Jun 20, 2017

படித்தால் மட்டும் போதுமா?

பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு முடிவுகள் வரும் போது ‘படிப்பு ஒரு பொருட்டே இல்லை’ என்று நிறையப் பேர் சொல்வார்கள். படிப்பு ஒரு பொருட்டே இல்லை என்பது வாஸ்தவம்தான். வேறு தொழில் வழியாக முன்னேறிவிடலாம் என்றால் அது சரி. ஆனால் படிப்புதான் நமக்கான மூலதனம் எனில் தெளிவாகப் படித்துவிட வேண்டும்.

‘ஏன் நல்ல காலேஜ்லதான் படிக்கணும்ன்னு திரும்பத் திரும்பச் சொல்லுற? சுமாரான காலேஜ்ல படிக்கிறவன் சம்பாதிக்க மாட்டானா?’ என்று கேட்பவர்கள் உண்டு. சம்பாதிக்கலாம். திறமையானவனாக இருந்தால் தம் கட்டிவிடலாம். ஆனால் வெகு காலம் பிடிக்கும். ஆரம்பச் சம்பளம் இருபதாயிரம் ரூபாய் என்பதற்கும் அறுபதாயிரம் ரூபாய் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா? 

சில நாட்களுக்கு முன்பாக ஒருவர் அறிமுகமானார். வட இந்தியர். பெரும் நிறுவனமொன்றில் தென்னிந்திய அளவிலான திட்டமிடலைப் பார்த்துக் கொள்கிறார். நிறுவனத்தின் கிளை பெங்களூரில் இருக்கிறது. நிறுவனமே வீடு ஒதுக்கி கார் ஒன்றையும் வழங்கியிருக்கிறது. அந்த வீட்டுக்கான வாடகையை நிறுவனம் கொடுத்துவிடுகிறதாம். எப்படியிருந்தாலும் மாதம் எழுபதாயிரம் ரூபாயாவது கொடுக்க வேண்டியிருக்கும். அப்பேர்ப்பட்ட வீடு அது. அவர்கள் நிறுவனத்தில் CSR- Corporate Social Responsibility சம்பந்தமாக பேசுவதற்காகக் அழைத்திருந்தார். முதல் நாள் அலைபேசியில் பேசினோம். நேரமிருந்தால் ‘வீட்டுக்கு வாங்க’ என்றார். அலுவலகம் முடித்துச் செல்லும் போது வீட்டிற்குச் சென்றிருந்தேன். நாற்பது வயதில் ஒருவரை எதிர்பார்த்துச் சென்றேன். ஆனால் அவர் திருமணமாகாத பையன். அநேகமாக வயது முப்பதுக்குள்தான் இருக்கும். தனியாகத்தான் வசிக்கிறார்.

ஐஐடியில் பி.டெக் முடித்துவிட்டு ஐஐஎம்மில் எம்.பி.ஏ முடித்திருக்கிறார். அவருடைய சம்பாத்தியத்தையும் பொறுப்பையும் அடைய வேண்டுமானால் வெகு மூர்க்கமாக உழைத்தாலும் கூட இன்னமும் இருபது வருடங்கள் எனக்கு ஆகக் கூடும். அப்படியே உழைத்தாலும் அடைந்துவிடலாம் உறுதியாகவெல்லாம் சொல்ல முடியாது. எனக்கும் படிப்புதான் மூலதனம். அவருக்கும் அதுதான் மூலதனம். இருவருக்குமான வித்தியாசம் எங்கேயிருக்கிறது?

Foundation.

IIT JEE, AIIMS மாதிரியான தேர்வுகளுக்கு பயிற்சியளிக்கும் நிறுவனத்திற்குச் சென்று வந்தேன். அப்படியென்ன அவர்கள் சொல்லித் தருகிறார்கள் என்று தெரிந்து கொள்வதுதான் நோக்கமாக இருந்தது. ஆறாம் வகுப்பு மாணவர்களை அமர வைத்து அவனுக்கு கணிதம் மற்றும் அறிவியலுக்கான அடிப்படையைச் சொல்லித் தருகிறார்கள். எதையுமே மனனம் செய்யச் சொல்வதில்லை. ஒரு வட்டத்தின் பரப்பைக் கண்டறிய πr2 என்பது சூத்திரம் என்று தெரியும். எப்படி அந்தச் சூத்திரத்தை அடைந்தார்கள் என்று இன்று வரைக்கும் எனக்குத் தெரியாது. ஆனால் அதைத்தான் அந்தப் பயிற்சி நிறுவனத்தில் சொல்லித் தருகிறார்கள். 

