Jun 9, 2017

தொழிலதிபர்கள் இருக்காங்களே...

அரவக்குறிச்சிக்காரர் ஒருவர் அழைத்திருந்தார். பல மாதங்களாக அவரைத் தெரியும். பெங்களூரிலும் ஓசூரிலும் வட்டித் தொழில் நடத்துகிறவர்களில் பெரும்பாலானவர்கள் தாராபுரம், அரவக்குறிச்சி, பரமத்தி வேலூர் மாதிரியான ஊர்க்காரர்கள். இவருக்கு சற்றேறக்குறைய என்னுடைய வயதுதான் இருக்கும். பத்தாம் வகுப்பு முடித்த போது ஊரில் பஞ்சம். விவசாயம் இல்லை. படிப்பும் மண்டையில் ஏறவில்லையென்று தாய்மாமாவுடன் பெங்களூருவுக்குத் தாட்டிவிட்டார்கள். தொழிலுக்குள் கால் வைத்த புதிதில் குறிப்பேட்டை எடுத்துக் கொண்டு லைனுக்குச் செல்ல வேண்டும்.

வட்டியை வசூல் செய்து கொண்டு வந்து கொடுத்தால் சம்பளமும் கமிஷனும் உண்டு. மனிதர்களைப் புரிந்து தொழில் பழகிய பின்னர் தமக்கென்று ஒரு லைன் பிடித்துக் கொள்ளலாம். உள்ளூரிலிருந்து பொடுசுகளை அழைத்து வந்து வசூலுக்கு அனுப்பலாம். ஆனால் அது அவ்வளவு சீக்கிரம் சாத்தியமில்லை. யார் பணத்தைத் திருப்பித் தருவார்கள், தராதவர்கள் யார், தராவிட்டால் அவனை மிரட்ட முடியுமா, அவன் பின்புலம் என்ன என எல்லாமும் புரிந்து கொள்ள ஆள் சாமர்த்தியத்தைப் பொறுத்து வருடங்கள் ஏறத்தாழ ஆகலாம். 

இரண்டு மூன்று வருடங்கள் லைனில் இருந்திருக்கிறார். விவேக் நகர்தான் இவருக்கான லைன். அது கொஞ்சம் கலீஜ். தமிழர்கள்தான் என்றாலும் ஆட்களும் முரட்டு ஆட்கள். பதினாறாவது வயதில் லைனுக்குச் சென்ற போது ஒருவர் முறைக்க இவரும் முறைக்க வாய்க்கலப்பு கைகலப்பாக நீள அருகே கிடந்த ஒரு கல்லை எடுத்து முகத்தின் மீது சத்தென்று வைத்து அமுக்கியிருக்கிறான். முகம் கிழிந்து ரத்தம் ஒழுக மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றிருக்கிறார்கள். எட்டுத் தையல்கள். இப்பொழுது தாடி வைத்து மறைத்திருக்கிறார்.

எங்கள் பழைய அலுவலகத்தில் அவர் கேண்டீன் ஒப்பந்தம் எடுத்திருந்த போது அறிமுகமாகியிருந்தோம். வரும் போதும் போகும் போதும் பேசிக் கொள்வோம். இந்த ப்ளாஷ்பேக் சமாச்சாரங்களையெல்லாம் அப்பொழுது பேசியதில்லை. ஒரு நாள் தாம் கழித்து வீடு கட்டியிருப்பதாகவும் புதுமனைப் புகுவிழாவுக்கு வர வேண்டும் என்று அழைத்த போதுதான் வாயைப் பிளந்த சம்பவம் நிகழ்ந்தது. நான்கு மாடிக் கட்டிடம் அது. தளத்துக்கு நான்கு வீடுகள் என பதினாறு வீடுகள். சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டியிருந்தார். வாடகைக்கு விடுகிற திட்டம் அவருக்கு. சோப்லாங்கியாக சுமாரான பேண்ட்டும் சர்ட்டும் அணிந்து வருகிற இவர் இவ்வளவு பெரிய வீட்டை தமதென்று காட்டினால் வாயைப் பிளக்கத்தான் வேண்டும். ஐடியில் வேலை செய்கிறவர்கள் அதிகபட்சம் பதினாறு போர்ஷனில் ஒன்றை விலைக்கு வாங்கலாம் அல்லது ஐம்பதாவது வயதில் கூடுதலாக இன்னொன்றை வாங்கலாம். அதற்கு பையன் வந்து இஎம்ஐ கட்ட வேண்டியிருக்கும்.

