Jul 3, 2017

தூர்

ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் தற்போதைய அதிமுகவின் அரசைப் பாராட்ட ஒரு காரணம் கேட்டால் நீர் நிலைகளில் தூர்வாருவதற்கான அனுமதியைக் கொடுத்ததைச் சொல்லலாம். காலங்காலமாக தூர் வாரப்படாத நீர் நிலைகளில் கை வைத்திருக்கிறார்கள். எவ்வளவு பாராட்டினாலும் தகும். உழவர்கள் வண்டிகளைக் கொண்டு வந்து நிறுத்தி மண்ணை வழித்துக் கொண்டிருக்கிறார்கள். கர்நாடகாவில் நதிகளின் போக்கில் பயணம் செய்தவர்களுக்குத் தெரிந்திருக்கும்- சிறு சிறு நீர்நிலைகளை மிகச் சிறப்பாக மேம்படுத்தி வைத்திருக்கிறார்கள். மழை பெய்து நதியில் வெள்ளம் பெருக்கெடுக்கும் போது இத்தகைய நீர் நிலைகளில் நிரப்பி வைத்துக் கொள்கிறார்கள். அப்புறம் எப்படி அணைகளுக்கு நீர் வந்து சேரும்? 

தமிழகத்தின் இன்றைய வறட்சிக்கு கடந்த பல ஆண்டுகளாக நீர் நிலைகள் மேம்படுத்தப்படாததையும் முக்கியமான காரணங்களில் ஒன்றாகச் சொல்ல முடியும். பெரும்பாலான குளம் குட்டைகளில் ஆறு மாதங்களுக்குத் தேவையான நீரைச் சேகரிக்கும் அளவுக்குக்கூட கொள்ளளவு இல்லை. நிரம்பி வெகு சீக்கிரமாக வடிகிறது. நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்தில் கிடக்கிறது.

சமீபத்தில் கோட்டுப்புள்ளாம்பாளையம் என்கிற கிராமத்துக்கு வரச் சொல்லியிருந்தார்கள். அங்கேயொரு குளத்தைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தோம். அதைக் குளம் என்று கூடச் சொல்ல முடியாது. அகலமாக இருக்கிறது. ஆனால் கிட்டத்தட்ட தரை மட்டம்தான். படத்தில் தெரியும். குளத்தைச் சுற்றிலும் இருக்கும் தென்னை மரங்கள் கருகிக் கிடந்தன. முழுமையாக விவசாயம் பட்டுப் போயிருந்தது. பல ஏக்கர்களுக்கு பாசன வசதியைக் கொடுக்கக் கூடிய குளம். அக்கம்பக்கத்துக்கு நிலத்தடி நீராதாரமும் அதுதான். இன்றைக்கு வறக்காடாகக் கிடக்கிறது.


குளத்தை தூர் வாருதல் என்றால் ஒரு ஜேசிபியை வைத்து மண்ணை வழித்து எடுப்பது என்பதுதான் சமீபகாலம் வரைக்கும் என்னுடைய யூகம். ஆனால் கள நிலவரம் வேறு. பெரும்பாலான குளங்களில் பாறையும் மண்ணும் இறுகிக் கிடக்கின்றன. ப்ரேக்கர் (JCB Rock Breaker) என்றொரு கருவியை வைத்து இடித்து உடைக்க வேண்டியிருக்கிறது. பெரும்பாலும் அதுதான் செலவு பிடிக்கும் காரியம். அந்த வண்டிக்கு மணிக்கணக்கு. அப்படியே ப்ரேக்கர் வைத்து இடித்தாலும் அவ்வளவு சீக்கிரம் உடைபடுவதில்லை. கஷ்டப்பட்டு மண்ணையும் பாறையையும் உடைத்துவிட்டால் வழித்து ட்ராக்டரில் ஏற்றி விவசாயிகள் கொண்டு சென்றுவிடுகிறார்கள். அத்தனை ஊர்களிலும் ட்ராக்டர் வாடகையை விவசாயிகள் கொடுத்துவிடுகிறார்கள். தோராயமாக ஒரு வண்டி மண்ணுக்கு நூற்றைம்பதிலிருந்து இருநூறு ரூபாய் வரைக்கும் கொடுக்கிறார்கள். இறுகிக் கிடக்கும் குளத்தை உடைப்பதற்கான செலவுதான் அவர்களுக்கு பெருஞ்சுமை. 

கோட்டுப்புள்ளாம்பாளையத்து கிராமத்துக்கு எப்படியும் ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் தேவைப்படும். பாறை மண் படிந்து கிடக்கிறது.

