Jun 21, 2017

அழகும் நெகிழ்வும்

சென்னைக்கு போரூர் சிக்னல் மாதிரி பெங்களூரில் நிறைய உண்டு. சென்னைவாசிகள்தான் உலகத்திலேயே கடும் துன்பத்திற்கு ஆளானவர்களைப் போல ‘அய்யோ ட்ராபிக்’ என்று புலம்புகிறார்கள். நாங்கள் ஏதாவது புலம்புகிறோமா? மாமனார் மாமியாரை எல்லாம் பழி வாங்க வேண்டும் என்று நினைத்தால் டவுன் பஸ்ஸில் ஏற்றி காலை ஒன்பது மணிக்கு சில்க் போர்ட் சிக்னலில் விட்டுவிட வேண்டும். அதன் பிறகு நம் வம்புக்கே வர மாட்டார்கள். அதே போல இன்னொரு சிக்னல் இருக்கிறது. சோனி வேர்ல்ட். பெயரைக் கேட்டாலே எனக்கு பற்றியெரியும். தெரியாத்தனமாகக் கூட சிக்கிக் கொள்ள மாட்டேன். ஆனால் என்னுடைய கிரகம்- அல்லது - நயன்தாராவின் நல்ல நேரம் - அவ்வழியாகச் சென்றுவிட்டேன்.

ஏதோவொரு படப்பிடிப்பு. சாயந்திரம் ஐந்தரை மணிக்கு ஆளாளுக்கு செல்போனை வைத்து படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஏதோ விபத்து போலிருக்கிறது என்றுதான் நினைத்தேன். நம் ஊரில்தான் யாராவது அடிபட்டுக் கிடந்தால் அவரவருக்குள்ளிருக்கும் பிசி ஸ்ரீராம்கள் எட்டிப்பார்த்துவிடுவார்கள் அல்லவா? ஆனால் நயன்தாரா. தாரா என்றால் வழிவது. நயன் என்றால் அழகு. அதனால் வண்டியை ஓரங்கட்டி நாமும் வழிந்துவிட்டு வரலாம் என்று நிறுத்தினேன். ஒரு வெண்சட்டை மாமா வந்தார். 

‘வண்டியை நிறுத்தாத’ என்றார். ஏற்கனவே அழகு வழிந்து சிக்னல் முழுக்கவும் நிரம்பிக் கிடக்கிறது. ‘இவன் வேற..’ என்று அவர் நினைத்திருக்கக் கூடும்.

‘சார்...தாரா சார்...நயன்தாரா’ - தாரா என்று சொல்லும் போது ஒலியைக் குறைத்துவிட்டு வெறும் காற்று மட்டும் வாயிலிருந்து வெளியேறியது.

‘ட்ராபிக் ஆகும்’ என்றார். கடுப்பாகிவிட்டது. போராளி வடிவத்தில் இருந்திருந்தால் ‘தெரியுதுல்ல...அப்புறம் எதுக்குங்க இந்நேரத்துல ஷூட்டிங்குக்கு பர்மிஷன் கொடுத்தீங்க’ என்று கேட்டிருப்பேன். துரத்திவிட்டுவிடுவாரோ என்கிற பயத்தில் பம்மிவிட்டேன். அவரும் தொலையட்டும் என்று என்னை விட்டுவிட்டார்.

நயன் சாலையைக் கடக்கும் காட்சி. அதைப் படமெடுக்கத்தான் குழுமியிருந்தார்கள். என் கையில் கேமிராவும் இல்லை செல்போனும் இல்லை. இரண்டாவது முறையாகக் கண்களில் படமெடுத்துக் கொண்டேன். இதற்கு முன்பாக ‘உன் விழியும் என் வாளும் சந்தித்தால்’ மாதிரி ஆனந்த விகடன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஒன்றரை வினாடிகள் சந்தித்துக் கொண்டோம். இன்றைக்கு ஒன்றேகால் வினாடிகள்தான். அடுத்த முறை அழகைக் கூட்டினால் ஒன்றே முக்கால் வினாடிகள் சந்தித்துக் கொள்ளக் கூடும். இரண்டு மூன்று அழகுக் கூடங்களைப் பார்த்து வைத்திருக்கிறேன்.

