May 30, 2017

திராவிட நாடு

திராவிட நாடு ட்விட்டரில் ‘ட்ரெண்டிங்’ ஆகிறது என்று சிலர் உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? கேரளாக்காரன் மாட்டுக்கறிக்கு எதிராகக் குரல் எழுப்ப தனக்குத் துணைக்கு ஆள் சேர்த்துக் கொண்டிருக்கிறான். அதைப் பார்த்துத்தான் ‘ஆஹா அண்ணா கண்ட கனவு இதுவல்லவா’ என்று கும்மாளமிடுகிறார்கள். மலையாளியின் சோற்றுத்தட்டில் கை வைக்கும் போது அவனுக்குத் தமிழன் துணைக்குத் தேவையாக இருக்கிறான். முல்லைப்பெரியாறு விவகாரத்திலும், மருந்துக் கழிவுகளைக் கொண்டு வந்து தமிழகத்திற்குள் கொட்டும் போதும் அவனது கண்களுக்கு ஏன் திராவிடநாடு தெரியவில்லை?

‘திராவிட நாடு தனிநாடு’ என்பது வெற்று உணர்ச்சிக் கூச்சல். இணையத்தில் நடைபெறும் ஒரு நாள் கூத்து என்பதைத் தாண்டி ஒன்றுமில்லை. சமூக ஊடகங்களில் பேசப்படுகிறவையெல்லாம் இந்தியாவிலும் தமிழகத்திலும் மாற்றத்தை உண்டாக்குமென்றால் எவ்வளவோ நடந்திருக்கும். வெர்ச்சுவல் உலகம் இது. இங்கே சிங்கங்களாகவும், புலிகளாகவும் தம்மைக் கற்பிதம் செய்படிய் கும்மியடித்துவிட்டு வெளியில் மூச்சுக் கூட விடாதவர்கள்தான் பெரும்பான்மை. கீபோர்ட் நடனங்களைப் பார்த்துவிட்டு ‘ஆஹா..நமக்கான தனிநாடு’ என்று குதூகலிப்பது அவல நகைச்சுவை.

திராவிடநாடு என்கிற கொடிக்கு ஆதரவாகப் பேசுகிறவர்கள் ‘இந்தியா என்பதே ஒரு கற்பிதம்’ என்கிறார்கள். அப்படியென்றால் திராவிட நாடு என்பது எந்தக் காலத்தில் இருந்தது? தெலுங்கனையும், தமிழனையும், மலையாளத்தானையும், கன்னடத்தவனையும் வலுக்கட்டாயமாகப் பிணைத்து வைக்கும் சாத்தியமில்லாத கற்பிதம்தான் திராவிட நாடு என்பதும். இன்றைக்கு இந்தியாவிலிருந்து திராவிடநாட்டைப் பிரித்தால் மட்டும் தமிழனின் உரிமையை கன்னடத்தவனும் மலையாளத்தானும் விட்டுக் கொடுத்துவிடுவார்களா என்ன? அல்லது நாம்தான் அவர்களுக்குக் விட்டுக் கொடுத்துவிடுவோமா? தமிழ்நாட்டையும் கேரளாவையும் கர்நாடகாவையும் தனித்தனியாகப் பிரித்தால் அதன் பிறகு கொங்கு நாட்டைத் தனியாகவும் வட தமிழ்நாட்டைத் தனியாகவும் பிரிக்கச் சொல்ல மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? எவ்வளவுதான் துண்டாடினாலும் சச்சரவுகள் இருந்து கொண்டேதான் இருக்கும். பக்கத்து வீட்டுக்காரன் குப்பையை ஒதுக்கினாலே அரிவாளைத் தூக்குகிறவர்கள்தானே நாம்? ஒவ்வொரு வீட்டையும் தனி நாடாக அறிவித்தாலும் கூட பிரச்சினைகள் தீராது.

கேரளாவும் தமிழகமும் சேர்ந்து திராவிடநாடு என்று பேசும் போது ஏன் கன்னடர்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் அவர்களுக்கு மாட்டுக்கறி என்பது பெரிய பிரச்சினையில்லை. ஆக, மாட்டுக்கறிதான் நம்மையும் மலையாளிகளையும் பிணைத்துக் கொண்டிருக்கிறது. இல்லையா? ஒன்றுபடல் என்பது கொள்கையின் அடிப்படையில் இருத்தல் வேண்டும். நீண்டகால நோக்கில், அதன் சாதக பாதகங்களை அலசி அதன் பின்னர் எடுக்கப்பட்ட முடிவாக இருக்க வேண்டும். ஒன்றரை ப்ளேட் பீப் பிரியாணிக்காகத் தனிநாடு கேட்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

