May 23, 2017

சங்கிலி

சுமாரான வசதி அவருக்கு. மகன் எல்.கே.ஜி செல்கிறான். தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரைக்கும் குறிப்பிட்ட சதவீத படிப்பை ‘கட்டாயக் கல்வி’ சட்டத்தின் படி இலவசமாக அளிக்க வேண்டும். மாவட்ட கல்வி அதிகாரியின் அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்தால் அதை அவர்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைப்பார்கள். பள்ளிகள் தமக்கான மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும்.

மகனுக்கு ஒரு குறிப்பிட்ட பள்ளியில் சேர்ப்பதற்கு பரிந்துரை கோரியிருந்தார். ‘குலுக்கல் முறையில்தான் தேர்ந்தெடுப்போம்... இலவசமாகக் கிடைத்துவிட்டால் பிரச்சினையில்லை... இல்லைன்னா பணம் கட்டணும்’ என்று சொல்லியிருக்கிறார்கள். நாற்பதாயிரம் ரூபாய் பள்ளிக் கட்டணம். ‘இலவசமா கிடைச்சா படிக்க வைங்க..இல்லைன்னா வருஷம் நாப்பது செலவு பண்ணாதீங்க’ என்று சொல்லியிருக்கிறேன். அப்படிச் சொல்வதற்கான தைரியம் வந்திருக்கிறது.

இப்பொழுதெல்லாம் பல அரசுப் பள்ளிகளை தாராளமாக சுட்டிக் காட்டலாம். சுற்றுவட்டாரத்தில் அரசு பள்ளிகளில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். வேமாண்டம்பாளையம் நூறு சதவீதம், கள்ளிப்பட்டி தொண்ணூற்றொன்பது சதவீதம் என்று எந்தப் பள்ளியில் கேட்டாலும் தேர்ச்சி சதவீதத்தில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்கள். வெறுமனே தேர்ச்சி சதவீதம் மட்டுமில்லை- ஆயிரத்து நூறைத் தாண்டிய மாணவர்கள் சர்வ சாதாரணமாக இருக்கிறார்கள்.

தனியார் பள்ளிகள்தான் ஆயிரத்து நூறைத் தாண்டுவார்கள் என்றெல்லாம் இல்லை. அரசுப்பள்ளிகளில் கிராமப்புற மாணவர்களே அடித்து நொறுக்குகிறார்கள். இதில் ஒரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்க வேண்டும். பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற பெரும்பாலான அரசுப் பள்ளி மாணவர்களைத் தனியார் பள்ளிகள் கொத்திச் சென்றுவிடுகின்றன. பதினோராம் வகுப்பிலிருந்தே அவர்கள் பனிரெண்டாம் வகுப்புப் பாடத்தைத்தான் படிக்கிறார்கள். தனியார் பள்ளிகள் அழைத்துச் சென்ற மாணவர்கள் தவிர மிச்சம் மீதி இருக்கிற மாணவர்களை வைத்துத்தான் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் படம் காட்டுகிறார்கள். தேர்வு முடிவுகளுக்குப் பிறகு சில தலைமையாசிரியர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. அவ்வளவு உற்சாகமாக இருக்கிறார்கள். 

எம்.ஜி.ஆர் காலனி குறித்து அவ்வப்பொழுது எழுதியிருக்கிறேன். அந்தக் குடியிருப்பில் பதினேழு மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். ஒரு மாணவர் மட்டும் தோல்வி. மீதமிருக்கும் பதினாறு பேரும் தேர்ச்சியடைந்திருக்கிறார்கள். கடந்த வருடம் முழுவதும் அவர்களை அவ்வப்போது சந்தித்துப் பேசி உற்சாமூட்டிக் கொண்டிருந்தோம். கோபிப்பாளையம் திரேசாள் பள்ளியில் இரவில் தங்கிப் படித்துக் கொள்ள அனுமதியளித்திருந்தார்கள். தலைமையாசிரியர் அரசு தாமஸ் அவ்வப்பொழுது கவனித்துக் கொள்வார். மாணவர்கள் புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு பள்ளிக்கு வந்துவிடுவார்கள். கார்த்திகேயன் ஏற்பாட்டில் நள்ளிரவில் மாணவர்களுக்குத் தேநீர் வந்துவிடும். அந்த ஒரு மாணவனும் தேர்ச்சியடைந்திருந்தால் இன்னமும் சந்தோஷமாக இருந்திருக்கும். பதினாறு பேரில் ஷாலினிக்கு கண் பார்வை இல்லை. அவள் சொல்லச் சொல்ல இன்னொருவர் தேர்வு எழுதினார். ஷாலினி எந்நூற்றைம்பது மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறாள். சிறு உதவியைத்தான் நாம் செய்திருக்கிறோம். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும்தான் அனைத்து பாராட்டுக்களும் சேரும்.

