்முறையும் கிடைத்துவிடும். கடந்த ஆண்டில் நம்முடைய மதிப்பெண்ணைவிடவும் கூடுதலாக அரை மதிப்பெண் அல்லது ஒரு மதிப்பெண்ணுக்குக் கிடைத்திருந்தால் (அதாவது 190 மதிப்பெண்ணுக்கு கடந்த ஆண்டு கிடைத்திருக்கிறது - மாணவனின் மதிப்பெண் 189.5 ) நம்முடைய பட்டியலில் இத்தகைய கல்லூரிகளை சிவப்பு நிறத்தில் குறித்து வைத்துக் கொள்ளலாம்- கிடைத்தாலும் கிடைக்கும். இல்லாவிட்டாலும் இல்லை.
5) கல்லூரிகளின் பச்சை சிவப்புப் பட்டியலைத் தயாரித்த பிறகு நம் வசதிக்கு ஏற்ப பச்சை நிறக் கல்லூரிகளை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். வசதி என்பதில் குடும்பச் சூழல், நிதிச் சூழல் என பல தரப்பும் உள்ளடக்கம். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால் திருநெல்வேலிப் பெண் சென்னையிலும், கோவையிலும் படிக்கத் தயங்கலாம். அப்படியென்றால் தமது பட்டியலில் பச்சை நிறத்தில் குறித்து வைத்திருக்கும் தென் தமிழகத்துக் கல்லூரிகளை முதல் வரிசையில் வைத்துக் கொள்வது வேலையைச் சுலபமாக்கும்.
6) கலந்தாய்வுக்குச் செல்லும் போது இப்பட்டியல் தயாராக இருந்தால் பிரச்சினையே இருக்காது. நம்முடைய மதிப்பெண்ணுக்கு எந்தெந்தக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று தெளிவாகத் தெரிந்து வைத்திருப்போம். மதுரை தியாகராஜர் கல்லூரியில் கணினி அறிவியல் என்ற எண்ணத்தில் கலந்தாய்வில் அமர்ந்திருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளலாம் . நம்முடைய வரிசை வரும் போது ஒருவேளை அந்தக் கல்லூரியில் இடம் காலியாகியிருந்தால் நம் பட்டியலில் அடுத்ததாக இருக்கும் சாலைப் பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதுவுமில்லையென்றால் நம் பட்டியலில் உள்ள அடுத்த கல்லூரி. குழப்பமே இருக்காது.
7) தாம் விரும்புகிற பாடப்பிரிவு கணினி அறிவியல் என்றாலும் இன்னும் ஒன்றிரண்டு பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து அப்பாடப்பிரிவுகளுக்கும் இதே போன்ற பட்டியலைத் தயார் செய்து வைத்துக் கொள்வது நல்லது. கடைசி நேரக் குழப்பங்களைத் தவிர்க்க உதவும்.
சற்று மெனக்கெட்டால் இரண்டு மூன்று நாட்களில் நமக்கான இப்பட்டியலைத் தயாரித்துவிட முடியும். பிறகு ஒன்றிரண்டு பேர்களிடம் கலந்தாலோசித்து சிற்சில மாற்றங்களைச் செய்து இறுதி செய்து கொள்ளலாம்.
மிக எளிமையான காரியம் இது. ஆனால் பெரும் சுமையைக் குறைத்துவிடும்.
ப்ளஸ் டூ முடித்துவிட்டு பொறியியல் சேர்வதற்குத் தயாராக இருப்பவர்களுக்கான குறிப்புகள் இவை என்பதால் அத்தகைய மாணவர்களிடமோ, கல்வி நிறுவனங்களிடமோ பகிர்ந்து கொள்ளுங்கள். அதற்காக எழுதப்பட்ட பதிவு இது.
தொடர்புக்கு: vaamanikandan@gmail.com
தொடர்புக்கு: vaamanikandan@gmail.com
வாழ்த்துக்கள்.
3 எதிர் சப்தங்கள்:
என்னதான் கிண்டல் கேலி பேசினாலும், ஆக்கபூர்வ செயலை கண்டு அமரர் வா....ழ்த்துவார்.
வாழ்க மணி'THE"சேவை.
இவ(ர்)ன் தந்தை என்னோற்றான் கொல்யெனும் சொல்.
√
Post a Comment