May 22, 2017

ஏன் இப்படி இருக்கீங்க?

மாணவனின் அப்பா மரம் ஏறுகிறார். அந்த வறக்காட்டில் பனைமரங்கள்தான் அதிகம். பனையேறி பிழைக்கும் குடும்பம் அது. மாணவன் இந்த வருடம் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வை எழுதியிருக்கிறான். 1123 மதிப்பெண்கள். அரசுப் பள்ளி, தமிழ் வழிக்கல்வி. அவன்தான் பள்ளியில் முதலிடம். நேற்று அவனைச் சந்தித்துப் பேசினோம். அப்பாவியாக இருக்கிறான். பேசவே தயங்குகிறான். முன்பு நடத்திய கல்வி சார்ந்த பயிற்சிப் பட்டறைகளில் பார்த்திருக்கிறேன். 

‘இதுவரை எந்தக் கல்லூரிக்கும் விண்ணப்பிக்கவில்லை’ என்றான். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பெரும்பாலானவை விண்ணப்பம் கொடுப்பதையே நிறுத்திவிட்டன. பல கல்லூரிகளில் சேர்க்கை முடிவுறும் கட்டத்திற்கு வந்துவிட்டது. 

‘ஏன் தம்பி?’ என்று கேட்டால் அவனது அப்பாவை பார்த்தான். கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு அறக்கட்டளையினர் அணுகியிருக்கிறார்கள். 

‘உங்க பையன் முதல் மார்க்..அதனால நாங்களே மொத்தச் செலவையும் ஏற்றுக் கொள்கிறோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். 

‘அதற்கும் அப்ளிகேஷன் போடாததற்கும் என்ன சம்பந்தம்?’ என்று குழப்பமாக இருந்தது. அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொறியியல் கலந்தாய்வுக்குச் சென்று கல்லூரியைத் தேர்வு செய்து சேர்ந்து கொள்ள வேண்டியதுதானே? அதன் பிறகு அவர்கள் கல்லூரிக்கட்டணத்தைச் செலுத்தலாம் அல்லவா?

அங்குதான் இக்கு வைத்திருக்கிறார்கள். 

‘காலேஜை அவங்களேதான் முடிவு செய்வாங்களாம்’ என்றார் மாணவனின் தந்தை. அரசு தாமஸூம், ஜீவகரிகாலனும் உடனிருந்தார்கள். உள்ளுக்குள் ஏதோ விவகாரம் இருக்கிறது என்று தோன்றியது. ‘கல்லூரிகளின் பெயர்களைச் சொன்னார்களா?’ என்று கேட்ட போது கோயமுத்தூர் பகுதியில் இரண்டு பெயர் தெரியாத பொறியியல் கல்லூரிகளின் பெயர்களைச் சொன்னார்கள். அவனுடைய மதிப்பெண்ணுக்கு இந்தக் கல்லூரிகள் எந்தவிதத்திலும் தகுதியற்றவை. ஏன் அங்கே கொண்டு போய்த் தள்ள வேண்டும்?

அறக்கட்டளை என்ற பெயரில் ஆள் பிடிக்கிற வேலை இது. தனியார் கல்லூரிகள் வீசுகிற எச்சில் பிஸ்கெட்டுக்காக அறக்கட்டளை, பவுண்டேஷன் என்ற பெயரில் கிளம்பியிருக்கிறார்கள். மாணவனது கட்-ஆஃப் சற்று குறைவுதான். 190.5. மிகச் சிறந்த கல்லூரிகள் கிடைப்பதற்கான வாய்ப்பில்லை என்றாலும் வேறு சில நல்ல கல்லூரிகளில் அவனால் சேர முடியும். ஆனால் அதற்குள்ளாக வளைத்து வைத்திருக்கிறார்கள்.

1123 மதிப்பெண்களை வாங்கிய மாணவனை 600,700 மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்கள் படிக்கும் கல்லூரிகளில் சேர்த்தால் எப்படி மேலே வருவான்? அரசுப் பள்ளிகளில் முதல் ஏழெட்டு மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களின் பட்டியலைத் தயாரித்து ஒவ்வொரு ஊராக இப்படித் திரிகிறார்கள். அவர்களது நெட்வொர்க் முன்பாக நாமெல்லாம் தூசி. எத்தனை மாணவர்களை நேரில் சந்தித்து நம்மால் பேச முடியும்?

