May 30, 2017

இந்த நாடும் நாட்டு மக்களும்...

முன்பொருமுறை இந்திய தேசியம் குறித்து எழுதிய போது கோ.வெ.குமணனுக்கு உவப்பில்லை. அவர் தமிழுணர்வாளர். ‘இதைப் படி’ என்று சொல்லி ஒரு புத்தகத்தைக் கொடுத்திருந்தார். வழக்குரைஞர் கு.ச.ஆனந்தன் எழுதிய ‘இந்தியாவில் தேசிய இனங்களும் தமிழ்த் தேசியமும்’ என்ற அப்புத்தகம் இப்பொழுது அச்சில் இல்லை. பொதுவாக அரசியல், வரலாற்றுப் புத்தகங்களை வாசிக்கும் போது நம்முடைய முன்முடிவுகளையும் உணர்வுகளையும் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு வாசிக்க வேண்டும் என நினைப்பேன். அப்படி வாசிக்கும் போதுதான் நமக்குள் கேள்விகள் உருவாகும். கேள்விகளுக்கான பதில்களைத் தேடுவோம். அதுதான் முடிவுகளையும் தீர்வுகளையும் நோக்கி அழைத்துச் செல்லும். 

மெட்ராஸ் ராஜதானியில் 1909 ஆம் ஆண்டு புருஷோத்தம நாயுடு, சுப்பிரமணியம் என்ற இரண்டு வழக்குரைஞர்கள் ‘பார்ப்பனரல்லாத சங்கத்தை’ உருவாக்கினார்கள். அதன் பிறகு 1912 ஆம் ஆண்டில் அரசு ஊழியர்களில் சிலர் சேர்ந்து சென்னை ஐக்கிய சங்கம் (Madras United League) என்ற அமைப்பை உருவாக்குகிறார்கள். அந்தக் காலத்தில் அரசுப் பணிகள் முழுவதையும் பார்ப்பனர்கள் ஆக்கிரமித்திருந்தார்கள் அல்லவா? அவர்களிடம் போராடுவதற்காகத் தொடங்கப்பட்ட இச்சங்கத்திற்கு டாக்டர்.சி.நடேசன் உதவிகளைச் செய்து செயலராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். 1913 ஆம் ஆண்டில் இதன் பெயரை திராவிடச் சங்கம் என்று மாற்றினார்கள். 

அடுத்த இரண்டாண்டுகளில் (1915) அன்னிபெசண்ட் அம்மையார் ஹோம் ரூல் இயக்கத்தைத் தொடங்கினார். பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் முதலானவர்கள் ‘இந்த இயக்கம் பார்ப்பனலர்ல்லாதவர்களுக்கு அநீதி விளைவிக்கும் அமைப்பு’ என்று சொல்லி அடுத்தாண்டில் (1916) தென்னிந்திய மக்கள் சங்கத்தைத் தொடங்கினார்கள். இச்சங்கத்தின் சார்பில் 1917 ஆம் ஆண்டில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற அரசியல் அமைப்பை ஆரம்பித்தார்கள். இதுதான் நீதிகட்சி (Justice Party) என்று அழைக்கப்பட்டது.

(டி.வரதராஜூலு நாயுடு தொகுத்த ‘நீதிக்கட்சி இயக்கம் 1917’ என்ற புத்தகத்தில் அதன் தொடக்க ஆண்டுச் செயல்பாட்டைத் தெரிந்து கொள்ளலாம்.)

தமிழகத்தின் இன்றைய அரசியல் பார்ப்பனர்களுக்கு எதிராகத்தான் தொடங்கியது. நீதிக்கட்சிக்குப் பிறகு தொடங்கப்பட்ட சென்னை மாகாண சங்கம் (ஈ.வே.ரா துணைத் தலைவர்), திராவிடர் கழகம், திமுக என்று நீள்கிற வரலாற்றின் துளி சாராம்சத்தையாவது நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அந்தந்தக் காலகட்டத்தில் அந்தந்தச் சங்கங்களுக்கான தேவை என்ன? ஏன் தொடங்கினார்கள்? எப்படிச் செயலாற்றினார்கள்? அந்தச் சங்கங்கள் எப்படி உருமாறின என்பதையெல்லாம் விளங்கிக் கொள்வதுதான் நமக்கான இன்றைய தேவை என்ன என்பதையும் அதற்கான தீர்வுகள் என்ன என்பதையும் நோக்கி நம்மை நகர்த்தும்.