‘ஒரு பகுதி உதவியைச் செய்ய முடியுமா?’ என்றார்கள். நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து கல்வி மற்றும் மருத்துவப்பணிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் இத்தகைய பணிகளுக்கு உதவுவதற்காக ஆட்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அவர்களுக்கு சரியான ஊரைக் கண்டுபிடிக்கத் தெரிவதில்லை என்பதுதான் பிரச்சினை. 

ஏற்கனவே எழுதியிருக்கிறேன் - இங்கிலாந்தின் கோல்செஸ்டர் நகரத்தில் இருக்கும் தமிழ்ப்பெண்கள் உள்ளூர் விழாக்களுக்கு சமையல் செய்து தருகிறார்கள். அதில் வரும் இலாபத்தை தமிழகத்து நலத்திட்டங்களுக்குக் கொடுக்கிறார்கள். அப்படி அவர்கள் கொடுத்த முதல் ஐம்பதாயிரம் ரூபாயில்தான் பன்னிரண்டு பள்ளிகளுக்கு நூலகம் அமைப்பதற்கான வேலையைத் தொடங்கினேன். அவர்களிடம் இன்னமும் பணம் இருக்கிறது. கோட்டுப்புள்ளாம்பாளையத்தின் குளம் பற்றிய விவரத்தை அவர்களுக்கு அனுப்பியிருந்தேன். அவர்கள் அறுபத்தைந்தாயிரம் ரூபாய் தரவிருக்கிறார்கள். அந்தப் பெண்களை எப்படிப் பாராட்டினாலும் தகும். உள்ளூர்க்காரர்களிடம் கோல்செஸ்டர் குடும்பங்களைப் பற்றித்தான் பேசினேன்.

‘அவர்களுக்கு உங்க முகம் தெரியாது...உங்களுக்கு அவங்க முகம் தெரியாது...ஆனா இந்த ஊருக்காக அங்கேயிருந்து பணம் அனுப்பறாங்க’ என்ற போது அவர்களின் முகம் மலர்வதை உணர முடிந்தது.

கொடுக்கப்பட்ட பணத்துக்கான பணி நடைபெறுவதை உள்ளூர்க்காரர்கள் கவனித்துக் கொள்வார்கள். ஊர்க்கூட்டத்தில் தெளிவாகப் பேசி யார் எந்தப் பணியைப் பார்த்துக் கொள்வது என்று முடிவு செய்து வைத்திருக்கிறோம். நிசப்தம் சார்பில் ஒருங்கிணைப்பு வேலையையும் அவ்வப்பொழுது கண்காணிப்பதையும் செய்து கொடுத்துவிடுவோம்.


நேற்று தொடக்கப் பணிக்கான பூசை நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் முனைவர்.கோவிந்தராஜ் வந்திருந்தார். எளிய மனிதர். மேடை, நாற்காலி என்று எதுவுமில்லை. முந்தின நாள் அலைபேசியில் தகவல் சொன்னதோடு சரி. ‘வந்துடுறேன்’ என்று சொன்னவர் குறித்த நேரத்தில் அங்கேயிருந்தார். அமரச் சொல்வதற்கும் கூட இடமில்லை. எந்த யோசனையுமில்லாமல் நின்றபடியே பேசிவிட்டுக் கிளம்பினார். இத்தகைய அரசு அதிகாரிகளின் ஆதரவு இருந்தால் இன்னமும் உத்வேகமாக வேலையைச் செய்ய முடியும்.


உள்ளூர்வாசிகளுக்கு வெகு சந்தோஷம். அங்கேயிருந்த பெரியவர்களிடம் ‘உங்களுக்குத் தெரிஞ்சு கடைசியா எப்போ மண் எடுத்தாங்க?’ என்றேன். யாரிடமும் பதில் இல்லை. அரசின் அனுமதியுடன் தற்போதைய வளர்ச்சிக் காலத்தில் ஆழப்படுத்தி வைத்தால் அடுத்த ஐம்பதாண்டுகளுக்காவது பலனளிக்கும். ஐம்பதாண்டுகள் என்பது குறைந்தபட்சம். காலங்காலமாக தூர் வாராப்படாத இத்தகைய குளங்களையும் குட்டைகளையும் இப்பொழுது தூர் வாரிவிட வேண்டும். அதற்கான சரியான தருணம் இது. 

அவரவர் ஊரில் இதற்கான முன்னெடுப்புகளை பெரிய அளவுக்கு யோசனை செய்யாமல் தொடங்கிவிட வேண்டும். ஒரு லட்ச ரூபாயைப் புரட்டினால் ஒரு குளத்தில் கவனிக்கத்தக்க அளவுக்கான ஆழப்படுத்துதலைச் செய்துவிட முடியும். மண்பாங்கான குளமாக இருந்தால் அவ்வளவு தொகை கூடத் தேவைப்படாது. நான்கைந்து குளம் குட்டைகள் இருக்கக் கூடிய கிராமங்களில் ஏதேனும் ஒரு பெரிய நீர் நிலையைத் தயார் செய்து வைத்தால் கூடப் போதும். இது குறித்து ஏதேனும் விவரங்கள் தேவைப்பட்டால் மின்னஞ்சல் அனுப்பி வைக்கவும் அல்லது செலவைக் குறைப்பதற்கான வேறு உத்திகள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உழவனுக்கு செய்யக் கூடிய இச்சிறு உதவி பன்னெடுங்காலத்துக்கு பயன் தரக் கூடியது.

