Jun 28, 2017

அழைப்பு

எந்தவொரு வேலையையும் வெகுவாகத் திட்டமிட்டுச் செயல்படுவதைவிடவும் அப்பணியை மேம்போக்கான திட்டமிடலுடன் ஆத்மார்த்தமாகச் செய்தால் போதும். ஆற்றொழுக்காக அதுவாக நடைபெறும். பள்ளிக்கூடங்களுக்கான நூலகம் அமைக்கும் பணியில் புத்தகங்களை நேரடியாகப் பள்ளிகளுக்கு அனுப்பி வைத்துவிடுவதாகத்தான் யோசனை இருந்தது. ஆனால் அது அவ்வளவு சிறப்பானதாகத் தெரியவில்லை. திருமணப்பத்திரிக்கையை தபாலில் அனுப்பி வைப்பது போல அது.

சற்று மெனக்கெட்டு ஒரு வார இறுதியில் பனிரெண்டு பள்ளிகளையும் அழைத்து வைத்து அவர்களுக்கு நம்முடைய நோக்கங்களைச் சொல்லி அவர்களின் எதிர்காலத் திட்டங்களைப் புரிந்து கொள்ளும்படியான கலந்துரையாடலாக நடத்தினால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. இப்படியொரு நிகழ்ச்சியை நடத்தினால் ஒரு சிறப்பு அழைப்பாளரும் இருக்க வேண்டுமல்லவா? 

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறைச் செயலர் திரு. உதயச்சந்திரனிடம் ‘நீங்கள் வருவதாக இருந்தால் நிகழ்ச்சியாக நடத்துகிறோம்’ என்றேன். அதற்கு முன்பாக அவரிடம் பேசியதில்லை. ஆனால் பள்ளிகள், புத்தகங்கள் சார்ந்த இத்தகையதொரு நிகழ்வுக்கு அவர்தான் பொருத்தமானவர் என்று உறுதியாக நம்பினேன். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.  உடனடியாகச் சரி என்றார்.

நன்கொடையாளர்கள் பணத்தை அனுப்பி வைத்துவிட்டார்கள். பாரதி புத்தகாலயத்தார் புத்தகங்களைச் சேகரிக்கும் பணியை ஆரம்பித்துவிட்டார்கள்.

ஜீவகரிகாலனை அழைத்துச் சொன்ன போது ‘சூப்பருங்க’ என்றவர் கண்ணதாசன் உள்ளிட்ட நண்பர்களுடன் சேர்ந்து நிகழ்வுக்கான ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டார். 


கல்வித்துறைச் செயலரிடம் தேதியை வாங்கி எழும்பூர் இக்சா மையத்தை முன்பதிவு செய்தாகிவிட்டது. ஜூலை மாதம் 8 ஆம் தேதி மாலை ஐந்து மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும். எளிமையான நிகழ்வாக இருக்கும். பள்ளிக்கல்விச் செயலர் அதிக நேரம் பேச வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு. அதுதான் தேவையும் கூட. 

நிசப்தம் சார்பில் எந்தவொரு நிகழ்வையும் நடத்துவதில்லை. அது அவசியமற்ற செலவு என்று நினைப்பதுதான் காரணம். ஆனால் இந்நிகழ்வை அவசியமானது எனக் கருதலாம். தமிழகத்தில் செயல்படக் கூடிய சிறப்பான பள்ளிகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் அத்துறையின் செயலர் நேரடியாகப் பேசுவது என்பது முக்கியமானதுதானே? இந்தப் பள்ளிகளுடன் தொடர்ந்து தொடர்பிலிருந்து அவை முன்மாதிரியான பள்ளிகளாகச் செயல்படுவதற்கு நம்மால் ஆன காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதுதான் நோக்கம். தமிழகத்தின் உட்புறப் பகுதிகளில் இருக்கக் கூடிய பள்ளிகள் இவை. ஒரு பள்ளியின் சிறப்பான செயல்பாடு அந்தப் பகுதியில் மேலும் சிற்சில பள்ளிகளிலாவது தாக்கத்தை உண்டாக்கும் என நம்பலாம்.


சனிக்கிழமை மாலையில்தான் நிகழ்வு. சென்னையிலும் சுற்றுப்புறத்திலும் இருக்கக் கூடியவர்கள் கட்டாயம் கலந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். வெளியூர்களிலிருந்து வந்தால் இரட்டைச் சந்தோஷம். நிசப்தத்தின் செயல்பாடுகளில் ஆர்வமும் நம்பிக்கையும் கொண்ட ஒவ்வொருவரையும் எதிர்பார்க்கிறேன். ஒவ்வொருவரின் வருகையும் உற்சாகமளிக்கக் கூடியது. தொடர்ந்து செயல்படுவதற்கான ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும். இத்தகைய ஆதரவைத்தான் அனைவரிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்.

6 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறைச் செயலர் திரு. உதயச்சந்திரனிடம் ‘நீங்கள் வருவதாக இருந்தால் நிகழ்ச்சியாக நடத்துகிறோம்’ என்றேன். அதற்கு முன்பாக அவரிடம் பேசியதில்லை.
...
உடனடியாகச் சரி என்றார்.//
நல்லவற்றுக்கும், நல்லவர்களுக்கும் கதவுகள் திறந்தே இருக்குமோ?

சேக்காளி said...

//ஜீவகரிகாலனை அழைத்துச் சொன்ன போது ‘சூப்பருங்க’ என்றவர் கண்ணதாசன் உள்ளிட்ட நண்பர்களுடன் சேர்ந்து நிகழ்வுக்கான ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டார்//
சூப்பருங்க

வெங்கி said...

Super Mani.
Best wishes for a successful function.
Will inform my friends.

-Venky (Kenya)

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

அழைப்பு இதழில் உள்ளபடி முளைவிட்ட செடி வீறு கொண்ட விருட்சமாக மலரட்டும். தொடர்புடைய அனைத்து நல்லுள்ளங்களையும் வாழ்க வளமுடன் என உள்ளன்போடு வாழ்த்தி மகிழ்கிறேன்.

அன்பே சிவம் said...

நம்ம சோசியம் எப்பூடீ..😊

Mohamed Ibrahim said...

Will try to attend. Best wishes for the very best initiation for the upcoming generation