கடந்த சில நாட்களாகத் தேடி புத்தகங்களுக்கான பட்டியலை தயாரித்தாகிவிட்டது. பத்தாயிரம் ரூபாய்க்கான புத்தகங்களின் பட்டியல் இது. மின்னஞ்சலிலும், ஃபேஸ்புக்கிலும் வெகு சில நண்பர்கள் தமது பரிந்துரைகளைச் செய்திருந்தார்கள். அவற்றில் சில பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கிறது. இப்புத்தகங்களை வாங்கி அவற்றை ஆறு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கவிருக்கிறோம். கிராமப்புறத்திலிருக்கும் அப்பள்ளிகளில் நூலகம் அமைப்பது நம் திட்டம். பள்ளி நூலகத்திற்கான புத்தகங்கள் என்பதால் பள்ளி மாணவர்கள் வாசிப்பதற்கு ஏற்ற புத்தகங்களாக இருக்க வேண்டும் என்பதுதான் பட்டியல் தயாரிப்பின் போது அடிநாதமாக இருந்தது.
எங்கள் பள்ளியில் நல்ல நூலகம் இருந்தது. மாணவர்கள் சுட்டுச் சென்ற புத்தகங்களையும் தாண்டி பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை வைத்திருந்தார்கள். அங்கே அமர்ந்து வாசித்த போது எந்த மாதிரியான நூல்கள் மனதுக்குப் பிடித்தமானவையாக என்று நினைவலைகளைச் சுழல விட்டுப் பார்த்துத்தான் புத்தகங்களைச் சேர்த்திருக்கிறேன். வெறுமனே பட்டியலைத் தயாரித்து மாணவர்களுக்கு புத்தகங்களை வாங்கிக் கொடுப்பதில் பலனில்லை. பட்டியலைத் தயாரித்த போது சில ஆசிரியர்களை அழைத்து ‘சார், உங்க பசங்க இந்த மாதிரியான புத்தகமெல்லாம் படிப்பாங்களான்னு சொல்லுங்க’ என்று சரி பார்த்துக் கொண்டேன். கருத்துக்களைச் சொன்னார்கள். அதற்கேற்பவும் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
இது இறுதிப் பட்டியல் இல்லை. சிற்சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கலாம்.
பல்லாயிரக்கணக்கான புத்தகத் தலைப்புகளிலிருந்து நூற்றுச் சொச்சம் புத்தகங்களை வடிகட்டுவது என்பது கருணையேயில்லாமல் நேரத்தை உறிஞ்சக் கூடிய பணி என்றாலும் திருப்தியாக உணரச் செய்கிறது. கடந்த வாரம் வீட்டில் ஓய்வாக இருந்ததை இப்பணிக்கு செளகரியமாக இருந்தது. என்னென்ன வகைமைகளில் புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முதலில் ஒரு முடிவுக்கு வந்த பிறகு பட்டியல் தயாரிக்கும் வேலை ஆரம்பமானது. பொதுவான புத்தகங்கள், ஆசிரியர்களுக்கான புத்தகங்கள் என்பது போக ஆளுமைகள், வரலாறு, கணிதம், அறிவியல், சூழலியல், படைப்பாற்றல், விளையாட்டு, புதிர்கள், பொது அறிவு, புனைவுகள், காமிக்ஸ், சமயம் என்ற கலவையான புத்தகங்கள் பட்டியலில் இருக்கின்றன.
இரண்டாண்டுகளுக்கு முன்பாக இதே போல ஏழு பள்ளிகளில் நூலகம் அமைத்துக் கொடுத்தோம். திரேசாள் பள்ளியில் ‘புத்தகம் வாசித்தல்’ என்பதற்காகவே புதியதாக ஒரு பாடப் பிரிவேளையை உருவாக்கினார்கள். வாரத்தில் ஒரு மணி நேரம் குழந்தைகள் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியிருக்கிறார்கள். இப்படி உற்சாகம் ஒருபக்கம் என்றால் ஒன்றிரண்டு பள்ளிகளிலிருந்து சத்தமே இல்லை. அந்த அனுபவத்திலிருந்து நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. பள்ளியின் பொறுப்பாளர்கள்/தலைமையாசிரியர்களிடம் தனித்தனியாகப் பேசியிருக்கிறேன். ஆர்வமிக்கவர்களாக இருப்பின் மட்டுமே பள்ளியைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.
