Jun 18, 2017

தப்பித்தல்

ஒருவன் குழியில் விழப் போகிறான் என்று தெரிகிறது. கை நீட்டுகிறோம். ஆனால் குழியைத் தோண்டி வைத்துக் கொண்டு உள்ளே இருப்பவன் அவனை படுவேகமாக இழுக்கிறான். ‘சரி இனி நம்மால் ஆகக் கூடியது எதுவுமில்லை’ என்று நினைக்கும் போது பலவான் ஒருவன் வந்து விழுந்து கொண்டிருப்பவனை இழுத்து மேலே வீசினால் எப்படியிருக்கும்? அப்படியிருக்கிறது.

அய்யாவு என்கிற மாணவன் பற்றி எழுதியிருந்தேன். கிராமப்புறப் பள்ளியில் படித்த மாணவன். இந்த வருடம் ப்ளஸ் டூவில் 1130 மதிப்பெண்கள். பொறியியல் கட்-ஆஃப் மதிப்பெண்கள் 190. அரசுக் கல்லூரிகளில் இவன் விரும்புகிற பாடப்பிரிவு கிடைப்பது கடினம்தான். அப்பா மரம் ஏறும் தொழிலாளி. ‘பேங்க் லோன் வாங்கிப் படிச்சுக்கலாம்’ என்று சொல்லி வைத்திருந்தேன். ஆனால் ஒரு அறக்கட்டளையினர் வந்து மொழுக்கியிருந்தார்கள். ‘தம்பி பைசா செலவு இல்ல..நாங்க படிக்க வைக்கிறோம்’ என்று நெக்குருகியிருக்கிறார்கள். அந்த அமைப்பினருக்கு கோவையில் கே.பி.ஆர் என்றொரு கல்லூரியில் தொடர்பு. கட்-ஆஃப் 125 இருந்தால் கூட கவுன்சிலிங் வழியாக அந்தக் கல்லூரியில் சேர்ந்துவிடலாம். ஆனால் காசுதானே பேசும்? இவர்களும் சரி என்று சொல்லுகிற வறுமைச் சூழல்.

அய்யாவுக்கு கிடைத்த தலைமையாசிரியைப் போல எல்லோருக்கும் கிடைக்கமாட்டார்கள். முட்டி மோதிக் கொண்டிருந்தவர் கடந்த வாரம் அழைத்திருந்தார். ‘விஐடியில் கிராமப்புற மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு இருக்கும் போலிருக்கு’ என்றார். அப்படியொரு விஷயம் இருப்பது எனக்குத் தெரியாது. மாவட்ட ஆட்சியர் வழியாக விண்ணப்பித்தால் தனியாகக் கலந்தாய்வு நடத்துகிறார்கள். தமிழகம் முழுவதையும் ஐந்து பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்களை கிராமப்புற மாணவர்களுக்கு வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் ஒதுக்குகிறது. ஒதுக்குவதோடு மட்டுமில்லை- நான்கு வருடங்களுக்கும் பைசா செலவில்லை.

அய்யாவுவை கலந்தாய்வுக்கு அழைத்திருந்தார்கள். யாராவது உடன் சென்றால் சரியாக இருக்கும். ஈரோட்டிலிருந்து கிளம்பி திரு.கமல் சென்றிருந்தார். அவர் அய்யாவுவைப் பார்த்தது கூட இல்லை. தனியார் நிறுவனமொன்றில் மனிதவளத் துறையில் இருக்கிறார். அய்யாவுவின் விவரங்களைச் சொல்லி ‘சார் கொஞ்சம் பார்த்துக்க முடியுமா?’ என்று கேட்டதோடு சரி. பிழைப்பைக் கெடுத்துக் கொண்டு சென்று ஒரு நாள் உடனிருந்து பி.டெக் ஐடியில் சேர்த்துவிட்டார். கமலுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். முகம் தெரியாத பையனுக்காக யார் மெனக்கெட்டுத் திரிவார்கள்?