‘இந்த மனுஷன்கிட்ட என்னவோ சூட்சமம் இருக்கு’ என்று தெரிந்து கொண்டது அப்பொழுதுதான். அதன் பிறகுதான் தாம் பெங்களூருவுக்கு வந்த கதையெல்லாம் சொன்னார். எட்டுத் தையல்களுக்குப் பிறகு வீட்டில் இருப்பவர்கள் பயந்துவிட்டார்கள். வேறு தொழிலும் தெரியாது. படிப்பும் இல்லை. பிழைக்க வேறு வழி? கிபி2000 என்பது பெங்களூரு தறிகெட்டு வளர்ந்த தருணம். கேண்டீன் ஒப்பந்தம், நிறுவனங்களுக்கு டாக்ஸி ஒப்பந்தம், பராமரிப்புப் பணிக்கான ஒப்பந்தம் என்று ஏகப்பட்ட வழிகளைப் பிடித்திருக்கிறார்.

‘போய்க் கேட்ட உடனே கொடுத்துடுவாங்களா?’ என்ற கேள்விதான் எனக்கும் இருந்தது. சாம பேத தான தண்டம்தான். பேசுகிற இடத்தில் பேசியும் பணத்தை வீசுகிற இடத்தில் வீசியும் வளைத்திருக்கிறார். பெரும் நிறுவனங்கள் வேலைக்கு ஆகாது. ‘நாங்க தனிப்பட்ட ஆளுங்களுக்கு காண்ட்ராக்ட் தர்றதில்லை’ என்று சொல்லிவிடுவார்கள். சிறு நிறுவனங்களைத்தான் அமுக்க வேண்டும். குடிநீர் குடுவை சப்ளை, பால் விநியோகம் என்று விதவிதமான வாய்ப்புகள். அவர் வீடு கட்டியதாகச் சொன்னது 2011 ஆம் வருடம். கிட்டத்தட்ட பதினோரு வருடங்கள் அவருக்கு போதுமானதாக இருந்திருக்கிறது. ஆனால் கடும் உழைப்பு. 

நிறுவனம் மாறி வந்த பிறகும் என்னுடைய அலைபேசி எண் அதேதான். எப்பொழுதாவது பேசிக் கொள்வோம்.‘எலெக்ட்ரானிக் சிட்டி பக்கமா வந்தேன்’ என்றார். வீட்டிற்கு வரச் சொன்னேன். கடந்த ஒரு வாரமாக படுக்கைதானே? வீட்டில் யாருமில்லை. பேசிக் கொண்டிருந்தோம். 

‘சரியா தூங்கி ஒரு வாரம் ஆச்சு’ என்றார். அவருடைய உழைப்பு சாதாரணமானதில்லை. ஒவ்வொரு உயரத்தை அடையவும் ஒரு விலையைக் கொடுத்தே தீர் வேண்டும்.

‘சம்பாதிச்சாச்சு...ஊர்ப்பக்கம் போய்டலாம்ல’ என்றேன். 