திராவிடநாடு என்பதெல்லாம் விவாதித்து, அலசி ஆராய்ந்து ‘அண்ணா காலத்திலேயே வரையறுக்கப்பட்ட கொள்கைதான்’ என்று யாரேனும் சொன்னால் கடந்த ஐம்பதாண்டு காலத்தில் தமிழ்நாட்டைத் தாண்டி திராவிட உணர்வுகளையும் கொள்கைளையும் விரிவுபடுத்த முடியவில்லை என்று அவர்கள் விளக்க வேண்டும். தமிழ்நாட்டைத்தவிர பிற மாநிலங்களில் சக திராவிடர்கள் ஏன் இதைப் பொருட்படுத்தவேயில்லை? உணர்ச்சி மிகு திராவிடக் கொள்கைகள் ஏன் தமிழகத்திலேயே முடங்கிப் போயின?

தற்காலிக அரசியல் லாப நோக்கங்களுக்காக திராவிட நாடு என்கிற பழைய புத்தகத்தை அப்படியே எடுக்க வேண்டியதில்லை. குறைந்தபட்சம் தூசி தட்டியாவது பிரித்துப் பார்க்கலாம். நம்முடைய காலத்தில் திராவிட நாடு என்பதற்கான அவசியம் என்ன என்பதை தெளிவாக முன்வைத்து விவாதத்தை உருவாக்குங்கள். அதன் பிறகுதான் துலக்கமாகும்- நம்முடைய பிரச்சினை ஆட்சியாளர்களா? இந்த நாடா? என்பது. மோடியின் ஆட்சியும் அமித்ஷாவின் கட்சியும் பிடிக்கவில்லையென்றால் மோடிக்கு எதிராகக் குரல் எழுப்பலாம். அமித்ஷாவுக்கு எதிராகக் கலகம் செய்யலாம். அதைவிட்டுவிட்டு நாட்டைக் கூறு போடச் சொல்வது கூர் கெட்டத்தனமாகத் தெரியவில்லையா? அல்லது மக்களைக் கூர் கெட்டவர்களாக நினைத்து இதைக் கிளப்பிவிடுகிறார்களா?

ஒருவேளை ஆட்சியாளர்கள் பிரச்சினையில்லையென்றும் நாடுதான் பிரச்சினையென்றால், தமக்கான பிரச்சினைகளுக்காக தென்னிந்தியா என்பது ஒரே பிராந்தியமாக இணைந்து எந்தக் காலத்தில் குரல் எழுப்பியது. மஹாராஷ்டிராவைச் சேர்க்காமலேயே தென்னிந்தியர்களுக்கு என நூற்றியிருபது எம்.பிக்கள் இருக்கிறார்கள். எப்பொழுதாவது ஒரு பொதுவான பிரச்சினையை முன்வைத்து நான்கு மாநிலங்களும் இணைந்து போராடிய வரலாறு இருக்கிறதா? தமது உரிமைகள் பாதிக்கப்படுவதாகப் ஒற்றைக்குரலில் பேசியிருக்கிறார்களா? சுதந்திரம் வாங்கிய எழுபதாண்டு காலத்தில் வட இந்தியாவுக்கு எதிரான ஒரு பொதுப்பிரச்சினை கூட தென்னிந்தியர்களுக்கு இல்லை? ஏன் இணைந்து செயல்பட முடியவில்லை? இந்த லட்சணத்தில் திராவிட நாடு என்ற தனிநாடு வாங்கி இணைந்து செயல்படப் போகிறார்களா? திராவிட நாடு என்பது கற்பிதமில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? நம்முடைய பிரச்சினை நாடு இல்லை- ஆட்சியாளர்கள்.

இந்தியாவில் பிரச்சினைகள் இல்லை என்று அர்த்தமில்லை. நிறைய இருக்கின்றன. தென்னிந்தியர்களுக்கு எதிராக அரசியல், பொருளாதாரத் தாக்குதல்கள் நடைபெறும் போது அதற்கு எதிராக மொத்தமாக இணைந்து குரல் எழுப்பி போராடுவதுதான் சரியான அணுகுமுறை. மம்தா மாதிரியானவர்கள் துணைக்கு வருவார்கள். அதைவிடுத்து நாட்டைப் பிரி என்று கேட்பது அபத்தம். அப்படிப் பிரித்தால் மட்டும் காவிரி பொங்கி வரும், முல்லைப்பெரியாறு பிரச்சினை தீரும் என்றால் சொல்லுங்கள். கேட்டுத்தான் பார்க்கலாம்.