Jun 28, 2017

நீங்க ஏன் செய்யறீங்க?

பெங்களூரில் பிரிகேட் சாலையும், ரெஸிடென்ஸி சாலையும் இணைகிற இடம் மிக முக்கியமானது. திரும்பிய பக்கமெல்லாம் பெண்களாக இருப்பார்கள். அதற்காகச் சொல்லவில்லை- அந்தக் காலத்து ஏரியா. அங்கே ஒரு நினைவு ஸ்தூபியை எழுப்பியிருக்கிறார்கள். 1914-18 ஆம் ஆண்டு முதலாம் உலகப்போரில் இறந்தவர்கள் நினைவாக எழுப்பப்பட்ட ஸ்தூபி அது. அதற்கு மட்டுமா என்று தெரியவில்லை- வேறு சில போர்களைக் குறிப்பிட்டு அப்போர்களில் இங்கிலாந்துக்காரனுக்காக செத்துப் போன வெள்ளையர்கள், இந்தியர்களின் ஞாபகார்த்தமாக கட்டி வைத்திருக்கிறார்கள். யாருக்கேனும் வாய்ப்பிருந்தால் நான்கு சுற்றுச் சுற்றிப் பார்க்கலாம். ஆங்கிலமும் தமிழும் தவிர கன்னடம் உட்பட வேறு எந்த மொழியிலும் இருக்காது. நூறு வருடங்களுக்கு முன்பாக பெங்களூரின் அல்சூர் பகுதி முழுக்கவும் தமிழர்கள்தான்.

இதே ஊரில் சிக்பேட் மாதிரியான பகுதிகள் மைசூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன. அப்பகுதிகளில் தமிழர்கள் வெகு சொற்பம். ஆனால் அல்சூர் அப்படியில்லை. அல்சூரில் திரும்பிய பக்கமெல்லாம் தமிழர்கள் ராஜ்ஜியம். சிறுகடைகள், மரபார்ந்த தமிழ்க் கோவில்கள் என்று கன்னட தேசம் என்பதற்கான அடையாளமே இருக்காது. கவிஞர் கண்ணதாசனுக்கும் இங்கேயொரு வீடு உண்டு. அந்தக் காலத்தில் சினிப்பிரபலங்களுக்கு இதுதான் சொர்க்கபுரி. அப்பொழுது பெங்களூரின் சீதோஷ்ணம் வேறு குளுகுளுவென்றிருக்கும் அல்லவா? கண்ணதாசனிம்ட பெங்களூரு செல்வதாகச் சொல்லிவிட்டு கிளம்பி வந்துவிடுவார்களாம். ஒரே கும்மாளம்தான். கசகசவென்று ஆக்கிவிடுகிறார்கள் என்று கண்ணதாசன் அந்த வீட்டையே விற்றுவிட்டதாகச் சொல்வார்கள். அவரது மகன் காந்தி கண்ணதாசனைக் கேட்டால் இன்னமும் விவரமாகச் சொல்லக் கூடும்.

தமிழகத்தின் கிட்டத்தட்ட இன்னொரு பகுதியாக இருந்த இப்பகுதியில் ஒரு காலத்தில் செழித்துக் கிடந்த தமிழ் வழிப்பள்ளிகள் அரசியல் காரணங்களுக்காக மெல்ல மெல்ல மூடப்பட்டுவிட்டதால் இந்தத் தலைமுறை தமிழ் மாணவர்களுக்குத் தமிழ் படிக்க வாய்ப்பெதுவுமில்லை. பேசுவதற்கு மட்டும் தமிழைத் தெரிந்து வைத்திருப்பார்கள். எழுத்து, வாசிப்பெல்லாம் கன்னடம் அல்லது ஆங்கிலத்தில்தான். இன்னும் நாற்பது அல்லது ஐம்பதாண்டுகளில் இது முழுமையான கன்னட தேசமாக மாற்றப்பட்டுவிடும். 

இது பற்றி இப்பொழுது வாயைத் திறந்தால் வாலில் வற ஓலையைக் கட்டி விரட்டியடிப்பார்கள். ஏனென்றால் அதிகாரம் அவர்களிடத்தில் இருக்கிறது. 

