May 20, 2017

ஊரோடிகள்..

‘இந்த ஊர்லேயே இருக்கக் கூடாது’ என்று உள்ளூர்வாசிகள் சிலர் பேசுவதுண்டு. அவர்களுக்கு சொந்த ஊரின் மதிப்பு தெரிவதில்லை. பஞ்சம் பிழைக்க வெளியூர் சென்றவர்களுக்குத்தான் மண் வாசனையின் சுகம் தெரிகிறது. பெங்களூரிலிருந்து கிளம்பும் போது பெரிதாக எதுவும் தெரியாது. அடிக்கடி பயணிப்பதனால் அப்படியான மனநிலை. ஆனால் நள்ளிரவு தாண்டிய பொழுதுகளில் கருங்கல்பாளையத்தைக் கடந்து ஈரோட்டுக்குள் நுழைகையில் ஆழ்மனம் விழித்துக் கொள்ளும். வாகனப்புகையில்லாத அந்த நேரத்தில் மூக்கில் ஏறும் மஞ்சள் நொடியிலிருந்து ஊர் நினைவுகள் உள்ளடுக்குகளிலிருந்து வெளியேறத் தொடங்குகின்றன. எத்தனை காலம் கடந்தாலும் இந்த உணர்வு மட்டும்தான் அப்படியேதான் இருக்கும் போலிருக்கிறது. 

இன்று ஆண்டாள் பேருந்தில் பைரவா படம் ஓடிக் கொண்டிருந்தது. பெரும்பாலான தமிழ்ப் படங்களை இப்படி ஓசியில் பார்ப்பதுதான் வழக்கம். தமிழகத்தின் இரவு நேரத் தனியார் பேருந்துகள் தமிழ்ராக்கர்ஸை மிஞ்சுகிறார்கள். எனக்குள்ளிருந்து அவ்வப்பொழுது எட்டிப்பார்க்கும் அடிமனசு விஜய் ரசிகன் இன்றும் எட்டிப் பார்த்தான். ஐந்தரை மணிக்கெல்லாம் கோபி பேருந்து நிலையத்திற்குள் வந்துவிட்டது. அடுத்த அரை மணி நேரம் கழித்துத்தான் பேருந்தை எடுப்பார்கள். அப்படியே அமர்ந்து அரை மணி நேரம் கூடுதலாகப் பார்த்துவிட்டுத்தான் பேருந்தை விட்டு இறங்கினேன். கீழே நின்று கூட்டத்தை உள்ளே ஏற்றிக் கொண்டிருந்த நடத்துநர் ‘யார்றா இவன்..கானங்காத்தால.. திருவாளாத்தானாட்ட இருக்குது’ என்று ஒரு மார்க்கமாகப் பார்த்தார். அதையெல்லாம் கண்டுகொண்டால் படம் பார்க்க முடியுமா? படத்தைக் கூட பார்த்துவிடலாம். இந்த கீர்த்தி சுரேஷைத்தான்...

ஊரில் இன்று திமுகவின் நீட் எதிர்ப்பு, இந்தித் திணிப்பு எதிர்ப்புக்கான கருத்தரங்கம் நடக்கிறது. பேருந்து நிலையத்திற்கு முன்பாக பெரிய பதாகை ஒன்றை வைத்திருந்தார்கள். நன்கு அறிமுகமானவர்களின் பெயர்களும் இருந்தன. தலைமை கழக பேச்சாளர் மனுஷ்ய புத்திரனும் பேசுகிறாராம். கவிஞர், எழுத்தாளர் என்றால் போய் பார்த்திருக்கலாம். கட்சி பேச்சாளருக்கும் நமக்கும் சம்பந்தமில்லை என்பதால் பார்க்க வேண்டியதில்லை எனத் தோன்றியது. உள்ளூர் கட்சிக்காரர் ஒருவர் மானுஷ்ய புத்திரன் என்று குறிப்பிட்டு நோட்டீஸ் அடித்திருக்கிறார். நல்லவேளையாக பெயருக்கு முன்னால் ‘அ’ சேர்க்காமல் விட்டிருக்கிறார்கள்.

நடையக் கட்டினேன். 

