திருமணத்திற்கு அழைத்திருந்தார்கள். பாட்டீல் குடும்பம். வட கர்நாடகத்துக்காரர்கள். முதன் முதலாக அவனிடம் பேசிய போது 'I am from UK' என்றான். லண்டனில் படித்திருப்பான் போலிருக்கிறது என்று நினைத்தேன். உத்தர கர்நாடகா என்பதைத்தான் அப்படிச் சொல்லியிருக்கிறான். வெகு நாட்களுக்குக் கரித்துக் கொட்டிக் கொண்டேயிருந்தேன். பையன் எங்களுடன் பணி புரிகிறான். எண்ணி ஏழு அழைப்பிதழ்களை மட்டும் அலுவலகத்தில் கொடுத்திருந்தான். ஐம்பது பேர் வரைக்கும் பணி புரியும் அலுவலகத்தில் ஏழு பேரை மட்டும் அழைப்பது என்ன நியாயம்? ‘என் கூட நல்லா பேசறவங்க ஏழு பேர் மட்டும்தான்’ என்றான். நமக்கு முக்கியத்துவம் கொடுத்து அழைக்கும் திருமணத்திற்குச் செல்லாமல் இருப்பது நியாயமில்லை.
ஏழு பேருமே சென்றிருந்தோம். ராஜராஜேஸ்வரி நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் குடியியிருக்கிறார்கள். நான்கு மாடிக் குடியிருப்பு அது. மொட்டை மாடியில் சாமியானா போட்டிருந்தார்கள். ஐம்பது நெகிழி நாற்காலிகள். சுற்றிலும் உணவுப் பதார்த்தங்களை வைத்து பஃபே சிஸ்டம். கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தோம். யாராவது அருகில் வந்து விசாரித்துச் சென்றார்கள். மேடையேறிய ஒவ்வொருவரும் நிழற்படத்துக்கு பாவனை செய்வதாக இல்லாமல் மணமக்களிடம் பொறுமையாகப் பேசினார்கள். சிறிது நேரம் கழித்து அவசரமேயில்லாமல் மேடையில் ஏறினோம். பையன் பொண்ணுக்கு விலாவாரியாக அறிமுகப்படுத்தி வைத்தான். தனது அம்மா அப்பாவையும் மேடைக்கு அழைத்து எங்களை அறிமுகப்படுத்தினான்.
அதற்கு முன்பாகவே ‘ராகுலோட ஆபிஸில் இருந்து வந்திருக்கீங்களா?’ என்று கேட்டுத்தான் அவனுடைய அப்பா எங்களையெல்லாம் அமரச் சொல்லியிருந்தார். தனித்தனியாக ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தி பரஸ்பரம் பேசிக் கொள்ள முடிகிற அளவுக்குத்தான் ஜனத்திரள். அநேகமாக இருநூறு பேர்கள் இருக்கக் கூடும். வீட்டிற்கு கீழே இருந்த காலி இடத்திலும் சாமியானா போட்டு சிறு கூட்டம் அமர்ந்திருந்தது. காலையில் திருமணத்தை அவர்களது குல தெய்வக் கோவிலில் முடித்துவிட்டார்கள். மதியம் நெருங்கிய வட்டத்தை மட்டும் அழைத்திருந்தார்கள். அதோடு திருமண சம்பிரதாயங்கள் முடிந்துவிட்டன. மொத்தச் செலவு ஐம்பதாயிரத்துக்குள் இருக்கும். ராகுலின் ஒரு மாதச் சம்பளம். வெகு சந்தோஷமாக இருந்தார்கள். ‘ரொம்ப சிம்பிளாத்தான் கல்யாணத்தைச் செய்யணும்ன்னு ராகுல் சொல்லிட்டான்’ என்று அவனது அப்பா சொல்லிக் கொண்டேயிருந்தார்.