அரசியல் அதிகாரத்தில் சரி தவறு என்றெல்லாம் எதுவுமில்லை. ஆட்சியும் அதிகாரமும் கொண்டவர்கள் தாம் விரும்பிய மதத்தையும், மொழியையும், பண்பாட்டையும் ஊடுருவச் செய்வதுதான் வழமை. அதிகாரமற்ற பெரும்பான்மையினர் ஒடுக்கப்படுவதும், ஆள வாய்ப்பில்லாத சிறுபான்மையினர் அடிபணிவதும் வரலாற்றில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. நிலம் யாருடைய ஆளுமைக்கு வருகிறதோ அவர்கள்தான் சட்டத்தை உருவாக்குகிறார்கள்.

பொ.வேல்சாமியின் கோவில்-நிலம்-சாதி சமீபத்தில் வெளியான முக்கியமான நூல். உத்திரமேரூர் கல்வெட்டு பற்றி ஒரு கட்டுரை எழுதியிருப்பார். பள்ளியில் படித்த காலத்தில் குடவோலை முறை பற்றி கேள்வி பதில் வரும். ‘நாம அப்பவே ஜனநாயக முறையை ஃபாலோ செஞ்சோம் தெரியுமா?’ என்று சமூகவியல் ஆசிரியர் பந்தாவாகச் சொல்வார். அப்படியெல்லாம் எதுவுமில்லை என்பதை பொ.வேல்சாமி நிறுவியிருப்பார். குடவோலை முறையில் தலைமைப் பதவிக்குப் போட்டியிடுகிறவன் சொத்து வைத்திருப்பவனாக இருக்க வேண்டும். பிராமணர்களுக்கு மட்டும்தான் சொத்துரிமை இருந்த காலம் அது. அப்புறம் யார் தலைமைப் பொறுப்பில் இருந்திருப்பார்கள்? அதை எப்படி ஜனநாயக முறை என்று சொல்வீர்கள் என்று கேள்வியை எழுப்புகிற கட்டுரை அது.

வரலாறு நெடுகவும் நிலத்தை ஆள்கிறவர்கள் அதிகாரம்மிக்கவர்களாக இருக்கிறார்கள். அதிகாரம் கொண்டவர்கள் தாம் விரும்புவதைச் செயல்படுத்துகிறார்கள். மற்றவர்கள் வேடிக்கை பார்க்கிறவர்களாக இருப்பார்கள். 

இத்தகைய புத்தகங்கள் குறித்தாவது விரிவான உரையாடல் நடைபெற வேண்டும். எங்கே நடைபெறுகிறது? புத்தகத்தை எழுதியவர் நண்பராக இருந்தால் ‘ஆஹா ஓஹோ’ என்பார்கள். எதிரியாக இருந்தால் கடிப்பார்கள். சம்பந்தமில்லாதவராக இருந்தால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். தமிழ்ச்சூழலில் இலக்கியம் படித்தவர்களைப் போன்ற கச்சடா மனிதர்களைப் பார்க்கவே முடியாது. அசிங்கம் பிடித்த அரசியலைச் செய்கிறவர்கள். எல்லாவற்றிலும் லாபிதான். விருதுகள் மட்டும் என்ன மணக்கின்றன? பெரும்பாலான விருதுகளுக்கு எந்த மதிப்பும் இல்லை. பணம் தந்தால் வாங்கிச் சட்டைப்பையில் போட்டுக் கொள்ளலாம். தனியார் நிறுவன விருதுகளைச் சொல்லவில்லை. அரசு விருதுகளுமே அப்படித்தான்.

ஆனால் அதிகாரம் சம்பந்தப்பட்ட எதை எதிர்த்துப் பேசியும் எந்தப் பலனுமில்லை. செவிடன் காதில் சங்கு ஊதின கதை. அதிகாரத்தை எதிர்த்து உருட்டுவதால் உருப்படியாக எதையும் நிகழ்த்த முடியாது. விளிம்பு நிலை மக்கள் நாறிக் கொண்டேதான் இருப்பார்கள்.

