பொதுவாக இரவு நேரங்களில் எழுதுவது வழக்கம். ஓட்டத்தில் எங்கேயாவது தடைபட்டால் இணையத்தைத் துழாவலாம். புத்தகத்தைப் புரட்டலாம். குறுக்கே யாரும் எதுவும் பேச மாட்டார்கள். ஆனால் மனதில் கவலைகள் இருக்கக் கூடாது. அப்படி ஏதாவது இருந்தால் பாறாங்கல்லைத் தூக்கி நெஞ்சாங்கூட்டுக்குள் வைத்தது மாதிரி ஏதோ அடைத்துக் கொள்ளும். திங்கட்கிழமை வீட்டுக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. வருமான வரித்துறையிலிருந்து அனுப்பியிருந்தார்கள். நிசப்தம் அறக்கட்டளைக்கு 2015-16க்கு இரண்டரை லட்ச ரூபாய் வரி கட்டச் சொல்லியிருந்தார்கள். கடிதத்தைப் படித்தவுடன் பெரிதாக எதுவும் தோன்றவில்லை. ஏதேனும் தவறாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் செவ்வாய்க்கிழமை குழப்பம் அதிகமானது. ஆடிட்டர் தீபக் ஊரில் இல்லை. அவரது அலைபேசியும் தொடர்பு எல்லைக்குள் இல்லை. ஆடிட்டர் அலுவலகத்தில் அறக்கட்டளையின் கணக்குகளை பார்த்துக் கொள்ளும் யஷ்வந்த் தனது சி.ஏ தேர்வுகளுக்காகச் சென்றுவிட்டார்.
மண்டை காய்ந்தது.
சமீபத்தில் பிரசுரம் செய்திருந்த சர்வே முடிவுகளை நுணுக்கமாக வாசித்தவர்கள் கவனித்திருக்கக் கூடும். ‘நீ அடுத்தவர்களின் பணத்தை ஏமாற்றுவதாக உள்மனம் சொல்கிறது’ என்று ஒருவர் எழுதியிருந்தார். ஒரேயொரு ஆள்தான் சொல்லியிருந்தார். ஆனால் cheating என்பது குரூரமான சொல். எல்லாவற்றையும் அப்பட்டமாக பொதுவெளியில் வைத்திருப்பதாகத்தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அம்மணமாகவே நின்றாலும் அக்குளுக்குள் ஒரு ரூபாயை ஒளித்து வைத்திருக்கிறான் என்று சொல்வதற்கும் ஆட்கள் இருப்பார்கள். சொல்லிவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் ஓராளுக்கு அப்படித் தோன்றுகிறது என்று சொன்னால் ஏன் என்று யோசித்து அதையும் நிவர்த்தி செய்ய வேண்டும். ‘தற்கொலை கூட செய்து கொள்வேனே தவிர ஒரு ரூபாய் கூட அடுத்தவர்களின் பணத்தில் கை வைக்கமாட்டேன்’ என்று அன்றைக்கே எழுதலாம் என்று தோன்றியது. நல்ல விஷயங்களை வேறு மனிதர்கள் சொல்லியிருக்கும் போது உள்மனது, ஆழ்மனது என்றெல்லாம் பேசுகிற பேச்சுக்களைக் ஹைலைட் செய்ய வேண்டியதில்லை எனத் தோன்றியது. விட்டுவிட்டேன்.
இரண்டரை லட்ச ரூபாயை வரியாகக் கட்டச் சொன்னால் இவையெல்லாம்தான் மனதில் ஓடுகிறது. யாராவது எங்கேயாவது திட்டுவார்கள். திட்டுகிறவர்களை விடுங்கள். இருபது மாணவர்களின் ஒரு வருட படிப்புச் செலவு அது. வருமான வரித்துறையிடமிருந்து வரும் கேள்விகளுக்கெல்லாம் ஆபத்பாந்தவன் ஒருவர் இருக்கிறார். முரளி. பரமத்தி வேலூர்க்காரர். மும்பை வருமான வரித்துறையில் கூடுதல் ஆணையர். நேரில் சந்தித்ததில்லை. வழிகாட்டிவிடுவார். அழைத்து ‘சார் இப்படியொரு கடிதம் வந்திருக்கு’ என்றேன். ‘பெங்களூரில் ஜாய்ண்ட் கமிஷனரைப் பார்த்து பேசுங்கள்’ என்று சொல்லிவிட்டு என்னை நேரில் செல்லச் சொன்னார். வருமான வரித்துறையின் அலுவலகம் இயங்கும் யுனிட்டி கட்டிடம் எங்கள் அலுவலகத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர்கள்தான். மேலாளரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு கிளம்பிச் சென்றேன்.
இந்தர் சோலங்கி.
மராத்திக்காரர் போலிருக்கிறது. அவர்தான் இணை இயக்குநர். மிகப்பெரிய அட்டகாசமான அறை. வெயிலில் வியர்த்து விறுவிறுத்து நனைந்திருந்தேன். அறைக்குள் நுழைந்ததும் கை கொடுத்து அமரச் சொன்னார். நல்ல மனிதர். நிறையப் பேசினார். அதே அலுவலகத்தில் உதவி ஆணையராக இருக்கும் தீபக்கை அழைத்தார். அவர் தமிழர். கேரள கலெக்டர் உமேஷூக்கு கல்லூரித் தோழராம். பிஎஸ்ஜி கல்லூரி மட்டும் எத்தனை ஆட்சிப்பணி அதிகாரிகளை உருவாக்குகிறது? திரும்பிய பக்கமெல்லாம் அவர்களாகவே நிறைந்திருக்கிறார்கள்.