இந்தியாவில் மிகச் சிறந்த தனியார் பொறியியல் கல்வி நிறுவனங்களின் பட்டியலை எடுத்தால் விஐடி இருக்கும். அங்கே செலவில்லாமல் படித்து வரப் போகிறான். சற்று கண்காணித்தால் போதும். கலக்கிவிடுவான்.

மகிழ்ச்சியாக இருக்கிறது. அய்யாவு தப்பிவிட்டான்.

அவனுக்கு வலை விரித்துக் காத்திருந்த அந்த என்.ஜி.ஓவுக்கு விரிவான மின்னஞ்சல் ஒன்றை அனுப்ப வேண்டும் என நினைக்கிறேன் . ‘ஏன் இப்படியான கீழ்த்தரமான வேலையைச் செய்கிறீர்கள்?’ என்று கேட்க வேண்டும். தெரிந்து செய்கிறார்களா அல்லது தெரியாத்தனமாகச் செய்கிறார்களா என்று புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் பதில் அனுப்பினாலும் சரி அனுப்பாவிட்டாலும் சரி-  முழு விவரங்களையும் பதிவு செய்கிறேன்.

அய்யாவு தப்பிவிட்டான் என்பதைவிடவும் தமிழகம் முழுவதும் ஏகப்பட்ட மாணவர்கள் சிக்கியிருப்பார்கள். ஏன் இப்படியானவர்களைத் தேடி வலை விரிக்கிறார்கள் என்று யோசித்தால் அடிநாதமாக கல்வியின் அரசியல் இருக்கிறது. இத்தகைய தனியார் கல்லூரிகளில் நன்றாகப் படிக்கும் மாணவர்களை இழுத்துக் கொண்டு போய்விட சில புரோக்கர் அமைப்புகள் இருக்கின்றன. அவர்கள் மாணவர்களைத் தேடிப் பிடித்து ‘நீங்களா போனீங்கன்னா லட்சக்கணக்குல செலவாகும்..நாங்க சேர்த்துவிடுறோம்..செலவே இல்லை’ என்கிறார்கள். இந்த மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் அண்ணா பல்கலைக்கழகத்தின் ரேங்க்ப்பட்டியலில் தமது கல்லூரி இடம் பெறும். இத்தகைய அரசியலுக்கு கிராமப்புற மாணவர்கள் பலி கொடுக்கப்படுகிறார்கள்.

நிரம்பாத இடங்கள், சாக்குப்பைகளைத் தூக்கிக் கொண்டு பிள்ளை பிடிக்கும் கல்லூரிகள், அவர்களுக்காக வேலைகளைச் செய்து தரும் என்.ஜி.ஓக்கள் என்று சகல திசைகளிலும் சிக்கிச் சின்னாபின்னமாகிறார்கள் மாணவர்கள். மோசமாகப் படித்த மாணவர்களுக்குப் பிரச்சினையில்லை. நன்றாகப் படிக்கும் மாணவர்களின் பட்டியலைக் கேட்டு கிராமப்புற பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். முகவரிகளை வாங்கிக் கொண்டு நேரடியாகச் சென்று அந்த மாணவனையும் குடும்பத்தையும் அமுக்குகிறார்கள். தப்பிக்கும் மாணவர்கள் வெகு சொற்பம்.

கல்வித்துறையில் எவ்வளவோ நல்ல காரியங்களைச் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்- இதைச் செய்தால் நன்றாக இருக்கும். பனிரெண்டாம் வகுப்பிலேயே கல்லூரிகள், பாடப்பிரிவுகள், சேர்க்கை முறை, கட்டணம் உள்ளிட்டவை குறித்தான விரிவான புரிதலை மாணவர்களுக்கு உருவாக்கிவிட வேண்டும். அப்பொழுதுதான் இத்தகைய மாணவர்கள் எதிர்காலத்தில் தப்பிப்பார்கள்.

6 எதிர் சப்தங்கள்:

Jaypon , Canada said...