அடுத்ததாக இப்புத்தகப் பட்டியலை ஆறு பள்ளி ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைத்து அவர்களின் கருத்துக்களையும் கேட்டுக் கொள்ளலாம்.
புத்தகங்களை யாரிடம் விலைக்கு வாங்குவது என்று இன்னமும் முடிவு செய்யவில்லை. புத்தக விற்பனையாளர்களில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். சுய பயன்பாட்டிற்கு என்றால் யாராவது ஒருவரிடம் வாங்கிக் கொள்ளலாம். இது பொதுக்காரியம். விற்பனையாளர்களிடமே விலையைக் கோரலாம். Open Tender.யார் சிறப்பான தள்ளுபடி தருகிறார்களோ அவர்களிடம் புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம். விலையைக் குறைத்து வாங்குவதால் நமக்கு எதுவும் இலாபமில்லை. ஒருவேளை பத்தாயிரம் ரூபாய் மிச்சமாகும் என்றால் அதை இன்னொரு பள்ளிக்கு புத்தகங்களாக வாங்கிக் கொடுத்துவிடுவதுதான் திட்டம். ஆறு பள்ளிகளுக்குப் பதிலாக ஏழு பள்ளிகளில் நூலகம் அமைத்துக் கொடுத்ததாக இருக்கட்டும்.
கடந்த காலத்தில் புத்தகப் பட்டியலைத் தயாரித்துவிட்டு பிறகு நூல்களை வாங்கும் போது‘இந்த புத்தகம் கிடைக்கவில்லை அதனால் இதைச் சேர்த்துக் கொள்ளலாமா’ என்று கேட்டு புத்தகத்தை மாற்றிய அனுபவமிருக்கிறது. இந்த முறை அதை முடிந்தளவுக்குத் தவிர்க்க வேண்டும் என நினைக்கிறேன். பெரும்பாலான புத்தகங்களை ஆன்லைனில் தேடிப் பார்த்து கைவசமிருப்பதை உறுதி செய்திருக்கிறேன். அதனால் பட்டியலை மாற்ற வேண்டிய அவசியமிருக்காது.
‘எங்களிடம் வாங்கவில்லை’ என்று நண்பர்கள் யாரும் தவறாக நினைக்க வேண்டாம். இப்படி வெளிப்படையாக வாங்குவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும் எனத் தோன்றுகிறது.
நூல்களின் பட்டியல் இணைப்பில் இருக்கிறது. (Google Spreadsheet)
ஜூன் பதினேழாம் தேதிக்குள் Quotation ஐ அனுப்பி வைக்கவும். விலைப்புள்ளியைப் பொறுத்து விற்பனையாளரைப் பதினெட்டாம் தேதியன்று முடிவு செய்துவிடலாம். ஐந்து பள்ளிகளுக்கான தொகை ஐம்பதாயிரம் ரூபாயை இங்கிலாந்து கோல்செஸ்டர் ஊர் நண்பர்கள் குழுமமும், ஒரு பள்ளிக்கான தொகை பத்தாயிரம் ரூபாயை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு வாசகரும் அளிக்கிறார்கள். மொத்தம் அறுபதாயிரம் ரூபாய். விற்பனையாளருக்கு அவர்களே நேரடியாகப் பணத்தை அனுப்பி வைக்கும்படி ஏற்பாட்டைச் செய்துவிடலாம். ஜூன் மாத இறுதிக்குள் விற்பனையாளர் புத்தகங்களை அனுப்பி வைத்தால் ஜூலை 15 ஆம் நாள் காமராஜர் பிறந்தநாள். தமிழகம் முழுக்கவும் கல்விச்சாலைகளைத் திறந்த அம்மனிதரின் பிறந்த தினத்திலிருந்து பள்ளி நூலகம் செயல்படத் தொடங்கட்டும்.
