Jun 8, 2017

திணிப்பு

இருபது வருடங்களுக்கு முன்பாகக் கூட ஆடி பதினெட்டு தினத்துக்காக மரத்தில் ஊஞ்சல் கட்டி தூரி ஆடியதுண்டு. பூப்பறிக்கச் செல்லும் நோம்பிக்காக ஊரே திரண்டு குளத்துக்கரைக்குச் செல்லும். அப்பொழுதே குளங்கள் வறண்டு போயிருந்தன என்றாலும் கூட அதுவொரு சம்பிரதாயமாக இருந்தது. அண்ணமார் கதையை எப்படியிருந்தாலும் வருடம் ஒரு முறையாவது கேட்டுவிடுவோம். சின்ன அண்ணன் பெரியண்ணன் நல்லதங்காள் கதையை எத்தனை முறை கேட்டாலும் அழுதுவிடுகிற பாட்டிகள் ஊரில் இருந்தார்கள். பொட்டுச்சாமி, கருப்பராயன், காளியாத்தா, கன்னிமார்சாமி என்று சிறு சிறு தெய்வங்களுக்கு ஏதாவதொரு பூசையைச் செய்து கொண்டிருந்தார்கள். இப்படி காலங்காலமாகவே தமிழகம் முழுக்கவும் பகுதிகளுக்கேற்ற நாட்டார் கடவுள் வழிபாடுகளும் கொண்டாட்டங்களும் இருந்தன. அதை மக்கள் அவரவர் வலுவுக்கு ஏற்பக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.

இப்படியான பண்பாட்டு நிகழ்வுகளைத் தேடிப் பார்க்கும் போது வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் அந்நியர்கள் நம் மீது தமது தாக்கத்தைச் செலுத்தியிருக்கிறார்கள். படையெடுத்த மன்னர்கள், பிறமொழி ஆட்சியாளர்கள், ஆங்கிலேயேர்கள் என்று நிறையப் பேர் தமிழர்களைத் தட்டி நெகிழ்த்தினார்கள். உதாரணமாக யுகாதி பண்டிகைக்கு வாழைப்பழத்தில் வேப்பம்பூவைக் கலந்து உண்ணும் பழக்கம் தெலுங்கர்களிடமிருந்து தமிழர்களுக்கு வந்து சேர்ந்தது. இப்படியாக சமூகம், பண்பாடு சார்ந்து நிறைய மாறியிருக்கிறோம்.

என்னதான் அந்நியத் தாக்கமிருந்தாலும் தமிழர்கள் தம் கட்டிக் கொண்டிருந்தார்கள். சற்றே நெகிழ்ந்தாலும் கூட தமது பண்பாட்டு விழுமியங்களைத் தொடர்ச்சியாகப் பின்பற்றி வந்தார்கள். ஆனால் கடந்த இருபத்தைந்தாண்டு காலத்தில் முற்றாகப் பலவற்றை இழந்துவிட்டோம். பெரும்பாலான சம்பிரதாயங்கள் வழக்கொழிந்து போய்விட்டன. தீபாவளிக்கும் விநாயகர் சதுர்த்திக்கும் இருக்கும் கொண்டாட்டங்கள் ஆடி நோம்பிக்கும் பொட்டுச்சாமி கோவிலுக்கும் இல்லை. 

இருபதே வருடங்கள்தான். 

சுருக்கமாகச் சொன்னால் எப்பொழுது தொலைக்காட்சியும், கேபிளும் வந்து சேர்ந்து கிராமங்கள் பூச்சு பூசத் தொடங்கினவோ அப்பொழுதே நாம் ஒவ்வொன்றாக இழக்கத் தொடங்கிவிட்டோம். மேம்போக்காக டிவிதான் காரணம் என்று சொன்னாலும் நுணுக்கமாகப் பேசினால் எப்பொழுது உலகமயமாக்கலும் தாராளமயமாக்கலும் நகரங்களில் வாய்ப்புகளைக் குவித்தன. கிராமங்களிலிருந்து நகரம் நோக்கிய இடப்பெயர்வு அதிகமான போது உள்ளூர் நோம்பிகள் நமது கைவிட்டுப் போகத் தொடங்கின. கருப்பராயனுக்குச் செவ்வாய்க்கிழமைதான் கிடாவெட்டு என்று இருந்த வழக்கத்தை யாரும் மீறத் தயாராக இல்லை. அதற்கு பதிலாக கிடாவெட்டையே கைவிட்டார்கள். பொதுவாக மாரியம்மன் கோவில் திருவிழா வியாழக்கிழமை நடைபெறும். அடுத்த நாளான வெள்ளிக்கிழமை மஞ்சள் நீர் விளையாட்டு என்றால் ‘உள்ளூர் பண்டிகைக்காக இரண்டு நாட்கள் அலுவலகத்தில் விடுப்பு எடுக்க முடியாது’ என்று சொல்லித் திருவிழாவையே தவிர்க்கத் தொடங்கிய போது அடுத்த தலைமுறைக்கும் மாரியம்மனுக்குமான தொடர்பு விட்டுப் போனது. 

அரசு விடுமுறை தினங்களில் வரும் பொங்கல் தீபாவளியெல்லாம் தப்பித்துக் கொண்டன. ‘பொங்கலுக்குத்தான் லீவு’ ‘தீபாவளிக்குத்தான் ஊருக்கு வர முடியும்’ என்கிற சமாதானங்கள் இயல்பாகின. வாழ்க்கையும் பிழைப்பும் மனிதர்களைச் சொந்த ஊர்களிலிருந்து பிடுங்கி நட்ட போது, மகனும் மகளும் பேரன்களும் பேத்திகளும் அயலூர்களில் வசிக்கும் கிராமத்து வீட்டார்கள் கருப்பராயனையும் பொட்டுச்சாமியையும் மாரியம்மனையும் மெல்ல மெல்ல விட்டு ஒதுங்கினார்கள்.

