May 18, 2017

ரஜினி

2004 ஆம் ஆண்டில் சென்னை வேளச்சேரியில் ஒரு வருடம் இருந்தேன். அப்பொழுது விஜயகாந்த் அரசியலுக்கு வருவது போல பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் பள்ளிக்கரணையில் படப்பிடிப்பு ஒன்று நடந்து கொண்டிருந்தது. எங்கள் ஊரில் படப்பிடிப்பில் வேடிக்கை பார்ப்பது பெரிய விஷயமே இல்லை. அந்தக் காலத்தில் மானாவாரியாக படப்பிடிப்பு நடைபெறும் என்பதால் பெரிதாகக் கெடுபிடி காட்டமாட்டார்கள். ஆனால் சென்னையில் அப்படியில்லை. அழிச்சாட்டியம் செய்தார்கள். எப்படியோ அருகாமையில் சென்றுவிட்டேன். ‘நீங்க அரசியலுக்கு வரப் போறதா பேச்சு இருக்கு..உங்ககிட்ட பேசணும்’ என்றேன். கட்டைக்குரலில் ‘அப்படியா..நாளைக்கும் இங்கதான் ஷுட்டிங் இருக்கும்...பேப்பர்ல எழுதிக் கொடுங்க’ என்றார். விடிய விடிய ஏழெட்டு பக்கங்களுக்கு எழுதிக் கொண்டு போய் கொடுத்தேன். அதில் நேரடியாக சில விஷயங்களை எழுதியிருந்தேன். ‘தொண்ணூறுகளில் ரஜினிக்கு இருந்த மக்கள் செல்வாக்கோடு ஒப்பிடும் போது உங்களுக்கு அதில் பாதி கூட இல்லை என்பதுதான் உண்மை’ என்கிற மாதிரி நேரடியாக சில விமர்சனங்கள். அவர் பக்குவமான மனிதர். ஜீப்பிலேயே அமர்ந்து படித்துவிட்டு எனது அலைபேசி எண்ணை தாளின் பின்பக்கமாக குறித்துக் கொண்டார். 

பனிரெண்டு வருடங்களுக்கு முன்னால் எனது தோற்றத்தை நினைத்துப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. பொடியன். பொருட்படுத்தியிருக்கவே வேண்டியதில்லை. இரண்டொரு நாள் கழித்து ‘நாங்க கேப்டன் ஆபிஸ்ல இருந்து பேசறோம்..நன்றி சொல்லச் சொன்னார்’ என்றார்கள்.  நடிகர் சங்கத்தில் அவர் செய்த செயல்பாடுகள், அரசியலில் நுழைந்த சமயத்தில் அவர் பேசிய பேச்சுக்களையெல்லாம் கவனிக்கும் போது தெளிவாகப் பேசியதை கவனிக்கலாம். 

விஜயகாந்த் பற்றி எழுதுவது நோக்கமில்லை.  ரஜினியை ஒப்பிடும் போது விஜயகாந்த எவ்வளவோ தேவலாம். ஏதோவொரு படத்தில் கூட விஜயகாந்த் ‘அரசியலுக்கு வர்றதுன்னா வந்துடுவேன்...வருவேன் வரமாட்டேன்னு படம் காட்டிட்டு இருக்க மாட்டேன்’ என்று வசனம் பேசுவார். அதே போல வந்துவிட்டார். விசாரித்தவரையிலும் அவருக்கு நரம்பியல் சம்பந்தப்பட்ட உடல் உபாதை இருக்கிறது. அது அவரது பேச்சைக் குழப்பி சிந்தனையை அடிக்கடி திசை மாற்றுகிறது. இதை வாகாகப் பயன்படுத்திக் கொண்டு குடிகாரன் என்று பேச்சு எழும்பியது. அவர் அப்பொழுதே ‘இதுதான் எனக்கு பிரச்சினை’ என்று சொல்லியிருந்தால் ஒருவேளை மக்கள் புரிந்து கொண்டிருக்கக் கூடும். ஆனால் அவர் மறைத்தார். பெயரைக் கெடுத்து விஜயகாந்த்தின் அரசியல் அத்தியாயம் முடிக்கப்பட்டுவிட்டது.

ஜெயலலிதாவின் மரணம், கருணாநிதியின் உடல்நிலை உள்ளிட்டவற்றால் தமிழகத்தில் உண்டாகியிருக்கும் அரசியல் வெற்றிடத்தை ரஜினியை வைத்துக் கொண்டு நிரப்பிவிடலாம் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை ரஜினி அரசியலுக்கு வருவதென்றால் தனியாக வருவதற்கெல்லாம் லாயக்கில்லாத ஆள். அவ்வளவு தைரியமிருந்தால் எப்பொழுதோ வந்திருப்பார். இவ்வளவு காலமாக ஜெயலலிதாவும் கருணாநிதியும் ராமதாஸூம் அவரை வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருந்தார்கள். இப்பொழுது அவருக்கு அரசியல் ஆசை உண்டாகியிருக்குமானால் அவரது பின்னால் வலுவாக யாரோ நிற்கிறார்கள் என்று அர்த்தம். யாரோ என்ன யாரோ- பாஜக. இதைப் புரிந்து கொண்ட காங்கிரஸ் நக்மாவை தூதாக அனுப்பியது. அது பெரிதாக எடுபடவில்லை போலிருக்கிறது. ரசிகர் சந்திப்பு, ஆண்டவன், அரசியல் என்று மீண்டும் டபாய்க்க ஆரம்பித்திருக்கிறார். 

