Jun 22, 2017

பள்ளிக்கூடம் தெரியுமா?

ஜூலை 8 அல்லது 9 ஆம் தேதிக்குத் தயாராகிக் கொள்ளுங்கள்.

தொண்ணூறாயிரம் ரூபாயை பாரதி புத்தகாலயத்துக்கு அனுப்பி வைக்கவிருக்கிறார்கள். இந்தத் தொகையை வைத்து பனிரெண்டு பள்ளிகளுக்கு புத்தகங்களை வழங்க முடியும். ஏற்கனவே தயாரித்து வைத்திருக்கும் பள்ளிகளின் பட்டியலில் இன்னமும் சில பள்ளிகளைச் சேர்க்க வேண்டும். இரண்டொரு நாட்களுக்கு முன்பாக இன்றைய தேதிக்குத் தமிழகத்தில் ஒரு முக்கியமானவரைத் தொடர்பு கொள்ள முடிந்தது. பள்ளிகளுக்குப் புத்தகங்களை வழங்குவதற்கு அவர் சரியான மனிதர்.

‘நீங்க வருவதாக இருந்தால் எளிய நிகழ்ச்சி ஒன்றை நடத்தலாம்’ என்றேன். மனதிலும் அதுதான் ஓடிக் கொண்டிருந்தது. திருமண அழைப்பிதழை தபாலில் அனுப்புவது போல வெறுமனே புத்தகங்களை அனுப்பி வைக்காமல் பள்ளிகளின் சார்பில் யாராவது ஒருவரை அழைத்து அவர்களிடம் கலந்துரையாடுவதன் வழியாக பள்ளிகளிடமிருந்து நாமும் நிறையக் கற்றுக் கொள்ள முடியும். நமது நோக்கத்தையும் அவர்களுக்குத் தெளிவாகச் சொல்ல முடியும். கல்வி, புத்தகங்கள், பள்ளி சார்ந்து அவரைத் தவிர வேறு யாரும் மனதில் தோன்றவில்லை. அவரும் யோசிக்கவில்லை. உடனடியாகச் சரி என்று சொல்லிவிட்டார். 

அநேகமாக யாரென்று யூகித்திருப்பீர்கள். அவரேதான்!

ஜூலை 8 அல்லது 9 ஆம் தேதி சென்னயில் நிகழ்வு. ஏதேனும் ஒரு சிற்றரங்கில் செலவில்லாமல் நடத்துவதாக யோசனை. ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒழுங்குபடுத்திவிட்டு முறையாக அறிவிக்கிறேன். ‘அய்யோ முன்னாடியே சொல்லியிருந்தா ஊருக்கு போயிருக்க மாட்டேனே’ என்று சாக்குப்போக்கு சொல்கிறவர்களுக்காக இருபது நாட்களுக்கு முன்பாகவே சொல்லியாகிவிட்டது. தயாராக இருங்கள். 

அதற்கு முன்பாக ஒரு வேலை இருக்கிறது- 

முதல் பத்தியில் சொன்னது போல சில பள்ளிகளை நம் பட்டியலில் சேர்க்க வேண்டிய பணி. தரமான பள்ளிகள் என்று கருதும்பட்சத்தில் பள்ளித் தலைமையாசிரியரைத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள். இதில் ஒரு மோசமான அனுபவம் இருக்கிறது. ‘இந்த ஸ்கூல்லதான் நான் படிச்சேன்..அருமையான ஸ்கூல்’ என்று பரிந்துரைப்பார்கள். அவர் படித்த காலத்தில் நல்ல பள்ளியாக இருந்திருக்கக் கூடும். நம்பிக்கையோடு தொடர்பு கொள்ளும் போது மனசாட்சியே இல்லாமல் ‘சார் நான் குடும்பஸ்தன்...எனக்கு இந்த மாதிரி எக்ஸ்ட்ரா வேலை செய்ய நேரமில்லை’ என்று முகத்தில் அடித்தாற் போலச் சொல்லக் கூடிய ஆசிரியர்களை எதிர்கொள்ள நேர்கிறது. 

‘நாங்க மட்டும் கல்யாணமாகாம கோயில் மாடு மாதிரி சுத்திட்டு இருக்கோம்’ என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தேன். 

ஆர்வமேயில்லாத மனிதர்கள் ஆசிரியர்களாக இருக்கும் பள்ளிகளுக்கு எதைச் செய்தாலும் வீண்தான். ஆற்றில் கரைத்துவிட்ட பெருங்காயம் மாதிரி. காசுக்கும் கேடு; நம் உழைப்புக்கும் கேடு.

அதனால்தான் பரிந்துரைப்பவர்களிடம் ‘தலைமையாசிரியரைத் தொடர்பு கொள்ளச் சொல்ல முடியுமா?’ என்று கேட்பது. முதல் பேச்சிலேயே ஓரளவுக்குத் தெரிந்துவிடும். அதன் பிறகு தேவையான விவரங்களை கேட்டு வாங்கிக் கொள்ளலாம். ஆர்வமிக்க ஆசிரியர்களுக்கு உதவுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். அவர்கள்தான் உதவிகளை மாணவர்களுக்குக் கொண்டு சேர்ப்பார்கள். மாணவர்களை மனிதர்களாக வார்த்தெடுப்பார்கள்.

நிறையப் பள்ளிகள் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். ஆனால் பணம் இருக்கிறது என்பதற்காக நமக்குத் தெரிந்த பள்ளிகள், யாரோ பரிந்துரைக்கும் பள்ளிகளையெல்லாம் பட்டியலில் சேர்க்க வேண்டியதில்லை. நூலகத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய ஆசிரியர்களாக இருக்க வேண்டும். அப்ப்டியான பள்ளி என்று கருதும்பட்சத்தில் பள்ளியில் தகவலைத் தெரிவித்துவிடுங்கள். பள்ளியிலிருந்து மின்னஞ்சல் வந்த பிறகு தொடர்பு கொண்டு பேசுகிறேன்.

அரசு உதவி பெறும் பள்ளி, ஆரம்ப அல்லது நடுநிலைப்பள்ளி, கிராமப்புற பள்ளியெனில் சிறப்பு.

நாம் செய்கிற செயல் சரியானவர்களைச் சென்றடைய வேண்டும். ஒவ்வொரு முறையுமே சரியான பயனாளிகளைக் கண்டடைவதுதான் பெரும் சவாலாக இருக்கிறது. இப்பொழுதும் அப்படித்தான். தீவிரமாகப் பரிசீலித்து தயவு தாட்சண்யமே இல்லாமல் கழித்துக் கட்டிய பிறகு மிச்சமிருக்கும் பள்ளிகளை இறுதி செய்து கொள்ளலாம். 

நன்றி.

5 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

Anna, In the first line you mentioned as June 8 and 9. It should be July 8 and 9. I think. Kindly check.

Mani said...

Is it S.Ra ?

Kodeeswaran.R.Samy said...

இறையன்பு IAS....

அன்பே சிவம் said...

கண்டிப்பா அவங்களா இருக்காது. Yes.ம் ச ஒரே உச்சி (சரி சரி சாரி) உச்சரிப்பில் வருவதால்
வேரோர் உ.. உ தய (உளறிட்டேனோ?!) ம்ம் வரும் என பட்சி சொல்லுது.

Unknown said...

ன்னா!. ஒரு நாள் முன்ன இருந்தா என் பேரும் 👍👌வரலாறுல பதியும். கொஞ்ச (கொஞ்ச இல்ல 'கொஞ்சம்') பரிசீலனை பண்ணுங்க.