அரசியலில் ஈடுபட்டு வார்டு கவுன்சிலர் கூட ஆகப் போவதில்லை என்பது எனக்குத் தெரியும். தமிழரசியல் இணையதளத்தில் பணியாற்றும் பத்திரிக்கையாளர் அருள் எழிலன் ‘நான் முதல்வரானால்’ என்ற தலைப்பில் கட்டுரை கேட்டார். ‘இப்படியெல்லாம் எழுதினால் காமெடியாகப் பார்க்க மாட்டாங்களா’ என்று தோன்றியது. ‘தமிழ்நாட்டுல ஆளாளுக்கு கனாக் காணுறாங்க..நீங்களும் கொஞ்சம் கண்டு எழுதுங்க பாஸ்’ என்றார். ‘சொந்த அனுபவத்திலிருந்து எழுதுங்க..சரியா வரும்’ என்றார். எழுதி அனுப்பியிருந்தேன். பந்தாவாக ஒரு படத்தைத் தயார் செய்து பிரசுரம் செய்திருந்தார்கள்.
ராகவர்ஷினி என்ற பெயரை மறக்க முடியாது. எட்டு மாதக் குழந்தை. ஈரல் பாதிக்கப்பட்டிருந்தது. அப்பா தினக்கூலி. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவமனையில் சொல்லிவிட்டார்கள். அக்கம்பக்கத்தவர்கள் நண்பர்கள் என ஓர் அணியாகத் திரண்டு பணத்தைப் புரட்டினார்கள். பனிரெண்டு லட்ச ரூபாய் தேவையாக இருந்தது. பணத்துக்காக அவர்கள் ஏறி இறங்காத இடமில்லை. நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து எழுபதாயிரம் ரூபாய் கொடுத்திருந்தோம். கடுமையான போராட்டத்துக்குப் பிறகு பணத்தைப் புரட்டிவிட்டதாகச் சொல்லி அனுப்பியிருந்தார்கள். சந்தோஷமாக இருந்தது. அடுத்த சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அழைத்தார்கள். அறுவை சிகிச்சை முடிந்திருக்கும் என நினைத்தேன்.
‘ஆபரேஷன் முடிஞ்சுதுங்களா? குழந்தை எப்படி இருக்கு?’என்றதற்கு ‘இல்ல சார்..ஆபரேஷன் நடக்கல’ என்றார்.
‘என்னாச்சு’என்ற கேள்விக்கு அவர்கள் சொன்னதைத்தான் இன்று வரை ஜீரணிக்க முடியவில்லை.
பணத்தைப் புரட்டிவிட்டார்கள். ஆனால் நம் தேசத்தில் உறுப்பு தானம் அவ்வளவு எளிதான காரியமில்லை. பெரும் பணம் படைத்தவர்களுக்கும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களுக்கும் அது பிரச்சினையில்லை. ஆனால் இல்லாதவனுக்கு ஆயிரத்தெட்டு சிக்கல்கள். ஏகப்பட்ட இடங்கள் ஏறி இறங்கி அரசாங்க அனுமதி பெற வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் மனசாட்சியை ஒளித்துவிட்டு லஞ்சம் கேட்பார்கள். கொடுத்தாலும் இழுத்தடித்துவிடுவார்கள். அப்படித்தான் இழுத்தடித்திருக்கிறார்கள். பிஞ்சுக் குழந்தை எத்தனை நாள்தான் செயல்படாத ஈரலை வைத்துக் கொண்டு உயிரை இழுத்துப் பிடிக்கும்? இறந்து போனது.
‘குழந்தைக்குன்னு வாங்குனதுங்க..எங்களுக்கு வேண்டாம்....வேற குழந்தைக்கு கொடுத்துடுங்க’ என்று எழுபதாயிரம் ரூபாயையும் திருப்பிக் கொடுத்தார்கள். நெக்குருகிப் போனேன்.