நூல் | ஆசிரியர் | பதிப்பகம் | விலை | எண்ணிக்கை | |
---|---|---|---|---|---|
பொது | Little Lifco Dictionary (2) | 150 | 2 | ||
புவியுருண்டை (Globe) | 500 | 1 | |||
அட்லஸ் | 150 | 1 | |||
திருக்குறள் | பூம்புகார் பதிப்பகம் | 100 | 2 | ||
பாரதியார் கவிதைகள் | கவிதா பதிப்பகம் | 75 | 2 | ||
பாரதிதாசன் கவிதைகள் | ஐந்திணை பதிப்பகம் | 130 | 1 | ||
நல்ல தமிழில் எழுதுவோம் | என்.சொக்கன் | கிழக்கு | 200 | 1 | |
ஆசிரியர்களுக்கானது | எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்? | ஜான் ஹோல்ட் | பாரதி புத்தகாலயம் | 170 | 1 |
இது யாருடைய வகுப்பறை | ஆயிஷா நடராஜன் | பாரதி புத்தகாலயம் | 195 | 1 | |
வன்முறையில்லா வகுப்பறை | ஆயிஷா நடராஜன் | பாரதி புத்தகாலயம் | 80 | 1 | |
குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம் | கமலா V. முகுந்தா | கிழக்கு பதிப்பகம் | 330 | 1 | |
கனவு ஆசிரியர் | க.துளசிதாசன் | Books for children | 90 | 1 | |
வாழ நினைத்தால் வாழலாம் | ருத்ரன் | நர்மதா பதிப்பகம் | 100 | 1 | |
எனக்குரிய இடம் எங்கே? | ச.மாடசாமி | சூரியன் பதிப்பகம் | 100 | 1 | |
மாணவ மனம் | படிப்பது சுகமே | வெ.இறையன்பு | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் | 50 | 1 |
படிப்படியாய் படி | இரா.ஆனந்தகுமார் | விகடன் | 100 | 1 | |
முடிவெடுக்கக் கற்கலாமா? | சிபி.கே.சாலமன் | Prodigy | 40 | 1 | |
ஆளுமைகள் | அக்னிச் சிறகுகள் | அப்துல்கலாம் | 150 | 1 | |
சத்திய சோதனை | காந்தியடிகள் | 100 | 1 | ||
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் | குகன் | வானவில் பதிப்பகம் | 140 | 1 | |
பெரியார் | அஜயன் பாலா | 70 | 1 | ||
விவேகானந்தர் | ஆர்.முத்துக்குமார் | Prodigy | 40 | 1 | |
அம்பேத்கர் | அஜயன் பாலா | விகடன் | 60 | 1 | |
காமராஜ் | நாகூர் ரூமி | கிழக்கு | 70 | 1 | |
நான் நம்மாழ்வார் பேசுகிறேன் | நம்மாழ்வார் | விகடன் | 175 | 1 | |
வள்ளலார் வரலாறு | சுத்தானந்த பாரதியார் | வ.உ.சி. நூலகம் | 45 | 1 | |
வரலாறு | டாப் 100 வரலாற்று மனிதர்கள் | பூ.கொ.சரவணன் | விகடன் | 240 | 1 |
அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு | பில் பிரைசன் | பாரதி புத்தகாலயம் | 445 | 1 | |
நம் தேசத்தின் கதை | தேவ்நாத் | நர்மதா பதிப்பகம் | 175 | 1 | |
நாடுகளின் வரலாறு | ஜி.எஸ்.எஸ் | தி இந்து | 200 | 1 | |
கணிதம் | கதையில் கலந்த கணிதம் | இரா.சிவராமன் | Pie கணித மன்றம் | 150 | 1 |
உலக கணித மேதைகள் | கீர்த்தி | அருணா பப்ளிகேஷன்ஸ் | 40 | 1 | |
விளையாட்டு வடிவில் கணக்கு | வாண்டு மாமா | கவிதா பதிப்பகம் | 50 | 1 | |
அறிவியல் | நீங்களும் விஞ்ஞானி ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்களா? | ஆயிஷா நடராஜன் | பாரதி புத்தகாலயம் | 80 | 1 |
டாப் 100 அறிவியல் மேதைகள் | பூ.கொ.சரவணன் | விகடன் | 140 | 1 | |
