Jun 29, 2017

வெள்ளாஞ்சட்டியின் மாமனார்

'படிச்சவன்னு சொல்லித்தானே உனக்குக் கட்டிக் கொடுத்தோம்? அயோக்கியத்தனம் பண்ணுறியா?’ என்றபடி அந்த கழுமுண்டராயன் குத்திய போது வெள்ளாஞ்சட்டிக்கு மூச்சு ஒரு கணம் நின்று போனது. சிரமப்பட்டு ஒன்றிரண்டு இழுப்புகளை இழுத்துத் தயாராவதற்குள் முகத்திலும் ஓர் இறக்கு இறக்கினார்கள். அடித்தவர்கள் ஆளாளுக்கு தடிமாடு மாதிரி இருந்தார்கள். இவர்களையெல்லாம் பார்த்த மாதிரியே ஞாபகம் இல்லை. யாருடைய முகத்தையும் ஒழுங்காகப் பார்க்கவும் முடியவில்லை. ஒன்றிரண்டு வினாடிகள் உற்றுப் பார்த்தாலும் கூட ‘மொறைக்கிறான் பாருங்கய்யா’ என்று அடித்தார்கள். 

வெள்ளாஞ்சட்டிக்கு முப்பத்தியிரண்டு வயது. பெயரை வைத்துத் தப்புக் கணக்குப் போட்டுவிடக் கூடாது. மாரத்தஹள்ளியில் அலுவலகம். பி.டெக் முடிப்பதற்கு முன்பாகவே வேலையை வாங்கியிருந்தான். சாமர்த்தியசாலி. அவனது வகுப்பில் இருந்து மட்டும் ஏழு பேர் அவனோடு வேலைக்குச் சேர்ந்திருந்தார்கள். இந்த நெரிசலூருக்கு வந்து கிட்டத்தட்ட ஏழெட்டு வருடங்களைக் கடப்பதற்குள்ளாக வருடா வருடம் நண்பர்கள் திக்குக்கு ஒருவராகப் பறந்து போயிருந்தார்கள். இவனது சம்பளம் லட்சத்தை நெருங்கியிருந்தது. தனிக்கட்டைக்கு அது பெரிய சம்பளம்தான். திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றில்லை. பெண் கிடைக்கவில்லை. பெயருக்கு வேண்டியே கழித்துக்கட்டினார்கள். அவனது வீட்டில் பல வருடங்களாகத் தேடித்தான் நித்யாவைக் கண்டுபிடித்தார்கள்.

இன்றைக்கு வெள்ளாஞ்சட்டிக்கு நடக்கும் பூசையை மாமனார் சஞ்சலமே இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார். ஆட்களையெல்லாம் மாமனார்தான் கூட்டி வந்திருக்கிறார். வந்திருக்கிறார் என்ன வந்திருக்கிறார்? வந்திருக்கிறான். அவனுக்கு இவ்வளவுதான் மரியாதை. முன்பின் தெரியாத ஆட்களை வைத்து மருமகனையே அடிக்கிறவனுக்கு வேறு என்ன மரியாதை வேண்டும்? கூட்டி வந்ததுமில்லாமல் வெள்ளையும் சுள்ளையுமாக நின்று வேடிக்கை வேறு பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு வார்த்தை பேசவில்லை. பலாப்பழத்தை முழுதாக விழுங்கி விக்கித்தவன் போலவே பார்த்துக் கொண்டிருந்தார். அந்த ஆளும் மீசையும். ச்சை. 

