May 29, 2017

நீ என்ன மதம்?

பேராசிரியர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது ‘ஆரம்பத்தில் கொங்குநாடு முழுவதுமே சமணம்தான்..பிறகுதான் சைவமும், வைணவமும் பரவின’ என்றார். அப்பொழுதிலிருந்தே ஒரு குறுகுறுப்பு. தேடிக் கொண்டிருந்தேன். பேராசிரியரின் கூற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளவும் முடியாது. காலம் முழுக்கவுமே சமண மதம் என்பது அறிவுஜீவிகளின் மதமாகவே இருந்தது என்றும் அது வெகுஜனப் பரப்பை அடையவே இல்லை என்றும் குறிப்புகள் இருக்கின்றன. இப்படி முழுமையற்ற வரலாற்றுத் தகவல்களை வால்பிடித்துக் கொண்டே போனால் அது ஒரு நாவலாக விரிவதுண்டு.

கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக இன்றைய பீஹாரின் பாட்னாவை (அன்றைய பாடலிபுத்திரம்) தலைநகராகக் கொண்டு நந்தப் பேரரசு நடக்கிறது. அரசன் தன நந்தன் என்பவன் அரண்மனையில் நிகழ்ச்சியொன்றை நடத்துகிறான். நிகழ்வில் கலந்து கொள்ள யதார்த்தமாக நுழைகிற சாணக்கியரை அரசன் அவமானப்படுத்தி வெளியேற்றிவிடுகிறான். சாணக்கியரின் உருவ அமைப்பு படு அசிங்கமாக இருக்குமாம். இந்தச் சம்பவத்தால் சாணக்கியர் கடுப்பாகிறார். அரசனுக்கும் சாணக்கியருக்குமான கோதாவில் சாணக்கியரைக் கைது செய்ய உத்தரவிடுகிறான் அரசன். அரசனின் மகனே சாணக்கியருக்கு உதவுகிறான். தப்பி ஒரு காட்டுக்குள் ஓடிவிடுகிறார் சாணக்கியர்.

வனவாசம் மேற்கொள்ளும் போது காட்டுக்குள் சந்திரகுப்த மெளரியரைப் பார்க்கிறார். அப்பொழுது சந்திரகுப்தனுக்கு இளம்வயது. வேட்டையாடித் திரியும் அவன் சாமர்த்தியசாலியாகத் தெரிகிறான். அவனை வைத்து நந்தப் பேரரசைக் காலி செய்ய வேண்டும் என சாணக்கியர் விரும்புகிறார். தனது மொத்த வித்தையையும் சந்திரகுப்தனிடம் இறக்கி வைக்கிறார். என்ன இருந்தாலும் சாணக்கியர் அல்லவா? சந்திரகுப்தன் சிறு படையை வைத்துக் கொண்டு நந்தப் பேரரசைக் கைப்பற்றுகிறான். அப்படித்தான் மகதப் பேரரசு உருவாகிறது. வரலாற்றில் ‘அகண்ட பாரதம்’ என்பதை கனவு கண்டு அதற்கான விதையை விதைத்த முதல் பேரரசன் சந்திரகுப்தன். அவரது மகனும் சரி, பேரன் அசோகரும் சரி - மென்மேலும் மகதப் பேரரசை விரிவடையச் செய்து கொண்டேயிருக்கிறார்கள். 

(சந்திர குப்த மெளரியரின் மகத நாடு)

ஒரு கட்டத்தில் சந்திரகுப்தனுக்கு நாடு, குடும்பம், போர் மீதெல்லாம் அசூயை உண்டாகிறது. எல்லாவற்றையும் துறந்து சமணத்தைத் தழுவுகிறான். பிற்காலத்தில் அவரது பேரனான அசோகர் பெளத்தத்தைத் தழுவுகிறார். மகத்ப் பேரரசின் படையின் அளவு குறைக்கப்படுகிறது. அதன் பிறகு வந்த வாரிசுகள் வலுவற்றவர்களாகிறார்கள். பிராமணத் தளபதியொருவன் மகதப் பேரரசை வீழ்த்தி சுங்கப் பேரரசை உருவாக்குகிறான். 

