சமீபத்தில் ஒரு நண்பர் உதவி கேட்டிருந்தார். மின்னஞ்சலில் தகவல்களை அனுப்பிவிட்டு அலைபேசியிலும் பேசியிருந்தார். எனக்குத் தயக்கமாக இருந்தது. கடனாகக் கொடுக்கச் சொல்லித்தான் கேட்டார். ‘அறக்கட்டளையிலிருந்து உதவுவது கஷ்டம்... சமாளிக்க முடியலைன்னா சொல்லுங்க.. சொந்தப்பணத்திலிருந்து கடனாகத் தருகிறேன்’ என்று சொல்லியிருந்தேன். அதை வெளிப்படையாக எழுதி ‘பயனாளிகள் எல்லோரையும் ஒரே மாதிரிதான் பார்க்க வேண்டும்’ என்கிற ரீதியில் எழுதியிருந்தார்.
இதற்கு பதில் எழுதி சர்ச்சையை உண்டாக்க வேண்டியதில்லை என்றாலும் ஒன்றைத் தெளிவு படுத்திக் கொண்டேயிருக்க வேண்டிய அவசியமும் அடிக்கடி உருவாகிறது.
ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் மட்டும்தான் உதவ வேண்டுமா? பாதிக்கப்பட்டவர்கள் எல்லோரையும் ஒரே தட்டில்தான் வைக்க முடியாதா? என்று கேட்டால் ‘முடியாது’ என்பதுதான் பதில். இதில் மிக உறுதியாக இருக்கிறோம். சாமானிய மனிதர்களுக்கு உதவுவதற்காகத்தான் அறக்கட்டளை நடக்கிறது. உதவி கேட்கிறவர்கள் அத்தனை பேரையும் சமமாக வைத்துப் பார்க்க முடியாது. உதவி கோருகிறவர்கள் யார், அவர் என்ன வேலையில் இருக்கிறார்கள், அவர்களுடைய குடும்பத்தினர்களின் வருமானம் என்ன, என்ன மாதிரியான வாழ்க்கை முறை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் கணக்கிட வேண்டியிருக்கிறது.
இங்கு யாருக்குத்தான் பணத்துக்கான தேவை இல்லை? எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும் ஏதாவதொரு காரணத்துக்காகப் பணத்தின் தேவை இருந்து கொண்டுதான் இருக்கிறது. லட்சாதிபதியாக இருப்பார். அவருடைய குழந்தையை மருத்துவமனையில் சேர்த்திருப்பார்கள். சேமிப்பு முழுமையாகக் கரைந்திருக்கும். அவருக்கும் பணத் தேவை இருக்கும். இத்தகையவர்கள் உதவி கேட்டால் ‘அவரால் வேறு இடங்களில் புரட்டிவிட முடியுமா?’ என்று பார்க்க வேண்டியிருக்கிறது. அவரால் வேறு வழிகளில் பணத்தைத் திரட்டிவிடும் பட்சத்தில் நாசூக்காக விலகிக் கொள்ள வேண்டியிருக்கிறது. அறக்கட்டளையின் பணம் என்பது எந்தவிதத்திலும் பணம் புரட்ட முடியாதவர்களுக்கானது. அவர்களுக்குக் கொடுப்பதுதான் நியாயம். நண்பர், தெரிந்தவர், கஷ்டத்தில் இருக்கிறார் என்பதற்கெல்லாம் கொடுக்க ஆரம்பிப்பது எங்கேயோ ஒரு மூலையில் இருக்கும் இல்லாதவனுக்குச் செய்யக் கூடிய துரோகம்.
ஆயிரம் ரூபாயை வெளியிடங்களில் கேட்டு வாங்க முடியாத நூற்றுக்கணக்கான மனிதர்களை அரசு மருத்துவமனைகளின் முன்னால் காட்ட முடியும். விண்ணப்பிக்க வேண்டும் என்பது கூடத் தெரியாத மாணவர்கள் இருக்கிறார்கள். ‘அப்பன் காசு இல்லைன்னு சொல்லிடுச்சு’ என்று படிப்பைக் கைவிடும் மாணவர்களைச் சந்திக்கிறேன். நெகிழ்ச்சியான செண்டிமெண்டல் கதைகள்தான் என்றாலும் அத்தகையவர்களுக்கு உதவுவதுதான் அறக்கட்டளையின் அடிநாதம். எப்படியாவது பணம் புரட்டி விடக் கூடிய சமூக அந்தஸ்துள்ளவர்களுக்கு கடன் கொடுத்து சுமையைக் குறைப்பது என்பதெல்லாம் அவசியமில்லாத செயல்.