பொறுமையாக வேடிக்கை பார்த்துவிட்டுத்தான் வந்திருப்பேன். வீட்டிற்கு நாகேஸ்வரன் வந்திருந்தார். அவருக்கு அறுபத்தைந்து வயது இருக்கும். லங்கா-இந்தியன் ஆயில் கார்போரேஷன் நிறுவனத்தின் முதல் எம்.டி அவர்தான். ஓய்வு பெறும் போது ஐ.ஓ.சியின் போர்ட் உறுப்பினர்களில் ஒருவர். பெருந்தலை. அவரும் அவரது மனைவியும் வீட்டிற்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். அலைபேசியில் அழைத்தார். ‘நயனைப் பார்த்துட்டு இருக்கேன்’ என்று சொல்லவா முடியும்? ‘இதோ சார்...பத்து நிமிஷம்’ என்று கிளம்பியிருந்தேன். வீட்டிற்குச் செல்லும் வரை நயன் பற்றிய நினைப்புதான். தெய்வீக நினைப்பு.

வீட்டில் அம்மாவும் மகியும் இருந்தார்கள். வீட்டில் இருப்பவர்களைப் பார்ப்பதற்காகத்தான் தேடி வந்திருந்தார். என்னைப் பார்ப்பதற்காக யாரேனும் வீட்டுக்கு வருவதாக இருந்தால் கொஞ்சம் இடைவெளி விட்டுச் செல்வதுதான் வழக்கமும் கூட. கிடைக்கும் இடைவெளியில் ‘அவரு நல்லவரு..வல்லவரு’ என்றெல்லாம் எதையாவது சொல்லி வைத்துவிடுவார்கள். இப்படி யாராவது வந்து புகழ்ந்தால்தானே நமக்கெல்லாம் வீட்டில் மரியாதை கிடைக்கும்? ‘பொழப்புக் கெட்ட பைத்தியகாரன் மாதிரி சுத்தறான்’ என்று என்னை இளக்காரமாக நினைக்கும் தம்பிக்கும் சுர்ரென்று இருக்கும். 

நான் வீடு போய்ச் சேரும் வரைக்கும் நிறையச் சொல்லியிருப்பார் போலிருக்கிறது. வாயடைத்துக் கிடக்கிறார்கள்.

நாகேஸ்வரனுக்கு அட்டாக்ஸியா. மூளையில் செரிபலம் பகுதியில் உண்டாகக் கூடிய பாதிப்பு இது. அவரால் உதவியில்லாமல் நடக்க முடியாது. பேசும் போது சொற்கள் குழறும். மிக நுணுக்கமாகக் கவனித்தால் மட்டுமே வார்த்தைகள் புரியும். அப்பேர்ப்பட்ட சிரமத்திலும் சென்னையிலிருந்து வந்து மாலை நேரத்தில் வீடு தேடி வந்ததுதான் வீட்டில் உள்ளவர்களுக்கு அவ்வளவு ஆச்சரியம். நான் எழுதுவதையெல்லாம் வீட்டில் இருப்பவர்கள் யாரும் படிப்பதில்லை. புத்தகமாக வந்தால் அம்மா படிப்பார். அவ்வளவுதான். இப்படியொருவர் இவ்வளவு சிரமங்களோடு வந்து ‘பார்த்து பேசிட்டு போகணும்’ என்று அமர்ந்திருந்தால் அவர்களுக்கு ஆச்சரியமாகத்தானே இருக்கும்?

வீட்டில் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தார்கள். ஒவ்வொருவரிடமும் என்னைப் பற்றிச் சொன்னார். எப்பொழுதோ எழுதிய கட்டுரைகளின் சில வரிகளை நினைவில் வைத்துச் சொன்னது அம்மாவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும்.

‘நீங்க இவ்வளவு சிரமப்பட்டு வந்திருக்க வேண்டியதில்லை சார்’ என்றேன்.

அவரது அப்பாவுக்கும் அட்டாக்ஸியா இருந்திருக்கிறது. மூத்த அண்ணன் ஒருவருக்கும் இருந்திருக்கிறது. மரபு சார்ந்த நோய். உலகம் முழுவதிலும் சேர்த்தால் ஒரு லட்சம் பேருக்குக் கூட இந்நோய் இல்லை. மருத்துவத்துறையில் ஒரு அரசியல் இருக்கிறது. எந்த நோய் அதிகமானவர்களைத் தாக்குகிறதோ அந்த நோய்க்குத்தான் ஆராய்ச்சிகள் அதிகமாக நடக்கும். மருந்தும் தயாரிப்பார்கள். சொற்பமான மனிதர்களைப் பாதிக்கக் கூடிய நோய்களை விட்டுவிடுவார்கள். அட்டாக்ஸியாவை அப்படித்தான் விட்டுவிட்டார்கள்.