அது வேறு ட்ராக்.

         (பாகுபலி)

சமணத்தைத் தழுவிய சந்திரகுப்தரும் பத்திரபாகு என்கிற சமணமுனிவரும் சேர்ந்து தென்னிந்தியாவின் சிரவணபெளகுளாவுக்கு வருகிறார்கள். அங்கேயிருக்கும் பிரமாண்டமான கோமதீஸ்வரர்தான் பாகுபலி. இப்பொழுது பாகுபலியை இணையத்தில் தேடினால் பிரபாஸூம் அனுஷ்காவும்தான் தலையை நீட்டுகிறார்கள். அவர்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். சந்திரகுப்தரின் வாழ்க்கை வரலாறு வெகு சுவாரசியமானது. வேடனாகத் திரிந்து நாட்டை வென்று அரசனாக முடி சூட்டி எல்லாவற்றையும் வெறுத்து துறவியாகி இறுதியில் தமக்கு சம்பந்தமே இல்லாத ஊருக்கு வந்து வடக்கிருந்து உயிர் துறக்கிறார். அவர் வடக்கிருந்து உயிர் துறந்த மலை இன்றைக்கும் சந்திரகிரி என்ற பெயரிலேயே இருக்கிறது. அவரது வரலாற்றைத் தனியாகச் சொல்ல வேண்டும். 

சந்திரகுப்தரும் பத்திரபாகு முனிவரும் வட இந்தியாவிலிருந்து வந்த போது அவர்களுடன் ஆயிரக்கணக்கான சமணத்துறவிகளும் வந்து சேர்ந்தார்கள். சிரவணபெளகுளாவிலிருந்து சத்தியமங்கலம் சற்றே பக்கம்தான். தலைமலை வழியாக சத்திக்கு வந்துவிட முடியும். தலைமலைதான் கொங்கு நாட்டின் வடக்கு எல்லை. சந்திரகுப்தரும் பத்திரபாகுவும் கொங்கு நாட்டுக்குள் வரவில்லை. ஆனால் பத்திரபாகு தமது சீடரான விசாகன் என்பவரை அனுப்பி வைத்தார்.

(கொங்கு நாடு)

விசாகன் கொங்கு நாட்டுக்குள் நுழைகிறார். அவர் நுழைவதற்கு முன்பாகவே கொங்குநாட்டில் சமணம் பரவியிருந்ததற்கான சில தரவுகள் இருப்பதாக புலவர் செ.இராசு ‘கொங்குநாடும் சமணமும்’ என்கிற நூலில் எழுதியிருக்கிறார். ஆனால் விசாகன் உள்ளே நுழைந்த பிறகு இதன் தாக்கம் அதிகம்.

சமண முனிகள் ஊரின் ஒதுப்புறமாகத்தான் தங்குவார்கள். குகைகளில் கற்படுக்கை செதுக்கி அதில்தான் உறங்குவார்கள். திகம்பரர்கள் என்றால் - ஆடைக்கு விடுதலை. நிர்வாணத்தை அணிந்தவர்கள். சுவேதம்பரர் என்றால் வெண்ணிற ஆடை அணிந்தவர்கள். அந்தந்த ஊர் மக்களின் மொழியைத் தெரிந்து அதிலேயே மத உபாசகம் செய்வது சமணர்களின் பெரும்பலம். கொங்குநாட்டில் விண்ணப்பள்ளி, பரன்சேர்பள்ளி (பரஞ்சேர்வழி), செங்கப்பள்ளி என்று ‘பள்ளி’ என முடிகிற ஊர்களை சமணர்கள் வாழ்ந்த இடங்களாகச் சுட்டிக் காட்டலாம். விஜயமங்கலம், சீனாபுரம் (ஜைனர்புரம் என்பது மருவி), அப்பிச்சிமார்மடம், திங்களூர், திருமூர்த்தி மலை உள்ளிட்ட ஊர்களில் இருக்கும் கோவில்கள் சமணத்தைச் சார்ந்தவை. இப்படி சமணம் செழிப்பதற்காகக் கொங்குநாட்டை ஆண்ட பல மன்னர்களும் உதயிருக்கிறார்கள்.

