Jun 10, 2017

போலீஸ் கதை

கோவை மத்திய சிறைக்குச் சென்றிருந்த போது அங்கே பணியிலிருந்த தாஸ் என்ற சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் பற்றிய பேச்சு வந்தது. அவரை நேர்மையான அதிகாரி என்று அவருடன் பணியாற்றிய மற்றோர் அதிகாரி குறிப்பிட்டார். பணியில் இருந்த போது ஒவ்வொரு வருடமும் ஜனவரி ஒன்றாம் தேதி தமது சக ஊழியர்களுக்கு விருந்து வைப்பாராம். அப்பொழுது அவரது பிள்ளைகள்தான் பரிமாறுவார்கள் என்றார். ‘அப்போ சிவகார்த்திகேயன் சின்னப்பையன்’ என்றார். சிவகார்த்திகேயனின் அப்பாதான் தாஸ். 2000 (ஆண்டு துல்லியமாகத் தெரியவில்லை) ஆம் ஆண்டில் மதியம் ஒன்றரை மணிவாக்கில் தமது அறையின் இருக்கையிலேயே மாரடைப்பில் உயிர் போய்விட்டது. 

சிவகார்த்திகேயன் பற்றி நிறையச் சொன்னார்கள். அப்பொழுது சாதாரண மத்திய தரக் குடும்பம். அவர் கோடிகளில் சம்பாதிக்கும் நாயகனாகப் போகிறோம் என்று நினைத்திருக்கவா போகிறார்? சிறைச்சாலையில் மிமிக்கிரி செய்து காட்டுவாராம். சிவகார்த்திகேயனைவிடவும் அவரது அப்பா பற்றித் தெரிந்து கொள்வதில்தான் ஆர்வம் அதிகமாக இருந்தது. ஏன் இறந்தார் என்ற கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்டேன். கடும் மன உளைச்சல்தான் காரணம் என்றார்கள். அந்தச் சமயத்தில் சிறைக்குள் வந்த சில கைதிகளும், அவர்களுக்காக வெளியிலிருந்து வந்த சில அழுத்தங்கள், பரிந்துரைகள் என்றெல்லாம் சேர்ந்து அவர் சில நாட்களாக கடுமையான விரக்தியில் இருந்ததாகச் சொன்னார்கள். அந்தக் கைதிகளின் பின்னணியைப் பொதுவெளியில் எழுத வேண்டியதில்லை என நினைக்கிறேன். தேவையற்ற சங்கடங்களை உருவாக்கும். அழுத்தத்தில் இருந்த போது தமது குடும்பத்தினரிடம் இதையெல்லாம் சொன்னாரா என்று தெரியவில்லை. நம்மில் எத்தனை பேர் அலுவல் சார்ந்த பிரச்சினைகளை வீட்டில் உள்ளவர்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்? 

காவல்துறையினர் அராஜகம், அழிச்சாட்டியம், லஞ்சம் என பின்னியெடுக்கிறார்கள் என்று திட்டினாலும் கூட சில அதிகாரிகள் கடுமையான சிக்கல்களில் சிக்கிக் கொண்டு உயிரைப் பறிகொடுப்பதும் அது வெளியிலேயே தெரியாமல் அமுக்கப்படுவதும் எங்கேயாவது நடந்து கொண்டுதானே இருக்கிறது?

அக்கம்பக்கத்தில் சமீபத்தில் மட்டும் மர்மமான முறையில் இறந்து போன காவல்துறையினர் ஏகப்பட்ட பேர்கள். கர்நாடகாவில் எம்.கே.கணபதி என்ற ஓர் டிஎஸ்பி தூக்கில் தொங்கினார். அதற்கு முன்பாக கல்லப்பா என்ற இன்னொரு டிஎஸ்பி. அதற்கும் முன்பாக ராகவேந்திரன் என்கிற அதிகாரி. விசாரிப்பதாகச் சொல்லிவிட்டுக் கடைசியில் ‘தனிப்பட்ட காரணங்களுக்காக இறந்து போனார்கள்’ என்று முடித்து வைப்பார்கள். மாரடைப்பில் இறந்து போகிறவர்கள் இந்தக் கணக்கில் வரமாட்டார்கள். 