ஆரம்பத்தில் அவர் சைகை காட்டும்போதுதான் குத்தினார்கள். பிறகு நேரம் ஆக ஆக யார் வேண்டுமானாலும் அடிக்க ஆரம்பித்தார்கள். சிலருக்கு கை வலிக்கும் போலிருக்கிறது. ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒன்றிரண்டு பேர் வாங்கிய காசுக்கு மேலாக அடித்தார்கள். இத்தனை பேரிடம் அடி வாங்கியும் தான் அசையாமல் நின்றிருப்பது வெள்ளாஞ்சட்டிக்கே ஆச்சரியமாக இருந்தது. தான் ஒன்றும் அவ்வளவு பெரிய கஜபலத்தான் இல்லை என்பது அவனுக்கும் தெரியும். இவ்வளவு அடி விழுந்தும் ரத்தத்தையும் காணவில்லை. ஒருவேளை ஏற்கனவே முடிவு செய்து வைத்து உள்குத்தாகக் குத்திக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது என்று சந்தேகமாகவும் இருந்தது. நல்லவேளையாக, வில்லனிடம் அடி வாங்கும் நாயகன் போல உதடு மட்டும் ஓரமாகக் கிழிந்திருந்தது. அடித்தார்கள் என்பதற்கான சாட்சியமே அந்த உதட்டுக் கிழிசல்தான். சாட்சி இருந்து மட்டும் என்ன பயன்? வெளியில் சொல்லவா முடியும்? 

நித்யாவும் பெங்களூரில்தான் வேலையில் இருக்கிறாள். ப்ளாட்டினச்சிலை. அம்சமாக இருப்பாள். அவளது அலுவலக விதிகளின்படி வெள்ளிக்கிழமைகளில் மட்டும் ஜீன்ஸ் டீஷர்ட் அணிந்து கொள்ளலாம். எதிர்ப்படும் ஒவ்வொரு சோடிக் கண்களும் அவளை திரும்பிப் பார்த்துச் செல்லும். திங்கட்கிழமை மட்டும் என்ன குறைச்சல்? உந்திச்சுழி தெரிந்தும் தெரியாமலும் கட்டிய புடவை காற்றில் அசையும் போதெல்லாம் பல ஆண்களுக்கு இருதயம் தொண்டைக்குழியில் வந்து அடைத்துக் கொள்ளும். அதீதமாகப் புகழ்வதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். அடுத்தவன் மனைவியைப் பார்த்து வழிவது நல்லதில்லைதான். ஆனால் வேறு எப்படி அவளது அழகை உங்களுக்குப் புரிய வைப்பது என்று தெரியவில்லை. காற்றில் அசைந்தாடும் கற்றைக் கூந்தலும் எம்பிக் குதித்து நடக்கும் அவளது நடையும்..ம்ஹ்ஹ்ம். ஒரு கணம் காத்திருங்கள். பெருமூச்சு விட்டுக் கொள்கிறேன்.

அடி விழுந்து கொண்டிருந்த போதும் வெள்ளாஞ்சட்டி வாயைத் திறக்கவேயில்லை. திறந்தால் கூட்டத்தில் எவனுக்கு வெறியேறும் என்று தெரியவில்லை. திறக்காவிட்டாலும் அவனவனுக்கு வெறியேறிக் கொண்டுதான் இருந்தது. ‘வக்காரோளி..வாயத் திறக்கறானான்னு பாருங்க..’ என்று கத்தியபடியே ஆட்டுகிடா மீசைக்காரன் ஒருவன் வெள்ளாஞ்சட்டியைப் பார்த்தான். வெள்ளாஞ்சட்டிக்கு அந்த கணத்தில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. நாசூக்காகப் பார்வையைத் திருப்பி வேறொருவனின் முகத்தைப் பார்த்தான். அவன் அரிவாளோடு நின்றிருந்தான். சும்மா நின்றிருக்கும் காட்டுப்பன்றியை சொறிந்துவிட்டது போல ஆகிவிட்டது. 

‘ம்ம்ம்ன்னு சொல்லுங்க..வாயிலேயே வெட்டுகிறேன்’ என்று பாய்ந்து வந்தான் அவன். அவன் வெட்டினாலும் வெட்டிவிடுவான். ஆள் ஒரு தினுசாக இருந்தான். இவர்களையெல்லாம் மாமனார் எங்கேயிருந்து பிடித்து வந்திருப்பார் என்று பிடிபடவேயில்லை. காசுக்கு வந்தார்களா அல்லது மாமனாருக்காக சேவை செய்ய வந்தார்களா என்றும் குழப்பமாக இருந்தது. சுற்றிலும் இத்தனை பேர் இல்லாமல் இருந்திருந்தால் வெள்ளாஞ்சட்டி எதையாவது வக்கனையாகப் பேசியிருப்பான். அவன் அப்படியான ஆள்தான். இப்பொழுது பேச வழியில்லாமல் வசவாக சிக்கியிருக்கிறான். 