‘ஆசைதான்..அங்க போய் என்ன செய்யறதுன்னு தெரியல’ என்றார். இந்த மாதிரியான ஆட்களிடம் தொழில் தொடங்குவதற்கான ஐடியா கொடுப்பது என்பது என்பது சச்சினிடமும் தோனியிடமும் ‘இந்த ஷாட்டை நீங்க அப்படி அடிச்சிருக்கணும்’ என்பது போலத்தான். தலையாட்டிக் கொண்டேன். பாமாயிலை பிலிப்பைன்ஸ், இந்தோனஷியாவிலிருந்து இறக்கி இங்கே ஹோட்டல்களுக்கு விநியோகம் செய்கிற முதலாளி, மால்களில் ஐஸ்க்ரீம் கடைகளை நடத்தி லட்சங்களைச் சம்பாதிக்கும் முதலாளி என்று பல தொழில் வித்தகர்களைப் பார்க்க நேர்கிறது. யாருமே அலட்டிக் கொள்வதில்லை. கொம்பு முளைக்காதவர்கள். மிக இயல்பாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் சம்பாத்தியம் என்னை வியப்புறச் செய்யும். பெரிய கவலையில்லாமல் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பதாக அவர்கள் வியப்புறுவார்கள். இக்கரை அக்கரை- பச்சை.

காண்ட்ராக்டர் சொன்ன ஒரு விஷயம் பளிச்சென்றிருக்கிறது. ‘முகம் வீங்கிக் கிடந்த போது இனி இந்தத் தொழில் ஆகாதுன்னு முடிவு செஞ்சுட்டேன்..ஒருத்தங்ககிட்ட சம்பளத்துக்கு வேலையில் இருக்கும் போது அது நிம்மதியா இருக்கும்..விட்டுட்டு வெளியே வர பயமா இருக்கும்..குடைக்குக் கீழே நிக்குற மாதிரி... வெளிய வந்து பார்த்தாத்தான் உலகம் எவ்வளவு பெருசுன்னு தெரியும்’ என்றார். ‘வானத்தைப் பார்க்கிற மாதிரி’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

பத்து வருடங்களாக ‘ஏதாச்சும் தொழில் செய்யணும்’ என்று நினைப்பதுண்டு. எவ்வளவோ செய்யலாம். நம்மூரில் கிடைக்கும் தட்டக்கொட்டை, பச்சைப் பயறு வகைகளைக் கொண்டு வந்து இந்த ஊரில் விற்பனை செய்வதிலிருந்து சிறியதாக ஒரு ரெஸ்டாரண்ட் தொடங்குவது, புத்தகக் கடை ஆரம்பிப்பது என்று ஏகப்பட்ட திட்டங்கள் மனதுக்குள் மின்னலடித்துக் கொண்டேதான் இருக்கும். ஒன்றைக் கூட தோளில் எடுத்துப் போட்டுக் கொண்டதில்லை. ‘சம்பளம் வருதுல்ல...என்னதுக்கு வம்பு?’ என்று அதற்கு மேல் எட்டி வைப்பதில்லை.

‘உங்களுக்குள்ள முழிச்சுட்டு இருக்கிற அதானி அம்பானிதான் எனக்குள்ள தூங்கிட்டு இருக்காங்க. எப்படி எழுப்பிவிடுறதுன்னுதான் தெரியல’  என்று அவரிடம் சொன்னேன். சிரித்தார். 

‘முகத்தை அவன் கிழிக்கலைன்னா இன்னமும் லைன்லதான் இருந்திருப்பேன்’ என்றார். சரிதான். ஒன்று நாமாக புதிய பாதையைக் கண்டறிய வேண்டும். இல்லையெனில் நம் பாதையிலிருந்து யாராவது நம்மைப் பிடித்து வெளியே தள்ளி விட வேண்டும். இரண்டும் இல்லையென்றால் 9 டூ 5. காலையில் ஒரு பன்ச். மாலையில் ஒரு பன்ச். நடுவில் லன்ச். ஒன்றாம் தேதி சம்பளம்.

பரவாயில்லையே, இதுவும் கூட நன்றாகத்தான் இருக்கிறது என்று மனதில் தோன்ற ஆரம்பிக்கும் போது கிழடு தட்டி முழுமையான குடும்பஸ்தன் ஆகிவிட்டோம் என்று அர்த்தம்.