Jun 27, 2017

ஒரு நாளில் முடியாத காரியம்

சில ஆண்டுகளுக்கு முன்பாக சீனாவில் டாலியன் என்ற ஊருக்குச் சென்றிருந்த போது ஒரு பேராசிரியரிடம் பேசுகிற வாய்ப்புக் கிடைத்தது. தமது கல்வி நிறுவனத்துக்கும் அழைத்துச் சென்றார். அங்கே இருக்கும் கல்வி முறை குறித்துப் புரிந்து கொள்ள விரும்புவதாகச் சொல்லியிருந்தேன். அவருக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் அவர் விளக்கினார். எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் நான் சந்தேகங்களைக் கேட்டேன். எங்களது மொழிப்புலமையில் விக்டோரியா மகாராணி தோற்றார். 

சீனாக்காரன் கேடி. பாடங்களின் அடிப்படையைக் கற்பித்தலிலும், மொழியின் பிடிப்பையும் விட்டுக் கொடுப்பதேயில்லை. பாடங்களின் அடிப்படைக்கு நாம் எங்கே கவனம் செலுத்துகிறோம்? சதுரம், செவ்வகத்தின் பரப்பளவை (Area) கண்டறிய அதன் இருபக்கங்களைப் பெருக்குவோம். அதுவே வட்டத்தின் பரப்பைக் கண்டறிய πr2 என்ற சூத்திரம் ஏன் பயன்படுகிறது? π ஏன் உள்ளே நுழைகிறது? கோளத்தின்(Sphere) வளைபரப்புக்கு ஏன் 4πr2 என்ற சூத்திரத்தைப் பயன்படுத்துகிறார்கள்?

கூகிளில் தேடாமல் எத்தனை பேரால் பதில் சொல்ல முடியும்? சத்தியமாக என்னால் முடியாது. ஆனால் வெகு பந்தாவாக எம்.டெக்கில் 91% மதிப்பெண்கள் என்று சொல்லிக் கொள்வதுண்டு. 

கணிதம் மட்டுமில்லை- கிட்டத்தட்ட அத்தனை பாடங்களிலுமே கோட்டைவிட்டுவிடுகிறோம். அதுவும் உலகமயமாக்கல் வந்த பிறகு பன்னாட்டு நிறுவனங்களுக்கு கீழ்மட்ட வேலைகளைச் (lower end jobs) செய்து கொடுக்கும் சாமானியர்களைத்தான் நம் நாட்டுக் கல்வி முறை உருவாக்கிக் கொடுக்கிறது. வெளிப்படையாகச் சொன்னால் நம்மவர்களிடமிருந்து ஆங்கிலத்தை உருவி எடுத்துவிட்டால் நாம் ஒன்றுமே இல்லாத பொக்கட்டைளாகத்தான் இருப்போம்.

சமீபத்தில் வெளியான வளர்ந்த நாடுகளின் கற்பித்தல் முறை குறித்தான ஆய்வுக்கட்டுரையொன்றில் பிற எந்த நாட்டின் கற்பித்தல் முறையைவிடவும் சீனாவின் கற்பித்தல் முறைதான் சிறப்பானதாக இருக்கிறது என்று அறிவித்திருந்தார்கள். அவர்களின் கற்பித்தல் முறை இன்னமும் அதே பாரம்பரியமான ‘chalk the walk' என்பதாகத்தான் இருக்கிறது. ஆசிரியர் நடந்தபடியே தனது பாடத்தை கரும்பலகையில் எழுதி மாணவர்களுக்குப் புரிய வைப்பது. 

நம் ஊரிலும் அப்படியான கற்பித்தல் முறைதானே இருந்தது? இப்பொழுதுதான் வெகுவாக விலகிப் போயிருக்கிறோம். 


