சனி ஞாயிறுகளில் சென்னையில் வேலையிருந்தது. இயக்குநர் சசியுடனான கதை விவாதம்தான் அந்த வேலை. அவ்வப்பொழுது கலந்து கொள்வதுண்டு. காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்தால் மாலை ஆறு அல்லது ஏழு மணி வரை நடைபெறும். அவருடைய உதவியாளர்களுடன் நானும் அமர்ந்திருப்பேன். விவாதத்தின் போது அவரிடமிருந்து கற்றுக் கொள்ள நிறையச் சிக்கும். போகிற போக்கில் சினிமாவின் சுவாரசியமான நுணுக்கங்களைப் பேசுவார். அலட்டிக் கொள்ளாத எளிமையான மனிதர்.
எனது உள்ளீடுகள் தேவைப்படும் சமயங்களில் ‘இந்த வாரம் வர முடியுமா?’ என்று அழைப்பார். வர முடியாமல் என்ன? கிளம்பிச் சென்றுவிடுவது வழக்கம். நுங்கம்பாக்கத்தில் உள்ள இயக்குநர் பாக்யராஜ் வீட்டில் விவாதம் நடைபெற்றது. அது நான்கு மாடிகளைக் கொண்ட அடுக்கககம். ஒரு தளத்தில் இயக்குநர் சசிக்கும், இயக்குநர் ராஜேஷூக்கும் அலுவலகங்கள். பாக்யராஜ் எங்கள் ஊர்க்காரர். பாக்யா அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். வெளியே வந்தால் ‘ஊர்ப்பக்கம் வர்றீங்களாண்ணா?’ என்று கேட்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஆள் வெளியில் தலைகாட்டவில்லை.
நேற்று மதிய உணவை முடித்துவிட்டு லேக் ஏரியாவைச் சுற்றிக் கொண்டிருந்தேன். அது யோசிப்பதற்கான தருணம். காலையில் பேசியதை கலந்து கட்டி இனி மதியம் என்ன பேச வேண்டும் என்று ஒரு திட்டமிடலைச் செய்து கொள்வது வழக்கம். பாக்யராஜ் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி ஒரு இலவச மருத்துவப் பரிசோதனைக்காக ஷாமியானா போட்டு அமர்ந்திருந்தார்கள். இசுலாமிய மருத்துவர். வெளியில் இரண்டு மூன்று செவிலியர்கள் இருந்தார்கள்.
இலவசம்தானே? ‘சர்க்கரையளவு பரிசோதனை செய்யணும்’ என்றேன்.
‘உடம்புக்கு என்ன பிரச்சினை?’ என்று கேட்டார்கள்.
‘பிரச்சினையெல்லாம் இல்லைங்க...சும்மா பார்த்துக்கலாம்ன்னு’ என்ற போது விண்ணப்பம் ஒன்றை நீட்டினார்கள். முகவரி விவரங்களை நிரப்ப வேண்டும். பெங்களூரு என்று எழுதினால் ‘உள்ளூர்க்காரங்களுக்கு மட்டும்தான்’ என்று சொல்லிவிடுவார்களோ என்று வேளச்சேரியில் குத்துமதிப்பாக ஒரு முகவரியை எழுதிக் கொடுத்தேன். எடை உயரத்தையெல்லாம் பார்த்துவிட்டு உள்ளே அனுப்பி வைத்தார்கள்.
மருத்துவரும் அதே கேள்வியைக் கேட்டார். அதே பதிலைத்தான் சொன்னேன்.
