May 31, 2017

எங்க தங்கியிருக்கீங்க?

ஒரு வாரம் பிரேசில்வாலாக்களுடன் பணியாற்ற வேண்டியிருப்பதால் அதிகாலை இரண்டு மணிக்கு வீட்டில் கொண்டு வந்து விடுவதற்காக ஒரு மகிழ்வுந்தை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்கள். வண்டி ஏறினால் தூங்கிவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் ஓட்டுநருக்குத் தமிழ் தெரியும். இந்த ஊரில் பெரும்பாலான ஓட்டுநர்கள் தமிழர்களாக இருப்பார்கள் அல்லது தமிழ் தெரிந்து வைத்திருப்பார். இவர் முதல் வகையறா. விஜயகுமார். இருபத்தைந்து வயதுக்குள்தான் இருக்கும். வேலூரில் ஒரு பெண்ணைப் பார்த்து நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. வாயைத் திறந்தால் மூடுவதேயில்லை.

பனிரெண்டரை மணிக்கு முன்பாகவே அலுவலகத்துக்கு அருகில் வந்து நின்று கொள்கிறார். அவ்வளவு சீக்கிரமாக வந்து என்ன செய்வார் என்று கேட்டால் ‘இப்போத்தான் சார் என் ஆளுக்கு 4ஜி ஃபோன் வாங்கிக் கொடுத்திருக்கேன்..வீடியோ காலிங்’ என்கிறார்.

‘என்னய்யா சொல்லுற?’ என்று கேட்டால் ‘காருக்குள்ள கசமுசா’ என்று கூச்சமே இல்லாமல் சொன்னார். முன்வரிசை இருக்கை வேண்டாம் என்று பின் வரிசையில் அமர்ந்து கொண்டேன்.

விஜயகுமாருக்கு சொந்த ஊர் மாண்டியா பக்கம். அம்மா அப்பாவெல்லாம் அங்குதான் இருக்கிறார்கள். கடந்த முறை நைட் ஷிஃப்ட்டில் வேலை செய்த போது இரண்டொரு நாட்கள் அவர்தான் அழைத்துச் சென்றார். டிப்ளமோ படித்துவிட்டு ஏழெட்டு வருடங்களுக்கு முன்பாக பெங்களூரு வந்திருக்கிறார். ஏதோ நிறுவனத்தில் பணியாற்றி பிறகு வங்கிக்கடனில் டோயட்டோ எடியோஸ் கார் ஒன்றை வாங்கி ஓட்டிக் கொண்டிருக்கிறார். சொந்த வண்டி. அது அவருக்குப் பெருமிதமும் கூட.

ஓலா, ஊபர் வருவதற்கு முன்பாக நிறைய வருமானம் வருமாம். இப்பொழுது குறைந்துவிட்டது என்றார்.

‘அவனுக நிறைய கமிஷன் அடிச்சுடுறானுக சார்..அறுபது எழுபது ரூபாய் கூட வாடகைன்னு வருது..ஓட்டுற கூலியே கட்டாது...அதுவும் இந்திக்காரனுக இருக்கானுக பாருங்க...ஒலாவுல புக் பண்ணி மொத்த சாமானத்தையும் டிக்கியில் ஏத்தி வீட்டையே ஷிஃப்ட் பண்ணுறானுக சார்..வண்டியே நாசக்கேடு ஆகிடுது’ என்றார். இந்திக்காரனை ஒருவர் திட்டினால் நமக்கு ஜிவ்வென்றாகிவிடுகிறது. ‘நீ நம் இனமய்யா’ என்று நினைத்துக் கொண்டேன்.

‘பெங்களூரில் எங்க தங்கியிருக்கீங்க?’ என்றேன். 

தெரிந்து கொண்டே கேட்கிறேனோ அல்லது நக்கலுக்குக் கேட்கிறேனா என்ற குழப்பத்தில் திரும்பி முகத்தைப் பார்த்தார். நள்ளிரவில் சாலையில் ஒரு வாகனமும் இல்லை. வண்டி வேகமாக ஓடிக் கொண்டிருந்தது.

‘கார்லதான்’ என்றார். அவரையே பார்க்கத் தோன்றியது.

‘இந்த ஊர்ல எந்த கார் டிரைவர் சார் ரூம் எடுத்துத் தங்கியிருக்கான்? சம்பாதிக்கிறது பூராவும் வீட்டு வாடகைக்கே சரியா போய்டும்’ என்றார். அது சரிதான். எப்படியிருந்தாலும் ஒற்றை அறை கொண்ட வீடு என்றாலும் கூட ஏழெட்டாயிரம் ரூபாய் வேண்டும். 

வண்டி சில்க் போர்ட் தாண்டியிருந்தது. தள்ளுவண்டிக்கடையில் தேநீர் விற்றுக் கொண்டிருந்தார்கள். ‘குடிச்சுட்டு போய்டலாமா?’ என்றார். எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. குடிக்கும் போது வண்டியின் டிக்கியைத் திறந்து காட்டினார். ஒரு வாளி. குளிப்பதற்கு ஒரு டப்பா. ஒரு துணிப்பை. அவ்வளவுதான் குடித்தனம். என்னை இறக்கிவிட்டுவிட்டு லே-அவுட்டிலேயே வண்டியை நிறுத்தி இருக்கையை படுகிடையாக்கி படுத்துக் கொள்வாராம். அதிகாலை ஐந்து மணிக்கு கண்ணில் வெளிச்சம் பட்டவுடன் எங்கேயாவது வண்டியை ஓரங்கட்டி காலைக்கடன்களை முடித்தால் சவாரி ஆரம்பமாகும். பகல் வேளைகளில் இடையிடையே நேரமிருந்தால் மரத்தடியில் படுத்துக் கொள்வதுதான் வழக்கம்.

