Jun 14, 2017

பொடனி அடி

வழக்கமாக பொறியியல் கல்லூரிகளின் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் முடிந்தவுடன் அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து தாம் வெற்றி பெற்றுவிட்டதான அறிக்கை ஒன்று வெளியாகும். ஒன்றரை லட்சம் விண்ணப்பங்கள் விற்கப்பட்டதாகவோ, இதுவரை இல்லாத அளவுக்கு விற்பனை ஆகியிருப்பதாகவோ புளகாங்கிதம் அடைந்திருப்பார்கள். இந்த வருடம் அப்படியெதுவும் கண்ணில்படவில்லை. ஒருவேளை கவனிக்காமல் விட்டுவிட்டோமா என்று துழாவிப்பார்த்தால் மூச்சு கூட விட்டமாதிரி தெரியவில்லை. 

இந்த வருடம் பொறியியல் கல்வி வியாபாரத்திற்கு பொடனி அடி விழும் போலிருக்கிறது.

தமிழகத்தில் மட்டும் 571 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. பணம் பறிக்கும் குகைகள். குறைந்தபட்ச சராசரியாக ஒரு கல்லூரிக்கு 250 காலியிடங்கள் என்றாலும் கூட கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் இடங்கள். அண்ணா பல்கலைக்கழகத்தின் கலந்தாய்வில் மட்டுமே இவ்வளவு இடங்களும். இவை தவிர நிகர்நிலைப்பல்கலைக்கழங்கள் தனிக்கணக்கு. வழக்கமாக கிட்டத்தட்ட இரண்டு லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாகக் கூடிய தமிழகத்தில் இந்த வருடம் எண்பதாயிரத்தைக் கூடத் தாண்டவில்லை என்கிறார்கள். அதனால்தான் பெரிய வியாபாரியான அண்ணா பல்கலைக்கழகம் அடக்கி வாசிக்கிறது. ‘விக்கவேயில்லை’ என்று புலம்பினால் விண்ணப்பம் வாங்கிய எண்பதாயிரம் பேரும் கூட பதுங்கிவிடக் கூடும். விற்பனையானதே எண்பதாயிரம் என்றால் எத்தனை மாணவர்கள் கல்லூரியில் வந்து சேர்வார்கள் என்று கணக்கிட்டால் முக்கால்வாசிக் கல்லூரிகள் ஈ ஓட்டப் போவது உறுதியாகியிருக்கிறது. 

நல்ல விஷயம் இது. 

வருமானம் ஈட்டுவதற்காகக் அரசியல்வாதிகளும், முன்னாள் அயோக்கியர்களும், திருட்டு வணிகர்களும் கல்வித்தந்தைகள், கல்வி வள்ளல்கள் என்ற பெயர்களில் விதவிதமாகக் கல்லூரிகளைத் திறந்து பொறியியல் கல்வியின் தரத்தைச் சீரழித்து நாசக்கேடு செய்து வைத்திருக்கிறார்கள். வேலை கொடுப்பவர்கள் ‘தமிழக இஞ்சினியரா?’ என்று பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓட வைத்திருக்கிறார்கள். தமிழகத்தில் பொறியியல் படித்த மாணவனின் மொழித்திறம், ஆளுமைத் திறம், தொழில்நுட்ப அறிவு ஆகியன குறித்துத் திறந்த ஆய்வொன்றை நடத்தினால் சந்தி சிரித்துவிடும். ஆனால் கட்டணம் மட்டும் லட்சக்கணக்கில் வசூலிக்கிறார்கள். ஒவ்வொரு மாணவனுக்கும் விடுதியோடு சேர்த்து வருடம் ஒன்றரை லட்ச ரூபாயாவது ஆகிறது. அப்படிச் சம்பாதித்து என்ன செய்கிறார்கள்?

பல கல்லூரிகளில் நல்ல ஆய்வக வசதிகள் கிடையாது; தரமான நூலகம் இல்லை- எம்.ஈ/எம்.டெக் முடித்தவர்களை ஆசிரியர்களாகச் சேர்த்து ஐந்தாயிரம் பத்தாயிரம்தான் சம்பளம். எல்லாமே முதலாளிக்குத்தான். இதுவரைக்கும் வழித்துக் கட்டியிருக்கிறார்கள். பொறியியல் கல்வி வியாபாரம் என்பது பொன் முட்டையிடும் வாத்தாக இருந்தது. தரம் பற்றிய எந்தச் சிரத்தையுமில்லாமல் அதன் வயிற்றைக் கிழித்திருக்கிறார்கள். வாத்துக் கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக் கொண்டிருக்கிறது.

