Jun 8, 2017

எப்படி இந்தியைத் திணிக்கிறார்கள்

இப்பொழுதெல்லாம் தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலை மைல்கற்களில் இந்தியில் எழுதுகிறார்கள். செய்தித்தாள்களில் இந்தி விளம்பரங்கள் வெளியாகின்றன. தேசம் முழுமைக்கும் நேரடியாகக் கண்ணுக்குத் தெரிகின்ற இந்திப் பிரயோகம் என்றால் இன்னொரு பக்கம் மத்திய அரசாங்க மட்டத்தில் ‘ஆங்கிலத்தின் ஆக்கிரமிப்பைக் குறைக்க இந்தியை முன்வைத்தல்’ என்பதை பகிரங்கமாகவே அறிவிக்கிறார்கள். 

‘We are reducing dominance of English but not its usage' என்று சால்ஜாப்பு சொல்லிவிட்டு சவுக்கைச் சுழற்றுகிறார்கள். ஆங்கிலத்தைக் குறைக்கும் போது தென்னிந்தியர்கள் வேறு வழியே இல்லாமல் இந்தியைத்தானே கற்றாக வேண்டும்? 

சமீபத்தில் அலுவல் மொழிக்கான பாராளுமன்ற நிலைக்குழுவானது (மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களை உள்ளடக்கியது) தமது 117 பரிந்துரைகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க அதில் 110 பரிந்துரைகள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. இதுதான் ‘இந்தித் திணிப்பு’ என்ற உரையாடலை பல தரப்பிலும் நிகழ்த்துவதற்குக் காரணமாகியிருக்கிறது.

உள்துறை அமைச்சர் என்ற முறையில் ப.சிதம்பரம் குழுவின் தலைவராக இருந்தார். ஆருண் எம்.பியும் இந்தக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராகச் செயல்பட்டார்.

கடந்த காலங்களில் அலுவல் மொழிக்கான பாராளுமன்ற நிலைக்குழு (The Committee of Parliament on Official Language)  எட்டு முறை தமது பரிந்துரைகளைச் செய்திருக்கிறது. அவை அந்தந்த சமயத்திலிருந்த குடியரசுத் தலைவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு சட்டமாகவும் இயற்றப்பட்டிருக்கின்றன. ஒன்பதாவது முறையாக 2011 ஆம் ஆண்டில் அனுப்பி வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்குத்தான் இப்பொழுது பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். 

ஒன்பதாவது பகுதியில்(தற்போதைய பரிந்துரை) உள்ள பரிந்துரைகளை வாசிக்கும் போது உண்மையில் அலுவல் மொழிக்கான நிலைக்குழுவா அல்லது இந்தி மொழிக்கான நிலைக்குழுவா என்கிற சந்தேகம் எழுப்பக் கூடிய அளவுக்கான பரிந்துரைகள் அவை. 

இந்தியாவில் அலுவல் மொழிகள் என்பவை இந்தியும், ஆங்கிலமும் மட்டும்தான். அலுவலகப்பயன்பாட்டில் ஆங்கிலத்தின் ஆக்கிரமிப்பைக் குறைத்து ‘இந்தியின் உபயோகத்தை மேம்படுத்துவது’ என்பதை தமது கடமை என்று வெளிப்படையாகவே இந்த நிலைக்குழுவினர் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்தி மொழியை மேம்படுத்தவும் பரவலாக்கவும் சில நடவடிக்கைகளை எடுக்கிறார்கள் என்றால் பிரச்சினையில்லை. ஆனால் அந்த நடவடிக்கைகள் இந்தியாவில் உள்ள பிற மொழியினரை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். 

இதுவரை சமர்பிக்கப்பட்ட எட்டு தொகுதிகளும், தற்போதைய பரிந்துரைகளும் (ஒன்பதாவது தொகுதி) இணைப்பில் இருக்கின்றன. வாசித்துப் பார்க்கலாம். இந்தி பேசாத பிற மாநிலங்களிலும் நேரடியான தாக்கங்களை உருவாக்கும் பரிந்துரைகளாக அவை இருக்கின்றன என்பதுதான் உறுத்தலாக இருக்கின்றன.

அப்படி நேரடியாகக் கண்களை உறுத்துகிற சில பரிந்துரைகள் கீழே-

எண் 33: இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையானது தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முதல்படியாக பத்தாம் வகுப்பு வரைக்கும் சிபிஎஸ்இ மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும்.

எண் 34 மற்றும் 35: நாடு முழுவதுமான உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி சொல்லித் தரும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான வழிகாட்டும் நெறிமுறைகளை மனிதவள மேம்பாட்டுத் துறை எடுக்க வேண்டும். அதே போல இந்தித் துறை (Hindi Department) இல்லாத கல்வி நிறுவனங்களில் துறையைத் தொடங்க ஊக்குவிப்பதோடு இந்தி வழிக்கல்வியைச் செயல்படுத்தவும் மனிதவள மேம்பாட்டுத் துறை உதவ வேண்டும்.