ஸ்டீபன் ஹாக்கிங் | நாகூர் ரூமி | சிக்த்சென்ஸ் | 50 | 1 | |
சி.வி.ராமன் 125 | த.வி.வெங்கடேஸ்வரன் | Books for Children | 70 | 1 | |
அறிவோமா அறிவியல் | த.வி.வெங்கடேஸ்வரன் | தாமரை பிரதர்ஸ் மீடியா | 80 | 1 | |
சூரிய மண்டலம் | சோ.மோகனா | பாரதி புத்தகாலயம் | 40 | 1 | |
உங்கள் உடல் பேசுகிறேன் | கீதா, மாலன் | புதிய தலைமுறை | 80 | 1 | |
நமது உடல்: ஓர் அற்புத இயந்திரம் | ரமேஷ் பிஜ்லானி | நேஷனல் புக் ட்ரஸ்ட் | 30 | 1 | |
விளையாட்டு விஞ்ஞானம் | சுப்பையா பாண்டியன் | விகடன் | 145 | 1 | |
உலகப் பெண் விஞ்ஞானிகள் | Books for Children | 70 | 1 | ||
இணையில்லா இந்திய அறிவியல் | இரா.சிவராமன் | Pie கணித மன்றம் | 120 | 1 | |
நீங்களே செய்யலாம் -1,2 | வாண்டு மாமா | கங்கை புத்தக நிலையம் | 250 | 1 | |
டார்வின் ஸ்கூல் | இரா.நடராசன் | பாரதி புத்தகாலயம் | 75 | 1 | |
யுரேகா யுரேகா | அறிவியல் வெளியீடு | 100 | 1 | ||
சூழலியல் | சுற்றுச்சூழல் மாசு விளைவுகளும் விழிப்புணர்வுகளும் | வேணு சீனிவாசன் | விஜயா பதிப்பகம் | 100 | 1 |
உலகம் வெப்பமடைவதும் அதன் தீய விளைவுகளும் | பால.அர்த்தநாரீஸ்வரர் | கடலாங்குடி பதிப்பகம் | 40 | 1 | |
யானைகள் 100 | யோகானந்த் முகமது அலி | பாரதி புத்தகாலயம் | 30 | 1 | |
ஊர்ப்புறத்து பறவைகள் | கோவை சதாசிவம் | குறிஞ்சி பதிப்பகம் | 80 | 1 | |
நீங்களும் உங்கள் சுற்றுச்சூழலும் | அறிவியல் வெளியீடு | 75 | 1 | ||
காண் என்றது இயற்கை | எஸ்.ராமகிருஷ்ணன் | உயிர்மை | 110 | 1 | |
மண்ணின் மரங்கள் | கார்த்திக்-தமிழ்தாசன் | இயல்வாகை | 75 | 1 | |
படைப்பாற்றல் | காகிதத்தில் வேடிக்கை உருவங்கள் செய்வது எப்படி? | மணிமேகலைப் பிரசுரம் | 55 | 1 | |
பேச்சுக்கலைப் பயிற்சி (1,2,3) | குமரி அனந்தன் | வானதி பதிப்பகம் | 135 | 1 | |
ஓவியம் வரையக் கற்றுக் கொள்ளுங்கள் (1, 2) | மணிமேகலைப் பிரசுரம் | 120 | 1 | ||
விளையாட்டு | விளையாட்டு வினாடி-வினா | டி.என்.இமாஜான் | சங்கர் பதிப்பகம் | 50 | 1 |
மைதானம் (விளையாட்டுக் கட்டுரைகள்) | சந்திரா மனோகரன் | ஓவியா பதிப்பகம் | 100 | 1 | |
கிராமத்து விளையாட்டுக்கள் | இரத்தின புகழேந்தி | விகடன் | 55 | 1 | |
உலக விளையாட்டு வரலாறு | த.கணேசன் | நர்மதா பதிப்பகம் | 80 | 1 | |
புதிர்கள் & பொது அறிவு | மூளைக்கு வேலை தந்திரக் கணக்குகள் 100 | தர்மராஜ் ஜோசப் | நர்மதா பதிப்பகம் | 80 | 1 |
ஆயிரம் பொது அறிவு(வினா-விடை) | அப்பாஸ் மந்திரி | விஜயா பதிப்பகம் | 100 | 1 | |
வினாடி வினா - 2500 | ஜெகாதா | சாரதா பதிப்பகம் | 60 | 1 | |
பொது அறிவு 5000 | அம்பிகா சிவம் | விஜயா பதிப்பகம் | 100 | 1 | |
நர்மதாவின் சூப்பர் க்விஸ் | எஸ்.அருள்நம்பி | நர்மதா பதிப்பகம் | 100 | 1 | |
வேடிக்கை விடுகதைகள் | மணிமேகலைப் பிரசுரம் | 35 | 1 | ||
வேடிக்கையான விடுகதைகள் 1000 | எடையூர் சிவமதி | கற்பகம் புத்தகாலயம் | 35 | 1 | |
