May 16, 2017

ஐ.ஏ.எஸ்ன்னா சும்மாவா?

இக்பால்சிங் தாலிவால்- என் பால்ய பருவத்தின் நாயகன். இரண்டு வருடங்கள் கோபியில் துணை ஆட்சியராக இருந்தார். ‘இருந்தா இப்படி இருக்கணும்யா’ என்று பேச வைத்திருந்தார். எனது தமிழாசிரியர்தான் அவருக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தார் என்பதால் அவ்வப்போது என்னையும் அழைத்துச் செல்வார். ஆட்சியர் குடியிருப்பு வளாகத்தில் நான் விளையாடிக் கொண்டிருப்பேன். பாடத்தை முடித்துவிட்டு வந்து ‘இருந்தா இப்படி பெரிய அதிகாரியா இருக்கணும்டா’ என்று பாரிமணியம் ஐயா சொன்னது நினைவில் இருக்கிறது. அம்மாவும் வருவாய்த்துறையில் பணியாற்றியதால் இக்பால் சிங் பற்றி நிறையச் சொல்வார். எல்லாமுமாகச் சேர்ந்து இக்பால்சிங் தாலிவாலை ஹீரோ ஆக்கியிருந்தது.

தமிழகத்தில் வட மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதுவும் சற்று நேர்மையாளராக இருந்தால் பணியாற்றுவது சிரமம் என்பார்கள். மூலையில் உட்கார வைக்கப்படுவதுண்டு. ‘உங்க சங்காத்தமே வேண்டாம்’ என்று கிளம்பிவிடுகிற அதிகாரிகளின் எண்ணிக்கையும் கணிசம். மதுரையைக் கலக்கிய அன்சுல் மிஸ்ரா எங்கேயிருக்கிறார் என்று தேடினால் மத்திய விமானத்துறை அமைச்சருக்கு செயலாளராகச் சென்றுவிட்டார் போலிருக்கிறது. கோபியைக் கலக்கிய இக்பால்சிங் தாலிவால் எங்கே என்று தேடினால் அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் பொருளாதார ஆராய்ச்சியாளராக இருக்கிறார்.

‘ஏன் சார் அமெரிக்கா போய்ட்டீங்க?’ என்று கேட்டு இரண்டு வருடங்களுக்கு முன்பாக மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். பாரிமணியம் பற்றியெல்லாம் வரி வரியாக எழுதிவிட்டு என் கேள்விக்கு பதில் சொல்லாமல் தவிர்த்திருந்தார். யூகித்துக் கொள்ள வேண்டியதுதான். இங்கே வேலை செய்வது சாதாரணக் காரியமில்லை. கூனிக் குறுக வேண்டும். வளைத்து வளைத்துச் சம்பாதித்துக் கப்பம் வேண்டும். இக்பால் சிங் தாலிவால் பணியாற்றிய அதே அலுவலகத்தில் பல வருடங்களுக்குப் பிறகு ஒரு கோட்டாச்சியரைச் சந்திக்கச் சென்றிருந்தோம். அம்மாவும் நானும். ஓய்வு பெறுவதற்கு ஒன்றரை வருடம் இருக்கும் போதே விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்திருந்தார். ‘போதும் ரிசைன் செஞ்சுட்டு எங்க கூட வந்துடுங்க’ என்று நாங்கள்தான் சொல்லியிருந்தோம். இப்பொழுதெல்லாம் கிராம நிர்வாக அலுவலர் பணி சல்லை பிடித்த வேலை. 

