திரும்பவும் எழுத வேண்டிய அவசியமில்லாத விஷயம் இது. இருப்பினும் ஒற்றை வரியை மட்டும் எடுத்துக் கொண்டு பேசுகிறவர்களுக்காக விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கிறது.
அப்பாவுக்கு ஹெபாட்டிடிஸ் சி வைரஸ் தாக்கியிருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பாக ஓர் அறுவை சிகிச்சையின் போது வேறொருவருடைய இரத்தத்தை அவருக்குச் செலுத்தினார்கள். அநேகமாக அதன் வழியாகத்தான் பரவியிருக்கக் கூடும். பிற ஹெபாட்ட்டிஸ் வைரஸ்களைப் போலவே அதுவும் ஈரலைத் தாக்கியிருந்தது. உடல் நலக்குறைவு ஏற்பட்ட போது கோவை சிங்காநல்லூரில் இருக்கும் வயிறு சம்பந்தப்பட்ட சிறப்பு நிபுணரிடம் காட்டினோம். பரிசோதனைகளைச் செய்து வைரஸ்தான் காரணம் எனச் சொல்லி sofocure என்ற மாத்திரையை பரிந்துரையை செய்தார். கிட்டத்தட்ட மாதம் பத்தொன்பதாயிரம் ரூபாய். மாத்திரையை உட்கொள்ளத் தொடங்கிய பிறகு மாதம் ஒரு முறை பரிசோதனையைச் செய்து கொண்டிருந்தோம். வைரஸ் கட்டுப்பாட்டிலேயேதான் இருந்தது. நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தொந்தரவுகள் ஆரம்பித்த போது (பிப்ரவரி மாதம்) வேறு சில சோதனைகளைச் செய்தார்கள். அப்பொழுதுதான் Hepato cellular carcinoma என்றார்கள். ஈரலில் புற்றுநோய். வேறு சில சோதனைகளின் மூலமாக இறுதிக்கட்டம் என்றும் அறிவித்தார்கள்.
இது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரியாது.
சிங்காநல்லூர் மருத்துவமனையில் ‘நீங்க கேன்சர் சிறப்பு மருத்துவரைப் பாருங்கள்’ என்று சொல்லிவிட்டார்கள். அப்பொழுது கோவை மெடிக்கல் செண்ட்டரில் சுதாகர் என்ற புற்று நோய் மருத்துவர் இருந்தார். ‘நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க மாத்திரைகள் தருகிறேன்’என்றார். அன்றைய தினமே கோப்புகளை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து பெங்களூரில் மட்டுமே மூன்று சிறப்பு மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டோம். விஜயகுமார், நிதி மற்றும் சங்கரா புற்று மருத்துவமனையில் ஒரு சிறப்பு மருத்துவ நிபுணர். மூவருமே இறுதிக்கட்டம் என்றார்கள். அறுவை சிகிச்சை, கதிரியக்கம், உறுப்பு மாற்று என்று எதுவுமே சாத்தியமில்லை என்றும் சொன்னார்கள். தெரிந்த மருத்துவர்கள் வழியாக வேலூர் சி.எம்.சியை அணுகிய போது அவர்கள் சொன்னதும் இதைத்தான். கோவை மருத்துவர் சுதாகர் சொன்ன மாத்திரைகளை வாங்கத் தொடங்கினோம். நெக்ஸாவேர் என்ற அந்த மாத்திரை மட்டுமே மாதம் ஐம்பதாயிரம் ரூபாய். சோஃபோக்யூரும் தொடர்ந்து கொண்டிருந்தது. கடும் செலவு. ஆனால் இந்த வாழ்க்கை அவர் அளித்தது. எங்களுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டார் என்று எங்களுக்குத் தெரியும். ‘ஆன செலவு ஆகட்டும்’ என்று செலவு செய்து கொண்டிருந்தோம்.
அடுத்த நான்கைந்து மாதங்களுக்கு மாத்திரைகள் தொடர்ந்தது. உடல் நலிவடைந்து கொண்டேயிருந்தது. ஈரல் பரிசோதனைக்கு SGOT, SGBT என்று இரு பரிசோதனைகளைச் செய்வார்கள். ஒவ்வொரு மாதமும் அப்புள்ளிகள் ஏறிக் கொண்டேயிருந்தது. எனக்கு புரிந்தது என்றாலும் தம்பி உட்பட யாரிடமும் ‘கிட்டத்தட்ட அதே லெவல்தான் பாருங்க’ என்று எப்படியாவது சமாளித்துக் கொண்டேயிருந்தேன். ஜுன் மாதத்தில் நிலைமை கட்டுப்பாட்டையிழந்தது. பெங்களூரு வீட்டில் ஒரேயிரவில் நடக்க முடியாதளவுக்கு ஆகிவிட்டார். அழைத்துக் கொண்டு சுதாகரிடம் சென்ற போது பரிசோதனைகளை எல்லாம் முடித்துவிட்டு தனியறைக்கு அழைத்துச் சென்று ‘இனி கஷ்டம்...வீட்டுக்கு எடுத்துட்டு போய்டுங்க’ என்றார். ‘எடுத்துட்டு’ என்ற அந்தச் சொல் நன்றாக நினைவில் இருக்கிறது. அதிகபட்சம் ஒன்றிரண்டு நாள் என்று நாளும் குறித்தார். தம்பி அங்கேயே அழுதான். நாமும் அழுதால் தைரியமாகப் பேசுவதற்கு ஆள் இல்லை என்று பற்களைக் கடித்துக் கொண்டேன்.