இத்தகைய கிராமப்புற மாணவர்களது பிரச்சினையே பணம்தான். யாராவது வந்து ‘நீங்க ஃபீஸ் கட்ட வேண்டியதில்லை’ என்று சொன்னால் ஏமாந்துவிடுகிறார்கள். கல்லூரிகள் நேரடியாகச் சென்று மூளைச் சலவை செய்வது ஒரு புறம்; இப்படி அறக்கட்டளை என்ற பெயரில் ஆள் வைத்து வளைப்பது ஒரு புறம். இத்தகைய மாணவர்களிடம் ‘வங்கியில் கடன் வாங்கிக் கொள்ளலாம்’ என்றெல்லாம் நாம் சொன்னாலும் எடுபடுவதேயில்லை. ‘அது எங்களுக்குத் தெரியாதா?’ என்கிற மனநிலையில்தான் அதைப் புரிந்து கொள்கிறார்கள்.

‘அந்த அறக்கட்டளையினரின் எண் கொடுங்கள்’ என்று வாங்கி அழைத்துப் பேசினால் ஒரு பெண்மணி எடுத்தார். திமிராகவே பேசுகிறார். ‘எல்லா டீடெயிலும் சொல்லியாச்சுல்ல’ என்றாள். ‘ள்’ விகுதி போதும். ‘பையன்கிட்ட சொல்லியிருக்கீங்க..அவனுக்குத் தெரியலை..இன்னொரு தடவை சொல்லுங்க’ என்ற போதும் தெளிவான பதில் இல்லை. 

இன்று காலையில் மீண்டும் அழைத்து ‘மேடம்..கவுன்சிலிங்குக்கு போகக் கூடாதா’ என்ற போதும் சரியான பதில் இல்லை. அவர்களின் இணையதளத்தைத் துழாவினால் விருது வாங்கியிருப்பதாகவும், ஏகப்பட்ட மாணவர்களைப் படிக்க வைப்பதாகவும் எழுதி வைத்திருக்கிறார்கள். அப்புறம் ஏன் தானாவதி கல்லூரிகளில் சேர்த்துவிடுகிறார்கள் என்று தெரியவில்லை. ‘அந்தப் பையன்கிட்ட கூப்பிட்டு சொல்லிட்டேன்’ என்றார். என்ன சொன்னார் என்று தெரியவில்லை. பையனின் எண்ணில் அழைத்த போது ‘அப்பன் கூட வேலைக்கு போயிருக்கானுங்க..பொழுதோட பேசச் சொல்லுறேன்’ என்று அவனது அம்மாதான் பேசினார்.

‘அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள்’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லலாம்தான். ஒருவேளை நாம் சொல்கிற காரணத்தினால் வேறு கல்லூரிகளில் சேர்த்து ‘சுமை அதிகமாகிடுச்சுங்க’ என்று நம்மை நோக்கி விரலை நீட்டிவிடுவார்களோ என்று தயக்கமாகவும் இருக்கிறது.

நல்ல மதிப்பெண் வாங்கிய ஒரு அப்பாவி மாணவனை தனியார் கல்லூரிகளின் பெருமுதலாளிகளுக்கு அழைத்துக் கொடுப்பது என்பது கிட்டத்தட்ட விபச்சாரம்தான். பாலியல் புரோக்கர்களைப் போலவே இவர்களும் பகட்டாக இருக்கிறார்கள். பிரத்யேக இணையதளம், ஏழைக் குழந்தைகளின் படங்கள், நெஞ்சை நக்கும் வாக்கியங்கள், சினிமாக்காரர்களின் சான்றிதழ்கள் என்று ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பகட்டுக்கும் நடிப்புக்கும் முன்னால் நாம் கையூன்றி கர்ணம் அடிக்க வேண்டியிருக்கிறது.

பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்கின்றன. அப்பாவி மாணவர்களைக் குழிகளில் தள்ளித்தான் சம்பாதிக்க வேண்டுமென்றால் அதைப் போன்ற பாவம் வேறென்ன இருக்கிறது? அரசுப்பள்ளிகளில் கிராமப்புற மாணவர்கள் மதிப்பெண்கள் வாங்குவது சாதாரணக்காரியமில்லை. அப்படி படித்து மேலே வரும் மாணவர்களின் தலையில் ஷூகாலை வைத்து மிதித்து சேற்றுக்குள் அமுக்குவதைப் போல இதைச் செய்கிறார்கள்.

தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் நினைத்தால் புதைகுழிகளிலிருந்து மாணவர்களைக் காப்பாற்ற முடியும். ஆனால் எத்தனை ஆசிரியர்கள் நினைக்கிறார்கள் என்பதுதான் பெரும் கேள்விக்குறி.