அது சம்பந்தமாகத்தான் அம்மாவை அழைத்துக் கொண்டு ஆர்.டி.ஓ அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். அந்த ஆர்.டி.ஓ சரியான ஊழல் பேர்வழி. நாங்கள் சென்றிருந்த போது நான்கைந்து வருவாய்த்துறை ஊழியர்கள் வெவ்வேறு காரணங்களுக்காக நின்றிருந்தார்கள். கிட்டத்தட்ட பிச்சைக்காரர்களுக்குச் சமானமாகத்தான் அந்த ஆர்.டி.ஓ அவர்களை நடத்தினார். எனக்கு கனகோபம். நாகர்ஜூனாவுக்கு நரம்பு விடைக்கும். நானெல்லாம் பற்களைத்தான் கடிக்க முடியும். ‘வாங்கம்மா போலாம்’ என்றேன். அந்த ஆள் ஒரு மார்க்கமாக முறைத்தார். அம்மா நடுங்கிவிட்டார். ‘நீ போ நான் பேசிட்டு வர்றேன்’ என்று முகத்தை உர்ரென்று காட்டினார். நகர்ந்துவிட்டேன். அடுத்த அரை மணி நேரம் கழித்து வந்து ‘ரிலீவ் பண்ண முடியாதாம்..காசு எதிர்பார்க்கிறான் போலிருக்கு’ என்றார். அதன்பிறகு அம்மாவும் அப்பாவும் அப்பொழுது வருவாய்த்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையனைச் சந்தித்து விவரத்தைச் சொன்னார்கள். இந்த மாதிரி விவகாரங்களில் செங்கோட்டையனை அடித்துக் கொள்ளவே முடியாது. ஒரே அலைபேசி அழைப்புதான். அடுத்த நாள் அம்மாவை அழைத்து உத்தரவைக் கொடுத்துவிட்டார்கள். 

வெகு நாட்களுக்குப் பிறகு. இக்பால்சிங் தாலிவால் பற்றி பேசுகிற வாய்ப்புக் கிடைத்தது. ஞாயிற்றுக்கிழமையன்று உமேஷ் பெங்களூரு வந்திருந்தார். உமேஷ் ஐஏஎஸ் அதிகாரி. கேரளா பிரிவு. முசெளரியில் ஒரு வருடப் பயிற்சிக்குப் பிறகு பாலக்காட்டில் எட்டு மாதங்களாக உதவி ஆட்சியராக இருந்தார். இனி மீண்டும் இரண்டு மாதம் முஸெரியில் பயிற்சி. இடைப்பட்ட ஏழெட்டு நாட்கள் விடுமுறையில் இரண்டு நாட்கள் பெங்களூரு வந்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசுவதாகத் திட்டமிட்டுக் கொண்டோம். சர்ச் தெருவுக்கு வந்துவிடுவதாகக் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். உமேஷ் எழுதுவது, பேசுவது என எல்லா இடங்களிலும் சுஜாதா இருப்பார். அவரது தீவிர வாசகர். சுஜாதா பெங்களூரில் இருந்த போது எங்கள் அலுவலகக் கட்டிடத்தில் வெகு காலம் பணி புரிந்திருக்கிறார் என்பதால் அங்கே வர வைத்துவிடலாம் எனத் திட்டமிட்டிருந்தேன்.

வண்டியை அலுவலகத்தில் நிறுத்திவிட்டு சர்ச் தெருவுக்குச் சென்ற போது பையைத் தோளில் போட்டுக் கொண்டு சர்ச் தெரு ப்ளாஸம் புத்தகக் கடையில் வெகு சாதாரணமாக உமேஷூம், ஸ்வாதிகாவும் புத்தகம் வாங்கிக் கொண்டிருந்தார்கள். உமேஷைச் சந்திப்பதற்காக ஸ்வாதிகாவும் வந்திருந்தார். அவர்கள் இருவரும் ஒரே கல்லூரியைச் சார்ந்தவர்கள். கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக்கல்லூரி.


இரவு உணவை உண்ணும் போதுதான் இக்பால்சிங் தாலிவால் பற்றி பேச்சு வந்தது. ‘அவர் எங்களுக்கு க்ளாஸ் எடுத்தார்’ என்றார். 

உமேஷ் மாதிரி எட்டு மாதம் அந்தந்த மாநிலங்களில் பயிற்சி முடித்து மீண்டும் முஸெரி செல்கிறவர்களை இனி இரண்டு மாதங்களுக்குத் தட்டி நிமிர்த்தி அதற்கடுத்த மூன்று மாதங்களுக்கு மத்திய அரசின் துறையொன்றில் உதவி செயலாளராக நியமிப்பார்கள். அதன் பிறகு மீண்டும் அவரவர் மாநிலங்களுக்கு வந்து துணை ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொள்வார்.