அம்மாவிடம் ‘நம்மூருக்கே கூட்டிட்டு போய்டலாம்’ என்ற போது புரிந்து கொண்டு அழத் தொடங்கிவிட்டார். அதன் பிறகுதான் அப்பாவின் நோய் பற்றி அம்மாவுக்கு முழுமையாகத் தெரியும். அதோடு விட்டுவிடவில்லை. முன்பு பேசிய மருத்துவர்களிடமெல்லாம் பேசிப் பார்த்த போது அத்தனை பேரும் கைவிரித்துவிட்டார்கள். அன்றைய தினத்தில் நாங்கள் எதிர்கொண்ட சூழலை விவரிப்பதற்காகத்தான் இதைத் திரும்பவும் எழுதியிருக்கிறேன்.
கேன்சரின் இறுதிக்கட்டம், அதே சமயம் அலோபதி புற்று நோய் சிறப்பு மருத்துவர்கள் அத்தனை பேரும் கைவிட்டுவிட்ட பிறகு வேறு வழியே இல்லாமல்தான் சித்தா, நாட்டு வைத்தியம் உள்ளிட்ட பிற மருத்துவங்களுக்குச் சென்றோம். மருந்துகளில் பஞ்சகவ்யமும் அதில் ஒன்று. தாவரத்திலிருந்து செய்யும் பூரம் என்ற மருந்தையும் வாங்கிக் கொடுத்தோம். ஆரம்பத்தில் இவை இரண்டு மட்டும்தான் மருந்து. கடைசி வரைக்கும் அலோபதி எதுவும் இல்லை. அதன் பிறகு SGOT,SGBT பரிசோதனை முடிவுகளை பிரசுரம் கூடச் செய்திருந்தேன். நோய் முற்றாகக் குணமாகாது என்று தெரியும். ஆனால் அதன் சிரமங்கள் எதுவுமில்லாமல் வைத்திருக்க முடிந்தது. இனி கிடைக்கிற ஒவ்வொரு நாளும் போனஸ்தான் என்று தெளிவாகப் புரிந்து வைத்திருந்தேன். கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு- டிசம்பர் இறுதி வரைக்கும் நடமாடிக் கொண்டுதான் இருந்தார். நடமாட்டம் என்றால் வீட்டுக்கு வெளியில் நடைப்பயிற்சி செய்கிற அளவுக்கான நடமாட்டம்.
அறிவியல் தெரிந்தவர்களாகவோ மருத்துவ நுணுக்கம் புரிந்தவர்களாகவோ இம்மருந்துகளை எடுத்துக் கொள்ளவில்லை. ஏதாவதொரு பற்றுக்கோல் கிடைத்துவிடாதா என்கிற ஏக்கம்தான்.
‘கடைசிக்கட்டத்தில் வலி தாங்க முடியாம இருந்துச்சுன்னா வாங்க drug எழுதித் தர்றேன்’ என்று மருத்துவர் சொல்லி அனுப்பி வைத்திருந்தார். அவர் சொன்னது மர்ஃபீன் என்கிற போதைப் பொருள். தாங்க முடியாத வலி என்று அப்பாவுக்கு எதுவுமில்லை. டிசம்பர் 27 ஆம் தேதி இரத்த அழுத்தம் குறைந்த போது மருத்துவமனையில் சேர்த்தோம். அரை மயக்கத்திலேயே இருந்தார். அடுத்த இருபத்து நான்கு மணி நேரத்திற்குள்ளாக உயிர் பிரிந்துவிட்டது.
துளியும் மிகைப்படுத்தப்படாத நேரடி அனுபவம் இது. யாரைத் தூக்கிப்பிடித்து எனக்கு என்ன வரப் போகிறது? அல்லது யார் எந்த மருத்துவத்தை நாடினால் எனக்கு என்ன இலாபம்? குருட்டுவாக்கில் ஒன்றைப் பரிந்துரை செய்து அடுத்தவர்களைச் சிரமத்திற்குள்ளாக்க வேண்டிய அவசியம் எதுவும் எனக்கு இல்லை.
இன்றைக்கும் கூட சித்த மருத்துவத்தையும் நாட்டு வைத்தியத்தையும் முழுமையாக நான் நம்புவதில்லை. முழுமையாக ஒருங்கிணைக்கபடாத அம்மருத்துவச் செயல்முறையில் ஏகப்பட்ட குறைபாடுகள் இருக்கின்றன என்பதையும் பதிவு செய்திருக்கிறேன். நேற்று ஒருவர் தம்முடைய தந்தை குறித்துப் பேசிய போது ‘இதற்கெல்லாம் அலோபதிதான் சரி. அவசர சிகிச்சையை அலோபதி வழியாக முடியுங்கள். பிறகு யோசிக்கலாம்’ என்றுதான் பதில் சொன்னேன். ஆனால் ஒரு மருத்துவம் தம்மால் இயலாது என்று கைவிட்டுவிடும் போது இன்னொரு மருத்துவமுறையை நாடுவதில் தவறேதுமில்லை. அதைத் தவிர வேறு வழியுமில்லை. அந்தச் சூழலில் இருந்தவர்களுக்குத்தான் அதன் வலி தெரியும்.