கல்வி அல்லது மருத்துவம் என்ற ரீதியில்தான் அறக்கட்டளையிலிருந்து உதவுகிறோம். மருத்துவம் என்றாலும் கூட உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகளுக்கு. எலும்பு முறிவு மாதிரியான சிகிச்சைகளுக்கு உதவுவதில்லை. இவையெல்லாமும் கூட தொடர்ச்சியான அனுபவங்களின் வழியாக உணர்ந்து கொண்டதுதான்.
முகம் தெரியாதவர்கள் உதவி கேட்கும் போது பிரச்சினையே இல்லை. மறுத்துவிட முடியும். நண்பர்கள் உதவி கேட்கும் போது இல்லையென்று மறுக்க முடிவதில்லை. ‘எனது சம்பளத்திலிருந்து கடனாகத் தருகிறேன்’ என்று சொல்வதுண்டு. அதுவும் கூட தர்மசங்கடம்தான். அப்படி தனிப்பட்ட பணத்திலிருந்து சிலருக்கு உதவியிருக்கிறேன். தொகையையும் பெயரையும் குறிப்பிட வேண்டியதில்லை. ஆனால் கணிசமான தொகை திரும்ப வராமல் இருக்கிறது. கூட்டுக்குடும்பத்தில் வாழ்கிற என்னை மாதிரியானவர்களுக்கு இது சிக்கல். வீட்டு வரவு செலவு மொத்தத்தையும் தம்பிதான் பார்த்துக் கொள்கிறான். அவனிடம்தான் வாங்கித் தர வேண்டும். பணம் கேட்கும் போது வீட்டில் யாரும் சண்டைக்கு வருவதில்லை என்றாலும் ‘இதுவரைக்கும் இவ்வளவு கொடுத்தாச்சு’ என்று சொல்லிக் காட்டுகிறார்கள்.
இதையெல்லாம் விலாவாரியாக எழுதிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
நண்பர்கள்- குறிப்பாக எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் உதவி கேட்கும் போது இதைப் புரிந்து கொள்ள வேண்டும். என்னுடைய சம்பளத்திலிருந்து எடுத்துக் கொடுப்பதாக இருந்தால் ஒன்றும் பிரச்சினையில்லை. நண்பர் என்பதற்காகக் கொடுத்துவிடலாம். இது பொதுப்பணம். ஐநூறு ரூபாய் கூட கொடுக்கிற நன்கொடையாளர்கள் இருக்கிறார்கள். ‘இவன்கிட்ட கொடுத்தா சரியான ஆளுக்குப் போகும்’ என்று நம்புகிறார்கள். ‘அவர் நல்லாத்தானே இருக்காரு? அவருக்கு எதுக்கு பணம் கொடுத்தாரு?’ என்று ஒருவரும் நினைத்துவிடக் கூடாது என்று நினைக்கிறேன். அதனால்தான் ஆயிரம் தயக்கங்களும், சங்கடங்களும், காலதாமதங்களும். முடிவு எடுப்பதற்காக அவ்வளவு குழப்பிக் கொள்வேன்.
பணம் இல்லாத கஷ்டம் வேறு; பணத்தைப் புரட்டவே முடியாத கஷ்டம் வேறு. பணத்தைப் புரட்டவே முடியாதவர்களுக்கு உதவுவதற்காகத்தான் நிசப்தம் அறக்கட்டளை. ‘உதவ முடியாது’ என்று நாசூக்காகவோ அல்லது மறைமுகமாகவோ மறுக்கும் போது அதைப் பொதுவெளியில் எழுதுவதைத் தவிருங்கள். ‘உங்களுக்கு ஏன் உதவி செய்யவில்லை’ என்று எழுதுவதற்கும் எங்களாலும் சில காரணங்களைச் சுட்டிக்காட்ட முடியும். அது சரியான அணுகுமுறை இல்லை.
கணக்கு வழக்குகளில், அதன் வெளிப்படைத்தன்மையில் ஏதேனும் மாறுதல்களைச் செய்ய வேண்டுமானால் செய்யலாம். மற்றபடி, யாருக்கு உதவ வேண்டும், பயனாளிகளை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் நானும் நிசப்தம் தன்னார்வலர்களும் தெளிவாக இருக்கிறோம். நன்கொடையாளர்களும் புரிந்து வைத்திருக்கிறார்கள். அது அப்படியே தொடரட்டும்.
நன்றி.