மாணவர்களின் மண்டைக்குள் கொட்டுவதற்கும், அவர்களுக்கு புரிய வைப்பதற்குமான வேறுபாடுகள் நிறைய இருக்கின்றன. மகியிடம் ‘இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் இருக்கின்றன, அவற்றின் தலைநகரங்கள் என்ன’ என்றெல்லாம் கேட்பதுண்டு. சிலவற்றைச் சொல்வான். சிலவற்றை மறந்திருப்பான். அவன் மறந்த போது மீண்டும் நினைவூட்டுவேன். இதுதான் dumping. கொட்டி நிரப்புதல். அது அவசியமேயில்லை என்று புரிந்தது. ஒடிசாவின் தலைநகரம் புவனேஸ்வர் என்பதை அவன் இப்பொழுது தெரிந்து என்ன செய்யப் போகிறான்? 

‘GK போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டியதில்லையா?’ ‘Spell Bee போட்டிகளில் கொடி நட்ட வேண்டியதில்லையா?’ என்பார்கள். ஆணியே பிடுங்க வேண்டியதில்லை. இதெல்லாம் மெல்லத்தான் உறைக்கிறது. 

குழந்தைகளுக்குத் தெரிய வேண்டியதெல்லாம் அடிப்படைதான். கணிதம், அறிவியல், சமூகம் என எதுவாக இருப்பினும் அடியிலிருந்து மேலேறிச் செல்ல வேண்டும். செங்கல் அடுக்குவது போல. பக்கத்து வீட்டுக் குழந்தை அப்படியே ஒப்பிக்கிறது என்பதற்காக நம் குழந்தையின் மண்டையில் குப்பைகளை நிரப்பத் தேவையில்லை. எல்லாவற்றுக்கும் ஒரு கொள்ளளவு இருக்கிறது. எவ்வளவு விஷயங்களைத்தான் அது மண்டையில் நிறுத்திக் கொள்ளும்? ஒரு கட்டத்தில் நினைவில் நிறுத்துதல் என்பதே குழந்தைக்குச் சலித்துப் போகிறது. அதன் கவனமும் சிதறத் தொடங்குகிறது.

‘நீங்க வேணும்ன்னா ஒரு க்ளாஸ் கவனிங்க’ என்றார்கள். பின்பக்கமாக அமர்ந்து கொண்டேன்.

கெப்ளர் என்று வெண்பலகையில் எழுதி ஆரம்பித்தார் ஆசிரியர். கெப்ளர் பற்றித் தெரியுமல்லவா? ஜெர்மானியர். அவரைப் பற்றிய வகுப்பு அது. அவரது வாழ்க்கைப் பின்புலம், இரவு நேரங்களில் அவர் வானில் உள்ள நட்சத்திரங்களை எண்ணியது, அவர் கண்டறிந்த தொலைநோக்கி என்பது பற்றியெல்லாம் சொல்லிவிட்டு மேலே சுற்றிக் கொண்டிருக்கும் கெப்ளர் விண்வெளி ஆய்வுக்களத்தைப்(Spacecraft) பற்றிச் சொல்லத் தொடங்கினார். இந்தப் பிரபஞ்சத்தில் வேறு ஏதேனும் கோள்களில் உயிர்கள் வசிக்கின்றனவா என்பதைக் கண்டறிய நாஸா அமைப்பானது 2009 ஆம் ஆண்டில் அனுப்பிய விண்வெளி ஆய்வுக்களத்தின் பெயர் கெப்ளர். சமீபத்தில் அதன் முடிவை அறிவித்திருக்கிறார்கள். இப்படி ஒரு விஞ்ஞானியைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்து கணிதவியல், வானியல் என்று வளைத்து சமீபத்தில் நாஸாவின் அறிவிப்பில் வந்து நிற்கிறார். எதுவுமே மனனம் செய்ய வேண்டியதில்லை. கதைதான். இதைத்தான் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குச் சொல்லித் தருகிறார்கள். அவர்களின் மொழியில் இதுதான் foundation course.

எங்கே வித்தியாசம் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

ஐஐடியும் ஐஐஎம்மும்தான் கல்லூரிகள் என்பதற்காகவோ அங்கேதான் படிக்க வேண்டும் என்பதற்காகவோ இதைச் சொல்லவில்லை. கல்லூரி, படிப்பு என்பதெல்லாம் இரண்டாம்பட்சமாகவே இருக்கட்டும். குழந்தைகளுக்கான வெளியை நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதற்காக இதைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. நகர்ப்புற மாணவர்களுடன் போட்டித் தேர்வுகளில் ஏன் ஒரு கட்டத்தில் போட்டியிட முடியாமல் சலித்துப் போகிறோம் என்பதற்கும் இதுதான் அடிப்படை. திணிப்பதற்கும் புரிந்து கொள்ளுதலுக்குமிடையிலான வித்தியாசம். எங்கே பலவீனப்பட்டு நிற்கிறோமோ அங்கேயிருந்துதான் நாம் வேகமெடுக்க வேண்டும். நாம் புரிதலில்தான் பலவீனப்பட்டு நிற்கிறோம். 

