May 15, 2017

சிக்கிக் கொள்ளாதீர்கள்

பல கல்லூரிகளில் சேர்க்கை மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தனியார் கல்லூரிகள் பல ஆள் பிடித்தலில் இறங்கியிருக்கின்றன. ‘ஆரம்பத்தில் எல்லாமே இலவசம்’ என்பார்கள். சேர்ந்த பிறகு புத்தகத்துக்குப் பணம், சீருடைக்குப் பணம் என்று பறிக்கத் தொடங்குவார்கள். ‘அப்பா இல்ல சார்...அம்மா மட்டும்தான்..டீச்சர் ட்ரெயினிங் சேர்ந்தேன்..ஹாஸ்டல் கட்டாயம்ன்னு சொல்லுறாங்க..வருஷம் எழுபதாயிரம் ஆகுது’ என்று பேசுகிற மாணவிகள் உண்டு. கல்லூரிக்குத்தான் இலவசம்; விடுதியில் கட்டாயம் சேர்ந்து அதற்குப் பணம் கட்ட வேண்டும் என்று சொல்கிற இத்தகைய கல்லூரிகள் நிறைய உண்டு. 

பல தனியார் கல்லூரிகள் தமது பேராசிரியர்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. ஒவ்வொரு ஆளும் மூன்று முதல் ஐந்து மாணவர்களைக் கட்டாயமாகச் சேர்க்க வேண்டும். இல்லையென்றால் ஊதிய உயர்வில் கை வைப்பார்கள். தரங்குறைந்த முதல்வராக இருந்தால் சொற்களாலேயே அவமானப்படுத்துவார். சில்லுண்டி தனியார் கல்லூரிகளில் ஆசிரியர் என்பது போன்ற கொடுமையான white collar வேலை வேறொன்றைப் பார்க்க முடியாது. 

அவர்களும் என்னதான் செய்வார்கள்? மேலாண்மையின் அழுத்தம் தாங்காமல் அரசுப் பள்ளிகள், ஏழைகள் குடியிருப்புகள் என்று ஓரிடம் விட்டு வைப்பதில்லை. வலையைத் தூக்கிக் கொண்டு சுற்றுகிறார்கள். ‘இந்த வருஷம் ஏகப்பட்ட பேர் ஆயிரத்துக்கும் மேல...சீட் கிடைக்கிறது கஷ்டம்தான்’ என்று குண்டு ஒன்றை வீசி ‘பேசாம எங்க காலேஜ்ல புக்கிங் செஞ்சுக்குங்க’ என்று தடவியும் கொடுக்கிறார்கள். ‘நமக்கு சீட் கிடைக்குமோ கிடைக்காதோ’ என்ற குழப்பத்தில் இருக்கும் மாணவர்களும் பெற்றோர்களும் சிக்கிக் கொள்கிறார்கள். இப்பொழுதே பல மாணவர்கள் ஒரு தொகையைக் கட்டி சேர்ந்துவிட்டார்கள் என்பதுதான் கொடுமை.

மாணவர்களும் பெற்றோர்களும் இதில்தான் தெளிவாக இருக்க வேண்டும். ஆள் பிடித்தாலும் நல்ல கல்லூரியாக இருந்தால் யோசிக்கலாம். ஆனால் பணம் பறிக்கும் சில தனியார் கல்லூரிகளின் கொள்ளிவாய்க்குள் மட்டும் சிக்கிக் கொள்ளவே கூடாது.

இந்த வருடம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்தான் கூட்டம் நெருக்குகிறது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். மாணவர்கள் முட்டி மோதுகிறார்கள். பத்து மாணவர்களிடம் பேசினால் ஏழு பேராவது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் படிப்புகளைப் பற்றித்தான் பேசுகிறார்கள். ஆயிரத்து ஐம்பதைத் தாண்டிய முதல் பிரிவு மாணவர்களும் கூட கலை மற்றும் அறிவியலில் வித்தியாசமான பாடங்களைப் பற்றிக் கேட்கிறார்கள். இதுவொரு நல்ல போக்கு. பொறியியல் குட்டை மீதான மோகம் வெகுவாகக் குறைந்திருக்கிறது. எதிர்காலத்தில் பல லட்சம் பொறியாளர்களுக்கான தேவை இருக்கப் போவதில்லை. அதனால் பிற துறைகளில் இருக்கும் படிப்புக்களில் சேர்வதும் நல்லதுதான்.

அது சரி. என்ன பாடத்தில் சேர்வது என்பதுதானே குழப்பம்?