இத்துடன் முடிந்துவிடவில்லை. இன்னமும் சேர்க்கைக்கான கலந்தாய்வு முடியும் போது பார்க்கலாம். பல கல்லூரிகளில் ஓரிடம் கூட நிரம்பாத சூழல் உருவாகும் வாய்ப்பிருக்கிறது. அப்படியொரு சூழல் வருமானால் நிறையப் பொறியியல் கல்லூரிகளை நடத்த முடியாத சூழல் உருவாகும். அவற்றைக் கலை அறிவியல் கல்லூரிகளாகவோ அல்லது பள்ளிகளாகவோ மாற்றக் கூடிய வாய்ப்புகள் அதிகமாகியிருக்கின்றன. இத்தகைய கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் நிலைமையைத்தான் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. அவர்களின் சம்பளம், எதிர்காலம் என்பதெல்லாம் என்னவாகும் என்று தெரியவில்லை. 

பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் பதறுகின்றன. தமது பேராசிரியர்களை விரட்டிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பேராசிரியரும் ஐந்து மாணவர்களையாவது கொண்டு வந்து சேர்க்கச் சொல்லி குரல்வளையை நசுக்குகிறார்கள். அவர்கள் மட்டும் எப்படி வளைக்க முடியும்? மாணவர்களிடையே ஓரளவுக்கு விழிப்புணர்வு வந்திருக்கிறது. கலைக்கல்லூரிகளில் விண்ணப்பங்கள் நிரம்பி வழிகின்றன. வழக்கமாக இரண்டாயிரம் விண்ணப்பங்கள் வரக் கூடிய பி.எஸ்.சி இயற்பியல் பாடத்துக்கு இவ்வருடம் எட்டாயிரம் விண்ணப்பங்கள் வந்திருப்பதாக ஒரு கல்லூரியில் சொன்னார்கள். 

பொறியியல் படிப்பின் சீரழிவு, எட்டாத கட்டணம், தேர்வு முடிவுகளின் சமயத்தில் வெளியான ஐடி நிறுவனங்களின் வேலை நீக்கம் என்பதெல்லாம் சேர்த்து மாணவர்களை கலை அறிவியல் படிப்புகளின் பக்கமாகத் திருப்பியிருக்கிறது. 

‘பி.எஸ்.சி, பி.காம் எல்லாம் படிச்சுட்டு என்ன வேலைக்கு போக முடியும்?’ என்று கேட்பார்கள். பொறியியல் படித்தால் சாஃப்ட்வேரில் வேலை கிடைத்துவிடும் என்கிறவர்களின் வாதம் இது. பிஎஸ்சி, பிகாம் மாதிரியான படிப்புகளைப் பொறுத்த வரைக்கும் வெறுமனே பட்டப்படிப்போடு நிறுத்தினால் கடினம்தான். ஆனாம் மேற்படிப்புகளைப் படிக்கிறவர்கள் யாரும் மோசமாகிவிடுவதில்லை. அறிவியல் ஆய்வுகளுக்காக பன்னாட்டு பல்கலைக்கழகங்கள் ஆட்களைத் தேடிக் கொண்டிருக்கின்றன. நிறைய அறிவியல் மாணவர்கள் ஆய்வுகளுக்காக வெளிநாடுகள் செல்கிறார்கள். ‘இதில் எல்லாம் கூட ஆய்வு செய்வார்களா?’ என்று நாம் எதிர்பாராத விஷயங்களில் எல்லாம் ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. நம் மாணவர்கள் சற்றே வருத்தினால் அத்தகைய இடங்களில் சரியாகப் பொருந்துவார்கள். இந்தியாவிலும் ஆய்வுகளுக்கான வாய்ப்புகள் பெருமளவில் உருவாக்கப்படுமானால் நம்முடைய அஸ்திவாரம் இறுகும். பொறியியல் படிப்பு மட்டுமே படிப்பு இல்லை.

