Jun 25, 2017

உனக்கு பேசத் தெரியாது

சிக்க வீர ராஜேந்திரன் நாவலில் நுணுக்கமான அம்சம் என்றால் உரையாடல்தான். பேசுகிற ஒவ்வொருவரிடமும் ஒரு நாசூக்குத் தன்மை இருக்கும். யாருமே அடுத்தவர்களிடம் நேரடியாக விஷயத்துக்குச் செல்லாமல் சுற்றி வளைத்து பிறகுதான் சொல்ல வந்த விஷயத்தைச் சொல்வார்கள். காலாகாலத்துக்கும் மனிதர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். 

பொருத்தமான உதாரணத்துக்கு எங்கள் உறவினர் ஒருவர் இருக்கிறார். வட்டிக்கு விட்டுச் சம்பாதிக்கிறவர். இப்படித்தான் பேசுவார். கேட்கக் குளுகுளுவென்றிருக்கும். ‘இந்த மனுஷன் எவ்வளவு நாசூக்கு?’ என்று யோசித்ததுண்டு. அவரது சாமர்த்தியத்தை எங்கள் அம்மா அவ்வப்போது புகழ்வார். ஆமோதித்துவிட்டு ‘அவனை மாதிரிதான் பேசணும்’என்பார். எல்லாவற்றையும் சொல்லிவிட்டு கடைசியில் ‘உனக்கெல்லாம் பேசவே தெரியாது’ என்று முடிப்பது அவரது வழக்கம். நேற்றும் அப்படித்தான் முடித்தார். பொதுவாக இத்தகைய விவாதங்களில் அமைதியாக இருந்து கொள்வதுதான் உசிதம். என்னதான் சொன்னாலும் கேட்கமாட்டார்கள்.  

முகத்துக்கு நேராக நாசூக்குத்தன்மையைக் காட்டுவது என்பது ஒரு வகையான டபாய்த்தல். நாமே நம்மை 'ஸ்மார்ட்’ என்று நினைத்துக் கொள்வது மாதிரிதான். அந்தக் கந்துவட்டிக்காரர் பேச்சுக் குளுகுளுன்னு இருக்கும் ஆனால் ஆள் கேடி என்று அம்மாவே சொல்லியிருக்கிறார். அப்படியொரு பெயரை வாங்கித் தருகிற பேச்சுத்தான் நமக்கு அவசியமா?

எனது பழைய அலுவலகத்தில் ஐம்பது பேர்கள்தான் பணியாளர்கள். இத்தகைய சிறு நிறுவனங்களில்தான் கீழ் மட்ட அரசியல் அதிகம். ‘இவனை அமுக்கினா நாம மேலே போய்டலாம்’ என்கிற சூத்திரம். முக்கால்வாசிப் பேர் முகத்துக்கு நேராக நைச்சியமாகப் பேசுவார்கள். யதார்த்தமாகவெல்லாம் நம்பிவிட முடியாது. ஒரு மேலாளர் அப்படித்தான். இந்தப் பக்கம் சிரித்துவிட்டுப் போய் அந்தப்பக்கமாக ‘அவனுக்கு ரேட்டிங்க்ல 2 கொடு போதும்’ என்று சொல்லிவிட்டார். ‘கொடுக்கிறதை கொடுங்க சாமி’ என்று சொல்லியிருந்தேன். பாவம் என்று நினைத்தவர்கள் மூன்றாகக் கொடுத்திருந்தார்கள். அதற்கு முந்தைய வருடம் அட்டகாசமாக ஐந்து கொடுத்திருந்தார்கள். எனக்கு இது குறித்து எந்தக் கவலையுமில்லை. 

அவர் ஏன் என் மீது எரிச்சல்பட வேண்டும் என்று யோசித்திருக்கிறேன். அலுவலகவாசிகள் மதிய உணவுக்குக் கூட்டமாகச் செல்வார்கள். நான் மட்டும் இருக்கையிலேயேதான் உண்பேன். டீ, காபி, இளநீர், சாலை உலாவல் என்று எதற்கும் கூட்டுச் சேர்ப்பதில்லை. ஆரம்பத்தில் கலந்து கொண்டது. பெரும்பாலும் குசலம்தான் பேசுகிறார்கள். இந்தக் கருமத்தில் தலையைச் சிக்க வைக்க வேண்டுமா என்று நினைத்துக் கொள்வேன். அதுதான் வினையாகப் போய்விடுகிறது. ஊரோடு ஒட்டி ஒழுகுதல் என்பது நழுவி வழுக்குவதைத்தான். இங்கே உள்ளுக்குள் இருக்கும் வன்மங்களையெல்லாம் மறைத்துக் கொண்டு சிரிப்பதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். 