இப்பொழுது இல்லை- ஒன்றரை வருடங்களுக்கு முன்பாகவிருந்தே சிக்கியிருக்கிறான். ஒன்றரை வருடங்களுக்கு முன்பாகத்தான் நித்யாவின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டான். எழுபத்தைந்து பவுன் நகை போட்டு ஒரு கார் கூட வாங்கிக் கொடுத்தார்கள். சாண்ட்ரோ. புதுக்காரும், புது மனைவியுமாக பெங்களூரு வந்த தினத்தில் வெள்ளாஞ்சட்டிக்கு மனதுக்குள் பாரமாகத்தான் இருந்தது. இனம் புரியாத பாரம். நித்யாவின் அம்மாவும் அப்பாவும் உடன் வந்திருந்தார்கள். வெள்ளாஞ்சட்டிதான் கார் ஓட்டினான். புதுமணம் விரவிக் கிடந்த காரில் வழிநெடுகவும் யாரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. மாமனார் மட்டும் அவ்வப்போது ‘மெதுவாவே போலாம்..தப்பில்லை’ என்று சொன்னார். வெள்ளாஞ்சட்டி காதில் வாங்கிக் கொள்ளாமல் அவன் போக்கில் ஓட்டிக் கொண்டிருந்தான். 

இருட்டுவதற்கு முன்பாகவே பெங்களூரை அடைந்துவிட்டார்கள். திருமணத்திற்கு விடுப்பில் செல்வதற்கு முன்பாகவே எலெக்ட்ரானிக் சிட்டியில் ஒரு அபார்ட்மெண்ட்டில் அட்வான்ஸ் கொடுத்து வைத்திருந்தான். ஒற்றை படுக்கையறை, சமையலறை போக பத்துக்கு எட்டில் ஒரு வரவேற்பறை. இரண்டு பேருக்கு இது போதும் என்று நினைத்தான். யாராவது வந்தால் படுக்கக் கூட இடமில்லை என்பதால்தான் அம்மாவையும் அப்பாவையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்திருந்தான். அவர்களும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

அபார்ட்மெண்ட்டுக்குள் நுழைந்து காரை விட்டு இறங்கியவுடன் ‘சீக்கிரம் இந்த வீட்டைக் காலி பண்ணிடுங்க மாப்பிள்ளை’ என்றார் மாமனார். வெள்ளாஞ்சட்டியின் முகத்தைப் பார்த்தபடிதான் சொன்னார். வந்தும் வராததுமாக எதிர்மறையாகப் பேசிய மாமனாரை வெள்ளாஞ்சட்டி குழப்பமாகப் பார்த்தான். ‘தெக்க பார்த்த தலவாசல்...கல்யாணம் பண்ணிட்டு மொத மொதலா இருக்கீங்க...ஆகாது’என்றார்.

‘சரிங்க’ என்று தலையாட்டிக் கொண்டான். மாமனார் ஒரு மார்க்கமான ஆள் என்ற முடிவுக்கு வருவதற்கு அவனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. நித்யாவுக்கு எல்லாமே பெருமிதமாக இருந்தது- அவனது பெயரைத் தவிர.

அவளது வீட்டில் ஜாதகம் பார்த்து பொருத்தம் இருப்பதாக முடிவான பிறகு அவனுடைய பெயருக்காகத்தான் நிராகரிக்க விரும்பினாள். அவனிடமிருந்துதான் குறுஞ்செய்தி வந்தது. நேரில் சந்திக்க விரும்பியிருந்தான். கத்தரித்து விடுவதற்கான யோசனைகளோடு கிளம்பிச் சென்றவள் நேரில் பார்த்த போது முடிவை மாற்றிக் கொண்டாள். முதன்முறையாக இந்திராநகர் காபிஃடேயில் சந்தித்தார்கள். பேச்சிலும் நடத்தையிலும் ஏதோவொரு கவர்ச்சி அவனிடமிருந்தது. இரண்டாம் முறையாக அவளது வீட்டில் சந்தித்தார்கள். ‘இதெல்லாம் தப்பில்லையா?’ என்று கேட்டுக் கொண்டே எல்லை மீறினார்கள். அதன் பிறகு அவளுக்கு பயமானது. திருமணம் உறுதியானது. 