ஊர்ப்புறங்களில் செய்யக் கூடிய களப்பணிகளைப் பொறுத்தவரையில் நம்முடைய எண்ணங்களுக்கு ஒத்து வரக் கூடிய ஒரு அணி இருப்பது அவசியம். பணத்தைக் கொடுத்துவிட்டு வந்துவிடலாம் என்று நினைத்தால் வீணாகிவிடும். பணம் பொருட்டே இல்லை. எண்ணங்கள் வடிவம் பெற அதற்குரிய ஆட்கள் அவசியம். அப்படியொரு அணியை உருவாக்க முடியுமெனில் எந்த ஊரிலும்/ எந்த மாவட்டத்திலும் இத்தகைய பணிகளைச் செய்ய முடியும்.

குளத்தின் தற்போதைய படங்களைப் பார்த்து வைத்துக் கொள்ளுங்கள். அறுபத்தைந்தாயிரம் ரூபாயில் பணி நிறைவு பெற்றவுடன் படங்களை பதிவு செய்கிறேன். வித்தியாசத்தைத் தெரிந்து கொள்ளலாம்.


8 எதிர் சப்தங்கள்:

deva said...

நன்றி ஐயா உங்கள் பணி மென்மேலும் தொடருட்டும் எங்கள் ஊரிருக்கு உதவ முன் வந்த நல் உள்ளங்களுக்கும் நன்றி

Anonymous said...

அந்த 60 ஆயிரத்தை அவர்களே போட்டுக்கொள்ள முடியாதா? 120 பேர் ஆளுக்கு 500 ரூ என்பதுபோல. இதுவே ஒரு கோயில் திருவிழா என்றால் 1 இலட்சமாவது செலவழிக்க மாட்டார்களா?
சரவணன்

Malar said...

Good Initiative.

சேக்காளி said...

Vaa.Manikandan said...

திரு.சரவணன்,

நல்ல கேள்வி.

நீங்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். ஒரு ட்ராக்டர் மண் என்பது வெகு சொற்பம். அதற்கு இரு நூறு ரூபாய் வரைக்கும் மண்ணை வாங்குகிறவர்கள் கொடுக்க வேண்டும். ஒரு தோட்டத்துக்காரருக்கு நூறு வண்டி தேவைப்படுகிற இடத்தில் எழுபது அல்லது எழுபத்தைந்தே போதும் என்கிற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். வளமையான காலம், அறுவடை அமோகம் என்றால் விவசாயிகளால் செய்து கொள்ள முடியும். இரண்டு வருடங்களாக விவசாயமே நடப்பதில்லை. அந்தச் சூழலில் விவசாயிகளிடம் ‘இதையும் நீங்களே போட்டுக்குங்க’ என்று கேட்பது நியாயமில்லை. அப்படியும் சில கிராமங்களில் அவர்களே தொகையைப் புரட்டிப் போட்டுக் கொள்கிறார்கள். அங்கே மண் இலகுவாக இருக்கும். இப்படி பாறை கெட்டிப்பட்டுக் கிடக்கும் ஊர்களில் கூடுதலாக செலவு பிடிக்கிறது. அதற்குத்தான் உதவுகிறோம். கிராமங்களைத் தேர்ந்தெடுப்பதிலும் இத்தகைய வடிகட்டல் முறைகளைப் பின்பற்றாமல் செயல்பட வேண்டியிருக்கிறது.

Mohamed Ibrahim said...

Good Initiative.

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

அன்பிற்கினிய மணி, விவசாயிகளின் தற்போதைய நிலைமை தெரியாதவர்களுக்கு திரு.சரவணனின் கேள்வி நியாயமான போல தோன்றும். கோட்டுப்புள்ளாம்பாளையத்தாரின் அன்றைய வளமான நிலை இன்றும் இருந்திருந்தால் அவர்களே ஏற்று இருப்பார்கள். சரியான முறையில் விவசாயிகளின் நிலையை தெளிவாக சொல்லி விட்டீர்கள். உதவி செய்யும் அனைத்து நல்ல உள்ளங்களையும் மனதார வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறேன்.

Anonymous said...

வெடி வைத்து தகர்த்தால் (வீடுகள் அருகே இல்லையெனில்) நேரம் மிச்சமாகும், செலவு எப்படி என தெரியவில்லை.