ஜனாதிபதி தேர்தல் வரைக்கும் ஆண்டவனே நினைத்தாலும் தமிழக அரசு கவிழாது. அதன் பிறகு எத்தனை நாட்களுக்குத் தாக்குப்பிடிக்கும் என்பது தமிழகத்தில் இருக்கும் யாருக்கும் தெரியாது. இடைப்பட்ட காலத்தில் தம்மை வலுவாக்கிக் கொள்ளவும் தமது பலத்தைச் சோதித்துக் கொள்ளவும் சாம பேத தான தண்டத்தையெல்லாம் பாஜக கமுக்கமாக உருட்டிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கால் பதிக்க பாஜகவுக்கு ஒரு கவர்ச்சியான முகம் தேவை. அதற்காக நகர்த்தப்படுகிற காயாக ரஜினி இருக்க வேண்டும். ரஜினியை வைத்துக் கொண்டு ஆட்சியைப் பிடிக்க வேண்டியதில்லை. கணிசமான வாக்குகளை வாங்கினால் போதும். சில எம்.எல்.ஏ சீட்டுக்களை வென்றால் போதும். தம் கட்டிக் கொள்வார்கள்.

‘ஒருத்தனுக்கு நிற்கவே வக்கில்லையாம்’ என்று ரஜினி பேசிய அதே வசனம் அவருக்கும் பொருந்தும். ரசிகர்களுடன் கூட நின்று படம் எடுத்துக் கொள்கிற உடல் தெம்பு கூட அவரிடமில்லை. தேர்தல், பிரச்சாரம் என்பதெல்லாம் சாத்தியமேயில்லை. ‘நீங்க முகத்தை மட்டும் காட்டுங்க..மத்ததெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்’ என்று சொல்லித்தான் அவரை இழுத்து வர முடியும்.

ரஜினிக்கு தமிழகத்தின் பிரச்சினைகள் பற்றி என்ன தெரியும்? தமிழனின் முக்கியமான பிரச்சினைகளில் அவரது நிலைப்பாடுகள் என்ன? என்றெல்லாம் கேட்கிறார்கள். அவருக்கே தெரியுமா என்று தெரியவில்லை. ஆனால் அதைக் காரணமாக வைத்துக் கொண்டு ‘நீ அரசியலுக்கு வரக் கூடாது’ என்று சொல்ல வேண்டியதில்லை. இன்றைக்கு வாக்கு வாங்குகிற அரசியல்வாதிகளில் யார் கொள்கைகளின் அடிப்படையில் அரசியல் நடத்துகிறார்கள்? முக்கால்வாசி ஆட்கள் சொத்து சம்பாதிக்க அரசியல் நடத்துகிறார்கள். மீதமிருக்கிறவர்கள் இருக்கிற சொத்தைக் காப்பாற்றிக் கொள்ள அரசியல் நடத்துகிறார்கள். அதனால் ‘உனக்கு கொள்கை இருக்கா’ என்று ரஜினியை மட்டும் பார்த்துக் கேட்பது அபத்தம். நம் மக்களுக்கு கொள்கையிருந்தால் ஏன் உள்ளே வருகிறவனைப் பார்த்து இந்தக் கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது?

தமிழகத்தின் சாபக்கேடே அதுதானே? பணமும் கவர்ச்சியும்தான் இங்கே வாக்குகளை ஈர்க்கின்றன. ரஜினி மட்டும் என்ன இனாவானாவா? அரசியலுக்கு வந்தால் வந்துவிட்டுப் போகட்டும்.

ஒருவேளை படத்துக்கு படம் அரைப்பது போல இப்பொழுதும் மிளகாய் அரைக்கிறாரோ என்றும் தோன்றாமல் இல்லை. எரிச்சல்தான் மிஞ்சுகிறது.. எரிச்சல் பட்டு என்ன ஆகப் போகிறது? ரஜினிக்கும் அது தெரியும். மேடையிலேயே பேசுகிறார். ‘சினிமா வியாபாரத்துக்காக அரசியல் பேசறேன்னு சொல்லுறாங்க’ என்று. தெரிந்தே செய்கிற ஆளை என்ன செய்ய முடியும்? பாட்ஷா படம் வந்து இருபத்தைந்து வருடங்கள் ஆகப் போகிறது. அவர் மேடையில் பேசியதை நம்பி சாரி சாரியாக வாகனங்களில் கிளம்பிச் சென்ற ரசிகர்கள் அவருக்கு வியாபார எண்ணெய்யை ஊற்றி பிரகாசத்தைக் காட்டினார்கள். சரியாக நூல் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு படத்திலும் அல்லது பட வெளியீட்டுக்கு முன்பாகவும் திரியை மட்டுமே தீண்டி விட்டுக் கொண்டிருக்கிறார். 

தமிழகத்தின் அரசியலும் சினிமாவும் மிகச் சிறந்த வேடிக்கைக் களம். முட்டாள்களும் பைத்தியகாரர்களும் அயோக்கியர்களும் நம்மை எல்லாவிதத்திலும் ஏமாற்றுவார்கள். ‘எங்கள் மக்கள் தெளிவானவர்கள்’ என்று அவர்களே சொல்லி உசுப்பேற்றியும்விடுவார்கள். தெளிவானவர்கள் என்று நம்மை நாமே நம்பிக் கொண்டு நாமும் அந்த வேடிக்கையை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருப்போம். வேடிக்கை காட்டியவன் நம் முதுகு மீது காலை வைத்து மேலே ஏறிச் சென்ற பிறகு அடுத்தவன் காட்டும் வேடிக்கையைப் பார்க்கத் தொடங்கிவிடுவோம்.

கீர்த்தி சுரேஷ் வாழ்க. நயன்தாரா டபுள் வாழ்க.