நம்மால் முடிந்த வேலையைப் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும். அப்படிச் செய்யும் போது ‘இதை ஏன் நீ செய்யற? அரசாங்கம் செய்ய வேண்டியதுதானே?’ என்று யாராவது வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வருவார்கள். அதுவும் கூட இயல்பானதுதான். பொழப்புக்கெட்ட மனிதர்கள் எல்லாப் பக்கமும் இருக்கத்தான் செய்வார்கள். எதையாவது சொல்வார்கள்தான்.

சரி அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கலாம். போராடலாம். இந்த துப்புக்கெட்ட அரசாங்கங்கள் கிளுகிளுவென்று செய்து முடித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். இல்லையா? ஒருவேளை அரசாங்கம் செய்யவில்லையென்றால் என்ன செய்யப் போகிறோம்? நீயும் நானுமா தீக்குளிக்கப் போகிறோம்? அதிகபட்சமாக ஃபேஸ்புக்கில் புரட்சி போராட்டம் என்று கத்துவோம். நூறு லைக் வரும். அதற்குப் பிறகு?

அப்பன்மார்கள் சம்பாதித்து வைத்திருக்கிறவன் எதையாவது படித்து முடித்து ஏதாவதொரு வேலையிலும் சேர்ந்துவிடுவான். அப்படியானவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். அப்பனுக்கும் மனநிலை சரியில்லை. அம்மாவுக்கும் மனநிலை சரியில்லை. மதுரை விவசாயக் கல்லூரியில் இந்த வருடம் சேரவிருக்கிறான். வருடம் ஐம்பதாயிரம் ரூபாய் செலவாகும். ‘அரசாங்கம் செய்யட்டும்’ என்று விட்டுவிடலாமா? அரசாங்கம் செய்யவில்லையென்றால் என்ன செய்யப் போகிறோம்? நாம் அடுத்த ஸ்டேட்டஸ் எழுதலாம். அந்தப் பையன் தெருவில் நிற்பான்.

அதிகாரத்தை எதிர்த்துச் செயல்படுவது என்பது Fantasy.அவனவன் தலைக்கு வரும் வரைக்கும் குரல் எழுப்புவார்கள். உசுப்புவார்கள். அதிகாரத்தின் கொடிய கரங்கள் தம்மை நோக்கி வருகிறது என்று தெரிந்தால் மூச்சு வராது. எளிய உதாரணம்- இன்றைக்கு திருமுருகன் காந்தி பற்றி எத்தனை பேர் பேசுகிறார்கள்? அவர் நல்லவர் கெட்டவர் என்ற விவாவத்திற்கு வரவில்லை. அவருக்கு ஆதரவாகப் பேசியவர்கள் எத்தனை பேர் அவரை நினைவில் வைத்திருக்கிறார்கள் என்று கணக்கெடுத்துப் பார்க்கலாம். முக்கால்வாசிப்பேர் பிக்பாஸ் பற்றி மாங்குமாங்கென்று ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இதெல்லாம்தான் நிதர்சனம்.

அதிகாரத்தின் போக்கோடுதான் செயல்பட வேண்டும். ரஜினி சொல்வது போல ‘ஸிஸ்டம் சரியில்லை’ என்றால் ‘ஸிஸ்டத்திற்குள் இருக்கும் நாமும்தான் சரியில்லை’ என்று அர்த்தம். ஒட்டு மொத்த அமைப்பை மாற்ற வேண்டுமானால் எத்தனை தலைமுறை ஆகுமென்று யாருக்கும் தெரியாது. அதுவரைக்கும்? அய்யாவும், அசாரூதினும் தெருவில் நிற்க வேண்டுமா? சிஸ்டத்தை நீங்கள் மாற்றுங்கள். அதுவரைக்கும் எங்களால் முடிந்த வரைக்கும் விளிம்பு நிலை மாந்தர்களை எங்களைப் போன்ற சாமானியர்கள் பார்க்கட்டும்.

2 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//நீங்க ஏன் செய்யறீங்க?//
வேற யாரு செய்யணுமாம்?

Unknown said...

பினாத்துறவங்க பினாத்தட்டும்.
புலம்புறவங்க புலம்பட்டும்.
புறம் பேசுறவங்க பேசட்டும்.

உங்களுக்கு எங்களின் சார்பாக ஒரே ஒரு கேள்வி!

நீங்க ஏன் (அதையெல்லாம் சட்டை) செய்யுறீங்க...?👍.
அன்பே சிவம்.