அம்மாவும் அப்பாவும் காரில் இருக்கிறார்கள் என்பதற்காக அறிமுகமே இல்லாதவனோடு பயணிப்பது போல அமர்ந்திருந்தாள். புது வீடு மூன்றாவது மாடியில் இருந்தது. பைகளை எடுத்துக் கொண்டு படி ஏறித்தான் வந்தார்கள். நான்கு பேருக்குமே மூச்சு வாங்கியது. சாவியை வைத்திருந்த வெள்ளாஞ்சட்டி கடவுளை வேண்டிக் கொண்டு திறந்தான். உள்ளே வந்தும் மாமனார் குறை சொல்லிக் கொண்டேயிருந்தார். காற்றோட்டம் இல்லை, அக்னி மூலையில் சமையலறை இல்லை, மனையடி சாஸ்திரமும் பொருந்திப் போகவில்லை என்று அவர் அளக்க அளக்க எல்லாவற்றுக்கும் வெள்ளாஞ்சட்டி தலையாட்டினான். மாமியார் எதுவுமே பேசவில்லை. மகளிடம் மட்டும் அவ்வப்போது கிசுகிசுத்தார். அவரைவிடவும் மெதுவாகவே நித்யா கிசுகிசுத்தாள். 

‘நீங்க சாப்பாடு செய்யுங்க..நானும் மாப்பிள்ளையும் ஏரியாவைச் சுத்திப் பார்த்துட்டு வர்றோம்’ என்று மனைவியிடம் சொல்லிவிட்டு லுங்கி சட்டையோடு கிளம்பினார். 

வீடு வெறிச்சோடிக் கிடந்தது. சாமான்கள் என்று எதுவுமேயில்லை. சிறு பணக்கட்டை வெள்ளாஞ்சட்டியிடம் நீட்டி ‘வேணுங்கிற சாமானெல்லாம் வாங்கிப் போடுங்க...எங்களுக்கு ஊர் தெரியாது..இல்லீன்னா நாங்களே போய் வாங்கிட்டு வந்துடுவோம்’ என்றார். ஏற்கனவே கட்டி வைத்திருந்த கட்டு அது. ஆயிரமும் ஐநூறுமாக கட்டில் இருந்தது. எவ்வளவு இருக்கும் என்று மனம் கணக்கு போட்டாலும் தயக்கத்தோடு ‘பரவால்லீங்க மாமா’ என்றான்.

மாமனார் தனது மனைவியைப் பார்த்தார். மாமியார் மருமகனிடம் நேரடியாகப் பேசாமல் நித்யாவை நோக்கி ‘மாப்பிள்ளையை வாங்கிக்கச் சொல்லு’ என்றார். நித்யா எதுவும் சொல்லாமல் நின்றாள். வெள்ளாஞ்சட்டி பணக்கட்டை வாங்கி பூஜையறையில் வைத்தான். மாமியார் பூஜையறையில் தீபம் ஒன்றைப் எரிய விட்டிருந்தார்.

அரைக்கால் சட்டையை அணிந்து கொண்டு மாமனாருடன் நடந்த போது வானம் மங்கிக் கிடந்தது. மழை வரும் என்றும் சொல்ல முடியாது. வராது என்றும் நம்ப முடியவில்லை. 