‘மூத்த அண்ணன் படுத்த படுக்கை ஆகித்தான் இறந்தாரு...என்னோட உடம்புக்கும் வலு குறைஞ்சுட்டே வருது....எப்போ என்ன ஆகும்ன்னு தெரியாது..நடமாட முடியறப்போ உங்களை மாதிரியான ஆளுங்களை பார்த்துடணும் மணிகண்டன்’ என்றார். ஒரு மனிதனை அடித்து நொறுக்குவதற்கு இதைத் தவிர வேறு என்ன சொற்கள் வேண்டும்? எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ‘உங்களைப் பார்க்க வந்துட்டு நானே பேசிட்டு இருக்கேன்...நீங்க பேசுங்க...நாங்க கேட்கிறோம்’ என்றார். உண்மையிலேயே நெகிழ்வான சமயங்களில் என்னால் பேச முடியாது. வார்த்தைகளைத் தொலைத்துவிடுவேன். 

அப்படித்தான் நேற்றும்.

வெகு நேரம் பேசிவிட்டு தடுமாறி மெல்லப் படியிறங்கி மிகுந்த சிரமத்திற்கிடையில் வீட்டை விட்டுக் கிளம்பினார். வண்டி வரைக்கும் உடன் வந்தேன். காரில் ஏறி அமர்ந்து புன்னகைத்தபடியே கைகாட்டினார். வாழ்க்கையில் எதையோ அடைந்துவிட்ட சந்தோஷம் எனக்கு. வாழ்நாள் முழுக்கவும் சேர்த்து இப்படி நான்கு மனிதர்களைச் சேர்த்தால் போதும் எனத் தோன்றியது. நாம் செய்கிற செயல்களுக்கு அங்கீகாரமே தேடாமல் இருப்பதுதான் நல்லது. ஆனால் எதிர்பாராமல் கிடைக்கக் கூடிய இத்தகைய அங்கீகாரங்களும் மனிதர்களின் வாழ்த்துக்களும் புரட்டிப் போட்டுவிடுகின்றன என்பதுதான் நிதர்சனம். 

15 எதிர் சப்தங்கள்:

www.rasanai.blogspot.com said...

anbin mani

yes, well said, you deserve this kind of appreciation from a respectable fan of yours. the quality of work you do gives you the right kind of recognition from right people. remembering your lines in articles..... hats off. keep it up. nageswaran sirum nalla irukkattumnu pray panraen. oru 100 negizhvana manithargalum (eg pavannan) oru 1000 negizhchiyana tharunangalum ungalukku vaaikkatum.

# title matches sweetly

anbudan
sundar g chennai

Madhavan said...

En friend orutharum ungalai paarkanumnu thudiyaa thudichittu irukkaru! Oru naal Bangalore kooti varanum

Gopinath Jambulingam said...

உங்கள் பதிவை ஒரு இடைவேளைக்குப் பின் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நயன்தாராவின் நடைக்கு சரி நிகராக போட்டிப்போடுகிறது உங்களின் எழுத்து நடை. ஒரு எழுத்தாளரால் பணம் சம்பாதிக்க முடிகிறதோ இல்லையோ, இது போன்ற ரசிகர்கள் சிலர் இருந்தால் போதும், சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டும் உற்சாகமும் துணிச்சலும் தானாக வந்துவிடும்.

viswa said...

இன்னுமா நயனை பார்த்து ஜொள்ளு விடுகிறீர்கள்?வெரி பேட்

விஸ்வநாதன்

அன்பே சிவம் said...

தம்பி மணி தகவலுக்கு சொல்கிறேன்.

நயன் உ'மக்கு'

அண்ணி முறையாக்கும்.

வேணுமென்றால் கீர்த்தி சுரேஷுக்கு விண்ணபிக்கவும். (சேக்காளி போன்ற ஆசாமிகளுக்கு தெரியாமல்) நானும் பரிந்துரை செய்ய தயார்.👍👌😊💐.

நாடோடிப் பையன் said...

What an honor!

Anonymous said...

எங்கேயோ படித்தது...எழுத்தாளன் வாழும் வரையில் செதுக்குவது சுயசரிதையே. எழுத்து ஒரு ப்ரைவேசி பார்ட். அவரவர்களுக்கானது. உங்கள் எழுத்துகளில் நிறைய சுஜாதா சாயல். அனேகமாய் உங்கள் மரபணுவோடு அவரின் எழுத்துக்கள் கலந்திருக்கக் கூடும். வாழ்த்துக்கள். உங்கள் எழுத்திற்காக பல மைல் கடந்து வந்தவரை நினைத்தால் எழுத்தின் வலிமை புரிகிறது. வெங்கட், ஒசூர்

ஜெய் பிரகாஷ் said...