இதெல்லாம் ஒரு காலம். 

திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் களமிறங்கிய கிபி ஆறு/ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு சைவம் செழித்தோங்குகிறது.  சமணம் மெல்லத் தேய்கிறது.

‘உடுக்கை இன்றியே நின்று ஊர் நகவே திரிவர்’ என்று நிர்வாணமாகச் சுற்றுவதையும் (உடுக்கை- உடை) ‘ஊத்தை வாய் அறிவில் சிந்தை’ என்று பல் துலக்காமல் இருப்பதையும் இன்னபிற சமணர்களின் பழக்கங்களையும் நேரடியாகத் தாக்குகிற தேவாரப் பதிக வரிகள் வரிகள் உண்டு.  

சைவம் தம்மைத் தாக்கத் தொடங்கும் வரைக்கும் சமணர்களுக்குத் தீர்த்தங்கரர்கள் மட்டும்தான் எல்லாமும். அவர்கள் மட்டுமே பிரதானம். மொத்தம் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள். அதில் கடைசி தீர்த்தங்கரர்தான் மகாவீரர். (பொதுவாக தீர்த்தங்கரரின் சிலைக்கு மேலாக முக்குடை இருக்கும். அதை வைத்து அது சமணச் சிலையா என்பதைக் கண்டுபிடிக்க முடியும். )

(முக்குடையுடன் தீர்த்தங்கரர்)

ஒரு கட்டத்தில் சைவத்தில் அம்மன் வழிபாடு மக்களை ஈர்க்க அதற்கு மாற்றாக தம்முடைய வழிபாடுகளையும் சமணர்கள் சற்று மாற்றியமைத்தார்கள். இயக்கன் இயக்கி என்று தீர்த்தங்கரர்களுக்கு பக்கவாட்டில் ஒரு ஆணையும் பெண்ணையும் படைத்தார்கள். இப்படியெல்லாம் நெகிழ்த்தினாலும் கூட சைவத்திற்கு முன்பாக தாக்குப்பிடிக்க முடியாமல் சமணம் கொங்கு நாட்டிலிருந்து வீழ்ந்து போனது. 

சைவம்-சமணப் போரில் சமணர்கள் கழுவிலேற்றப்பட்ட சம்பவங்கள் எல்லாம் உண்டு. சமணர்களைக் கருணையேயில்லாமல் கொன்றிருக்கிறார்கள். 

கொங்கு நாடு முழுவதும் சமணம் பரவியிருந்தது என்று சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியாரின் நூலிலும் இருக்கிறது. ஆனால் எவ்வளவு தூரம் மக்கள் அதை முழுமையாக ஏற்றுக் கொண்டிருந்தார்கள் என்றுதான் தெரியவில்லை. ‘தன்னாசியாட்ட சுத்தாதடா’ என்று இன்றும் பேச்சு வழக்கில் உண்டு. பெரும்பாலானவர்கள் அறிந்திருக்கும் திகம்பரர், சுவேதம்பரர் தவிர்த்து சமணத்தில் மூன்றாவது பிரிவும் உண்டு- தானகவாசி. ‘தானகவாசியாகச் சுத்தாதே’ என்பதுதான் அப்படி மருவி இருக்க வேண்டும். சமணராகச் சுற்றுவதை எதிர்க்கும் வெகுஜன மனநிலைதான் இதில் தெரிகிறது. குடும்பத்தை விட்டு துறவறம் மேற்கொள்வது, குளிக்காமல் இருப்பது, பற்களைத் துலக்காமல் இருப்பது என்பதையெல்லாம் மக்கள் ஏற்று வாழ்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் மிகக்  குறைவு. அதனாலேயே சமணம் என்பது வெகுஜன மக்களின் மதமாக இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதை முற்றாக மறுக்க முடிவதில்லைதான்.

ஆயினும், அரசியலும் மதமும் கிட்டத்தட்ட ஒன்றுதான். தீவிரமானவர்களால் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும். ‘பேனைக் கொல்லக் கூடாது என்பதற்காக மயிரை மழித்துக் கொள்கிறவர்கள்’ வரலாறுகளில் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டுவிடுகிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.