உலகம் அப்படித்தான் நம்மையும் எதிர்பார்க்கிறது.

ஒருவன் என்னதான் சிரித்துப் பேசினாலும் நமக்கு உள்ளுக்குள் தெரியுமல்லவா? ‘நம்மகிட்டத்தான் சிரிக்கிறான்..ஆனால் சரியான திருடன்’ என்று கணிக்க எத்தனை நாட்கள் ஆகும்? முதல் முறை நம்பலாம். இரண்டாவது முறை கூட நம்பிவிடுவோம். மூன்றாவது முறை நமக்குத் தெரிந்துவிடாதா என்ன? ஒருவன் இருக்கும் வரைக்கும் சிரித்துவிட்டு அவன் நகர்ந்த பிறகு ‘சரியான நடிகன்’ என்று  சொல்வதைக் காட்டிலும் ‘அந்தாளு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு பேசிடுவான்..ஆனா நல்ல மனுஷன்’ என்பது எவ்வளவோ தேவலாம். 

பிறகு ஏன் நடிக்க வேண்டும்?

ஒரு வினாடி கண்களை மூடி யோசித்துப் பார்த்தால் நம் நினைவில் வந்து போகும் பெரும்பாலான முகங்களை இந்த இரு பிரிவுகளுக்குள் அடக்கிவிட முடியும். இரண்டில் எந்தப் பிரிவில் இருக்க வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். மனதில் நினைப்பதைக் அப்பட்டமாகப் பேசுவதால் பகைமை கூடிவிடும் என்பார்கள். அப்படியே கூடினாலும் பிரச்சினையில்லை. கூடிக் கூடிக் கழுத்தறுக்கும் துரோகிகளைவிடவும் எதிரிகள் எவ்வளவோ தேவலாம். சமாளித்துவிடலாம். இல்லையா?

ஆனால் எல்லாவற்றிலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்றே இருக்கவும் முடிவதில்லை. அது அவசியமுமில்லை. எங்கே வாயைக் கட்ட முடியுமோ அங்கே வாயைக் கட்டிக் கொள்ள வேண்டும். அம்மாவிடம் விவாதித்தால் ‘அது அப்படியில்ல....முகத்துக்கு நேரா தாட்சயண்மமில்லாம பேசறதுன்னு இல்ல...எதிர்ல இருக்கிறவனைக் குழப்பி விட்டுடுறது..இவன் என்ன பேச வர்றான்னே தெரியாம பேசறது..தேவையில்லாம எதிரியோட எண்ணிக்கையை அதிகமாக்கிக்காம விடறதுதான்’ என்கிறார். 

நாளைய தினம் பதினைந்து ஆசிரியர்களுக்கு ஒரு ‘வொர்க்‌ஷாப்’ நடத்துகிறோம். தயாரிப்புகளைச் செய்து கொண்டிருக்கிறேன்.சிசிஏ, சிஆர்சி என்று அவர்களுக்குத் தொடர்ச்சியாக பயிற்சியரங்குகளை அரசாங்கம் நடத்துகிறது. இத்தகைய அரங்குகளில் இல்லாதவைதான் நம்முடை நிகழ்வில் இருக்க வேண்டும் என சில மனோவியல் சார்ந்த கட்டுரைகளையும் உடல்மொழி, பேச்சு குறித்தான குறிப்புகளையும் தனியாக எடுத்து வைக்கும் போது இதுதான் முடிவாகத் தெரிகிறது-

சக மனிதர்களுடன் பழகுவதைப் பொறுத்தவரையிலும் ‘நமக்கு எல்லாம் தெரியும்’ என்பது சாத்தியமேயில்லை. நம்முடைய உடல்மொழி, பேச்சு என்பதில் காலாகாலத்துக்கும் நாம் கற்றுக் கொள்ளவும் மாற்றிக்கொள்ளவும் ஏதோ இருந்து கொண்டேயிருக்கிறது. ‘அவ்வளவுதான்’ என்பது எந்தக் காலத்திலும் இருக்காது. அப்படி முடிவு செய்கிற கணத்தில் நாம் தேங்கிப் போகிறோம் என்று அர்த்தம்.

1 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//அவர் ஏன் என் மீது எரிச்சல்பட வேண்டும் //