‘ஐடி எப்படி இருக்கு?’ 'நிறையப் பேரை வீட்டுக்கு அனுப்பறாங்களாமே’ ‘இனி ஐடி அவ்வளவுதானா?’ மாதிரியான கேள்விகள் சுற்றிக் கொண்டேயிருக்கின்றன. அடி இல்லாமல் இல்லை. ஆட்டோமேஷன், ஆர்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் முதலானவை உள்ளே புகுந்து ஆட்களின் தேவைகளை வெகுவாகக் குறைத்துக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக டெஸ்டிங் மட்டுமே இதுவரைக்கும் பல லட்சம் மென்பொருள் பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பை அளித்துக் கொண்டிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பாக ஹைதராபாத், சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் திரும்பிய பக்கமெல்லாம் ‘இங்கு நல்ல முறையில் டெஸ்டிங் கற்பிக்கப்படும்’ என்று பலகையை மாட்டி வைத்திருந்தார்கள். ஒன்றிரண்டு மாதங்களில் படித்து முடித்துவிட்டு ஆட்கள் கழுத்துப் பட்டையை மாட்டத் தொடங்கினார்கள்.
உலகளாவிய பொருளாதார அழுத்தங்கள் அனைத்துத் துறைகளிலும் கை வைக்க ஆரம்பிக்க ‘ஆட்களைக் குறைச்சு வருமானத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம்’ ஒவ்வொரு நிறுவனத்தின் பெருந்தலைகளுக்கும் உண்டானது. எங்கேயெல்லாம் கை வைக்க முடியும் என்று மண்டையைச் சொரிய ஆரம்பித்தார்கள். இத்தகைய நிறுவனங்களுக்கு ஐடி சார்ந்த வேலைகளைச் செய்து கொடுக்கும் இந்திய நிறுவனங்கள் ‘உங்களுக்கான Billing தொகையைக் குறைக்கிறோம்’ என்று வெண்ணெய் தடவ ஆரம்பித்தார்கள். அது எப்படிக் குறைக்க முடியும்? மேற்சொன்ன டெஸ்டிங் துறையையே உதாரணமாகச் சொல்லலாம். ‘ஆட்டோமேஷன் டெஸ்டிங்’ கம்பு சுழற்றத் தொடங்கியது. சுருக்கமாகச் சொன்னால் கணினியே டெஸ்டிங்கைச் செய்துவிடும். குறைவான ஆட்களைக் கொண்டு ‘ஆடோமேஷன் டெஸ்டிங்’ஐ தீவிரமாகச் செயல்படுத்த ஆரம்பித்தார்கள். முன்பு ‘டெஸ்டிங்க்கு மட்டும் 0.5 மில்லியன் டாலர் ஆகும்’ என்று கணக்குச் சொல்லியிருந்தால் இப்பொழுது 0.1 மில்லியன் டாலர் என்று காட்டினால் போதும். விப்ரோதான் இதைத் தொடங்கி வைத்தது என நினைக்கிறேன். பிறகு இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் மாதிரியான நிறுவனங்களும் குட்டைக்குள் குதித்தார்கள். அப்படியானால் அப்பணிகளைச் செய்து கொண்ட ஊழியர்கள்? வெட்டுதான்.
2016 ஆம் ஆண்டு மட்டும் 8000-9000 ஆட்களை இன்ஃபோஸிஸ் விடுவித்தது. விடுவித்தது என்றால் வேறு துறைகளில் பணிக்கு மாற்றியதாக அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அதை நாம் நம்ப வேண்டியதில்லை. வெளியில் அனுப்பியிருப்பார்கள். விப்ரோவும் ஆயிரக்கணக்கானவர்களை விடுவித்தது. வருங்காலத்தில் இத்தகைய ஆட்டோமேஷன் மெல்ல மெல்ல வேறு பணிகளையும் செய்யத் தொடங்கும். முன்பு இணையதள வடிவமைப்பு என்றால் வரி வரியாக code எழுதி வடிவமைப்பார்கள். இன்றைக்கு அப்படியில்லை. ஏற்கனவே உருவாக்கப்பட்ட சட்டகங்கள்(டெம்ப்ளேட்கள்) இருக்கின்றன தேவையானதை எடுத்து அலங்காரம் செய்து வேலையைச் சுலபமாக்கிவிடுகிறார்கள்.