மாணவர்களுக்கு பயன் தரும் கேள்விபதில் | அனந்தகுமார் | நிவேதிதா பதிப்பகம் | 70 | 1 | |
புனைவுகள் | அறிவியல் கதைகள் | என்.சொக்கன் | கல்கி பதிப்பகம் | 60 | 1 |
பீர்பால் தந்திரக் கதைகள் | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் | 100 | 1 | ||
சுண்டைக்காய் இளவரசன் | யெஸ்.பாலபாரதி | வானம் பதிப்பகம் | 60 | 1 | |
மாயக் கண்ணாடி (சிறுவர் கதைகள்) | உதயசங்கர் | நூல்வனம் | 70 | 1 | |
குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள் | லியோ டால்ஸ்டாய் | பாரதி புத்தகாலயம் | 35 | 1 | |
காட்டுக்குள்ளே கொண்டாட்டம் | கொ.மா.கோதண்டம் | விஜயா பதிப்பகம் | 80 | 1 | |
தெனாலிராமன் மதியூகக் கதைகள் | ரெட்டி ராகவய்யா | நேஷனல் புக் ட்ரஸ்ட் | 90 | 1 | |
நகைச்சுவை ததும்பும் முல்லா நஸ்ருதீன் கதைகள் | முத்தமிழ் பதிப்பகம் | 50 | 1 | ||
சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் | யூமா வாசுகி | பாரதி புத்தகாலயம் | 40 | 1 | |
வாத்துராஜா | விஷ்ணுபுரம் சரவணன் | பாரதி புத்தகாலயம் | 50 | 1 | |
வேலன் பார்த்த அதிசய அட்லாண்டிக் | ஹர்மீந்தர் ஓஹ்ரி | நேஷனல் புக் ட்ரஸ்ட் | 30 | 1 | |
மரத்தின் அழைப்பு | யூமா வாசுகி | பாரதி புத்தகாலயம் | 100 | 1 | |
எழுதத் தெரிந்த புலி | எஸ்.ராமகிருஷ்ணன் | பாரதி புத்தகாலயம் | 40 | 1 | |
உலகின் மிகச் சிறிய தவளை | எஸ்.ராமகிருஷ்ணன் | டிஸ்கவரி புக் பேலஸ் | 40 | 1 | |
புலியைத் தேடி ஒரு பயணம் | கீதிகா ஜெயின் | நேஷனல் புக் ட்ரஸ்ட் | 40 | 1 | |
பூசணிக்காய் முதல் ஊறுகாய் வரை | சுனிலா குப்தே | நேஷனல் புக் ட்ரஸ்ட் | 70 | 1 | |
யானை சவாரி | பாவண்ணன் | பாரதி புத்தகாலயம் | 40 | 1 | |
மீசைக்காரப் பூனை | பாவண்ணன் | பாரதி புத்தகாலயம் | 50 | 1 | |
அந்தரத்தில் நடந்த அபூர்வ கதை | விழியன் | பாரதி புத்தகாலயம் | 25 | 1 | |
உலகப்புகழ்பெற்ற பஞ்ச தந்திரக் கதைகள் | சப்னா | 125 | 1 | ||
கனவினைப் பின் தொடர்ந்து | த.வெ.பத்மா | எதிர் வெளியீடு | 100 | 1 | |
பேசும் தாடி | உதயசங்கர் | வானம் பதிப்பகம் | 80 | 1 | |
காணாமல் போன சிப்பாய் | விஜயபாஸ்கர் விஜய் | வானம் பதிப்பகம் | 50 | 1 | |
பனியார மழையும் பறவைகளின் மொழியும் | கழனியூரன் | பாரதி புத்தகாலயம் | 110 | 1 | |
காமிக்ஸ் | சுட்டி பயில்வான் பென்னி | முத்து காமிக்ஸ் | 65 | 1 | |
பெய்ரூட்டில் ஜானி | முத்து காமிக்ஸ் | 50 | 1 | ||
பாம்புத் தீவு (இரும்புக் கை மாயாவி) | முத்து காமிக்ஸ் | 50 | 1 | ||
பனிக்கடலில் பயங்கர எரிமைலை | முத்து காமிக்ஸ் | 50 | 1 | ||
சமயம் | மகாபாரதம் | நேஷனல் புக் ட்ரஸ்ட் | 17 | 1 | |
சிறுவர்களுக்கு இராமாயணம் | ஏ.சோதி | நன்மொழி பதிப்பகம் | 70 | 1 | |
திருக்குர் ஆனின் உள்ளடக்கம் என்ன? | அப்துல்லாஹ் அடியார் | இசுலாமிய நிறுவனம் ட்ரஸ்ட் | 35 | 1 | |
பைபிள் கதைகள் | பிரேமா பிரசுரம் | 160 | 1 |
--> பட்டியல் குறித்து கருத்துக்கள் இருப்பின் பகிரவும்.