அருமை நண்பரே !!!

Anonymous said...

AS USUAL GOOD INYOUR STYLE. OUR VISIT WAS TO SEE YOUR MOTHER AND SON MAHI, 'PULIKKU PIRANDHADHU'.
YOUR MOTHER WAS VERY VERY WARM .HER WELCOME WAS SO NICE AND TOUCHING WE WERE MOVED. OUR FIRST WELCOME WAS FROM YOUR BROTHER'S SON WHO WAS CYCLING AND SAID "VANGA,VANGA" MADIKKU PONGA . UNGALUKKA THAN KATHUKITTU IRUKKANGA.
IT WAS LIKE 'DHONI'S' HELICOPTER SHOT. SIMPLY SUPER.
ON REACHING YOUR HOUSE YOUR MOTHER AND SON TOOK OVER.' 'MAHI' CALLED US "THATHA" AND "PATTI" .VERY RARE AMONG TO DAYS CHILDREN. THE AFFECTION SHOWN BY YOUR SON IS THE 'HALL MARK' OF OUR VISIT.
YOUR BROTHER WAS HANDSOME AND LOOKED LIKE A COLLEGE STUDENT. NO BODY WILL BELIEVE HE IS 30 PLUS.
YOUR AND BROTHERS WIFE ENTERED THE KITCHEN ON RETURN FROM OFFICE AND STARTED COOKING OUR TASTY/WHOLESOME DINNER TAKING TIME TO TALK TO US IN BETWWEN.
IT WAS "VIRUNTHOMBAL" PAR EXECEELENCE. THE 'JAVVARISI' PAYASAM WAS SIGARAM.
HOT "VADAIS" WERE OUT OF THE WORLD.
IT WAS "ANBU" TO THE CORE.
AS YOU SAID WORDS FAIL ME.IT IS AN EXPRERIENCE WE WILL ALWAYS CHERISH.
ANBUDAN,
M.NAGESWARAN.

சேக்காளி said...

@அன்பே சிவம் said
//(சேக்காளி போன்ற ஆசாமிகளுக்கு தெரியாமல்) //
நான் செவனே ன்னு இருக்கேன். ஏம்ய்யா மதினி , கொளுந்தியா ன்னுட்டு

சேக்காளி said...

//வீட்டிற்கு நாகேஸ்வரன் வந்திருந்தார்//
இதிலிருந்து தான் இந்த கட்டுரை துவங்கியிருக்க வேண்டும்.
அவருக்கு அறுபத்தைந்து வயது இருக்கும். லங்கா-இந்தியன் ஆயில் கார்போரேஷன் நிறுவனத்தின் முதல் எம்.டி அவர்தான். ஓய்வு பெறும் போது ஐ.ஓ.சியின் போர்ட் உறுப்பினர்களில் ஒருவர்.
"எப்போ என்ன ஆகும்ன்னு தெரியாது..நடமாட முடியறப்போ உங்களை மாதிரியான ஆளுங்களை பார்த்துடணும்" ன்னு வந்திருக்கார்.
எத்தனை உன்னதமான நிகழ்வு இது.இதை பற்றி மட்டும் எழுதியிருந்தால் இது உங்களின் படைப்புகளில் மிக முக்கியமானதாய் ஆகியிருக்கும்.
அந்த உன்னதத்தை அண்ணி நயனிடம் (கேக்குதா அன்பே சிவம்) தொலைத்து விட்டீர்களே.நயனிடம் வழிந்ததை எழுதியே ஆக வேண்டும் என்றால் தனி பதிவாக எழுதியிருக்கலாம்.
(பின்னூட்ட வசதியை அனுமதித்து இதை எழுத வாய்ப்பளித்தமைக்கு நன்றி)

சஹஜமொழி said...

உண்மை

Anonymous said...

Great Money Sir...Sorry mani Sirdurai.thiyagaraj
@tiruchengode
@trichy

Unknown said...

அன்பிற்குறிய சேக்காளியாரே, ஆரோக்கியமான அன்பு என்றும் கேடு தராது. (தான் கெட்டாலும்). தங்களை சுட்டியது., நகைப் பொருட்டே. பொறுத்தருள்க.

சேக்காளி said...

https://www.blogger.com/profile/14577456189899588087
//. தங்களை சுட்டியது., நகைப் பொருட்டே//
நல்லது.அதே போல் எனது கமெண்டுகளையும் எடுத்துக் கொள்ளவும்.
இப்படிக்கு கைப்புள்ள பங்காளி.
அன்பே சிவம் = BALA KUMARAN S ?