ராகுல் சற்று வித்தியாசமானவன். கையில் எப்பொழுதும் கர்ச்சீப் வைத்திருப்பான். டிஷ்யூ தாள்களைத் தொட மாட்டான். ‘டிஸ்யூ பேப்பரை வீணடிக்காதீர்கள். அது மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது’ என்று அச்செடுத்துக் கொண்டு வந்து கழிவறைகளில் ஒட்டியவன் அவன். இரண்டு பேராவது திருந்தியிருப்பார்கள். பழைய ஒரு பக்கத் தாள்களின் பின்புறமாக ‘தேவையில்லாமல் ஹார்ன் அடிக்க வேண்டாம். அந்த ஒலி ஒரு குழந்தையையோ அல்லது முதியவரையோ அவதிக்குள்ளாக்கக் கூடும்’ என்று கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் எழுதி வைத்திருப்பான். சிக்னல்களில் யாராவது ஹார்ன் அடித்தால் எழுதி வைத்திருக்கும் ஒரு துண்டுச் சீட்டை எடுத்து நீட்டிவிடுவான். அவர்கள் பின்பற்றுகிறார்களா? திட்டுகிறார்களா என்பது பற்றியெல்லாம் எந்தக் கவலையுமில்லை அவனுக்கு. ஒருவனாவது திருந்தக் கூடும் என்கிற நம்பிக்கை கொண்டவன்.
நாங்கள் ஏழு பேரும் திருமணத்தின் எளிமை பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் ஊர்ப்பக்கமெல்லாம் பல திருமணங்களில் ப்ளாஸ்டிக் டம்ளர்களை மட்டுமே ஐம்பதாயிரம் ரூபாய்க்கு வாங்குகிறார்கள். திமுதிமுவென்று கூட்டம். யாரை யாருக்குத் தெரிகிறது? வரவேற்பில் நிற்பவர்களுக்கு உள்ளே வருகிறவர்களைத் தெரியாது. வருகிறவர்களுக்கு வரவேற்பில் நிற்பவர்களைத் தெரியாது. வணக்கம் போட்டால் நேரடியாக பந்திதான். அதுவும் பஃபே சிஸ்டம்.
‘வக்காரோலுது..வர்றவன் அரண்டு போய்ரோணும்’ என்று வகை வகையாகத் தயார் செய்து வைத்திருப்பார்கள். சமையல்காரனுக்கு நான்கைந்து லட்ச ரூபாயைச் சம்பளமாக மட்டுமே கொடுப்பதெல்லாம் நடக்கிறது. நம்மவர்கள் தட்டைத் தூக்கிச் சென்று வரிசையாக எல்லாவற்றையும் வாங்கிக் கொள்வதும் ஒவ்வொன்றிலும் நாய் வாய் வைப்பது போல வைத்துவிட்டு அப்படியே கொண்டு போய் கூடையில் கொட்டுவது என கர்ண கொடூரம்.
திருமணம் என்பது ப்ரெஸ்டீஜான அம்சமாகிவிட்டது.
ஜாக்கெட் தைக்க மட்டுமே ஏழாயிரம் ரூபாய் செலவு செய்தார் என்று ஒரு பெண்ணைக் காட்டினார்கள். வாயைப் பிளந்துவிட்டேன். மணமேடையில் எப்பொழுதும் போல புடவையை மேலே போட்டு மறைத்துக் கொள்வாரா அல்லது ஏழாயிரம் ரூபாய் ஜாக்கெட் என்பதற்காக அவ்வப்போது திறந்து காட்டுவாரா என்று வாய் வரைக்கும் வார்த்தைகள் வந்துவிட்டன. பெண்ணின் அப்பன்காரன் கூடவே இருந்தார். தனியாக அழைத்துச் சென்று மொக்கினாலும் மொக்கிவிடக் கூடும் என்று அடக்கிக் கொண்டேன்.
‘ங்கொண்ணிமலையான்...புது கார்றா’ என்று வருகிறவர்களை ஆச்சரியப்படுத்துவதற்காக காரை வாங்கி மண்டபத்துக்கு முன்பாக நிறுத்துவது, லட்சக்கணக்கில் செலவு செய்து மணவறை அலங்காரம், வாத்தியகாரன், கேரளாவிலிருந்து செண்டை மேளம், யானை வைத்து வரவேற்பு என்று வசதியை மீறிச் செய்கிற திருமணங்கள் பெருகிப் போய்விட்டன. முதலிரவு அறைக்குள் செய்த செலவை கேமிரா வைத்து அதை எல்லோருக்கும் காட்டுவது மட்டும்தான் மிச்சமிருக்கிறது. வருங்காலத்தில் அதையும் செய்துவிடுவார்கள்.