‘குடை இருந்தா எடுத்துக்குங்க’ என்றார் மாமனார். குடை வீட்டில் இல்லை என்று சொல்லாமல் நடக்கத் தொடங்கியிருந்தான். மாமனார்தான் பேச ஆரம்பித்தார். ‘இப்போ எல்லாம் ஒண்ணும் பருவத்துக்கு நடக்கிறதில்ல..ஆடில காத்து இல்ல, ஐப்பசில மழ இல்ல..வெய்யில் மட்டும் எல்லா மாசமும் கொளுத்துது’ என்றார். வெள்ளாஞ்சட்டிக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை. அமைதியாக நடந்தான். 

உயர்ந்த அபார்ட்மெண்ட் கட்டிடத்தைக் காட்டி ‘இது பூராவும் ஒருத்தருதா?’ என்றார். 

‘ஆமாங்க’ என்று முடித்துக் கொண்டான். பேச்சை வளர்க்க விரும்பவில்லை. அவனுக்கு அவருடன் நடப்பது ஏனோ சங்கோஜமாக இருந்தது.

பெங்களூரு வேகமாக இயங்கிக் கொண்டிருந்தது. நாகரிக பெண்கள் மாமனாருக்கு வித்தியாசமாகத் தெரிந்தார்கள். ‘நீங்க பெங்களூரை விட்டுட்டு வந்துடுங்க’ என்றார். வெள்ளாஞ்சட்டி இத்தகைய தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. அமைதியாகச் சிரித்தான். அதைச் சிரிப்பு என்று சொல்ல முடியாது.

‘இந்த ஊரை விட்டுட்டு வர மாட்டீங்கன்னு கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லிட்டீங்கள்ல’ என்று அவரே பதிலும் சொல்லிக் கொண்டார். சற்றே ஆசுவாசமாக வெள்ளாஞ்சட்டி சிரித்து வைத்தான்.

‘இங்கேயே இருந்துக்குங்க...நினைச்சா வந்து பார்த்துட்டு போயிடுறோம்..ஆனா ஒண்ணுங்க மாப்பிள்ள....ஏதாச்சும் முன்னபின்ன ஆச்சுன்னா எல்லாரும் மாதிரியும் சும்மா இருக்க மாட்டேன்’ என்ற போது மிரட்டுகிற தொனி தெரிந்தது. எதற்காக இப்படி மிரட்டுகிறார் என்று வெள்ளாஞ்சட்டிக்கு குழப்பமாக இருந்தது. தன்னைப் பற்றி எதுவும் தெரிந்து வைத்திருக்கிறாரா என்ற யோசனை எழாமல் இல்லை. மாமனார் சில வினாடிகள் நிசப்தமானார். பேச்சைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அவருக்கே தோன்றியது. ஆனால் கட்டுப்படுத்த இயலாமல் ‘மிரட்டுறதுக்கு சொல்லல..ஆனா முன்னாடியே நாஞ் சொல்லலன்னு இருக்கக் கூடாது பாருங்க’ என்றார். வெள்ளாஞ்சட்டி பதில் எதுவும் பேசாமல் கேட்டுக் கொண்டான். ஏதோ வயிற்றைப் பிசையத் தொடங்கியிருந்தது. 

இருள் மெல்ல படர்ந்தது. பெங்களூரின் சாரல் விசிறியடித்தது. இரண்டு பேரும் வேகவேகமாக வீட்டுக்குள் ஓடி வந்தார்கள்.

இப்பொழுது ஏன் அடி வாங்குகிறான் என்று யூகித்திருப்பீர்கள் அல்லவா? அதேதான். ஒன்றரை வருடங்களில் அவர் சொன்னபடியே நடந்து கொண்டிருக்கிறது. நன்றாகச் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் சுனாமி முந்நூற்று அறுபது டிகிரியில் சுழன்றது. கடந்த வாரம்தான் சிக்கினான். தன்னோடு பணிபுரியும் நர்மதாவுடனான தொடுப்பை வாட்ஸப் காட்டிக் கொடுத்திருந்தது. அவள் கன்னடக்காரி. வேள்ஸ், வேள்ஸ் என்று அவள் கொஞ்சியிருந்தாள். கொஞ்சலோடு நிற்கவில்லை. அதற்கு மேல் இத்யாதி இத்யாதி. ஒரு வாரம் நித்யா அழுது புலம்பினாள். வடிவதாகவே தெரியவில்லை. அவளால் அவனது சமாதானங்களை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. நேற்றிரவு அம்மாவை அழைத்து ‘குரங்கு மாதிரி வைப்பாட்டி வேணுங்குதும்மா உம்மாப்பிள்ளைக்கு’ என்று ஒற்றை வரியோடு இணைப்பைத் துண்டித்தாள். நர்மதா யார் என்ன என்கிற விவரமெல்லாம் இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம்.