‘Lower end job' என்ற பதத்தை இத்துறையில் பயன்படுத்துவதுண்டு. யார் வேண்டுமானாலும் செய்துவிடக் கூடிய எளிய வேலைகளுக்கு அப்படியொரு பேர். அத்தகைய வேலைக்கான பணியாளர்களைத்தான் இந்தியக் கல்வி நிறுவனங்கள் தயாரித்து அனுப்பிக் கொண்டிருந்தன- குறிப்பாக பொறியியல் கல்லூரிகள். இந்தகைய ப்ராய்லர் கோழிகளை இந்திய மென்பொருள் நிறுவனங்கள் பணியில் அமர்த்தி எந்த வேலையை வேண்டுமானாலும் கொடுப்பார்கள். படித்த படிப்புக்கும் செய்கிற வேலைக்கும் சம்பந்தமே இருக்காது. இதை இவர்கள்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. பனிரெண்டாம் வகுப்பு முடித்த ஆட்கள் கூட செய்துவிட முடியும். இப்பொழுது அதில்தான் கை வைக்கிறார்கள். ‘இதை மெஷினே செஞ்சுடும்..உனக்கு எதுக்கு வெட்டியா சம்பளம்?’ என்று கேட்கிறார்கள்.
பொறியியல் அல்லது எம்.சி.ஏ படித்து முடித்தால் வேலை இல்லை என்று கதறுவதையும் இந்தப் பின்ணனியில்தான் இணைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. நம் மாணவர்கள் Lower end பணிகளைச் செய்யத்தான் லாயக்கு. சற்றே திறன் தேவைப்படக் கூடிய வேலைகளைச் செய்கிற அளவில் நமக்கு படிப்புமில்லை. பயிற்சியுமில்லை.
மென்பொருள் துறையில் இத்தகைய வெட்டுகளும், செதுக்கல்களும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். ஆட்களைக் குறைத்து வருமானத்தை பெருக்குவதில் நிறுவனங்கள் வெறியெடுத்துத் திரிகின்றன. அவர்களுக்கு மனிதாபிமானம் என்றெல்லாம் எதுவுமில்லை. ‘ஸாரி...மேல இருந்து ப்ரஷர்’ என்று மேலாளர் சொல்வார். மேலேயிருக்கிறவருக்கு அவருக்கு மேலே இருப்பவரிடமிருந்து அழுத்தம். உச்சாணியில் இருப்பவனுக்கு சக நிறுவனத்திடமிருந்து அழுத்தம். ‘அவன் காட்டுற லாபத்தை நான் காட்டலைன்னா ஷேர் விலை பாதாளத்துக்கு பாஞ்சுடும்’ என்பார். இப்படியான உலகளாவிய அழுத்தம்தான் எங்கும் வியாபித்துக் கிடக்கிறது.
அழுத்தங்களிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள நாம்தான் மண்டை காய வேண்டும். நேற்று எங்கள் நிறுவனத்தின் துணைத்தலைவர் வந்திருந்தார். பேசிக் கொண்டிருந்தவர் ‘Blockchain’ தொழில்நுட்பத்தில் கால் வைக்க வேண்டும் என்று பேசினார். கடந்த சில மாதங்களாக ஆட்களைத் தேடிப் பார்த்திருக்கிறார்கள். எவ்வளவு வேண்டுமானாலும் சம்பளம் கொடுக்கத் தயாராக இருந்தும் சரியான ஆட்கள் சந்தையில் கிடைக்கவில்லை என்றார். அப்படியொரு ஆள் இருந்தால் கேட்கிற சம்பளத்தைக் கொடுப்பார்கள். இதுதான் நிதர்சனம். நாம் செய்கிற வேலைகளைச் செய்தபடியே வெளியுலகத்தின் மீது ஒரு கண் இருக்க வேண்டும். நமக்கு Blockchain பற்றி அக்குவேறு ஆணி வேறாகத் தெரிய வேண்டும் என்று கூட இல்லை. ஐந்து நிமிடங்கள் பேசுகிற அளவுக்குத் தெரிந்தால் கூட போதும். அப்படியான ஆட்களே வெகு குறைவு என்பதுதான் சிக்கல்.
இன்றைக்கு ஜி.எஸ்.டி வரிவிதிப்புக்கு ஏற்ப இந்திய நிறுவனங்களில் செயல்படும் மென்பொருட்களை மாற்றியமைக்க ஆட்கள் தேவைப்படுகிறார்கள். ‘உங்களுக்கு இந்தியா localization தெரிஞ்சவங்க யாராச்சும் இருக்காங்களா? நிறையப் பேர் தேவையா இருக்கு’ என்றார்கள். இதை சில மாதங்களுக்கு முன்பாக நண்பரொருவர் கணித்துச் சொன்னார். அப்பொழுதே எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். யாராவது தயாரிப்புகளைச் செய்திருந்தால் மந்தமான வேலை வாய்ப்புச் சூழலிம் கூட வேலையை வாங்கியிருக்க முடியும். எதற்குக் குறிப்பிடுகிறேன் என்றால் நம்மைச் சுற்றி நடைபெறும் அரசியல், பொருளாதார மாற்றங்களை வைத்து நம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
ஐடி துறை காலியாகிவிடாது. அதற்கு மிகப்பெரிய வாய்ப்புகள் இருக்கின்றன. இன்னமும் பல நூறு கோடி மக்களை இணையம் சென்றடையவில்லை. அவர்கள் இணையத்தைப் பயன்படுத்தும் போதும் ஆன்லைன் வணிகத்தில் இறங்கும் போதும் இத்துறை பன்மடங்கு வளர்ச்சியை அடையும். அதற்கான மென்பொருட்கள் வடிவமைப்பு, அவர்களுடைய தகவல்கள், தேவையான தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு, அவற்றுக்கான பாதுகாப்பு என்று ஏகப்பட்ட வேலைகள் இருக்கின்றன. அதையெல்லாம் செய்யக் கூடிய திறமை நம்மிடம் இருக்கிறதா என்பதுதான் கேள்வி. இத்துறையில் பாம்பு சட்டையை உரிப்பது போல உரித்துக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது- சுணக்கமேயில்லாமல். அதைச் செய்யவில்லையென்றால் யாரைக் குறை சொல்லியும் பலனில்லை.
4 எதிர் சப்தங்கள்:
https://app.pluralsight.com/library/courses/blockchain-fundamentals/description
blockchain https://www.forbes.com/sites/francescoppola/2016/06/20/the-dao-hacking-shows-that-coders-are-not-infallible/#2eed07e33983
இதை படிச்சு பாருங்க மணி . போன வருஷமே நடந்திருச்சு.
எஞ்சினீரிங், ஐ டி எல்லாமே நல்ல துறைதான். ஆனால் 400 கல்லூரிகளை ஆரம்பிக்க விடக்கூடாது. அதில் பாதி கல்லூரிகளுக்கு சரியான வசதி இல்லை. மனப்பாடம் செய்து மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தரமான முறையில் சரியாக சொல்லித்தருவதில்லை. சிவில்-மெக்கானிக்கல் துறையில் மாற்றங்கள் வருகின்றன அனால் அவை வருவதற்கு 5-10 வருடங்கள் ஆகலாம். முதலில் அமெரிக்கா - ஐரோப்பா அங்குலாம் வந்து பிறகு இங்கே வரும். சுதாரித்து கொள்ளலாம். mech-civil துறைகளில் கற்றுக்கொள்ள நேரம் தருகிறார்கள்.ஐ டி யில் மாற்றங்கள் சடுதியில் வந்து விடுகின்றது. ஆட்களை குறைப்பதைத்தான் முதலில் செய்கின்றார்கள்.
Excellent article
Post a Comment