பேருந்து நிலையத்திலிருந்து வீட்டுக்கு நான்கு கிலோமீட்டர் தூரம். அதிகாலை இரண்டு மணிக்கு வந்திறங்கினாலும் கூட நடைதான். பெங்களூரில் இரவு நேரத்தில் அரைக் கிலோமீட்டர் நடப்பதென்றாலும் பயமாக இருக்கும். ஆனால் ஊரில் பயந்ததேயில்லை. சினிமா பாடல்களைச் சத்தம் போட்டு பாடிக் கொண்டே நடப்பேன். இலக்கிய நண்பர் சீனிமோகனின் மனைவி மகளிர் காவல்நிலையத்தில் ஆய்வாளராக இருக்கிறார். ஒரு நாள் ரோந்துப் பணியில் இருந்தார். எனக்கு அவரை அறிமுகமில்லை. பாடிக் கொண்டே நடந்து கொண்டிருந்த போது எதிரில் இரு சக்கர வாகனத்தில் வந்தார். வாக்கி டாக்கி கராமுராவென்றிருந்தது.

வண்டியை நிறுத்தி ‘எங்க இருந்து வர்றீங்க?’ என்றார். சொன்னேன். சில கேள்விகளைக் கேட்டுவிட்டு ‘எதுக்கு இவ்வளவு சத்தமா பாடுறீங்க?’ என்றார். ‘பேய் வராமல் இருக்க’ என்றேன். அவருக்கு இன்னமும் ஞாபகமிருக்கிறதா என்று தெரியவில்லை. சிரித்துக் கொண்டே போய்விட்டார். உண்மையில் தனிமையில் நம் குரல்வளத்தினால் கடுப்படைய யாருமேயில்லாத சமயங்களில் பாடுவதில் தனிச்சுகம். ‘வர்லாம் வர்லாம் வா...பைரவா’ என்று கத்திப் பாடியபடியே நடந்தால் எதிரில் வருகிற யாரையாவது பிடித்து ஊமைக்குத்தாக விட வேண்டும் என்றாகிவிடுகிறது. 

கரட்டடிபாளையத்தில் கூட்டுறவு பால் சங்கம் பிரசித்தம். ஆறு மணியிலிருந்து பால் வாங்க ஆரம்பித்துவிடுவார்கள். எதிரில் நமக்குத் தெரிந்தவர்கள் யாராவது பால் செம்புடன் வந்து கொண்டேயிருப்பார்கள். பெங்களூரிலும் சென்னையிலும் நெடுஞ்சாலையில் நம் முகம் பார்த்துத் தலையை ஆட்டுவதற்கும் கையை அசைப்பதற்கும் யாருமே இருப்பதில்லை. பெருநகரங்களைப் பொறுத்தவரையிலும் முக்கால்வாசி மனிதர்கள் யாருமற்ற அநாதைகள்தான். சாலைகளில் தனித்து விடப்பட்டிருப்போம். சொந்த ஊர்களில் அப்படியில்லை. அதிகாலையின் குளிர்மையையும் தாண்டி மகிழ்ச்சி தரக் கூடியவை உரசிச் செல்லும் அந்தப் புன்னகைகளும் ஸ்நேகமான உடல்மொழிகளும்.

உள்ளூரிலேயே இருப்பவர்களுக்கு இதன் அருமையெல்லாம் தெரிய வாய்ப்பே இல்லை. ஆயிரம் சச்சரவுகளும் சண்டைகளும் வன்மங்களும் பகைமைகளும் இருப்பினும் நம் ஊரில்தான் நமக்கான மனிதர்கள் இருக்கிறார்கள். கிளைகள் எங்கே பரவியிருந்தாலும் வேரோடிக் கிடக்கும் நம் மண்ணில்தான் நம்மைப் பார்த்தவுடன் பேசுவதற்கும் சிரிப்பதற்கும் நெருங்கி வருவதற்குமான மனிதர்கள் நடமாடுகிறார்கள். பிழைக்கக் குடியேறிய நகரங்களில் நமக்கென்று யார் இருக்கிறார்கள்? கை நிறையச் சம்பாதித்தாலும் அவரவர் பாதை அவரவருக்கு. உலோகத்தனமான வாழ்க்கை அது.