(விரிவாக உரையாடலாம்)

7 எதிர் சப்தங்கள்:

ADMIN said...

கதையாக சொன்னால், எவ்வளவு பெரிய விஷயமும் எளிதில் விளங்கிவிடும். அருமை.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் பாடம் எடுக்க சிறிது மெனக் கெட வேண்டும். ஏழாம் வகுப்பில் தனி ஊசல் பாடம் உள்ளது. தனி ஊசல் எதற்கு உதவுகிறது என்று ஒரு மாணவனைக் கேட்டேன். அலைவு நேரம் காண என்றான் . ஆசிரியரிடம் கேட்டபோது அவரும் அதையேதான் சொன்னார். எதற்காக அலைவு நேரம்இ காண வேண்டும்? என்றேன். இதற்கான பதில் இல்லை. அந்தப் பாடத்தை எப்படி சொல்லிக் கொடுப்பீர்கள் என்று கேட்போது செய்து காட்டினார். மாணவர்களுக்கு அது புரிந்ததாகத்த் தெரியவில்லை.அதை எப்படிக் கற்பிக்கலாம் என்பதை உணர்த்த மாணவர்களுக்கு ஒரு புதிரைக் கூறினேன் . அதற்கான விடையை மாணவர்கள் பலவிதமாகக் கூறினார். அசிரியரும் சரியாக கூறவில்லை. பின்னர் அதற்கான விடையை கூறிவிட்டு அதனை சரிபார்க்க சோதனை செய்து காண்பிக்க மாணவர்கள் மகிழ்ச்சியை அறிய முடிந்தது. ஆசிரியருக்கோ ஆச்சர்யம். நான் உருவாக்கிய அந்தப் புதிரை என் வலைப் பக்கத்திலும் எழுதினேன்.சுவையான பின்னூட்டங்களும் கிடைத்தன.
யாருக்கு வெற்றி-ஊஞ்சல் புதிர்

Anonymous said...

Super Mani. You are greatly inspiring us.

Thanks!

Sasi.

anand said...

The way you were narrating/convey the message is your big strength. Keep rocking.

Regards,
Anand.T

சேக்காளி said...

//விரிவாக உரையாடலாம்//
தடை எங்கே இருக்கிறது என கண்ட பின்பு அதை நீக்கினால் பிரச்னை முடிந்து விடுமல்லவா. ஆனால் ஏன் நீக்கவில்லை?
இதுதான் பலனளிக்கிறது என தெரிந்த பின் இந்த யுக்திகளை ஏன் சாதாரண பள்ளிகளில் கற்றுக் கொடுக்கக் கூடாது?
காரணம் எளிதானது. எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்து விடக் கூடாது என்பது தானே.

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

அன்பின் மணி, பேராசிரியர் பிரஹலாத் சுனில் லால் வைத்யா பற்றி தெரியும் என நம்புகிறேன். கணிதப் பேராசிரியர் ஆக இருந்த அவர் ஐன்ஸ்டீன் பொது சார்பியல் கோட்பாட்டின் சிக்கல் ஆன சமன்பாடுகளை விடுவிப்பது தொடர்பான புதிய வழி முறைகளை "வைத்யா மெட்ரிக்" என்ற புகழ் பெற்ற கோட்பாடு மூலம் உருவாக்கினார்.
கணிதத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் அவர்1960களில் "சுகணிதம்" என்ற கணிதவியல் சஞ்சிகையை துவக்கினார். அது பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கணிதம் மீதான ஈர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த சஞ்சிகையை உங்கள் நூலகத் தொகுப்பில் சேர்த்தால் பயன் உள்ளதாக இருக்கும்.வாழ்க வளமுடன்.
தகவல்-தினமணி இளைஞர்மணி
பேராசிரியர். ப.கோபாலகிருட்டிணன்

Ganesamoorthy N said...

எப்பவுமே நமக்குத் தெரிந்த ஒரு விசயத்திலிருந்து ஆரம்பித்து அதனூடே பயணித்து தெரியாத ஒரு புது விசயத்தை அடைய வைப்பது தான் கல்வி புகட்டல் அடிப்படை என்று ஒருமுறை என்னோட இயற்பியல் டியூசன் மாஸ்டர் தண்டாயுதபாணி சொன்னது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்குது...