இரண்டொரு நாட்களுக்கு முன்பாக பசுமை கோபி கார்த்திகேயன் அழைத்து ‘ஆர்.டி.ஓவா வந்திருக்கிறவருக்கு உங்களைத் தெரியுமாம்’ என்றார். வீட்டிலிருப்பவர்களிடமெல்லாம் பெருமையடித்துக் கொண்டேன். முனைவர்.கோவிந்தராஜன் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கிறார். கோட்டாட்சியர். நிசப்தம் வாசிப்பதுண்டாம். சில ஆண்டுகளுக்கு முன்பாக அவருக்கு யாரோ ஒருவர் தளத்தை அறிமுகம் செய்து வைத்ததாகச் சொன்னார்.
புதுக் கல்வியாண்டு தொடங்குகிறது என்பதால் அறக்கட்டளை வழியாக உதவி பெறும் மாணவர்களை அழைத்து வைத்துப் பேசிக் கொஞ்சம் தீயை ஊதிவிட்டு அனுப்பி வைக்க வேண்டும் என நினைத்திருந்தோம். நல்லதாகப் போய்விட்டது. கோட்டாட்சியரையே பேசச் சொல்லிவிடலாம் என்று அவரிடம் அனுமதி கேட்டோம். ‘உங்க அளவுக்கு நான் பேச மாட்டேனே’ என்றார். பேசவே வேண்டியதில்லை. ஒன்றிரண்டு வாழ்த்துக்களைச் சொன்னாலே போதும். மாணவர்களுக்கு அதுவே உத்வேகம்தான்.
புதுக் கல்வியாண்டு தொடங்குகிறது என்பதால் அறக்கட்டளை வழியாக உதவி பெறும் மாணவர்களை அழைத்து வைத்துப் பேசிக் கொஞ்சம் தீயை ஊதிவிட்டு அனுப்பி வைக்க வேண்டும் என நினைத்திருந்தோம். நல்லதாகப் போய்விட்டது. கோட்டாட்சியரையே பேசச் சொல்லிவிடலாம் என்று அவரிடம் அனுமதி கேட்டோம். ‘உங்க அளவுக்கு நான் பேச மாட்டேனே’ என்றார். பேசவே வேண்டியதில்லை. ஒன்றிரண்டு வாழ்த்துக்களைச் சொன்னாலே போதும். மாணவர்களுக்கு அதுவே உத்வேகம்தான்.
ஆசிரியர் அரசு தாமஸ்தான் சுற்றுவட்டாரத்தில் உள்ள மாணவர்களை அழைத்து நிகழ்வினை ஒருங்கிணைத்திருந்தார்.
நம்முடைய உதவியுடன் ஏற்கனவே படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள், இந்த வருடம் நாம் புதிதாகத் தேர்ந்தெடுத்த மாணவர்கள் என்று கலவை. எல்லோராலும் வந்து சேரவும் முடியவில்லை. கழைக்கூத்தாடிகள் காலனியிலிருந்து சாமிநாதன் மட்டும் வந்திருந்தான். சார்லியும் விக்னேஷூம் கல்யாண பந்திக்கு வேலைக்குச் சென்றுவிட்டார்கள். சார்லி காலையில் அழைத்து ‘சப்கலெக்டரை பார்க்க வரச் சொன்னீங்களாமா...வரட்டுமா சார்?’ என்றான். வேலைக்குச் சென்றால் அவர்களுக்கு சம்பளம் கிடைக்கும். அதைத் தடுத்த மாதிரி இருக்க வேண்டியதில்லை.
காலனியில் தேர்வெழுதிய பதினேழு பதினாறு மாணவர்கள் பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். மூன்று மாணவர்களுக்கு தன்னாட்சிக் கல்லூரியில் அவர்கள் விரும்பிய பாடத்தில் சேர்த்திருக்கிறோம். மிகச் சிறப்பான கல்லூரி. அதே காலனியில் மீதமிருக்கும் மாணவர்கள் அவரவர் விருப்பப்படி வேறு கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள்.
காலனியில் தேர்வெழுதிய பதினேழு பதினாறு மாணவர்கள் பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். மூன்று மாணவர்களுக்கு தன்னாட்சிக் கல்லூரியில் அவர்கள் விரும்பிய பாடத்தில் சேர்த்திருக்கிறோம். மிகச் சிறப்பான கல்லூரி. அதே காலனியில் மீதமிருக்கும் மாணவர்கள் அவரவர் விருப்பப்படி வேறு கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள்.
சாமிநாதனின் அக்காவுக்கும் அண்ணனுக்கும் மாலைக்கண் நோய். அம்மாவும் அப்பாவும் கூலித் தொழிலாளர்கள். தொள்ளாயிரத்து அறுபது மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறான். சார்லி, விக்னேஷூம் கூலித் தொழிலாளிகளின் பிள்ளைகள்தான். தேசிய அளவிலான விளையாட்டு வீரர்கள். ஆனால் மதிப்பெண்கள் குறைவு. கல்லூரி நிர்வாகத்திற்கு நிசப்தம் பற்றித் தெரியும். பரிந்துரை செய்து செயலரிடம் பேசிய போது ‘நீங்க லிஸ்ட்டை கொடுங்க மணி...பார்த்துக்கலாம்’ என்று இடம் கொடுத்திருக்கிறார்கள். அதே கல்லூரியில் 1098 மதிப்பெண்கள் எடுத்த மாணவருக்குக் கூட கலந்தாய்வில் இடம் கிடைக்கவில்லை என இன்று சொன்னார்கள். கல்லூரி நிர்வாகத்திற்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. ‘தம்பி..அவங்க நம்ம மேல வெச்சிருக்கிற நம்பிக்கையைக் காப்பாத்துங்க’ என்றுதான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
கோட்டாட்சியர் மாணவர்களைத் தமது அறைக்குள் அழைத்து அமரச் சொன்னார். ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தினோம். அவர் சில வார்த்தைகளைப் பேசினார். நேரம் ஒதுக்கி மாணவர்களிடம் பேசிய அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். சுபஹேந்து சேகர் என்ற மத்திய அரசின் துணைச் செயலாளர் ஒருவரும் தமது பணிக்காக உள்ளூரில் இருந்தார். டெல்லியிலிருந்து வந்திருந்த அவரும் வந்திருந்தார். வாழ்த்திக் கொஞ்சம் பேசினார்.