அரசியல் வரலாறுகள், முன்னெடுத்த அமைப்புகள் உள்ளிட்டவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளும் போதும் அன்றைய காலகட்டத்தில் உலக அரசியல் என்னவாக இருந்தது, தேசிய அரசியல் எப்படி இயங்கியது, இன்றைக்கு சூழல் எப்படி மாறியிருக்கிறது என்பதையெல்லாம் கூட உணர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. தாராளமயமாக்கலும், உலகமயமாக்கலும் வேரூன்றிக் கிடக்கும் இந்தக் காலகட்டத்தில் அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ பலமில்லாத ஒரு நாடு சக்திவாய்ந்த நாடுகளுக்கு எடுபிடியாக உருக்கொள்ள எல்லாவிதமான சாத்தியங்களும் இருக்கின்றன. நம்மிடையே புரையேறிக் கிடக்கும் ஊழலையும், அரசியல் புரிதல் இல்லாத பெரும்பான்மை சாமானிய மக்களையும் வைத்துக் கொண்டு ஒரு தேசத்தைக் கட்டமைப்பது என்பது சாதாரணக் காரியமில்லை. 

கு.ச.ஆனந்தனின் ‘இந்தியாவில் தேசிய இனங்களும் தமிழ்த் தேசியமும்’ புத்தகமானது எடுத்தவுடனேயே, ‘மொழிவழித் தேசிய விழிப்புணர்ச்சி’ வளர்ந்து பரவத் தொடங்கிய போது அதை முறியடிக்க ‘இந்தியத் தேசியம்’ மற்றும் ‘மதவழிப்பட்ட வெறித்தன்மை’(Religious Fanaticism) தொடர்ந்து வளரலாயிற்று என்று ஆரம்பமானாலும் தமிழ்த் தேசிய வரலாறு, அமைப்புகள், தலைவர்கள் என பல தரப்பையும் விரிவாக விவரித்துவிட்டு புத்தகம் இவ்வாறு முடிகிறது-

தமிழ் தேசிய இனம் விடுதலை பெறுவதற்கு உரிய தீர்வுகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1. சுய நிர்ணய உரிமை  (Right of self determination)
2. முழுத் தன்னாட்சி
3. தனித் தமிழ்நாடு

(அண்ணாவின் காலத்தில் தீவிரமாக இருந்த திராவிட நாடு என்ற வாதம் தொண்ணூறுகளின் இறுதியில் தமிழ்த் தேசியம் என்பதாகத்தான் இருந்தது. அப்பொழுது நிறைய இயக்கங்களும் இந்தக் கோரிக்கையை முன்வைத்துச் செயலாற்றிக் கொண்டிருந்தன. ஈழப்போர் உக்கிரமடைந்த பிறகு  தமிழ்த் தேசியம் என்பதை ஒரு சிலக் குழுக்கள் பிடித்துக் கொள்ள, திராவிட அரசியல் கட்சிகள் திராவிட நாடு என்ற கொள்கையைப் பற்றிக் கொண்டன. கு.ச.ஆனந்தன் அந்தக் காலத்துத் திமுகக்காரர். இந்தப் புத்தகத்திற்கு திரு.க.அன்பழகன் நீண்ட கருத்துரையை எழுதியிருக்கிறார். அத்தகைய புத்தகத்திலும் கூட முன்வைக்கப்படும் தீர்வுகளில் திராவிடநாடு என்பது இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும்)

சுய நிர்ணய உரிமை என்பது தமிழ் தேசிய மக்களின் பிறப்புரிமை. ஆனால் அதில் ஒரு கூறான ‘பிரிந்து போகும் உரிமை’ என்பது சோவியத் உருசியா உருக்குலந்த பின்னர், புதிய சமதர்ம நாடுகள் ஒவ்வொன்றாக வீழ்ந்த பின்னர் இன்று கேள்விக்குறியாக உள்ளது; மறு ஆய்வுக்கும் ஆட்படுகிறது.

தனி நாட்டுக் கோரிக்கையில் பல்வேறு அக, புறச் சிக்கல்களைச் சந்திக்க வேண்டு வரும். வட கிழக்கு மாநிலங்களில் தனிநாடு கோரிக்கை, காசுமீர, பஞ்சாப் பிரிவினை வேட்கை, தமிழ் ஈழத்தின் கடுமையான போர், இவையனைத்தும் தெளிவான பட்டறிவைத் தருகின்றன. இவை இறுதியில் தன்னுரிமையைக் கூட ஏற்கும் நிலையில் உள்ளன. பன்னாட்டு முதலாளியத்தின் நச்சுக் கொடுக்குகள் சின்னஞ்சிறு நாடுகளைப் பொருளியல் துறையில் கொட்டிச் சுரண்டி அடிமை கொள்ளும் வாய்ப்பை மறுக்க இயலாது.