பதறிய நித்யாவின் அம்மா மீண்டும் அழைத்து ‘உங்கப்பாவே அப்படித்தான்..வட்டல் வெச்ச இடத்துல வாயை வெச்சுடுவாரு....நான் கட்டுல வெச்சுக்கலையா? யோசிச்சு முடிவெடு’ என்று அவளது அம்மா சொன்னாள். 

‘மறுபடியும் யோசிக்கச் சொன்னீங்கன்னா மாடியில இருந்து குதிச்சுடுவேன்’ என்று நித்யா கத்திய போது அத்தனையும் எல்லை மீறிப் போயிருந்தது.

‘இந்தக் காலத்துச் சின்னஞ்சிறுசுக அப்படி இப்படின்னு இருக்கும்..புள்ளதான் அவசரப்படுறா..நீங்க என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு மட்டும் வாங்க’ என்று மாமியார் சொல்லியனுப்பியதை மாமனார் கண்டுகொள்ளவே இல்லை. பெண் மருமகனை விட்டுப் பிரிந்துவிடக் கூடாது என்பது அவளது எண்ணம்.

‘இவன் இல்லைன்னா எம்புள்ள என்ன வீணாவா போய்டும்?’ என்பது இரவு முழுவதும் அவரது எண்ணமாக இருந்தது. ‘அவனைச் சும்மா விடக் கூடாது’ என்பதில் உறுதியாக இருந்தார்.

மறுநாள் காலையில் வந்து இறங்கிவிட்டார்கள். நித்யா எல்லாவற்றையும் சொல்லிவிட்டு அலுவலகத்திற்குக் கிளம்பிவிட்டாள். மனம் கல்லாகிக் கிடந்தது. சாயந்திரம் அவரோடு ஊருக்கு வந்து இரண்டொரு நாட்கள் ஓய்வெடுப்பதாகச் சொன்னாள். மாமனாரோடு சேர்ந்து மழைக்குத் தப்பி ஓடி வந்த அந்தச் சம்பவம் வெள்ளாஞ்சட்டியின் நினைவில் வந்து போனது. சில கணங்கள்தான் அந்த ஞாபகம். இன்னமும் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று அவனுக்குள்ளாகவே நினைத்துக் கொண்டான். ஆண்களின் பலமும் இதுதான் பலவீனமும் இதுதான். திருந்தலாம் என்று நினைப்பதைவிடவும் தப்பித்திருக்க வேண்டும் என்றுதான் மனம் கணக்குப் போடும். அதற்குள் எவனோ வயிற்றில் குத்து ஒன்றை இறக்கினான். மிகக் கனமான குத்து அது. 

எல்லோருக்கும் தனக்கு மாதிரியேவா மாமனார் மாட்டுவாங்க என்று நினைப்பதற்குள்ளாக விழுந்த குத்து அது. 

வெள்ளாஞ்சட்டி ‘ப்ப்ப்பா’ என்றான். அடி வாங்கத் தொடங்கிய பிறகு அவனிடமிருந்து முதன் முதலாக வந்து விழுந்த வார்த்தை அது. அப்பொழுது நித்யா அலுவலகக் கேண்டீனில் சிக்கன் மீல்ஸ் ஒன்றுக்கு பில் வாங்கிக் கொண்டிருந்தாள். மூன்று முடிச்சுகளும் மெல்ல மெல்ல அவிழ்ந்து கொண்டிருந்தன.

8 எதிர் சப்தங்கள்:

Ponchandar said...

இது கதையா ! ! உண்மை சம்பவமா ???? இரண்டும் கலந்த கலவையா ????