மருத்துவ வசதிகள் கிடைக்காத மனிதர்கள், வெகுதூரம் பயணிக்க சாத்தியமில்லாமல் உள்ளூரிலேயே வைத்தியம் பார்த்துக் கொள்ளும் எளியவர்கள் என்று மனிதர்களைத் தொடர்ந்து சந்திக்கிறேன். நோய்மையின் வலியைச் சுமந்து கொண்டுதான் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை அதிகாரம் கைகளுக்குக் கிடைத்தால் எளிய மக்களுக்கான மருத்துவ சிகிச்சை முறைகளை மாற்றியமைப்பதுதான் முதல் பணியாக இருக்கும். உறுப்பு தானம் என்று மட்டுமில்லை. பொதுவாக எளிய மனிதர்களுக்குக் கிடைக்கக் கூடிய மருத்துவ சேவைகள் மிக மோசம். மாநிலத்தின் பல அரசு மருத்துவமனைகளில் மணிக்கணக்கில் காத்திருக்கிறேன். அதுவொரு கண்ணீர் உலகம். வெளியுலகம் தெரியாத எத்தனை மனிதர்கள் அறியாமையிலும் நோய்மையிலும் கூனிக்குறுகி நிற்கிறார்கள் என்பதை அங்கு பார்க்க முடியும். கண்களில் தெரியும் வலியும் சோகமும் என தாங்கிக் கொள்ள முடியாத காட்சி அது. இங்கே அரசு மருத்துவமனைகள் இருக்கின்றன. மருத்துவர்கள் சேவை செய்கிறார்கள்தான். யாரையும் குறை சொல்லவில்லை. ஆனால் எண்ணிக்கை போதாது. வசதிகள் இல்லை. புதுச்சேரியில் உள்ள ஜிப்மரைப் போலவோ, திருவனந்தபுரத்தில் உள்ள சித்ரத்திருநாள் போலவோ அதி நவீன மருத்துவமனை ஒன்றாவது அமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு தாலுக்காவிலும் தனிச்சிறப்பு வாய்ந்த மருத்துவர்கள் நியமனம், நவீன வசதிகள் நிறைந்த மருத்துவமனைகள், தூய்மையான வளாகம், நோயாளிகளிடன் கனிவு காட்டுவதற்காக ஊழியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி - இப்படி நிறைய இருக்கின்றன. ஆசைகள்!
மருத்துவத்துறை அப்படியென்றால் கல்வித்துறையிலும் செய்ய எவ்வளவோ இருக்கின்றன.
பனிரெண்டாம் வகுப்பில் 200க்கு 199.25 மதிப்பெண்களை கட்-ஆஃப் ஆக வாங்கியிருந்தாள் நந்தினி. அப்பா சலவைத் தொழிலாளி. மூன்றாவது மகள் இவள். அவளது மதிப்பெண்களைக் கேள்வியுற்று பெருமகிழ்ச்சியுடன் ‘என்ன படிக்கப் போற நந்தினி?’ என்று கேட்ட போது ‘அப்பாவுக்கு கஷ்டம் சார்..பக்கத்து காலேஜ்ல சேர்ந்துக்கிறேன்’ என்றாள். அதிர்ச்சியாக இருந்தது. எப்படிக் கணக்குப் போட்டாலும் விடுதி, கல்லூரிக்கட்டணம் எல்லாம் சேர்த்துப்பார்த்தால் வருடம் ஐம்பதாயிரம் ரூபாயாவது ஆகிவிடும். அக்காக்கள் இரண்டு பேரும் பட்டதாரிகள். அரசு வழங்கும் ‘முதல் பட்டதாரி’ என்ற சலுகையும் கிடைக்காது. ஆனது ஆகட்டும் என்று ‘நீ அப்படியெல்லாம் சொல்லக் கூடாது’ என்று அவளைத் தேற்றி புரட்டிக் கொடுத்த பணத்தில் இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறாள். நந்தினி ஒரு சோற்றுப் பதம். தமிழகத்தின் உட்புறங்களில் நந்தினியைப் போல பல்லாயிரம் மாணவர்கள் தேறுவார்கள். நன்றாகப் படிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். நல்ல மதிப்பெண்களை வைத்திருப்பார்கள். பணம் பெரும் தடையாக இருக்கும்.