அலுவலக நண்பர் ஒருவர் நேற்று பேசிக் கொண்டிருக்கும் போது சொன்னார். அதிகாலை மூன்றரை மணிக்கு அலைபேசி அழைத்திருக்கிறது. தூக்கக் கலக்கத்தில் எடுத்திருக்கிறார். ‘பக்கத்து வீட்டில் சத்தம் கேட்குதுங்க’ என்று ஒருவர் அழைத்துச் சொல்லியிருக்கிறார். ‘என்கிட்ட அவர் நெம்பர் இல்லைங்க’ என்று சொல்லிவிட்டு உறங்கிவிட்டாராம். எந்தவிதமான குற்றவுணர்ச்சியும் இல்லாமல் இதைச் சொன்னார். அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. ‘தூக்கம் கெட்டுச்சு’ என்ற வரியையும் சேர்த்துக் கொண்டார். இதுதான் நிதர்சனம். நமக்கு அந்நியமான மண்ணில் ‘யாருக்கு என்ன நடந்தால் என்ன’ என்கிற சலனமற்ற தன்மை நம்மோடு வந்து ஒட்டிக் கொள்கிறது.

லட்சக்கணக்கில் சம்பாதித்தாலும் சம்பாத்தியத்திற்காக வந்து சேர்ந்திருக்கும் நகரங்கள் என்பவை இரும்புக் காடுகள். இல்லையா?

பால்யத்தைக் கழிந்த இந்த ஊர் எனக்கு இரண்டு நாட்கள் அளிக்கக் கூடிய உற்சாகத்தை வேறு எந்த ஊரும் தருவதில்லை. 

ஊரில் மழை பெய்திருக்கிறது. பெருமழை இல்லையென்றாலும் மண்ணை நனைக்கும் மழை. ஆசிரியர் அரசு தாமஸ் ஊருக்குள் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தார்.

‘வேமாண்டம்பாளையத்தில் நல்ல மழை... ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தேன்..பார்த்தீங்களா?’ என்றார். தேடிப் பார்த்தேன்.

அவர் எழுதியிருந்தது-

நம்பியூர் - வேமாண்டாம்பாளைத்தைத் தாண்டியபோது சாலையின் இரு புறத்திலும் மழை நீர்...

தேநீர் கடையில் நிறுத்திப் பேசிய போது "ராத்திரி சரித்திரத்தில இல்லாத மழை" என்றார் 40 வயது இளம் விவசாயி...

இன்னொருவர், "2 உழவு மழை இருக்குங்க" என்றார்.

"பரவாயில்லயே இந்தக் கோடையில்" என்று நாம் கேட்க ஒரு பெரியவர், "எல்லாம் இந்த வேலிச் செடிகளை புடுங்கி வீசுனதாலதாங்க" என்றதோடு, “ஒரு பெங்களுர் தம்பி, கோபி நகைக்கடைக்காரர், நம்ம ஊரு டாக்டரம்மா இவங்க செஞ்ச புண்ணியம் தானுங்க " என்று சொல்ல பக்கத்திலிருந்தவர், "கோபிபாளையத்து மில்லுக்காரரும் தானுங்க" என்று என்னிடமே சொன்னதைக் கேட்க பெரு மகிழ்ச்சியாக இருந்தது” .

ஊரை நோக்கி எவ்வளவுதான் நகர்ந்தாலும் அவர்களுக்கு நான் பெங்களூர் தம்பியாகவேதான் இருக்கிறேன். வேர்கள் எப்பொழுதுமே மண்ணுக்குள் புதைந்துதான் கிடக்கும். அது மரத்துக்கு மட்டும்தான் தெரியும். வெளியே பரவி நிற்கும் கிளைகள்தான் ஊரார்களின் கண்களுக்குத் தெரியும். எனது வேர் எங்கே என்பது எனக்கு மட்டும்தான் தெரிகிறது. எனக்கு மட்டுமா? என்னைப் போலவேதான் பல லட்சக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். ஊரோடிகள். அவரவருக்கு மட்டும்தான் தெரியும் அவரவர் மண்ணில் புதைந்து கிடக்கும் தத்தம் வேர்களை.