‘ஹரீஷ்...’ என்று யாரையோ அழைத்தார். யாரும் வரவில்லை. இன்னொரு முறையும் அழைத்தார். மூன்றாவது முறைக்குப் பிறகு இளைஞர் ஒருவர் வந்து மருத்துவருக்குப் பின்பாக நின்றார். முப்பதைத் தாண்டாத இளைஞன். மீசையில்லை. வெள்ளை கோட். கையில் ஒரு மொபைல் இருந்தது. மருத்துவரின் பின்புறமாக நின்றவர் என்னை முறைத்தார். ஏன் முறைக்கிறார் என்று தெரியவில்லை. முன்பு எங்கேயாவது சந்தித்திருக்கிறோமா என்று யோசனை ஓடியது. நானும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். முப்பது வினாடிகளுக்கு மேலாகவும் அசையாமல் விழிகளை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தார். தலையை குனிந்து இரு வினாடிகளுக்குப் பிறகு மீண்டும் அண்ணாந்து பார்த்தேன். அவரது பார்வை அப்படியே தொடர்ந்தது. தமக்குப் பின்பாக அவர் நின்று கொண்டிருப்பதை மருத்துவர் உணரவில்லை. ஹரீஷ் என்று திரும்பவும் அழைத்தார். அப்பொழுதும் அவர் அசையாதது எனக்கு பயமூட்டியது. இருக்கையிலிருந்து எழுந்து நின்று மருத்துவரைப் பார்த்தேன். எனது முகம் மாறியதை அவர் கவனித்திருக்கக் கூடும். திரும்பிப் பார்த்தார். ஹரீஷ் என்னையே முறைத்துக் கொண்டிருந்தார். எனது பயம் அதிகமானது. அவர் என்னைத் தாக்கக் கூடும் என்று பயந்தேன். அவர் அடிக்க முயற்சித்தால் அங்கே எப்படித் தப்பிப்பது என்று மனம் கணக்குப் போட்டது.
மருத்துவருக்கும் சந்தேகம். தமது இருக்கையில் இருந்து எழுந்து ‘ஹரீஷ்’ என்றார். அப்பொழுதும் ஹரீஷ் முறைத்த போது நிச்சயமாக ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்று தெரிந்துவிட்டது. மருத்துவரின் பின்பாக ஒதுங்கிக் கொண்டேன். மருத்துவர் அவரது பெயரைச் சொல்லியபடியே அருகில் சென்று அவரது நெஞ்சு மீது கை வைத்து அசைத்தார். பார்வை நிலைகுத்தியபடியே அந்த இளைஞர் பின்பக்கமாகச் சாய்ந்தார். வெறும் தரை. பின்னந்தலை நிலத்தில் படீர் என்று அடித்தது. அதிர்ந்து போனேன். விழுந்தவரின் கை கால்கள் இழுத்துக் கொண்டன.
தொப்பலாக நனைகிற அளவுக்கு வியர்த்துப் போனேன். சம்பந்தமே இல்லாத ஒருவன் என்னைப் பார்த்து ஏன் சாய வேண்டும் என்கிற பதற்றம் அது. என்ன செய்வது என்றும் தெரியவில்லை. அங்கேயிருந்த செவிலியர்களை அழைத்தேன். அவர்கள் ஓடி வந்து பார்த்த போது கண்கள் மேலே சொருகி சுயநினைவு இழந்து கிடந்தான். ‘Seizure attack மாதிரி தெரியுது’ என்று சொல்லியபடியே மருத்துவர் ஓடினார். மூச்சு விட உதவும் ஓர் உபகரணத்தைத் தூக்கி வந்து முகத்தில் பொருத்தினார். அப்பொழுதும் அசைவில்லை. அதற்குள்ளாக செவிலியரில் ஒருவர் என்னை வெளியில் அமரச் சொன்னார். எனக்கு அங்கேயிருக்கிற திராணியில்லை.
வெளியில் வந்த போது பயத்தில் குமட்டிக் கொண்டு வந்தது. அது அவனுடைய கடைசித் தருணமாக இருந்துவிடக் கூடாது என்றுதான் மனம் பதறியது. ஒருவன் சாகும் போது என்னை ஏன் முறைக்க வேண்டும்? அங்கேயே ஒரு மரத்தைப் பிடித்து நின்றிருந்தேன். மதிய உணவு முழுவதும் வாந்தியாக வெளியேறியது. சில கணங்களுக்குப் பிறகு கிளம்பிச் சென்று முகத்தைக் கழுவிக் கொண்டு விவாத அறைக்குச் சென்றேன். இயக்குநரிடம் விவரித்துவிட்டு பேயறைந்ததைப் போல அமர்ந்திருந்தேன். அதன் பிறகு எனக்கு கதை பற்றி யோசிக்கிற மனமே இல்லை. ஹரீஷ்தான் நினைவுகளில் சுழன்றாடினான். அவன் ஏன் அப்படி முறைத்தான் என்று திரும்பத் திரும்ப யோசித்துக் கொண்டேயிருந்தேன்.