நேற்று பத்து கிராமப்புற ஆசிரியர்களுடன் கலந்துரையாடுகிற வாய்ப்பை ஆசிரியர் அரசு தாமஸ் ஏற்படுத்திக் கொடுத்தார். வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல வேண்டும். முதல் நாற்பது நிமிடங்கள் கற்பித்தலில் இருக்கக் கூடிய சவால்கள், சில குறிப்பிட்ட கற்பித்த உத்திகள் குறித்து தயாரிப்புகளைச் செய்திருந்தேன். பவர் பாய்ண்ட். 

தயாரிப்பிலிருந்து சில விஷயங்களைக் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால்- எல்லாவற்றையும் மனனம் செய்வதில் உள்ள சிக்கல். ஒரு கட்டத்திற்கு மேல் மூளை தன்னால் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் சுணங்கிப் போகிறது. வித்தை அடிப்படையிலான கற்பித்தல் (Trick based), கதை சொல்லல் அடிப்படையிலான கற்பித்தல் (Story based) பரிசோதனை அடிப்படையிலான கற்பித்தல் (Experiment based) என்ற மூன்று முறைகளில் மாணவர்களின் நினைவில் பாடத்தை நிறுத்த வேண்டும்.  கடைசியாகத்தான் மனனம் செய்தல். ஆனால் நம் ஊரில் அப்படியே ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டிருக்கிறோம். உருட்டி மனனம் செய்வதுதான் தொண்ணூற்றைந்து சதவீதம். அதன் பிறகுதான் மற்ற கற்பித்தல் முறைகள் எல்லாம்.

வெறுமனே மனனம் செய்ய வைப்பதில் இருக்கும் குறைகளை ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் Activity Based Learning (ABL) என்ற முறையைச் செயல்படுத்த அதிகாரிகள் மட்டத்திலிருந்து வரும் அழுத்தங்களையும், ஆசிரியர்கள் தமக்குப் பிடித்த முறையில் பாடம் நடத்த இயலாத சூழலையும் விரிவாகப் பேசினார்கள். அவர்கள் சொல்வதும் சரிதான். கல்வித்துறையிலிருந்து ஆசிரியர்களிடம் நிறையப் புள்ளிவிவரங்களைக் கேட்கிறார்கள். ஆவணங்களைத் தயாரிக்கச் சொல்கிறார்கள். ‘நாங்க சொல்லுறதைச் செஞ்சு வேலையைக் காப்பாத்திக்குங்க’ என்பதுதான் அதிகாரிகளின் மிரட்டலாக இருக்கிறது. பாடம் கற்பித்தலைவிடவும் தமது வேலையைக் காப்பாற்றிக் கொள்வதில்தான் ஆசிரியர்கள் குறியாக இருக்கிறார்கள்.

பட்டப்படிப்பு வரைக்கும் படித்து முடிக்கும் ஒருவர் சராசரியாக ஐம்பது ஆசிரியர்களிடமாவது பாடம் கற்றவராக இருப்பார். இப்பொழுது யோசித்துப் பார்த்தால் எத்தனை ஆசிரியர்கள் நம் நினைவில் வருகிறார்கள்? பத்து ஆசிரியர்கள்? அதிகபட்சமாக இருபது? அதற்கு மேல் இருக்காது. நினைவில் வரக் கூடிய ஆசிரியர்கள் இரண்டு வகையறாதான். மிகக் கொடூரமாக நம்மை தாளித்து எடுத்தவர்கள் ஒரு வகையறா, மிகச் சிறப்பாகப் பாடம் நடத்திய இரண்டாவது வகையறா, நாம் மறந்து போன ஆசிரியர்கள் அத்தனை பேருமே கடனே என்று தம் வேலையைச் செய்தவர்கள். 

‘நாங்கள் இரண்டாவது வகையறாவாகத்தான் இருக்க விரும்புகிறோம்..ஆனால் சாத்தியப்படுவதில்லை’ என்பதுதான் ஆசிரியர்களின் குற்றச்சாட்டாக இருந்தது. 