பொறியியல் படிப்புக்கான நல்ல கட்-ஆஃப் வைத்திருக்கும் மாணவர்கள் தைரியமாக இருக்கலாம். இந்த வருடம் பொறியியல் படிப்பு கேட்பாரற்றுக் கிடக்கும். விரும்பிய பாடத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் அட்டகாசமாக இருக்கின்றன. தரமான கல்லூரியில் சரியான பாடப்பிரிவு கிடைத்தால் மட்டுமே பொறியியல் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். ‘பி.ஈ படிச்சா எப்படியும் வேலை கிடைச்சுடும்’ என்ற காலம் மலையேறிவிட்டது. எனவே குட்டையில் குதிப்பது போல குதிக்க வேண்டியதில்லை.

கல்வியை வணிகமாக்கினால் பெருஞ்சூடு விழ வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம், AICTE, தமிழக அரசு ஆகியவைக் கூட்டணி அமைத்து நாசக்கேடு செய்து கொண்டிருந்தார்கள். தரம் பற்றிய எந்தக் கவலையுமில்லாமல் வசூல் செய்து பெட்டியை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். லட்சக்கணக்கானவர்கள் பொறியியலை முடித்துவிட்டு சென்னையிலும் பெங்களூரிலும் ஹைதராபாத்திலும் வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள். கண்டக்டர் பணிக்கும் பிஈ முடித்தவர்கள் விண்ணப்பிக்கிறார்கள். காவலர் வேலைக்கும் விண்ணப்பிக்கிறார்கள். சூப்பர் மார்க்கெட்டில், கணக்கு எழுதும் வேலையில், டேட்டா எண்ட்ரியில் என்று சகல இடங்களிலும் பரிதாபத்திற்குரிய பொறியாளர்கள் நிரம்பியிருக்கிறார்கள். ஆயிரம் கனவுகளோடு லட்சக்கணக்கில் செலவு செய்த பெற்றோரின் ஆசையில் மண்ணள்ளிப் போட்டார்கள் அயோக்கியக் கல்வித் தந்தைகள். அப்படியான் அயோக்கியத்தனத்திற்குத்தான் சூடு விழுந்திருக்கிறது. விழட்டும்!

(அப்டேட்: தெரிந்த நண்பர்கள் வழியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் விசாரித்த போது official ஆக இன்னமும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் அநேகமாக ஒரு லட்சம் விண்ணப்பங்களைத் தாண்டும் என்று சொன்னார்கள். துல்லியமான எண்ணிக்கை தெரியவில்லை.  மொத்த இடங்களின் எண்ணிக்கை சற்றேறக்குறைய இரண்டு லட்சம். எப்படியிருப்பினும் பொறியியல் சேர்க்கை இவ்வருடம் மந்தமாக இருக்கும் என்கிறார்கள்)

5 எதிர் சப்தங்கள்:

T said...

கல்(ல)வி தந்தைகள் எல்லாம் கை தேர்ந்த வியாபாரிகள். பொறியியல் கல்லூரியெல்லாம் கலை கல்லூரிகளாக மாறிக்கொண்டு உள்ளன. காலத்துக்கு ஏற்றவாறு மாறிக் கொள்வதில் கைதேர்ந்த கயவர்கள்.

ADMIN said...

என்ன ஒரு ஆதங்கம்! இருக்காதே பின்னே..! கல்வியை வியாபாரமாக்கி விளையாடிவர்களுக்கு இது ஒரு பாடம்.

Unknown said...

//கலைக்கல்லூரிகளில் விண்ணப்பங்கள் நிரம்பி வழிகின்றன. வழக்கமாக இரண்டாயிரம் விண்ணப்பங்கள் வரக் கூடிய பி.எஸ்.சி இயற்பியல் பாடத்துக்கு இவ்வருடம் எட்டாயிரம் விண்ணப்பங்கள் வந்திருப்பதாக ஒரு கல்லூரியில் சொன்னார்கள்.//

It feels very good to hear this. Basic science and research has immense opportunities all over the world. We should encourage students to think beyond jobs, and about building careers.

சேக்காளி said...

யோவ் ! என்னய்யா கமெண்டு பொட்டி தொறந்து கெடக்கு.பூட்ட மறந்துட்டியளா இல்ல தொறவா வ தொலச்சிட்டியளா?.

Unknown said...

நன்றி