கதை விவாதம் முடிந்த பிறகு அங்கே சென்று விசாரிக்க வேண்டும் என நினைத்தேன். ஒருவேளை எதிர்மறையாக எதுவும் சொல்லிவிட்டால் மனதைப் பிசைந்து கொண்டேயிருக்கும். அங்கே செல்கிற தைரியமில்லை. கிளம்பி வந்துவிட்டேன். பேருந்தில் உறக்கமேயில்லை. மனம் பிசைந்து கொண்டேயிருந்தது.
வாழ்வின் எந்தக் கணம் நம்முடைய வாழ்நாள் முழுமைக்குமான அனுபவத்தையும் பயத்தையும் கொடுக்கும் என்று தெரிவதேயில்லை. மிக இயல்பாகக் கடந்திருக்க வேண்டிய தினம் அது. இனி அந்த முகமும் கணமும் அப்படியே நினைவுகளில் உறைந்து கிடக்கும். ஞாபகப் புதையலிலிருந்து எப்பொழுது வெளியே வந்து பயமூட்டும் என்று தெரியாது. மீசை மழிக்கப்பட்ட அந்த மென்மையான முகம் அவ்வளவு குரூரத்தை தமக்குள் புதைத்து வைத்திருக்க வேண்டியதில்லை. நடுங்க வைத்துவிட்டான். மனித உயிரைப் போன்று பற்றுக் கோல் இல்லாதது எதுவுமேயில்லை. இல்லையா? நொறுங்கிய கண்ணாடிகளை அடுக்கி வைத்திருப்பது போலத்தான் அது- எந்தக் கணமும் சுக்கு நூறாகிவிடக் கூடும். அந்த நிரந்தரமின்மையோடுதான் ஒவ்வொரு காரியங்களையும் செய்து கொண்டிருக்கிறோம். ஏதோ பல்லாயிரம் ஆண்டு வாழ்ந்து கழிப்பது போல...
4 எதிர் சப்தங்கள்:
அந்த கணத்தை இனி உங்களால் மறக்கவே முடியாது.எனக்கு கூட எங்கேயாவது "ஹரிஸ்" என்ற பெயரைக் கேட்டால் இனி இந்த சம்பவம் தான் வந்து மறையும்.
நீங்கள் கண்டிப்பாக என்ன என்று பின்பாவது விசாரித்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் உங்கள் மன அமைதிக்காவது...
"seizure attack"-இல் இயல்பான விஷயம்தான் நீங்கள் குறிப்பிட்டது. உயிரெல்லாம் போயிருக்க வாய்ப்பில்லை.மருத்துவரின் குரலின் மிரட்டும் தொனியோ அல்லது களைப்பு/துக்கக்குறைவோ காரணமாக இருந்திருக்கும். அடுத்த சில நிமிடங்களில் நினைவு திரும்பி நீங்கள் எங்கே போனீர்கள் என்று விசாரித்திருப்பார்.பெண்களிடம் ஜொள்ளு விட்டு எச்சில் வடிய, "பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க" என "குணா"-கமல் போல இருக்கின்ற சம்பவங்களும் நடப்பது உண்டு.
ஹரிஷ் பாவம். அநேகமாக அடுத்த நாள் "பிள்ளை எதையோ பார்த்து பயந்துடிச்சு" என அவர் அம்மா வேப்பிலையால் அடித்துக் கொண்டிருந்திருப்பார்.
Yes. It's seizure attack. I was have this issue and now having tablet for 4 years as per the advise from physician. The tablet name is 'MAZETOL'.
Now I don't get this attack. Patient goes unconscious for 10 or 20 minutes based on the severity. But nothing harm to the live.
But Harish should take tablet and he should not have stressed. Otherwise he may loose memory.
I take Scan and ECG every year and monitoring it, and I used to take the life more cool without any stress. That's very important to escape from seizure attack. The patient should not be sleepless. At least sleep for 7 or 8 hours.
I used to enjoy music or books to come out of stress. Reading you blog also gives mind pleasure.
Post a Comment