Happy for Ayyyavu.

balutanjore said...

Engal geevee kalakkarar

அன்பே சிவம் said...

வா.ம வும் VIT யும் வாழ்க வாழ்க.
இப்பணிக்கு அர்ப்பனித்த அனைவருக்கும் நன்றி.

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

அன்பின் மணி, நம் தமிழ் நாட்டில் நவோதயா பள்ளிகளின் நன்மைகள் மற்றும் அதி அவசியம் தொடர்பாக ஒரு விளிப்புணர்வு வீச்சை ஏற்படுத்தங்களே.தமிழக குழந்தைகளுக்குப் பேருதவி ஆக இருக்கும். வாழ்க வளமுடன்.

Alad said...

தப்பித்தல்

For +2 students Engg colleges are causing big problems. For some cases, a socially challaged student may get a professional degree for free. The college are not doing it for free, a BC students has nearly 20000 Rs scholarship minimum, some students may get upto 40000 Rs. SC/ST scholarships are around 60000. So colleges are providing free education. They are looting the scholarship amount from students. Only thing college offers free is hostel facilities.

But I have seen some students are getting placed because of their performance in Anna university central placements drive. It has both positives and negatives.

After college, now a days so called placement and training companies are targeting students by honeytrap like assured placement, high salary, practical classes. Here also the same kind of business. 3 months course 20000 to 40000 rupees but the end is miserable.I ask you to spread some awareness about fake trainng and placement companies.

Anonymous said...

அய்யாவுக்கு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. கட் ஆப் 190க்கும் மேல் எடுத்து, அரசு கல்லூரியில் சிறிய வித்தியாசதத்தில் இடம் கிடைக்காத மிக ஏழை மாணவர்கள் எல்லாருக்குமே, அய்யாவுக்கு கிடைத்ததைப் போன்ற வாய்ப்புகள் கிடைத்து விடுமா....? அப்படி கிடைக்கா விடில், இலவசமாக கே.பி.ஆறில் படிப்பதில் என்ன தவறு ? அந்த தன்னார்வர்லர்கள் வி.ஐ.டி போன்ற மற்ற வாய்ப்புகளை அறிந்திருக்காமல் இருக்கலாம் அல்லவா? அவர்களை ஏன் சாட வேண்டும் ? கல்லூரிகளின் இடையே உள்ள இந்த போட்டியால் பல நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் பைசா செலவில்லாமல் என்ஜினியரிங் முடித்துக் கொண்டுள்ளனர். இது நல்ல விஷயம் தானே. இதில் இருக்கும் ஒரே கவலை அவர்கள் ஓரளவு நல்ல தனியார் கல்லூரியில் சேர வேண்டும். கே பி ஆர் கல்லூரி பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட பெரும்பான்மை மோசடி கல்லூரி .போல் அல்ல. கிட்டத்தட்ட ஆயிரம் கோடிக்கும் மேல் பல வணிகங்களை கொண்ட இந்த நிர்வாகம் சுமார் 15 கோடி அளவில் வருட வருமானம் உள்ள இந்த கல்லூரியை ஓரளவு நேர்மையாகவே நடத்த முயல்கிறது. இந்த வட்டாரத்தில், ஸ்ரீ ஷக்தி கல்லூரி, ஸ்ரீ ஈஸ்வர் கல்லூரி , கே பி ஆர் ஆகிய மூன்று மட்டுமே ஆசிரியர்களுக்கு சரியான சம்பளம், மாணவர்களுக்கு நேர்மையான கற்பித்தல் முறைகள், வேலை வாய்ப்புகள் என்பனவற்றிற்காக போராடிக் கொண்டுள்ளன.தமிழகத்தில் மேலும் ஒரு சில கல்லூரில் இதுபோல் இருப்பதாக கேள்விப்படுகிறேன். தனியார் கல்லூரி என்பதாலே அது ஒரு சுயநலத்தில் மாணவர்களை அழிக்கும் அமைப்பாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே மணி ..!