எண் 36: இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் இந்தி வழியில் தேர்வு எழுதவும் நேர்காணல்களை அணுகுவதற்குமான வாய்ப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
எண் 44: குறைந்தபட்ச இந்திக் கல்வி அனைத்துக் கல்வி நிறுவனங்களில் செயல்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

எண் 48 : அரசு விளம்பரத்துக்காகச் செய்யப்படுகிற செலவில் குறைந்தபட்சம் 50% இந்தி மொழியில் இருக்க வேண்டும். மீதமிருக்கும் 50% தொகையை மாநில மொழிகளுக்கும் ஆங்கிலத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எண் 52: அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் வாங்கப்படுகிற புத்தகங்களில் குறைந்தபட்சம் 50% புத்தகங்கள் இந்தி மொழியில் இருக்க வேண்டும்.

எண் 69: ரயில்வே பயணச்சீட்டுக்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்தி மொழி தெரிந்தவர்களுக்குச் சிரமமில்லாமல் இருக்கும்

எண் 105: குடியரசுத்தலைவர், அமைச்சர்கள் உட்பட - குறிப்பாக இந்தி பேச, எழுதத் தெரிந்தவர்கள்- இந்தி மொழியில் மட்டுமே தங்களது உரையை நிகழ்த்த வேண்டும்.

இந்தியை வலுக்கட்டாயமாக மாற்றுவதன் மூலம் தென்னிந்தியர்களை இந்தி கற்கச் செய்யும் நோக்கம்தான் இதில் மறைந்திருக்கிறது. ‘மும்பை போனா நம்மாளுங்களுக்கு இந்தி தெரியல’ என்று ஒரு அரை மண்டை டிவியில் பேசியதைப் பார்க்க நேர்ந்தது. இந்த மாதிரியான அரைவேக்காடுகள்தான் தமிழகத்தின் சிந்தனையாளர்கள் பட்டியலில் இருக்கிறார்கள்.  தமிழகம் வருகிற எத்தனை மராத்திகள் தமிழ் தெரிந்து கொண்டு வருகிறார்கள்? இந்தியை வைத்துக் கொண்டு ஹைதராபாத்தில் காலம் ஓட்டலாம். குண்டூரில் தெலுங்குதான் தேவை. பிழைப்புக்காகச் செல்லும் போது அவனவன் தேவையான மொழியைக் கற்றுக் கொள்வான். எவனோ ஒருவன் மொழியைக் கொண்டு வந்து ஏன் இந்த மண்ணில் கற்றுத் தர எத்தனிக்கிறீர்கள் என்பதுதான் கேள்வி. 

‘இவை வெறும் பரிந்துரைகள்தான் கட்டாயமில்லை’ என்று பாஜக அமைச்சர் ஒருவர் பேசியிருந்தார். இந்தப் பரிந்துரைகள் குடியரசுத்தலைவரிடம் ஒப்புதல் பெறப்பட்டு உத்தரவாக வெளியிடப்பட்டிருக்கின்றன. கல்வி நிறுவனங்களும், ஆராய்ச்சி நிறுவனங்களும் செயல்படுத்தத் தொடங்குவார்கள். எந்த நிறுவனத்திலாவது ‘இவை வெறும் பரிந்துரைதான்’ என்று நிறுத்திக் கொள்வார்களா என்ன?

ரயில்வே டிக்கெட்டில் இந்தி இல்லையென்றால் இந்தி பேசுகிற மக்கள் கஷ்டப்படுவார்கள் என்றால் தமிழில் இல்லையென்றால் தமிழ் பேசுகிற மக்களும்தான் கஷ்டப்படுவார்கள். இந்தி மட்டும் ஏன் எச்சுல பொறந்த கச்சாயமாகிறது? இந்தி பேசாத மாநிலத்தில் இந்தியில் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்றால் வடநாட்டு கல்வி நிறுவனங்களில் படிக்கும் பிற மொழி மாணவர்களுக்கு அவரவர் தாய்மொழியில் தேர்வெழுதவும் நேர்காணல்களை அணுகவும் அனுமதியளிப்பார்களா? இந்திப் புத்தகங்கள்தான் ஐம்பது சதவீதம் இருக்க வேண்டும் என்றால் மற்ற மொழி மாணவர்களுக்கு அவரவர் தாய்மொழி புத்தகங்களை வாங்கிப் படிப்பதற்குத் தருவார்களா? இவையெல்லாம் இந்தி படிப்பதைக் கட்டாயமாக்காமல் வேறு என்ன? 

இந்தி மொழிக்குத் தரும் அதே அளவிலான முக்கியத்துவத்தை பிற மொழிகளுக்கும் வழங்கினால் இந்தித் திணிப்பு என்று சொல்லாமல் விட்டுவிடலாம். இல்லையென்றால் இதை என்னவென்று சொல்வது?நாம் பரவலாக உரையாடத்தான் வேண்டும்.