Jun 8, 2017

பள்ளிகளுக்கான புத்தகங்கள்

சில நாட்களுக்கு முன்பாக முடிவு செய்திருந்தது போல தமிழகத்தில் சில பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு பள்ளிக்கும் தலா பத்தாயிரம் ரூபாய்க்கு நூலகம் அமைத்துக் கொடுக்கிற வேலை தொடங்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து நாட்டில் கோல்செஸ்டர் நகரில் வசிக்கும் தமிழர்களின் உதவியின் மூலம் இந்தப் பணியைச் செய்யவிருக்கிறோம். இன்னமும் புத்தக விற்பனையாளரை முடிவு செய்யவில்லை. முக்கியமான புத்தக விற்பனையாளர்களில் பெரும்பாலானவர்கள் நண்பர்கள்தான். அவர்களில் யாரேனும் ஒருவரை முடிவு செய்து கொள்ளலாம். புத்தகத்தின் பட்டியலைத் தயாரித்து விற்பனையாளரைப் பரிந்துரை செய்தால் இங்கிலாந்திலிருந்து அவர்களே நேரடியாக விற்பனையாளருக்குப் பணத்தை அனுப்பி வைத்துவிடுவார்கள். இப்போதைக்கு அதுதான் திட்டம்.

ஆறு பள்ளிகளுக்கு நூலகம் அமைத்துக் கொடுக்கலாம். இந்தப் பணியை முடித்துவிட்டு விளையாட்டுப் பொருட்கள் வழங்கவிருக்கும் பள்ளிகளின் எண்ணிக்கையும் பட்டியலையும் ஆரம்பிக்கலாம்.

பள்ளிகளின் பட்டியல் இது- 
  1. ஸ்ரீ ஜெயலட்சுமி ஆரம்பப்பள்ளி, கள்ளங்குறிச்சி, அரியலூர்
  2. பக்தவச்சலம் சஷ்டியப்தபூர்த்தி பள்ளி, காஞ்சிபுரம்
  3. வி.க.க.நடுநிலைப்பள்ளி, சிவகங்கை மாவட்டம்
  4. டாக்டர். T.திருஞானம் துவக்கப்பள்ளி, கீழ் சந்தைப்பேட்டை
  5. தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, மேட்டூர்
  6. தாய்த்தமிழ் மழலையர் பள்ளி, திண்டிவனம்.
கிராமப்புற பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தமிழ் வழிக்கல்விப் பள்ளிகள் ஆகியவற்றிலிருந்து பட்டியல் இறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இனி புத்தகங்களின் பட்டியலைத் தயார் செய்ய வேண்டும். முன்பொருமுறை தயாரித்த பட்டியல் நிசப்தம் தளத்திலேயே இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பாக ஏழு பள்ளிகளுக்கு இதே போன்று நூலகம் அமைத்துக் கொடுத்த போது தயாரிக்கப்பட்ட பட்டியல் அது. ஆண்டுகள் ஓடியிருக்கின்றன. பள்ளிகளுடனான அனுபவமும் சற்று கூடியிருக்கிறது. சோம்பேறித்தனம் பார்க்காமல் புதியதொரு பட்டியலைத் தயாரித்துவிட வேண்டும். 

வெறுமனே புனைவுகள், குழந்தைகளுக்கான கதைகள் என்றில்லாமல் கலவையான புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பதுதான் நோக்கம். பொது என்ற பிரிவில் அகராதி, திருக்குறள், பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள் என்றொரு பட்டியல். அதைத் தவிர அறிவியல், வரலாறு, சூழலியல், பொது அறிவு, கணினி, ஆளுமைகள், ஆங்கிலம் என ஒவ்வொரு வகைமையிலும் சில புத்தகங்களாவது இருக்க வேண்டும். இறுதியாகப் புனைவு என்ற பிரிவில் சில புத்தகங்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.

புத்தகங்களின் பட்டியல் தயாரிக்கும் பணி ஆரம்பமாகியிருக்கிறது. தரமான புத்தகங்கள் எனில் புத்தகத்தின் பெயர், ஆசிரியர் பெயர், பதிப்பக விவரங்களை அனுப்பி வைக்கலாம். (பெரும்பாலும் தமிழ் புத்தகங்கள்) நல்ல புத்தகமா இல்லையா என்று சந்தேகமாக இருப்பின் அனுப்ப வேண்டாம். குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டிய புத்தகங்கள் என்பதால் ஒவ்வொரு புத்தகமும் மிகச் சரியான புத்தகமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

இது கூடுதலான பணிதான் என்றாலும் மனதுக்கு உவப்பானது. கோல்செஸ்டர் நண்பர்களுக்கு நன்றி. குறிப்பாக அந்தப் பெண்களுக்கு- உள்ளூர் விஷேசங்களுக்கு இந்திய சமையலைச் செய்து அதில் வரும் பணத்தை இப்படியான நல்ல காரியங்களுக்குக் கொடுக்கிறார்கள். அவர்கள் ஒதுக்கி வைத்திருக்கும் நான்கு லட்ச ரூபாயில் முதல் அறுபதாயிரம் இது. மீதமிருக்கும் பணத்திற்கு நிறையத் திட்டங்கள் இருக்கின்றன. பெரிய மனம் படைத்தவர்கள் அவர்கள். வாழ்க!