தமிழக அரசு கல்விக்காக சில காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறது. ஆனால் அதன் வேகமும் வீச்சும் சொற்பம். பரந்து விரியும் தனியார் கல்வி நிறுவனங்கள், அவர்களின் கட்டணக் கொள்ளைகள் தடுத்து நிறுத்தப்படுவதும், மேனிலைக்கல்வி வரைக்கும் இலவசக் கல்வியை முழுமையாக அமுல்படுத்துவதும் சாத்தியமில்லாத காரியங்கள் இல்லை. ஆனால் மெனக்கெட வேண்டும். போதுமான நிதி ஆதாரங்களைத் திரட்ட வேண்டும். மருத்துவத்திற்குப் பிறகு கல்விதான் முக்கியம். தனியார் கல்லூரிகளைப் பற்றித் தெரியாமல் அவர்கள் விரிக்கும் வலைகளில் சிக்கிக் கொண்டு ‘சார் ஃபீஸ் கட்ட யாராவது ஹெல்ப் பண்ணுவாங்களா’ என்று கேட்கிற மாணவர்களின் பரிதாபமான குரல்கள் வருடம் முழுக்க ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன. எங்கேயிருக்கிறது குழப்பம்? பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வருவதற்குள்ளாக வலைகளைத் தூக்கிக் கொண்டு தனியார் நிறுவன ஊழியர்கள் ஊர் ஊராகத் திரிய என்ன காரணம்? ‘கவர்ண்மெண்ட் காலேஜ் சரியில்லை’ ‘இடம் கிடைக்காது’ என்பதுதான். திட்டமிட்டு இவ்விரு குறைகளையும் நிவர்த்தி செய்தாலே பல்லாயிரம் மாணவர்கள் தப்பிப்பார்கள்.
ரங்கசாமிக்கு ஐம்பதைத் தாண்டாத வயது. பள்ளிக்குச் செல்லும் இரு பிள்ளைகளை விட்டுவிட்டுத் தூக்கிலிட்டுக் கொண்டார். இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. அவரது மூத்த மகள் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறாள். ‘என்னங்க பிரச்சினை?’ என்றால் ‘என்னவென்று சொல்லி அழுவது?’ என்றார்கள். கடன், வறுமை, வரலாறு காணாத வறட்சி. வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் முடித்துக் கொண்டார். தம்மை நம்பி இரு மகள்கள் இருக்கிறார்கள் என்பதைவிடவும் இந்த உலகம் தம் மீது உருவாக்கி வைத்திருக்கும் அழுத்தத்தில் இருந்து விடுபடுவதையே பெரிதாக நினைத்தவரை விட்டத்திலிருந்து பிணமாக இறக்கிப் படுக்க வைத்திருந்தார்கள். மனைவி தலைமேட்டில் அமர்ந்திருக்க மகள்கள் இருவரும் ரங்கசாமியின் கால் மீது விழுந்து கதறிக் கொண்டிருந்தார்கள். கொடுமை. தமிழகத்தின் பெரும்பகுதி வறண்டு வெடித்துக் கிடக்கிறது. வெம்மையும் வறட்சியும் தாண்டவமாடும் இந்த பூமியில் நீர் மேலாண்மை என்பது மோசமான அவலங்களில் ஒன்றாக இருக்கிறது. இன்றைக்கு குடிமராமத்துப் பணி என்பதே கமிஷன் அடிக்கும் வேலையாக மாறியிருக்கிறது. அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டு நதிகள், குளம், குட்டைகளை ஒழுங்குபடுத்தி அவற்றை சரியான திட்டமிடலுடன் இணைப்பதன் வழியாக இன்றைக்குத் தமிழகத்தின் விவசாயிகளை வாதிக்கும் வறட்சியிலிருந்து பெருமளவிலான ஆசுவாசத்தைத் தர முடியும். அவிநாசி அத்திக்கடவு திட்டம் மாதிரியான நீர் நிலைகள் இணைப்புக்காக காலங்காலமாக முன்வைக்கப்படும் திட்டங்கள் கூட தமிழகத்தில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன என்பது பெரும் அவலம்.
ஒவ்வொரு வார இறுதியிலும் தோளில் பையைத் தூக்கிப் போட்டுக் கொண்டு அறக்கட்டளைப் பணிகளுக்காக தமிழக்த்தின் குறுக்கும் நெடுக்குமாக பயணித்துக் கொண்டிருக்கிறேன். கல்வியும் மருத்துவமும் விவசாயம் என்று மட்டுமில்லை. சாலை விரிவாக்கத்திற்கென தொடர்ந்து வெட்டிக் குவிக்கப்படும் மரங்கள், கழிவுகளைத் குழி தோண்டி மண்ணில் இறக்குவதும், நீர்நிலைகளில் கலக்கவிடுவதுமான காரியங்களைச் செய்து இயற்கையைச் சீரழிக்கும் தொழிற்சாலைகள், சிதிலமாகும் விளைநிலங்கள் என்று நெஞ்சு கனக்கிறது. தமிழகம் முழுவதுமே இப்படித்தானே? அதிகார வர்க்கமும் பணம் தின்னி பேய்களும் மண்ணை மலடாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரத்தைக் கையில் எடுக்கிறவர்கள் இதற்கெல்லாம் கடிவாளமிட வேண்டியதில்லையா?