இத்தகைய கூர்கெட்ட குப்பைக்கொசவத்தனத்தை வெளிப்படையாகச் சொல்லவும் முடிவதில்லை. ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்பாக ஒரு திருமணத்திற்குச் சென்று வந்து ‘அநியாய ஆடம்பரம்’ என்று எழுதினேன். யாரோ போட்டுக் கொடுத்துவிட்டார்கள். மாமனார் வீட்டுச் சொந்தம் அது. இன்றைக்கு வரைக்கும் பார்க்கிற இடங்களிலெல்லாம் முறைக்கிறார்கள். எழுத்தில்தான் காரத்தைச் சேர்க்க முடியும். நம்முடைய ஆஜானுபாகுவான உருவத்துக்கு நேரடியாக யாரை முறைக்க முடியும்? பூனைக்குட்டி மாதிரி அமர்ந்து கொள்ள வேண்டியதுதான்.
யார் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். ‘அடுத்தவன் நம்மை குறைவாக எடை போட்டுவிடக் கூடாது’ என்பதற்காகவே திருமணத்தை நடத்துகிறார்கள். மீறிச் சொன்னால் ‘ஒரு கல்யாணம்தானே பண்ணுறோம்’ என்று சால்ஜாப்பு சொல்கிறார்கள். ‘வேணும்ன்னா சொல்லுங்க..மூணாவது மாசமே டைவேர்ஸ் வாங்க வெச்சுடலாம்...ஒண்ணுக்கு ரெண்டா பண்ணிடலாம்’ என்றுதான் அவர்களிடம் சொல்ல வேண்டும் போலிருக்கிறது. தமிழ்நாடு என்றில்லை அக்கம்பக்கத்து மாநிலங்களிலும் கூட இப்படித்தான். திருமணம் என்பதன் பொருளாதார, சூழலியல் சீர்கேடுகளை விவரித்து முனைவர் பட்டமே கூட வாங்க முடியும். ஏழு பேரும் அவரவர் ஊர்க்கதைகளைப் பேசிக் கொண்டிருந்தோம்.
அரை மணி நேரத்திற்குள்ளாக கீழே சாமியானா பந்தலிருந்தவர்கள் எல்லோரும் மொட்டை மாடிக்கு வந்தார்கள். மணமகன் தரப்பில் வலுவான குரல் உள்ளவர் எழுந்தார். ஒவ்வொருவரையும் வரிசையாக அறிமுகப்படுத்தினார். ‘இவர் ராகுலுக்கு மாமா. சதானந்தம். ரெயில்வேயில் சூப்ரிடண்ட்...இது அவரோட மனைவி. ராணி. ஹவுஸ் வொய்ப். இவங்க ரெண்டு பேரும் அவங்க குழந்தைங்க. நிஷாந்த். சங்கீத்’ இப்படி வரிசையாக. முக்கால் மணி நேரத்தில் இரு தரப்புக்குமான அறிமுகப்படலம் முடிந்தது. இடையிடையே யாராவது நக்கலாக கமெண்ட் அடித்தார்கள். மொத்தமாகச் சிரித்தார்கள். பிறகு திரையிசைப் பாடலை ஒலிக்கச் செய்து எல்லோருமாக இணைந்து நடனமாடினார்கள். ஒரு பெண்மணி எல்லோருக்கும் பழச்சாறு கொண்டு வந்து கொடுத்தார்.
மகிழ்வாக இருந்தது. சொல்லிவிட்டுக் கிளம்பினோம். ராகுலின் அப்பா வெளியே வந்து வழியனுப்பினார். வாழ்க்கையில் ஒரு அர்த்தப்பூர்வமான திருமணத்தை நேற்றுதான் பார்த்ததாகத் தோன்றியது.
மகிழ்வாக இருந்தது. சொல்லிவிட்டுக் கிளம்பினோம். ராகுலின் அப்பா வெளியே வந்து வழியனுப்பினார். வாழ்க்கையில் ஒரு அர்த்தப்பூர்வமான திருமணத்தை நேற்றுதான் பார்த்ததாகத் தோன்றியது.