பள்ளிகளில் தொடுதிரை வகுப்பு (Touch based smart class) அமைத்துக் கொடுத்தது பற்றி இன்று மட்டும் இரண்டு மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. ஒன்று நாம் அமைத்துக் கொடுத்த தொடுதிரை வகுப்பறையை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு உள்ளூரில் ஐநூறு ஆயிரமுமாக வசூல் செய்து அரசுப் பள்ளியொன்றில் அமைத்திருக்கிறார்கள். இத்தகைய உத்வேகத்தைப் தொடர்ந்து உண்டாக்கிக் கொண்டேயிருப்போம்.
இன்னொரு கடிதம் இலக்குமி ஆலை நடுநிலைப்பள்ளியின் சேர்க்கை குறித்தானது. கடந்த ஆண்டு 281 மாணவர்கள் எண்ணிக்கை இவ்வாண்டில் 314 ஆகியிருப்பதாகவும் இதற்கு தொடுதிரை முக்கியமான காரணம் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
மகிழ்ச்சி.
அரசு/அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளைப் பொறுத்தவரைக்கும் அவர்களின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று மாணவர் சேர்க்கை. வருடந்தோறும் குறைந்து கொண்டே வருவதாகச் சொல்கிறவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். அதிகரித்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.
தொடுதிரை வகுப்பின் மூலமாக நாம் எதிர்பார்க்கும் பலன்கள் இதைத் தாண்டியும் இன்னமும் நிறைய இருக்கின்றன. மாணவர்களின் திறன் மேம்பாடு குறித்து வருட இறுதியில் நேரடியாகக் கள ஆய்வு செய்துவிட்டு எழுதுகிறேன். இப்போதைக்கு பள்ளியின் இம்மகிழ்வைப் பகிர்ந்து கொள்ளலாம். எப்பொழுதும் சொல்வது போல நான் காரணியாக மட்டுமே செயல்படுகிறேன். எனது செயல்பாடுகளைத் தாங்கிப் பிடிப்பவர்கள் பல்லாயிரம் பேர். பெருமை அனைத்தும் உறுதுணையாக இருப்பவர்களுக்குத்தான். அத்தனை பேருக்கும் இந்நன்றி மடல் உரித்தாகுக.
***
அனைவருக்கும் வணக்கம்.
நமது பல்லடம் இலக்குமி ஆலை (அரசு நிதியுதவி) நடுநிலைப்பள்ளியில் தொடுதிரை வகுப்பு ஆரம்பித்து சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
ஒரு விசயம் உங்களுக்கு தெரியபடுத்த விரும்புகிறேன்.
கடந்த ஆண்டு பள்ளியின் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 281 மட்டுமே, இந்த ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை இதுவரை 314. இன்னமும் சேர்கை தொடர்ந்து கொண்டுள்ளது என்பது மிகவும் பெருமையாக உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் தொடுதிரை தான் என்பதில் ஐயமில்லை.
நண்பர்களே,
இந்த வாய்ப்பை நண்பர் பசுமை கோபி கார்த்திகேயன் மற்றும் அய்யா அரசு தாமசு மூலமாக வழங்கிய பெருமைக்குரிய வா.மணிகண்டன் அவர்களுக்கும், நிசப்தம் அறக்கட்டளைக்கும் அதற்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து வாசகர்களுக்கும் நமது பள்ளியின் ஆசிரியர்கள் சார்பாகவும் நமது நண்பர்கள் குழு சார்பாகவும் நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.
அன்புடன்,
ரமேஷ்
3 எதிர் சப்தங்கள்:
super sir. எனக்கு தொடுதிரை வகுப்பிந் அடிப்படைகள் புரியவில்லை. னாளை உங்களுக்கு கால் பன்னி விவாதிக்கிரேன்
அசத்தல்..
குன்றத்தூர் பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியிலிருந்து ஏதேனும் தகவலுண்டா கடந்த ஆண்டு நூலகம் அமைத்துக்கொடுத்த பின்னர்.
மணி,
மிக்க மகிழ்ச்சி.
பல்லடம் லட்சுமி மில்ஸ் அரசுப்பள்ளி, என் மனைவி மல்லிகா படித்த பள்ளி. புகைப்படத்தில் இருக்கும் தலைமையாசிரியர் சுப்ரமணியன், மல்லிகா எட்டாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தவர். லட்சுமி மில்ஸ் மல்லிகாவின் சொந்த ஊர். மல்லிகாவும், மகள் இயலும் அங்குதான் வசிக்கிறார்கள்.
அடுத்த முறை செல்லும்போது பள்ளிக்குச் சென்று வந்து உன்களுக்கும் எழுதுகிறேன்.
-வெங்கி (கென்யா)
Post a Comment