யார் கடிவாளமிடுவது?
மணல் திருட்டை நிறுத்த வேண்டும் என்று விரும்பினால் அதை எப்படிச் செயல்படுத்த முடியும்? வருவாய்த்துறையின் கடைநிலை ஊழியரிலிருந்து ஆர்.டி.ஓ வரைக்கும் லஞ்சம் வாங்குகிறார்கள். நீர்நிலைகளை மேம்படுத்த விரும்பினால் அதில் என்ன வருமான கிடைக்கும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் வரைக்கும் கணக்குப் போடுவார்கள். தனியார் கல்வி நிறுவனத்தை ஒழுங்குபடுத்த விரும்பினால் கல்வி அதிகாரிகள் தமது வருமானம் பாதிக்கப்படும் என்று நடுங்குவார்கள். இப்படி அதிகாரிகள் மட்டத்தில் நிலவும் ஊழலை கட்டுக்குள் கொண்டு வராமல் எந்தக் காரியமும் சாத்தியமில்லை. ராகவர்ஷினிக்கு உறவு முறைச்சான்று கொடுக்க லஞ்சம் கேட்கிற அதிகாரியும், ரங்கசாமிக்கு இறப்புச்சான்றிதழ் வழங்க பணம் கேட்கும் அதிகாரியும் நம்மைச் சுற்றித்தானே இருக்கிறார்கள்?
இந்தியாவின் பல மாநிலங்களில் செயல்படும் லோக் அயுக்தா மாதிரியான அமைப்பின் தற்போதைய குறைகள் களையப்பட்டு வலுவானதாகச் செயல்படுத்தப்படாமல் எதுவுமே சாத்தியமில்லை. பணி நியமனத்தில் ஆரம்பித்து பணி மாற்றம் வரைக்கும் நிலவும் ஊழலைக் கட்டுக்குள் கொண்டு வராமல் துரும்பைக் கூட நகர்த்த முடியாது. ‘இந்த ட்ரான்ஸ்பருக்கு இருபது லட்சம் செலவு லஞ்சம் கொடுத்தேன்; எப்போ நான் சம்பாதிக்கிறது’ என்கிற மனநிலைதான் ஊழலின் பெரும் ஊற்றுக் கண். அமைச்சர்கள், அதிகாரிகள் என மேல் மட்டத்தில் தொடங்கி கீழ்மட்ட பணியாளர் வரைக்கும் சகலரையும் மிரட்டி வழிக்குக் கொண்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை. பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பிலிருந்து பேருந்து நடத்துனர் வேலை வரைக்கும் ‘இதுக்கு இவ்வளவு’ என்று பட்டியலிடப்பட்டு நடைபெறும் வசூல் வேட்டையைத் தடுக்காமல் பிற அனைத்துமே வெறும் காகிதத்தில் மட்டுமே தங்கிவிடும்.
உன்னிடம் அதிகாரத்தைக் கொடுத்தால் என்ன செய்வாய் என்று கேட்டால் பசுமையை மீட்டுத்தல், மருத்துவத்துறையை மேம்படுத்துதல், தொழில்களைப் பரவலாக்குதல், கல்வித்துறையச் சீரமைத்தல் என்று நிறையச் சொல்வேன்.
மாதத்தில் ஒரு வார இறுதியில் ஒன்று அல்லது இரு மாவட்டங்களுக்கு நேரடியாகப் பயணம் செய்வேன். ஏனென்றால் ராகவர்ஷினியும் நந்தினியும் ரங்கசாமியும் தமிழகம் முழுவதும் சிதறிக் கிடக்கிறார்கள். அவர்களது குரலைக் கேட்காமல், கண்களைப் பார்த்து அவர்களின் வலியை புரிந்து கொள்ளாமல் என்ன செய்தாலும் அது வெறும் பொம்மையின் செயல்பாடுதான். வியர்வையும் ரத்தமுமாக எம் மண்ணில் புரண்டு உழலும் கடைநிலை மனிதனை மனதில் வைத்துச் செயல்படுகிற அரசாங்கம் என்பதுதான் கனவு அரசாங்கம்.