ஒருவிதத்தில் இது கலாச்சார ஆக்கிரமிப்பு இல்லையா? நம்மையுமறியாமல் நம் மீது நிகழ்த்தப்படுகிற ஆக்கிரமிப்பு. செவ்வாயும் வியாழனும் வெள்ளியும் நம் பண்டிகைகளுக்கான நாட்கள் என்ற சூழலில் சனி, ஞாயிறு என்கிற காலண்டர் தினங்களில் வந்தால் மட்டும்தான் கலந்து கொள்ளவே முடியும் என்று ஆகிப் போனோம். படிப்படியாக உள்ளூர் பண்டிகைகள் நம்மை விட்டுத் தூரமாகச் சென்றுவிட்டன. யாரையுமே கை நீட்டிக் குறை சொல்ல முடியாத திணிப்பு இது. 

‘உனக்கு வசதி வேணும்; நல்ல சம்பளம் வேணும்ன்னுதானே போன?’ என்று கேட்டால் ‘ஆமாம்’ என்ற பதிலைத் தவிர என்ன சொல்ல முடியும்? ‘உன்னை யாராச்சும் கொண்டாடக் கூடாதுன்னு சொன்னாங்களா? வேணும்ன்னா கொண்டாட வேண்டியதுதானே’என்று கேட்கலாம்தான். ஆனால் எத்தனை பேருக்கு சாத்தியமாகும் இது? மன்னராட்சிக்காலத்தில் கலாச்சார அழிப்புகளும் திணிப்புகளும் வலுக்கட்டாயமாக நிகழ்ந்தன. இன்றைக்கு எதுவுமே நேரடியாக நிகழ்வதில்லை. சாமானிய மனிதர்கள் உணர்ந்து கொள்ளாதபடி மறைமுகமாக நிகழ்கிறது.

வரலாறு இப்படித்தான். பொதுவாகவே வலுவான அந்நியன் ஒருவன் நம் மண்ணில் கால் பதிக்கும் போது அவனுடைய செயல் ஆக்டோபஸ் போலத்தான் இருக்கும். அந்த மண்ணின் பண்பாட்டு வேர்களை அடியோடு கபளீகரம் செய்துவிட்டு தமது வேர்களை மண்ணில் பாய்ச்சுவான். அந்நியன் என்றால் மனிதனே வந்து காலூன்ற வேண்டும் என்பதில்லை. அவனுடைய மொழி, அவனுடைய பொருளாதார வீச்சு என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உலகமயமாக்கல் என்ற பொருளாதார வீச்சும் ஆங்கிலம் என்ற மொழியும் நம்முடைய பண்பாட்டை அப்படித்தான் விழுங்கத் தொடங்கின.

தாராளமயமாக்கலும், உலக மயமாக்கலும் வசதி வாய்ப்புகள், அறிவியல் பெருக்கம், பொருளாதார முன்னேற்றம் என அதீதமான வளர்ச்சியைக் கொண்டு வந்து இறக்கியது என்பதை மறுக்கவில்லை என்றாலும் நம் பண்பாட்டுக் கூறுகளைப் படுவேகமாக அழித்தது என்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். வெறுமனே நாட்டார் வழிபாடு, பண்டிகைகள் என்று மட்டுமில்லை- நம்முடைய வாழ்முறையின் சகல கூறுகளிலும் அந்நியத்தின் தாக்கங்களை உணர முடிகிறது. நம்முடைய பண்பாட்டின் மீதான உணர்வுப்பூர்வமான பற்று என்பது விலகி வெறுமனே பாவனைக்காக சில பொருளற்ற சடங்குகளைக் கைக் கொண்டிருக்கிறோம். 

நிலம் சார்ந்த ஆக்கிரமிப்பைவிடவும், பொருளாதார ஆக்கிரமிப்பைவிடவும் மொழி சார்ந்த ஆக்கிரமிப்புதான் ஓர் இனத்தை, அதன் பண்பாட்டுக் கூறுகளை மழுங்கடித்து அவ்வினத்தை சுயமும் அடையாளமுமற்றதாக்கிக் காலப்போக்கில் தம்மோடு பிணைத்துக் கொள்ளும். சமூகம், பண்பாடு சார்ந்து மழுங்கியிருக்கும் நாம் மொழி சார்ந்தும் மழுங்கிப் போனால் அடையாளமற்றவர்களாகிவிடுவோம்.  இந்தியின் தேவை என்பது வேறு. அதை வலுக்கட்டாயமாக திணிப்பது என்பது வேறு. இன்று இந்தியைத் திணிக்கத் தொடங்கியிருப்பதாகவே உணர முடிகிறது. காலங்காலமாகவே தமது மீதான அந்நியர்களின் எல்லாவிதமான ஆக்கிரமிப்பை அனுமதித்த போதும் தமிழினம் தமது மொழியின் மீதான தாக்குதலை மட்டும் அனுமதித்ததேயில்லை. பல்லாயிரம் வருடங்களாக உயிரோட்டத்துடன் நீடித்திருக்கும் இம்மொழியின் பலமும், தமிழினத்தின் மொழி மீதான உணர்வும் இப்பொழுதும் அனுமதிக்காது என்றே நம்பலாம்.

நம்பிக்கைதானே எல்லாம்?