Jun 21, 2017

ஏன் உதவுவதில்லை?

அய்யா என் மகனின்  கல்வி உதவிக்காக உங்கள் நிசப்தம்.காம் இணைப்பிற்கு சென்றேன். அரசு மற்றும் அரசு உதவி பெறும் (Government or Govt.aided) கல்வி நிறுவனங்களில் படிக்கக் கூடிய மாணவர்கள் மட்டுமே பரிசீலிக்கப்படுகிறார்கள். தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவதில்லை. இந்த வரிகள் மிகவும் வேதனையாக உள்ளது. அரசு பள்ளியில் பயிலும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு அரசே உதவி செய்யும் போது உங்கள் உதவி தனியார் பள்ளி மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஏன் இருக்க கூடாது இந்த குழந்தைகளின் பெற்றோர் படும் அவஸ்தையை (கந்து வட்டியாவது வாங்கி குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள்) கொஞ்சம் குறைக்கலாம் அல்லவா. இது ஒரு கோரிக்கையாக எடுத்து கொள்வீர்களா?
 .
அன்புடன் 
***  
இதே கேள்வியை வெவ்வேறு தொனிகளில் கேட்டிருக்கிறார்கள். தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு ஏன் உதவுவதில்லை என்று முன்பே எழுதிய ஞாபகம் இருக்கிறது.
  • அதிக மதிப்பெண்களை வாங்கிய மாணவர்களுக்குத்தான் பெரும்பாலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கிறது. அரசுக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் நன்றாகப் படித்தவர்கள்/படிக்கிறவர்கள் என்று பெரும்போக்காக முடிவு செய்துவிடலாம். நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்பதுதான் முக்கியமான நோக்கம்.

  • மதிப்பெண்கள் குறைவாக பெற்ற மாணவர்கள் வேறு பாடப்பிரிவை எடுத்துப் படிப்பதுதான் சரி என்று நினைக்கிறேன். உதாரணமாக மதிப்பெண்களையும் குறைவாகப் பெற்று அதே சமயம் தாம் பொறியியல்தான் படிக்க வேண்டும் என்று நினைத்து தனியார் கல்லூரிகளுக்குத் துணிகிறவர்கள் ‘எப்படியாவது பணத்தைப் புரட்டிவிட முடியும்’ என்று நம்புகிறவர்களாக இருப்பார்கள். அப்படியொரு நம்பிக்கையில்லையென்றால் செலவானாலும் பரவாயில்லை என்று தனியார் கல்வி நிறுவனத்தில் சேர்ப்பதற்கான வாய்ப்பு வெகு குறைவு. அறக்கட்டளையின் இரண்டாவது நோக்கம் எந்தவிதத்திலும் பணத்தைப் புரட்ட முடியாத மனிதர்களைக் கை தூக்கி விடுவதாகத்தான் இருக்க வேண்டுமே தவிர ‘எப்படியாவது புரட்டிவிட முடியும்’ என்ற நம்பிக்கை கொண்டவர்களுக்கு நாமும் கை நீட்டிச் சுமையைக் குறைப்பதாக இருக்க வேண்டியதில்லை. 
  • அரசுக் கல்வி நிறுவனங்களில் படிக்கிற மாணவர்களுக்கு அரசாங்கம் உதவுகிறதுதான்- மறுக்கவில்லை. அப்படி உதவும் பட்சத்திலும் கூட நிதித் தேவைகளுக்காகத் திண்டாடும் பல நூறு மாணவர்களைக் காட்ட முடியும். விளிம்பு நிலை மனிதர்கள். அவர்களுக்குத்தான் நாம் உதவ வேண்டும்.
  • தனியார் கல்வி நிறுவனத்தில் பயிலும் ஒரு மாணவனுக்குக் கட்டக் கூடிய தொகையைக் கொண்டு குறைந்தபட்சம் இரண்டு அரசுக் கல்லூரி மாணவர்களுக்குக் கட்டிவிட முடியும்.
  • தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கும் உதவத் தொடங்கினால் வரக் கூடிய கோரிக்கைகளின் எண்ணிக்கை மாளாததாகிவிடும். இப்படியான குறைந்தபட்ச வடிகட்டல் இல்லாமல் சமாளிப்பது வெகு சிரமம்.
  • விதிகள் இருப்பினும் சில விதிவிலக்குகள் உண்டு. மிகக் கடுமையான வடிகட்டல்களுக்குப் பிறகு மனிதாபிமான அடிப்படையில் ஒன்றிரண்டு மாணவர்களுக்கு உதவியிருக்கிறோம். (பெற்றோரில் இருவருமே இல்லாதவர்கள், இவன் படித்தால் ஒரு தலைமுறையே தப்பிக்கும் என்பது மாதிரியான சில உதாரணங்கள்) அவர்களின் சூழலை வெளியில் எழுதி வெளிச்சமாக்க வேண்டியதில்லை என்று இலைமறை காய்மறையாக மட்டுமே எழுதுவதுண்டு. 
இங்கு யாருக்குத்தான் கஷ்டமில்லை? 

ஒரு கோடி ரூபாய் வைத்திருப்பவருக்குக் கூட இன்னும் பத்து லட்ச ரூபாய் இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் தோன்றும். எல்லாக் காலத்திலும் எல்லோருக்கும் பணத்தின் தேவை இருந்து கொண்டேயிருக்கிறது. ஆனால் அத்தனை பேருக்கும் உதவுவது சாத்தியமில்லை. அதனால்தான் விதிமுறைகள் எல்லாம். எல்லாவற்றையும் தாண்டி இதுவரை கிடைத்திருக்கும் அனுபவங்களைக் கொண்டு மனிதாபிமான அடிப்படையில்தான் முடிவெடுக்கிறோம். எல்லாமே சரியான முடிவுகள் என்று சொல்ல முடியாது. ஆனால் ஒவ்வொரு புதிய முடிவெடுப்பின் போதும் செய்த தவறைத் திரும்பச் செய்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்/றோம்.

0 எதிர் சப்தங்கள்: