Jun 15, 2017

போலீஸ் நிற்கிறார்களா?

ஒரு காலத்தில் போக்குவரத்துக் காவலர்கள் பெரும் பிரச்சினையாக இருந்தார்கள். எனக்குத்தான். ஹெப்பால் வரைக்கும் போய் வர வேண்டிய வேலையிருந்தது. நடுவழியில் மடக்கினார். ஓட்டுநர் உரிமம், காப்பீடு விவரங்களைக் காட்டிய போது ‘எமிஸன் செக்கிங்கைக் காட்டு’ என்றார். விவேக் மாதிரி. பதினொன்று போட்டுக் காட்டச் சொல்லக் கூடிய காவலர் அவர். எமி ஜாக்சன் தெரியும். எமிஸன் செக்கிங் என்றொரு விஷயம் இருப்பதே எனக்கு அப்பொழுதுதான் தெரியும். பிதுக்கா பிதுக்கா என்று விழித்துக் கொண்டிருந்த போது- அவர்களின் அஸ்திரம்தான் தெரியுமே- ‘கோர்ட்ல கட்டினா எந்நூறு ரூபா ஆகும்...எப்படி வசதி?’ என்றார். கழுத்தில் ஐடி கார்ட் மாட்டியிருந்தால் கணக்குப் போட்டுவிடுவார்கள். என்னதான் பேரம் பேசினாலும் படியாது. சில நூறுகளையாவது அழ வேண்டும்.

‘இன்பர்மேஷன் ஈஸ் வெல்த்’ மாதிரி எந்தத் தேதியில் எந்த இடத்தில் நின்று வளைப்பார்கள் என்பதற்கு ‘App' ஒன்றை யாராவது வெளியிட்டால் புண்ணியமாகப் போகும். 

சூப்பர்மேன்கள் தோற்றார்கள். வளைவிலிருந்து பாய்தல், மரத்துக்குப் பின்பாக பதுங்கியிருத்தல், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களின் பின்னால் ஒளிந்திருத்தல் அவர்கள் பின்பற்றாத தந்திரோபாயமே இல்லை. சம்பளத்தில் கணிசமான தொகையை இவர்களிடம் இழந்த பிறகுதான் புத்தி வந்து ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கினேன். எளிய முடிவுகள்தான். மாதத்தின் கடைசித் தருணங்களில் பழக்கமில்லாத சாலைகளில் பயணிக்கவே கூடாது. எங்கேயிருந்து பாய்வார்கள் என்று தெரியாது. ஒருவேளை அப்படித் தெரியாத சாலைகளில் பயணிக்கும் போது ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். விதிகளைத் துளி கூட மீறாமல் பவ்யமாக ஓட்ட வேண்டும். எவ்வளவுதான் பவ்யம் காட்டினாலும் சாலையின் நடுப்புறமாக ஓட்டிச் செல்ல வேண்டும்- ஓரத்தில் இருந்தால் நம்மை ஒதுக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். இவையெல்லாவற்றையும் பின்பற்றியும் கூட சிக்கிக் கொள்வோம் என்று தோன்றினால் அவர்கள் வண்டியைக் குறுக்காட்டுவதற்கு முன்பாக நாமே அவர்களின் அருகாமையில் சென்று வண்டியை நிறுத்திவிட வேண்டும். 

‘இவனா எதுக்கு வாண்ட்டாடா வர்றான்?’ என்று அவர்கள் குழம்பித் தெளிவதற்குள்ளாக ‘சார் இல்லி சங்கர் நாராயண பில்டிங் எல்லியிதே?’ என்று வழி கேட்டுவிடுவேன். சங்கர் நாராயணா பில்டிங்கில்தான் எங்கள் அலுவலகம் இயங்குகிறது. அது எனக்குத் தெரியும். அவர்களுக்குத் தெரியாதல்லவா? சில காவலர்கள் பதில் சொல்வார்கள். சிலர் ‘கொத்தில்லா’ என்பார்கள். அவர்கள் சுதாரிப்பதற்குள்ளாக நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பிவிட வேண்டும். அப்படித்தான் தப்பித்துக் கொண்டிருக்கிறேன். கடைசியாகச் சிக்கி ஆறேழு மாதங்களுக்கு மேலாக இருக்கும்.

அலைபேசியில் பேசியபடியே சிக்கிய தருணங்கள்தான் அதிகம். யாராவது அழைக்கும் போது எப்படி பேசாமல் இருக்க முடியும்? முடிந்தவரை பதில் சொல்லிவிடுவதுண்டு. மின்னஞ்சலில் பதில் சொல்லவில்லையென்றால் கூடத் திட்டுவார்கள். இப்படித்தான் சில நாட்களுக்கு முன்பாக ‘ஆண்ட்ராய்ட் போன்களும் சின்னம்மா ஆப்புகளும்’ என்று மின்னஞ்சலில் ஒரு கட்டுரையை யாரோ ஒருவர் அனுப்பியிருந்தார். உள்ளே என்னவோ இருந்துவிட்டுப் போகட்டும். இந்தத் தலைப்பையெல்லாம் வாசித்துவிட்டு கட்டுரையை வாசிக்க எப்படி மனம் வரும்? பதில் எதுவும் அனுப்பவில்லை. ஒரு ஞாபகமூட்டலும் அனுப்பினார். அதையும் கண்டுகொள்ளவில்லை. பொதுவெளியில் ‘முதல்ல மின்னஞ்சலுக்கு பதிலைச் சொல்லு..அப்புறம் பேசலாம்’ என்று எழுதியிருந்தார். அடுத்த முறை இப்படி ஏதாவது அனுப்பி வைக்கட்டும். ஏதாவது பெரியப்பாவின் _________ என்று தலைப்பில் ஒரு கட்டுரையை அனுப்பி வைக்கிறேன்.

இப்பொழுதெல்லாம் போர்த்துகீசு மொழியில் கடலை போடத் தொடங்கியிருக்கிறேன். சின்னம்மா வீட்டுக்காரருக்கு எழுதுகிற கட்டுரையையும் போர்த்துக்கீசுவிலேயே அனுப்பி வைக்க வேண்டும். ‘போர்த்துக்கீசா? உட்றான் பாரு கப்ஸா’ என்று சொல்வீர்கள் என்று தெரியும். கூகிள் ட்ரான்ஸ்லேட்டர்தான் ஆபத்பாந்தவன். அங்கேயிருக்கிற டிர்ஸிக்கும், பால்லாவுக்கும், ஃபேபியானாவுக்கும் (பெண்கள்தான்- வால்மேன், அலெக்ஸ் என்றெல்லாம் கூட இருக்கிறார்கள். நான்தான் கண்டுகொள்வதில்லை) -யாருக்குமே ஆங்கிலம் தெரியாது. நினைப்பதையெல்லாம் ஆங்கிலத்தில் தட்டச்சி கூகிளில் போட்டு போர்த்துக்கீசுக்கு மாற்றித் தரச் சொன்னால் அது பாட்டுக்கு மாற்றிக் கொடுத்துவிடுகிறது. ‘இவன் போர்த்துக்கீசு புலவன் போலிருக்கு’ என்று அவர்களுக்கு போர்த்துக்கீசு மொழியிலேயே அனுப்புகிறார்கள். அதையும் கூகிள் ஆங்கிலத்துக்கு மாற்றித் தந்துவிடுகிறது. 

படம் காட்டிக் கொண்டிருக்கிறேன்.

தமிழில் தேவதேவன் என்பதை God-God என்று கூகிள் மாற்றித் தருகிறது. போர்த்துக்கீசு எந்த லட்சணத்தில் இருக்கும் என்று டிர்ஸிக்குத்தான் வெளிச்சம். 

இதை எதற்குச் சொல்கிறேன் என்றால்- மேற்படி மொக்கையான மின்னஞ்சல்களைத் தவிர பெரும்பாலும் பதில் அனுப்பிவிடுவதுண்டு. முடிந்தவரை அலைபேசி அழைப்புகளையும் எடுத்துவிடுவேன் என்பதால் நேற்று அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்த போது கரிகாலன் அழைத்துச் சிக்க வைத்துவிட்டார். எடுத்து ஹெல்மெட்டுக்குள் செருகிய போது காவலரை கவனிக்காமல் விட்டுவிட்டேன். தப்பிக்க வேறு வழியே இல்லை. இடது பக்கமாக ஒரு கட்டிடம் இருந்தது. என்ன கட்டிடமென்றெல்லாம் தெரியாது. வண்டி உள்ளே போய்த்தான் நின்றது. 

செக்யூரிட்டி ‘என்ன வேண்டும்?’ என்றார். 

‘கோர்ஸ் பத்தி விசாரிக்கணும்’

‘ஆயே...ஆயே’ என்று ஒரு ஆள் அழைத்துச் சென்றார். நுழைவுத்தேர்வுகளுக்கு தேர்வுகளுக்கு பயிற்சியளிக்கக் கூடிய நிறுவனம் அது.

‘கவுன்சிலர் வருவாங்க..வெயிட் பண்ணுங்க’ என்றார்கள். போலீஸ்காரனிடமிருந்து தப்பித்தால் போதும். சில நிமிடங்களுக்குப் பிறகு ஒரு பெண்மணி வந்தார். 

‘யாருக்கு சார் கோச்சிங்’

‘பையனுக்கு..ஐஐடி ஜேஈஈ’

‘பையன் என்ன படிக்கிறான்?’

‘மூணாவது’- இந்த பதிலுக்கு நக்கலாகப் பார்ப்பார் என்று நினைத்தேன்.

‘நாங்க நாலாவதுல இருந்து கோச்சிங் ஆரம்பிக்கிறோம்’ என்றார். 

‘பாவிகள்..நான்காம் வகுப்புக்கே ஐஐடி கோச்சிங்’.

நம்பமுடியவில்லையல்லவா? எனக்கும்தான். நான்காம் வகுப்பு மாணவனுக்கு வருடம் இருபத்தைந்தாயிரம் ரூபாய். அறிவியலும் கணிதமுமாக foundation course. இன்னும் கொஞ்சம் விவரங்களைச் சேகரித்துவிட்டு விரிவாக எழுதுகிறேன்.

அதிர்ச்சியிலேயே ‘எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள்?’ ‘யார் டீச்சர்?’ என்றெல்லாம் விசாரணைகளை நீடிக்க வேண்டியதாகிவிட்டது. பத்து பதினைந்து நிமிடங்கள் ஆகியிருக்கும். அந்த அழகிய ராட்சஸி எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொன்னாள். திராபையான கேள்விகளுக்கும் கூட.

‘எந்த விஷயத்தை சக பாலினரிடம் பேசினால் போரடிக்குமோ அதே விஷயத்தை எதிர்பாலினரிடம் போரடிக்காமல் பேசினால் அதுதான் கடலை’ என்ற கல்லூரிக்கால definiton நினைவுக்கு வந்து போனது.

‘நன்றி. அடுத்த வருடம் வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு வெளியே வந்தேன். 

அப்பொழுதும் காவலர்கள் நின்றிருந்தார்கள். தப்பித்துவிடலாம் என்றுதான் நினைத்தேன். காவலர் வளைத்துவிட்டார். ‘சார் நான் இல்ல’ என்றேன். ‘இல்ல சார்..எங்களைப் பார்த்துட்டு உள்ளே போனீங்க..இதே சட்டைதான்’ என்றார். ‘இல்ல சார்..நானில்லை’ என்று சமாளிக்க முயற்சித்தாலும் விடுவதாக இல்லை. கிராதகன். மீண்டும் எமிசன் செக்கிங்கில் வந்து நின்றார். நூறு ரூபாய் கழண்டது. அடுத்த முறை கரிகாலனைப் பார்க்கும் போது நூறு ரூபாயை வசூலித்துவிட வேண்டும்.

4 எதிர் சப்தங்கள்:

Ram said...

அமெரிக்க மணிகண்டன்களுக்கு: http://lifehacker.com/208611/how-to-beat-a-speeding-ticket-or-at-least-better-your-chances :-)

இப்பக்கத்தின் எதிர்சத்தங்கள் பக்கத்தின் உள்ளடகத்தை விட சுவை!

Unknown said...

You can do emission test in most of the petrol bunks in Bangalore. Costs just 50

Unknown said...

ஊரான் வீட்டு காச கூட
ஊதாரித்தனமா செலவு பண்ண மனசு
வராத (கருமி)
வா.ம வுக்கே அல்வா கொடுத்த அந்த பெங்களூரு
வாழ்க.
இப்படி பட்ட ஒரு தமிழ் காளையிடம் 100 ml (மன்னிக்க) ₹ 100 கறந்த அந்த காவலரும்!! வாழ்வாங்கு வாழட்டும்.😊☺🎂
நன்றி
அன்பே சிவம்.

tamilthoodhan said...

‘எந்த விஷயத்தை சக பாலினரிடம் பேசினால் போரடிக்குமோ அதே விஷயத்தை எதிர்பாலினரிடம் போரடிக்காமல் பேசினால் அதுதான் கடலை’ - Definition perfect ! ��