மாணவர்களில் அசாரூதின் பற்றிச் சொல்ல வேண்டியிருக்கிறது. உவப்பில்லாத செய்திதான் ஆனால் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது. பெற்றோர் இருவருமே அவனுக்குத் துணை இல்லை. இருக்கிறார்கள். ஆனால் சுயமாக அவர்களால் செயல்பட முடியாது. பாட்டி வீட்டில் வசிக்கிறான். பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பை நாங்கள் நடத்திய போது ஓயாமல் நக்கலடித்துக் கொண்டேயிருந்தான். ‘உருப்படாதவன்’ என்று நினைத்திருந்தேன். இன்றைக்கு அவனைத்தான் அழைத்து வந்து ‘1120 மார்க்’ என்று நிறுத்தினார்கள். பள்ளியிலும் அவன்தான் முதலிடம். அரசுப் பள்ளி மாணவன். அன்றைய அதே துறுதுறுப்புடன் நின்றான். ‘என்ன வேணும்ன்னாலும் படி அசார்..பார்த்துக்கலாம்’ என்று என்னையுமறியாமல் சொன்னேன். அவனுக்குச் சொல்லாமல் யாருக்குச் சொல்லப் போகிறோம்?
திரு.சுபஹேந்து சேகரிடம் அசாருதீனை அறிமுகப்படுத்தி வைத்தோம். அவர் சிறுபான்மை நலவாழ்வுத்துறையில்தான் துணைச் செயலாளர். ‘சரியா மூவ் பண்ணினா கடைசி வரைக்கும் இவனுக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கிற மாதிரி செஞ்சுடலாம்’ என்றார். அவரை அமுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அசாருதீனைக் கை தூக்கிவிட்டுவிடலாம்.
இப்படி ஒவ்வொரு மாணவனிடமும் ஒரு கதை இருக்கிறது. பெருமைக்காகச் சொல்லவில்லை. நாம் உதவுகிற/நம்மிடம் தொடர்பில் இருக்கிற ஒவ்வொரு மாணவனுமே கில்லிதான். இதை உறுதியாகவே சொல்ல முடியும். வாய்ப்புகள் இல்லாமல் சுருண்டிருந்தவர்கள். அப்பேர்ப்பட்டவர்களைத்தான் தேடிப் பிடித்திருக்கிறோம்.
கிடைக்கிற எல்லோரையும் இழுத்து வைத்துக் கொள்வதில்லை. இயன்றவரை சொல்லிப் பார்க்க வேண்டியது- நாம் சொல்வதைப் புரிந்து கொண்டு நம்மோடு நடக்கிறவர்களுக்கு மட்டும் கை நீட்டினால் போதும். அய்யாவு ஆயிரத்து நூறுக்கும் அதிகமான மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறான். மரமேறுகிறவரின் மகன். 190 மதிப்பெண்கள் கட்-ஆஃப் வாங்கியிருக்கிறான். எவனோ ஒரு வெங்காயத்தான் வந்து ‘செலவே இல்லாமல் படிக்கலாம்’ என்று கொக்கி போடவும் கோயமுத்தூரில் பெயர் தெரியாத பொக்கனாத்தி பொறியியல் கல்லூரியில் சேர்க்கையை முடித்துவிட்டார்கள். பல முறை சொல்லிப் பார்த்தாகிவிட்டது. நாம் சொல்வதைவிடவும் சொற்களில் தேன் தடவிப் பேசுகிற கேப்மாரிகளின் வளைகளில்தான் சிக்குகிறார்கள். வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் ஒரு அளவுக்கு மீறி நம்மால் என்ன செய்ய முடியும்? விட்டுவிட்டேன். இதுவும் கூட நமக்கு அனுபவம்தான்.
நாம் சொல்வதை நம்பி நம்மோடு வருகிறவர்களைத் தாங்கிப் பிடித்தால் போதும் என்று தோன்றுகிறது. ‘நீங்க ஜெயிக்க எதையெல்லாம் செய்யணுமோ செய்யுங்க..எல்லாவிதத்திலேயும் துணை இருக்கிறேன்’ என்றுதான் சொல்லி வைத்திருக்கிறோம். ஒரு வகையில் வெறியேற்றுதல் இது. வாழ்நாள் முழுமையும் சேர்த்து இத்தகைய ஐம்பது பொறிகளைப் பற்ற வைத்தால் போதும். அது பற்றி எரிந்து கொண்டேயிருக்கும்.
எதைப் பற்றியும் சிரத்தை செய்து கொள்ளாமல் பாதை நெடுகவும் போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
நிசப்தம் அறக்கட்டளையின் உதவியில் படிக்கும் நிறைய மாணவர்கள் தமிழகத்தில் பரவலாக இருக்கிறார்கள். எல்லோரையும் ஒரு குடையில் கொண்டு வந்து உற்சாகமூட்டிப் பேசி அனுப்பி வைப்பது சாத்தியமே ஆகவில்லை. இன்றைக்குதான் கை கூடியிருக்கிறது.
இனித் தொடர்ந்து செய்ய வேண்டும்.