வழமையான இயற்பியல், வேதியியல் தாண்டி புள்ளியியல், பத்திரிக்கையியல், மனோவியல், ஹோட்டல் நிர்வாகம், மருத்துவத்துறை சார்ந்த படிப்புகள் (இதில் மட்டுமே ஏகப்பட்ட படிப்புகள் இருக்கின்றன- மருத்துவமனை நிர்வாகம், ஒலியியல், கண் மருத்துவம் சம்பந்தப்பட்ட படிப்புகள்), குற்றவியல், தடயவியல் படிப்புகள் என்று பெரும்பட்டியலைத் தயாரிக்க முடியும். தமிழகம் தாண்டியும் பிற மாநிலங்களில் செயல்படக் கூடிய தரமான கல்லூரிகளையும் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் யோசிக்கலாம். மாணவர்களும் பெற்றோர்களும், ஆசிரியர்களும் சற்றே மெனக்கெட்டால் பொருத்தமான பாடத்தை அடையாளம் கண்டறிந்துவிட முடியும். கூகிள் எதற்கு இருக்கிறது?

பட்டப்படிப்புகள் மட்டுமில்லை புதுப்புது பட்டயப் படிப்புகளும் (Diploma) பல கல்வி நிறுவனங்களில் தொடங்கப்பட்டிருக்கின்றன. பொறியியல் சார்ந்த பட்டயப்படிப்புகள் என்றில்லாமல் மேற்சொன்னது மாதிரி பிற துறை சார்ந்த பட்டயப்படிப்புகளும் இருக்கின்றன. சுமாரான மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்கள் ஒன்றிரண்டு ஆண்டுகள் வீணாகப் போய்விடும் என்கிற தயக்கமில்லாமல் நல்ல பட்டயப்படிப்பாகச் சேர்வது நல்லது. ஆண்டுகளைக் கணக்கிட்டு போனாம்போக்கி கல்லூரிகளில் சேர்ந்து வாழ்நாளில் பாதியைத் வீணடிப்பதைவிடவும் ஒன்றிரண்டு ஆண்டுகளோடு தப்பித்துக் கொள்ளலாம்.

புதிய படிப்புகளை ஆலோசிக்கச் சொல்வதனாலேயே இயற்பியல், வேதியியல், கணிதம் மாதிரியான வழமையான படிப்புகளும் ஒன்றும் மோசமில்லை. படித்து முடித்துவிட்டு என்ன செய்யப் போகிறோம் என்கிற தெளிவான புரிதல் இருந்தால் போதும். முதலில் விரும்புகிற பாடத்திற்கெல்லாம் விண்ணப்பங்களை அனுப்பி வைத்துவிட வேண்டும். காலதாமதம் செய்தால் விண்ணப்பிக்கும் நேரத்தைத் தவற விட்டுவிடும் வாய்ப்பிருக்கிறது. அதன் பிறகு கல்லூரி பற்றி விசாரிக்க வேண்டும். எந்தப் படிப்பாக இருப்பினும் கல்லூரி தரமானதாக இருக்க வேண்டும். நேரடியாக/மறைமுகமாக எவ்வளவு கட்டணம் வாங்குவார்கள் என்பதை விசாரித்துத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். கல்லூரி நிர்வாகத்தினரிடம் கேட்டால் மறைக்க வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே அங்கு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களிடம் ஆலோசித்தால் சொல்லிவிடுவார்கள். அதன் பிறகு கல்லூரியை முடிவு செய்யலாம்.

பொறியியல் படிப்பைப் பொறுத்த வரைக்கும் இந்த ஆண்டு 0.5 லிருந்து ஒரு மதிப்பெண் வரைக்கும் கட்-ஆஃப் குறையும் போலத் தெரிகிறது. நிறைய மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் படிப்புக்குச் செல்வதனால் கட்-ஆஃப் குறைவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டியதில்லை. கடந்த ஆண்டு எந்தக் கல்லூரியில் எந்தப் படிப்பு என்ன மதிப்பெண்ணுக்குக் கிடைத்தது என்கிற பட்டியலை இணையதளத்தில் பார்க்கலாம். பட்டியல் ஒன்றைத் தயாரிக்கத் தொடங்கினால் கலந்தாய்வுக்கு முன்பாக நல்லதொரு முடிவுக்கு வர முடியும்.

கலை, அறிவியல், மருத்துவம், பொறியியல் எந்தப் படிப்பாக இருந்தாலும் சரி- நாமாகத் தீர ஆய்ந்துதான் சரியான முடிவை எடுக்க வேண்டும். ஆள் பிடிக்க வருகிறவர்களிடம் மட்டும் எந்தக் காரணத்தைக் கொண்டும் சிக்கிக் கொள்ளக் கூடாது. அதுதான் இந்தத் தருணத்தில் மிக முக்கியம்.