இரண்டாம் வகையறாவாக இருக்க வேண்டுமானால் ஆசிரியர்கள் அசலானவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆசிரியரும் தமக்கென்று சுயமான கற்பித்தல் முறைகளைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு நடத்தப்படுகிற SSA, CRC என்ற பயிலரங்குகளின் வழியாக எல்லோரும் ஒரே மாதிரி கற்பிப்பதைத்தான் வலியுறுத்துகிறார்கள். ஒரே கதை. அஜீத், விஜய், சூர்யா என்று நடிகர்களை மட்டும் மாற்றுவது மாதிரி. மாணவர்களுக்கும் சலித்துவிடும். ஆசிரியர்களுக்கும் சலித்துவிடும். ஆசிரியர்களை அசலானவர்களாகவும், தனித்தன்மை வாய்ந்தவர்களாகவும் மாற்றுவதற்கான பயிற்சிகளையும் சூழலையும்தான் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். சக ஆசிரியர்களைப் பிரதியெடுக்கிற வேலையை இத்தகைய பயிலரங்குகள் உண்டாக்குகின்றனவோ என்று சந்தேகமாக இருக்கிறது.

பிரதியெடுப்பதாக இருந்தால் ஆசிரியர்கள் எதற்கு? ரோபோக்களே செய்துவிடுமே!

ஆசிரியர்களுக்கான சவால்களைக் கண்டறிவதும், மாணவர்களின் அடிப்படையை (Foundation) வலுவூட்டவதற்கான செயல்களாக நாம் செய்ய வேண்டிய காரியங்கள் என்ன, அரசாங்கத்திடமிருந்து எவ்விதமான உதவிகள் தேவைப்படுகின்றன என்பனவற்றையெல்லாம் அறிவியல் மற்றும் அனுபவப்பூர்வமாகவும், ஒப்பீடு செய்தும் புரிந்து கொள்வதும்தான் நோக்கம். அதற்காகத்தான் நேற்றைய சந்திப்பு நிகழ்ந்தது. 

இதெல்லாம் ஒரு நாளில் முடிந்துவிடக் கூடிய காரியமா என்ன? கடல். ஒரு கைப்பள்ளத்து நீரை மட்டும் அள்ளியெடுத்திருக்கிறேன்.

3 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

நினைவில் வரக் கூடிய ஆசிரியர்கள் இரண்டு வகையறாதான். மிகக் கொடூரமாக நம்மை தாளித்து எடுத்தவர்கள் ஒரு வகையறா, மிகச் சிறப்பாகப் பாடம் நடத்திய இரண்டாவது வகையறா, நாம் மறந்து போன ஆசிரியர்கள் அத்தனை பேருமே கடனே என்று தம் வேலையைச் செய்தவர்கள்.

‘நாங்கள் முதல் வகையறாவாகத்தான் இருக்க விரும்புகிறோம்..?????

Malar said...

Excellent article about teaching methods...

//வித்தை அடிப்படையிலான கற்பித்தல் (Trick based), கதை சொல்லல் அடிப்படையிலான கற்பித்தல் (Story based) பரிசோதனை அடிப்படையிலான கற்பித்தல் (Experiment based) என்ற மூன்று முறைகளில் மாணவர்களின் நினைவில் பாடத்தை நிறுத்த வேண்டும். கடைசியாகத்தான் மனனம் செய்தல்.//

சேக்காளி said...

கல்லிலும்,ஓலைச்சுவடிகளிலும் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் மனனம் செய்தல் தானே கால விரயத்தை குறைத்த சிக்கனமான முறையாக இருந்திருக்கும்.ஆனால் நாம் அதையே எல்லாவற்றிற்கும் பயன்படுத்த ஆரம்பித்தது தான் தவறு.சூத்திரங்களுக்கும், வாய்ப்பாட்டுகளுக்கும்(பெயரே வாய்ப்பாடு) மனனத்தை தவிர வேறு எளிய வழி இருக்கிறதா என்ன?.