இன்னொரு சந்தோஷமும் இருக்கிறது- பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு நடப்பதற்கு எழுபத்தைந்து நாட்களுக்கு முன்பாக கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒரு நிகழ்ச்சி நடத்தினோம். கொச்சியிலிருந்து ராதாகிருஷ்ணன், சென்னையிலிருந்து ஷான் கருப்பசாமி ஆகியோர் வந்திருந்தார்கள். ஏழு பள்ளிகளிலிருந்து எழுபத்தைந்து மாணவர்கள் வந்திருந்தார்கள். படிக்கக் கூடிய, படிக்காத என கலவையான மாணவர்கள். அவர்களில் நிறையப் பேர் ஆயிரத்து நூறைத் தாண்டியிருக்கிறார்கள். அய்யாவு 1123, அசாருதீன் 1130 என்று சிலரைச் சந்தித்தேன். அதே போல ஆயிரத்தைத் தாண்டியவர்களும் கணிசமாகத் தேறுவார்கள். இவர்களின் வெற்றிக்குப் பின்னால் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். மாணவர்களின் கடும் உழைப்பு இருக்கிறது. அடுத்தடுத்த வருடங்களில் இத்தகைய கருத்தரங்குகளில் என்ன மாதிரியான மாறுதல்களைச் செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வதற்காக மாணவர்களிடம் பேச வேண்டியிருந்து. 

‘வருடத்தின் தொடக்கத்திலேயே ஒரு தடவை வந்து பேசுங்க’ என்று சொன்னார்கள். இனி பதினொன்றாம் வகுப்பிலிருந்து பொதுத்தேர்வுகள் என்று அரசு அறிவித்திருக்கிறது. பதினோராம் வகுப்பிலிருந்தே மாணவர்களுக்கான பயிற்சியரங்குகளைத் தொடங்கும் எண்ணமிருக்கிறது. தயாரிப்புகளை ஆரம்பித்திருக்கிறோம். கடந்த முறை செய்த பணிகள் யாவுமே சோதனை முயற்சிகள்தான். வெற்றிகள் கிட்டியிருக்கின்றன. இந்த வருடம் அகலக்கால் வைக்காமல் அதை சற்றே விரிவுபடுத்தலாம். 

கடந்த வருடம் நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து உதவி பெற்ற அரவிந்த்குமார், அங்குராஜ் மாதிரியானவர்கள் களமிறங்கியிருக்கிறார்கள். சென்ற வருடம் புள்ளப்பூச்சி மாதிரி இருந்த இவர்கள் இன்றைக்கு வெகு தெம்பாக இருக்கிறார்கள். நேரில் பார்த்த ஜீவகரிகாலன் மிரண்டுவிட்டார். ‘என்னங்க இவ்வளவு ஸ்பிரிட்டோட இருக்காங்க?’ என்றார். ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. உருமாறிக் கொண்டிருக்கிறார்கள். அரவிந்த்குமார், மாதேஸ்வரன், அங்குராஜ், ராஜேந்திரன் மாதிரியான வேகம் மிக்கவர்களைப் பார்க்கும் போது உற்சாகமாக இருக்கிறது. மாதேஸ்வரன் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன். பெற்றோர் கிடையாது. அவனும் அக்காவும்தான். ஞாயிற்றுக்கிழமையன்று கறிக்கடை நடத்துகிறார்கள். வாரம் ஒரு ஆடு அறுத்து விற்பனை செய்கிறார்கள். அதில் வரும் இலாபம் அந்த வாரத்துக்கான குடும்பச் செலவு. இருவருமே படித்துக் கொண்டிருக்கிறார்கள். 

மாணவர்களிலேயே கூட கட்டணம் வாங்கிய பிறகு திரும்பிக் கூடப் பார்க்காதவர்களும் இருக்கிறார்கள். அவர்களை விட்டுவிடலாம். இத்தகைய உற்சாகமான இளைஞர்கள்தான் இவ்வருடம் கல்லூரி சேரவிருக்கிறவர்களைத் தயார்படுத்தப் போகிறார்கள். இதுவொரு சங்கிலித் தொடர். நீண்டகாலத்திற்கான பயணத்திட்டம் இது. இந்த வருடம் படித்து முடித்து வெளிவருகிற புள்ளப்பூச்சிகள் அடுத்த வருடத்தில் சிங்கக்குட்டிகளாகத் திரிவார்கள்.

அரசுப் பள்ளிகள் எந்தவிதத்திலும் குறைவானவை இல்லை. தனியார் பள்ளிகளில் வெறுமனே பட்டப்படிப்பை முடித்துவிட்டு ஐந்தாயிரத்துக்கும் ஆறாயிரத்துக்கும் மனனம் செய்ய வைக்கிறவர்கள்தான் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் படிப்பிலும் அனுபவத்திலும் தனியார் பள்ளி ஆசிரியர்களை விட பன்மடங்கு வலுவானவர்கள். ‘அரசுப்பள்ளிகள் என்றால் இளப்பம்’ என்கிற மனநிலையை உடைத்தால் போதும். அரசுப்பள்ளிகள் வெகு உயரத்திற்குச் சென்றுவிடும்.

அர்ப்பணிப்புடன் கூடிய தலைமையாசிரியர்களுடன் இணைந்து பணியாற்றுவது என்பது உற்சாமூட்டக் கூடியது. எடுத்த உடனேயே அத்தகைய ஆசிரியர்களைக் கண்டுபிடிக்க முடியாது. மெல்ல மெல்லத்தான் நடக்கும். ஆனால் நடந்து கொண்டிருப்பதைக் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.