‘இந்த ஊர்ல இப்படி எத்தனை பேர் இருப்பாங்க?’ - அவருக்கு என்னுடைய இந்தக் கேள்வி குழப்பத்தை உண்டாக்கியிருக்கக் கூடும். விஜயகுமார் விவரமான ஆள்தான். நித்யானந்தாவின் பிடதி ஆசிரமம் பற்றிப் பேசினாலும் பேசுவார். சித்தராமைய்யாவின் கார் மீது காகம் அமர்ந்த பிறகு அவர் தனது காரை மாற்றியது பற்றிப் பேசினாலும் பேசுவார். எந்நேரமும் இணையத்துடன் கூடிய அலைபேசி. தினசரி செய்தித்தாள் வாங்கி வாசிக்கிறார். எஃப்.எம் ரேடியோவில் எப்பொழுதும் யாராவது பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். தகவல்களால் நிறைந்தது அவர் உலகம். போதாக்குறைக்கு வண்டியில் ஏறுகிற ஒருவரையும் விட்டு வைப்பதில்லை.

‘உங்க கம்பெனியில் என்ன வேலை?’ ‘தலைமை அலுவலகம் எங்கேயிருக்கிறது?’ ‘டென்வரில் சிக்கனா? பீஃப் பிரியாணியா?’ என்பது வரைக்கும் இடைவிடாமல் பேசுகிறார். 

‘பெங்களூரில் எத்தனை வண்டிகள்ன்னு தெரியல...ஆனா போற வழியில் கவனிங்க’ என்றார். பொம்மனஹள்ளியில் ஏழெட்டு மகிழ்வுந்துகள் நின்றிருந்தன. கூட்லு கேட்டில் ஐந்தாறு. லே-அவுட்டுக்குள் திரும்பிய பக்கமெல்லாம் மஞ்சள் நிற போர்ட் அணிந்த வாடகைக்கார்கள். இவ்வளவு நாட்களாக இதைக் கவனித்ததேயில்லை. எப்பொழுதும் பகல்கள் நம்மை விரட்டிக் கொண்டேயிருக்கின்றன. நம்முடைய வேலையில் மட்டும் கவனத்தை வைத்துக் கொண்டு ஓடிக் கொண்டேயிருக்கிறோம். நகரத்தின் இரவு நேர முகம்தான் விசித்திரமானது. இரவுகள் அடுத்தவர்களை கவனிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றன.

இங்கு பல்லாயிரக்கணக்கான மனிதர்களுக்கு சாலைகள்தான் புகலிடம். கட்டிட வேலை செய்கிறவர்கள், பிச்சைக்காரர்கள், ப்ளாட்பாரவாசிகள், கார் டிரைவர்கள்- எல்லாமே பிழைப்புக்குத்தானே?

‘என்னால காலை நீட்டாம தூங்கவே முடியாது’ என்று சொன்னவர்களைத் தெரியும். கார் டிரைவர்கள் ஒரு மணி நேரமாவது காலை நீட்டித் தூங்குவார்களா என்று தெரியவில்லை.

‘கல்யாணத்துக்கு அப்புறம் என்ன ப்ளான்?’ விஜய்யின் முகத்தைப் பார்க்காமலேயே கேட்டேன். ‘கொஞ்ச நாளைக்கு பாப்பா வீட்டிலேயே இருக்கட்டும் சார்...ரெண்டு வருஷத்துல ஊருக்கு போய்டலாம்ன்னு இருக்கேன்’.அவரிடம் எதுவோ சொல்ல வாய் வரைக்கும் வார்த்தைகள் வந்துவிட்டன. 

நகரம் ஒரு பிசாசு. உள்ளே இழுத்த பிறகு அதனிடமிருந்து தப்பிச் செல்கிறவர்கள் வெகு சிலர்தான். ‘இன்னும் ஒரு வருஷம், இன்னும் ரெண்டு வருஷம்’ என நம் காலத்தைத் தின்று செரிப்பதில் நகரத்துக்கு இணை நகரம்தான். 

‘இங்க ஒரு வீட்டைப் பாருங்க...கூட்டிட்டு வந்துடுங்க’ என்று சொல்ல வேண்டும். ஆனால் இன்னொரு முறை வரும் போது சொல்லிக் கொள்ளலாம் என அமைதியாகிவிட்டேன்.  

வீட்டை அடைந்தோம். மொட்டை மாடியில் ஒரு அறை இருக்கிறது. ‘வேணும்ன்னா அங்க தூங்கிக்குங்க’ என்றேன். மறுத்துவிட்டார். வீட்டைப் பூட்டிவிட்டு ஜன்னல் வழியாகப் பார்த்தேன். மரத்தடியில் கண்ணாடிகளை ஏற்றிவிட்டு படுத்திருந்தார். எப்பொழுதும் போல இரவு அமைதியாக இருந்தது.