விவரங்களைக் கேட்டார்கள். 10B என்றெல்லாம் டெக்னிக்கலாகப் பேசினால் புரிந்து கொள்வது எனக்குக் கடினம். ‘எல்லாத்தையும் ஆடிட்டர்கிட்ட கொடுத்துடுவேன் சார்’ என்று சொன்ன பிறகு அவர்கள் புரிந்து கொண்டார்கள். ‘உங்ககிட்ட இருக்கிறதையெல்லாம் அனுப்பி வைங்க...செக் செஞ்சு பார்த்துட்டுச் சொல்லுறேன்’ என்றார் தீபக். ட்ரஸ்ட் விவகாரத்தில் பணத்தைப் பெற்றுக் கொள்வது, அதை அடுத்தவர்களுக்குக் கொடுப்பதையெல்லாம் விடவும் இதுதான் பெரிய தலைவலி. எதைப் பற்றி பேசுகிறார்கள் என்று திண்டாட வேண்டும். ‘நானே எடுத்துட்டு வர்றேன்’ என்றதற்கு ‘நீங்க வர வேண்டியதில்லை..மெயில்ல அனுப்புங்க பார்த்துக்கலாம்’ என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள்.
நேற்றிரவு முழுவதும் இதுதான் பாரமாக இருந்தது. இதையெல்லாம் செய்வதனால் திரும்பிய பக்கமெல்லாம் நல்ல பெயர் என்றில்லை. ‘அவன் விளம்பரத்துக்குச் செய்யறான்னு உன்னைச் சொல்லுறாண்டா’ என்று ஒரு ஞாயிற்றுக்கிழமையின் காலைப்பொழுதில் அழைத்து வகுப்புத் தோழன் சொன்னான். சொல்வார்கள்தான். விளம்பர தொனி வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பதுண்டு. ஆனால் தவிர்க்க முடிவதில்லை. பணம் எங்கே செல்கிறது, பயனாளிகள் குறித்து என்ன விசாரணைகளைச் செய்தோம், யார் ஒருங்கிணைத்தார்கள் என்கிற விவரத்தையெல்லாம் பொதுவெளியில் சொல்லத்தானே வேண்டும்? அதைச் சிலர் விளம்பரம் என்று பார்க்கிறார்கள். எழுதுவதைக் குறைத்தால் ‘நீ ஏமாத்துற’ என்று சொல்கிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகக் கூடும். இரண்டையும் எப்படி சமநிலையில் வைத்துக் கொள்வது? ரஜினி மாதிரி சொன்னால் ஆண்டவனுக்குத்தான் தெரியும்.
இரவு பதினோரு மணிக்கு மின்னஞ்சலைத் திறந்த போது ‘நீங்க அனுப்பி வெச்சது வேற..நாங்க கேட்டது வேற’ என்று எழுதி வேறு சில ஆவணங்களையும் தீபக் கேட்டிருந்தார். எதைச் செய்யவும் தோன்றவில்லை. நேற்றிரவு பெங்களூரில் மழை. வெறுமனே ஜன்னலருகில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
இன்று காலையில் ஆடிட்டர் ஊருக்கு வந்துவிட்டார். அலுவகலகத்தில் இன்றும் அனுமதி வாங்கிக் கொண்டு பார்க்கச் சென்றிருந்தேன். ‘ஒண்ணும் பிரச்சினையில்லை..rectification க்கு விண்ணப்பித்துவிடலாம்’ என்றார். அவர் எப்பொழுதுமே இயல்பான மனிதர். சிரித்துக் கொண்டே பேசுவார். அவர்களுக்கு இதெல்லாம் துரும்பு மாதிரி. நமக்கு அப்படியா?. எறும்பு தலை மீது வைக்கப்பட்ட பனம்பழம் மாதிரி. கண்டதும் மண்டைக்குள் ஓடும். இப்பொழுதுதான் கொஞ்சம் தெளிவாகியிருக்கிறது.
‘மத்தவங்க எப்படி சார் சமாளிக்குறாங்க?’ என்றேன்.
‘எல்லாத்தையும் தலையோட நிறுத்திக்குங்க...நெஞ்சுக்கு கொண்டு போனீங்கன்னா கஷ்டமாத்தான் தெரியும்’ என்றார். ஆயிரம் அர்த்தங்கள். குடும்பம் தவிர வேறு எதையுமே மனதுக்கு எடுத்துச் செல்லக் கூடாது. வேலை, சமூகம் என்று வீட்டுக்கு வெளியில் இருப்பதையெல்லாம் தலையோடு நிறுத்துவதுதான் அறிவுடைமை. நெஞ்சுக்கு எடுத்துச் சென்றால் சிரமம்தான்.
சிரிப்புமில்லாமல் சிந்தனையுமில்லாமல் தலையை ஆட்டிவிட்டு வந்துவிட்டேன்.
சிரிப்புமில்லாமல் சிந்தனையுமில்லாமல் தலையை ஆட்டிவிட்டு வந்துவிட்டேன்.