Senthil said...

சூப்பர் சார் , நெஜ கதை மாதிரி இருக்கு, உங்க கதைகாக ரொம்ப நாளா காத்திருதன் நன்றி

Ram said...

‘நெரிசலூர்’ - நல்ல ரசனையான பெயர்! :-)

அடியாட்களைப்பற்றி அளவுக்கு அதிகமாக கதை முழுதும் விளக்கிக்கொண்டே வந்து, கடைசியில் அது பற்றி ஏதுமில்லாமல் போனது ஏமாற்றம. விளக்கத்தின் நோக்கம் தான் என்ன?

பெண்ணே கிடைக்காதவனுக்கு (உருவத்தில் மிக அருமையான பெண் கிட்டுவது, கிட்டியும் தொடுப்பு ஏற்படுத்திக்கொண்டது, நகரத்தில் வாழும் பெண் தானே பிரச்சனைக்கு தீர்வு காணாமல் கிராமத்து அப்பாவின் வன்முறை வழிகளை நாடுவது - இவையெல்லாம் இடிக்கிறது.

கதை மிகவும் நன்றாக பயணித்து, ஒரு உச்சகட்டமில்லாமல்/நிறைவற்று நிறவுபெற்றது ஏமாற்றமாளித்தது. இருமுறை படித்தாயிற்று. இல்லை எனக்கு மட்டும் ஏதோ புரியாமல் போய்விட்டதா?

“ஆண்களின் பலமும் இதுதான் பலவீனமும் இதுதான். திருந்தலாம் என்று நினைப்பதைவிடவும் தப்பித்திருக்க வேண்டும் என்றுதான் மனம் கணக்குப் போடும்.” - அருமை!

498ஏ அப்பாவி said...

என்னயையும் இப்படித்தான் அடித்தார்கள் ஆனால் எனக்கு ஞவெள்ளாஞ்சட்டிக்கு மாதிரி யாருடனும் தொடர்பில்... ஆனாலும் அடித்தார்கள்



http://www.dinamalar.com/news_detail.asp?id=1538041

இப்படித்தான் பல இளந்தம்பதிகளின் வாழ்க்கை நாசமாகின்றது...

திருணம் செய்வதற்க்கு முன்பு ஆண்பெண் குடும்பத்தினரை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு திருமணம் செய்யவேண்டும்

viswa said...

பெண்களை பார்த்து வழிவதை நாசூக்காக கதையில் திணிக்கறீயளோ?

விஸ்வநாதன்

Aravind said...

எநக்கு எல்லாம் அவந் செயல் படத்தில் வடிவேல் மேடையில பேஸும்போது ஒருத்தன் அடிச்ச கமெந்ட்டு ணியாபகம் வருது.

Anonymous said...

நகரத்தில் வாழும் பெண் தானே பிரச்சனைக்கு தீர்வு காணாமல் கிராமத்து அப்பாவின் வன்முறை வழிகளை நாடுவது - இவையெல்லாம் இடிக்கிறது.
ACTUALLY EVEN HIGHLY EDUCATED/WELL EMPLOYED,(BANK/GOVT.OFFICERS),CITY BASED WOMEN ONLY GO TO THEIR BROTHERS/ FATHER IRRESPECTIVE OF THEIR BACK GROUND.
IT IS THE MALES WHO PREACH MORALS THOUGH THEY THEM SELVES ARE BAD INCLUDING HAVING OTHER WOMEN.
SO MANY EXAMPLES ARE THERE IN OUR OWN SOCIETY.
A MOTHER WILL ALWAYS SIDE THE SON IN LAW AND TRY TO SAVE THE MARRIAGE.
ONLY MALES WILL WANT TO TEACH A LESSON AND BEAT/TAKE LAW INTO THEIR HANDS WITH THE FEELING ' EADHAYIUM SAMALIKKALAM'.
TO ME THIS COURSE OF ACTION BY THE GIRL SEEMS NATURAL.
M.NAGESWARAN.

Anonymous said...

Waiting for Amirtha's episode :-)