இந்நிலையில் தனிநாட்டைத் தவிர்க்கலாம்; தானே முடிவெடுக்கும் உரிமையைக் கோரலாம்; இந்தியா புதியதோர் அரசமைப்பின் மூலமாக மெய்யான ‘குடியரசுக் கூட்டுடமைக் கூட்டாட்சியாக’ (Federal) அமையும் வாய்ப்பேற்பட்டால் ‘முழுத் தன்னாட்சியை’ முதல் நிலையில் பெறலாம். 

எதிர்க்குரல் எழுப்பும் போது கூட இத்தகைய சாத்தியமுள்ள தீர்வுகளைத்தான் முன்வைக்க வேண்டும். கு.ச.ஆனந்தன் மாதிரியானவர்கள் முன்வைக்கும் தீர்வுகள் குறித்தான ஆழமான விவாதங்கள் நம்முடைய புரிதல்களை விரிவாக்கி எதிர்கால செயல்பாடுகளுக்கான வழிவகையைக் காட்டக் கூடும். இத்தகைய தீர்வுகளுக்கு ஏன் வருகிறார்கள் என்பது பற்றி உரையாடல்களை நடத்தலாம். முன்முடிவுகளற்ற, சார்பில்லாத, அறிவுப்பூர்வமான வாதப் பிரதிவாதங்கள் வெகுஜனப்பரப்பிலும் தெளிவை உண்டாக்கும்.

முரட்டுக் கூச்சலாக அரற்றுவதால் கண்டபலன் என்ன? அடுத்தவர்கள் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் எழுதுகிறார்கள் என்பதற்காக நாமும் கூச்சலிடுவதால் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது?

ஒருவேளை இன்றைக்கே நாட்டைப் பிரித்தாலும் கூட மணற்கொள்ளையர்களும், நாட்டை அடமானம் வைக்கும் அயோக்கியர்களும்தான் ஆட்சிக்கு வருவார்கள். நல்லவர்களையா ஆட்சியில் அமர்த்தப் போகிறோம்? முதலில் மாற்றத்தை நம் மக்களிடம் உருவாக்குவோம். நமக்காகக் வலுவான குரல் எழுப்பவர்களுக்கு இடமளிப்போம். ஆட்சித் தலைமை தானாக உருமாறும். அப்படியில்லாமல் மேம்போக்காக ஒரேயொரு நாள் மட்டும் #Dravidanaadu என்று எழுதிவிட்டு மறுநாள் இன்னொரு விவகாரத்தைப் பற்றிப் பேசத் தொடங்கி ‘ஆட்சியாளர்களைத் தெறிக்க விட்டுட்டோம்ல’ என்று பீற்றிக் கொள்வதால் பைசா பிரயோஜனம் கூட இருக்காது. இவையெல்லாம் அதிகார மட்டத்தில் இருப்பவர்களுக்கு எறும்பு கடிப்பதைப் போல கூட இல்லை- ஊர்வது போலத்தான். அசைக்கக் கூட முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும்.

‘தேசியம்’ பற்றிப் பேசத் தொடங்கினாலே ‘உன் மேல சந்தேகம் இருக்குதுடா’ என்று வருகிறவர்களை வாழ்த்துகிறேன். என்னிடம் மறைமுக நோக்கங்கள் (Hidden agenda) எதுவுமில்லை. என் நிலைப்பாட்டுக்கான காரணங்களை தொடர்ந்து எழுதியபடியேதான் இருக்கிறேன். இனியும் புத்தகங்களை வாசித்தும், தரவுகளைச் சேகரித்தும் முன் வைக்கிறேன். விவாதிப்பதற்கும் முடிவில் தேவைக்கேற்ப என்னை மாற்றிக் கொள்வதற்கும் மனத்தடைகள் ஏதுமில்லை. ஆனால் முரட்டுத்தனமாகவும், உணர்ச்சிவசப்பட்டும், யாரோ சிலர் சொல்வதை நம்பி வால் பிடித்துக் கொண்டிருப்பவர்களுடனுன் பேச எனக்கு ஒன்றுமில்லை.

இந்த நாடும் நாட்டு மக்களும் வாழ்வாங்கு வாழ்க!