தமிழகத்தில் நடப்பதில்லையா என்ன? கடந்த வருடம் கூட ஹரீஷ் என்ற ஐபிஎஸ் அதிகாரி எழும்பூர் காவல்துறை அதிகாரிகள் மெஸ்ஸில் இறந்தார். சத்தியமங்கலத்தைச் சார்ந்த இளம் ஐபிஎஸ் சசிகுமார் ஆந்திராவில் தன்னைத்தானே சுட்டு இறந்து போனதாகச் செய்தித்தாள்களில் வந்திருந்தது. மரணம் என்பது கண் சிமிட்டுவது போல. சட்டென்று வந்துவிடும்.இறந்தவர்களைச் சார்ந்தவர்களுக்குத்தான் காலகாலத்திற்கும் வலி இருந்து கொண்டேயிருக்கும். சசிகுமார் இறந்து நான்கைந்து நாட்கள் ஆகியிருந்தன. சத்தியமங்கலத்துக்குச் சென்றிருந்தேன். வீட்டிற்கு வெளியில் நான்கைந்து நாற்காலிகள் காலியாகக் கிடந்தன. வந்து போகிறவர்கள் போய்விடுவார்கள். சசியின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் காலம் முழுக்கவும் அவருடைய நினைப்புகள்தானே அழுத்திக் கொண்டிருக்கும்?

அவர்களாகச் சாகிறார்களா? சாவடிக்கப்பட்டு கதை அப்படி எழுதப்படுகிறதா என்று யாருக்குத் தெரியும்? கதை முடிந்தால் முடிந்ததுதான். 

பிற எந்தத் துறையைவிடவும் காவல்துறையினருக்குத்தான் அழுத்தம் அதிகம். குற்றவாளிகளும், கொலைகாரர்களும், தீவிரவாதிகளும், அரசியலின் அயோக்கியர்களும், மதவெறி கொண்டோரும் எல்லாவிதமான நச்சரிப்புகளையும் மேற்கொள்வதும் இங்கேதான். அதிகாரத்தின் குரூர கைகள் புகுந்து அலசுவதும் இங்கேதான். 


The Departed என்றொரு படம். 2006 ஆம் ஆண்டு வெளியானது.

இரண்டு இளம் காவல்துறை அதிகாரிகள். அதில் ஒருவன் சிறுவனாக இருக்கும் போதே அவனை வில்லன் தேர்ந்தெடுத்து படிக்க வைத்து காவல்துறை அதிகாரியாக்கி தமக்கான உளவாளியாக வைத்திருப்பான். இன்னொரு அதிகாரியை வேலையை விட்டு நீக்குவதாக அறிவித்து அவனை வில்லனின் கூட்டத்திற்குள் காவல்துறையினர் அனுப்பி வைத்திருப்பார்கள். இவன் கெட்டவனாக வளர்ந்து காவலனாக வாழ்கிறான். அவன் நல்லவனாக வளர்ந்து கெட்டவன் குழுவில் இருக்கிறான். முழுமையான எதிரெதிர் துருவங்கள். அவர்கள் இருவருமே நெருங்கி வந்து நேருக்கு நேராக எதிர்ப்படுவதுதான் கதையின் முடிவு,

வில்லனின் உளவாளி ‘உன்னோட கூட்டத்தில் ஒரு போலீஸ்காரன் இருக்கான்’என்று தகவல் சொல்வான். போலீஸின் உளவாளி ‘நம்ம ஆபிஸிலிருந்தே வில்லனுக்கு யாரோ தகவல் சொல்லுறாங்க’ என்பான். இரண்டு மணி நேரத்திற்கான ஆடுபுலி ஆட்டம். படத்தில் ஒரே நாயகிதான். இருவருக்குமே அவள் காதலியாக இருப்பாள்.

பாத்திர அமைப்புக்காக(Characterization) இந்தப் படத்தைப் பரிந்துரை செய்ய வேண்டும். ஒரு படத்தின் திரைக்கதையை எழுதுவதைவிடவும் படத்தின் பாத்திரங்களைத் தனியாகப் பிரித்தெடுத்து தொடக்கம் முதல் முடிவு வரையிலான அதன் செயல்களை தனியாக எழுதுவதுதான் சிரமமான காரியம். பத்து பாத்திரங்கள் எனில் ஒவ்வொன்றையும் தனித்தனியாக எழுதி பிறகு பிணைத்தால் முழுமையான திரைக்கதையாகிவிடும். பாத்திர அமைப்புகளை இந்தப் படத்தில் அருமையாகச் செய்திருப்பார்கள்.

2002 ஆம் ஆண்டு 'Infernal Affairs' என்ற ஹாங்காங் படம் வெளியானது. அதன் தழுவல்தான் The Departed. அதே படத்திலிருந்துதான் போக்கிரியின் ஒற்றை வரியை உருவியிருக்கக் கூடும் - ‘வில்லனின் கூட்டத்திற்குள் நுழையும் காவல்துறை அதிகாரி’.

படத்தைப்  பார்த்து முடித்த போது தாஸிலிருந்து சசி குமார் வரைக்கும் நினைவில் வந்து போனார்கள். மீண்டுமொருமுறை சிறைத்துறை அதிகாரியை அழைத்துப் பேசத் தோன்றியது. படம் பற்றிச் சொன்னேன். ‘இது இன்னோர் உலகம்’ என்றார். அதுவும் சரிதான்.