இக்பால்சிங், ராமச்சந்திர குஹா, விஜயகுமார் உள்ளிட்டவர்கள் தமக்கு வகுப்பெடுத்ததைப் பற்றி உமேஷ் சொல்லிக் கொண்டிருந்தார். என்ன இருந்தாலும் ஐ.ஏ.எஸ் பயிற்சி அது. பெருந்தலைகளை வர வைத்து பயிற்சி கொடுத்து ஒவ்வொருவரையும் செதுக்கித்தான் வெளியில் அனுப்புவார்கள்.

இக்பால்சிங் பற்றியேதான் நினைப்பு ஓடிக் கொண்டிருந்தது. ‘அந்தக் காரணம் இந்தக் காரணம்...அதனால அமெரிக்கா போய்ட்டேன்’ என்றாராம். என்ன காரணம் என்று நமக்குத் தெரியாதா? இக்பால்சிங் தாலிவால் நேர்மையான அதிகாரி. இங்கே கொடுக்கப்பட்ட அழுத்தமும் சூழலுமே அவரை தமது கனவுப்பணியை விட்டு விலகச் செய்துவிட்டது.  உமேஷ் மாதிரியான இளம் அதிகாரிகளுக்கு இக்பால்சிங் தாலிவாலை அழைத்து ஏன் பயிற்சி கொடுக்கிறார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இக்பால்சிங் மிகச் சிறந்த அறிவாளி. அது உள்ளிட்ட எவ்வளவோ காரணங்கள் இருக்கக் கூடும். ‘இந்தப் பணியில் இப்படியும் கூட சலிப்பு வரலாம்’ என்று காட்டுவதற்காகவும் கூட இருக்கலாம். இல்லையா? தமிழகத்தில் மட்டுமே அழுத்தமிருக்கிறது என்று அர்த்தமில்லை. தமிழகத்திலும் இருக்கிறது என்று அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

உமேஷ் நிறையப் பேசினார். பயிற்சி, தனது பணி, தினசரி தம்மைத் தொடர்பு கொள்ளும் உள்ளூர் அரசியல்வாதிகள், பாலக்காட்டிற்கு அழைத்து வருவதற்காக நடிகர் விஜயை அணுகியது, கேரள முதல்வர்களைப் பற்றி, முஸெளரி குறித்து என்று நிறைய. ஸ்வாதிகாவும் நானும் கேட்டுக் கொண்டிருந்தோம். உமேஷ் எந்த பந்தாவுமில்லாத வெகு இயல்பான மனிதர். இத்தகைய மனிதர்கள் சிக்கும் போது அவர்களை பேசவிட்டு நாம் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். 

கேரளாவுக்கு சப்-கலெக்டராக வரட்டும் என்று நினைத்துக் கொண்டு திரும்பினேன். ஒரு வாரத்திற்கான துணிமணிகளை பெட்டியில் அடைத்துக் கொண்டு போய் அவருடனேயே தங்கி ராவு ராவென்று ராவிவிடலாம். அவர்கள் கிளம்பிய பிறகு வண்டியை எடுப்பதற்காக அலுவலகத்திற்கு வந்த போது சுஜாதா நினைவுக்கு வந்தார். அவர் எழுதிய ஒரு வரிதான் உமேஷுக்கு ஐஏஎஸ் கனவுக்கான தீ. ‘எதிர்கால இந்தியா ஐஏஎஸ் அதிகாரிகளின் கைகளில் இருக்கிறது’ என்று எங்கேயோ எழுதியிருக்கிறார். ஒவ்வொரு முறையும் அந்த வரியைத்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறார். சுஜாதாவுக்குத் தெரிந்திருந்தால் உண்மையிலேயே மகிழ்ந்திருப்பார் ஆனால் அந்த மகிழ்ச்சியை வெறும் ஒன்றரை மில்லிமீட்டர் புன்னகையில் மட்டும் காட்டியிருப்பார் ஒல்லிப்பிச்சான் வாத்யார்.