Apr 6, 2017

என்னய்யா உங்க கணக்கு?

ஏப்ரல் வந்துவிட்டால் வருமான வரித்துறை நினைவுக்கு வந்துவிடுகிறது. மார்ச் மாதக் கணக்கைப் பார்க்கலாம் என்று ஆன்லைனில் கணக்கைத் திறந்தால் பரிமாற்றத்திற்கான கடவுச் சொல்லை மாற்றச் சொல்கிறது பரோடா வங்கியின் தளம். ‘ஆன்லைன் பரிமாற்றம் செய்தததேயில்லை என்பதால் அதற்கான கடவுச் சொல்லே இல்லை’ என்று மின்னஞ்சல் அனுப்பியாகிவிட்டது. தொலைபேசியில் அழைத்துச் சொல்லியாகிவிட்டது. எந்த யோசனையுமில்லாமல் ‘நேரில் வாங்க’ என்கிறார்கள். இந்த ஒரு வேலைக்காக பெங்களூரிலிருந்து நம்பியூருக்குச் செல்ல வேண்டும். கிராமப்புற வங்கியில் கணக்கு வைத்திருந்தால் நமக்கும் வேலை சீக்கிரம் ஆகும்; அவர்களுக்கு பணப் பரிமாற்றத்தோடு கூடிய வங்கிக் கணக்கு இருந்த மாதிரியும் ஆகும் என்று நினைத்தால் அவர்கள் என்னவோ வேண்டா விருந்தாளியாகப் பார்க்கிறார்கள்.

ஒரு வாரம் ஆயிற்று. இன்னமும் கடவுச் சொல் கிடைக்கவில்லை. 

‘அது இல்லாட்டியும் போச்சாது..நீங்க சாமி சாமின்னு நல்லா இருப்பீங்களாமா...ஸ்டேட்மெண்ட்டையாவது அனுப்புங்கள்’ என்று கேட்டு வாங்கியிருக்கிறேன். ஆடிட்டருக்கும் அனுப்பி வைக்க வேண்டும். அவர் ஒருவரை நியமித்து கணக்கைச் சரி பார்க்கும் வேலையைத் தொடங்குவார்.

2016 ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து 2017 மார்ச் 31 வரைக்குமான வரவு செலவு கணக்கு இது. கடந்த ஒவ்வொரு மாதத்திற்கான விவரமும் நிசப்தம் தளத்திலேயே இருக்கிறது. கடந்த பனிரெண்டு மாதங்களில் யாருக்கு பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதையெல்லாம் அலசிப் பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் அலசுகிறீர்களோ இல்லையோ இனி அடுத்த ஒரு மாதத்திற்கு எனக்கு இதுதான் வேலை. தொண்ணூறு சதவீதம் பேர் ரசீது கொடுக்கவில்லை. ரசீது கொடுக்காவிட்டால் பரவாயில்லை- மருத்துவ சிகிச்சை என்ன ஆனது, இப்பொழுது உடல்நிலை எப்படியிருக்கிறது என்று கூடச் சொல்வதில்லை. இனி ஒவ்வொருவராகத் தேடியெடுத்துப் அழைக்க வேண்டும். ரசீதுகளை பத்திரமாக வைத்திருக்கிறார்களோ இல்லையோ- ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். 

இன்று வருமான வரித்துறை ஆணையாளர் முரளியிடம் பேசினேன். மும்பையில் இருக்கிறார். ‘கணக்கை உங்க டிபார்ட்மெண்ட்ல கொடுத்தா அதோட வேலை முடிஞ்சுதுல சார்?’ என்றால் பதறுகிறார். 

‘ஆறு வருஷக் கணக்கை எப்போ வேணும்ன்னாலும் கேட்போம்’என்றார். அது சரி. அதுவரைக்கும் ரசீதுகளிலிருந்து எல்லாவற்றையும் பராமரிக்க வேண்டுமாம். ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு கோப்பு வைத்திருக்க வேண்டும் போலிருக்கிறது.

அறக்கட்டளை என்றால் பணத்தை அங்கே வாங்கி இங்கே கொடுப்பதோடு வேலை முடிந்தால் நன்றாக இருக்கும். ம்ஹூம். பயனாளிகளிடம் ரசீது வாங்க வேண்டும். நன்கொடையாளர்களிடம் PAN எண்ணை வாங்க வேண்டும்- PAN எண்ணை வாங்குவது எல்லாவற்றையும் விட கடினமான வேலை. நிசப்தம் அறக்கட்டளையைப் பொறுத்தவரைக்கும் முக்கால்வாசி நன்கொடையாளர்கள் திருப்பதி பக்தர்கள் மாதிரி. பணம் அனுப்புவார்கள். வேறு எந்த விவரத்தையும் தர மாட்டார்கள். 

2016-17க்கான வருமான வரிக் கணக்கு வழக்கைத் தாக்கல் செய்ய செப்டெம்பர் 30 வரைக்கும் அவகாசம் இருக்கிறது. ஆனாலும் இப்பொழுதே வேலையை ஆரம்பித்தாக வேண்டும். நேரத்தை உறிஞ்சக் கூடிய வேலை என்றாலும் சந்தோஷமாகவே செய்கிறேன். வெளியே சலித்துக் கொள்வது போல காட்டிக் கொண்டாலும் உற்சாகமாகவே இருக்கிறேன். வங்கியிலிருந்து ஸ்டேட்மெண்ட்டை எக்ஸெல் தாளாக அனுப்பியிருந்தார்கள் என்றால் கடந்த வருடத்தில் எவ்வளவு நன்கொடையாக வந்தது, எவ்வளவு தொகையை பயனாளிகளுக்குக் கொடுத்தோம் என்று தெளிவாக எழுதியிருக்கலாம். பிடிஃப் வடிவத்தில் அனுப்பியிருக்கிறார்கள். அதனால் அந்த விவரங்களை இன்னொரு நாள் எழுதுகிறேன். யாருக்காவது நேரமிருந்தால் கூட்டிப் பாருங்கள்.

நிரந்தர வைப்பு நிதியில் இருக்கும் பதினேழு லட்சம் இந்த வாரத்தில் வழக்கமான வரவு செலவுக்கு மாற்றப்பட்டுவிட்டும். ஜூன், ஜூலையில் கல்விக்காக நிறையப் பேருக்குக் கொடுக்க வேண்டியிருக்கும்.

அறக்கட்டளை தொடங்கப் போவதாகச் சொன்ன தருணத்தில் ‘பண விவகாரத்துல வம்பு வந்து சேரும்’ என்று அம்மாவும் அப்பாவும் சொன்ன போது ‘வெளிப்படையா இருந்துக்கிறேன்’ என்றுதான் உறுதி எடுத்துக் கொண்டேன். இம்மியும் பிசகாத மனதையும் சூழலையும் கொடுத்த கடவுளுக்கு நன்றி. இத்தனை பேரின் நம்பிக்கையைச் சம்பாதித்துக் கொடுத்தது அந்த ஒற்றை உறுதிதான்.

‘இவ்வளவுதான் சார் கணக்கு’ என்று எதையும் மறைக்காமல் காட்டிவிடுவது திருப்தியாக மட்டுமில்லை- சற்றே பெருமையாகவும் கூட உணரச் செய்கிறது. அருண் ஜேட்லியே வேண்டுமானாலும் அமர்ந்து சரி பார்த்துக் கொள்ளட்டுமே.

நன்கொடையாளர்கள், அறக்கட்டளைக்கு தன்னார்வலர்களாகச் செயல்படுகிறவர்கள், எழுதுவதைத் தொடர்ந்து வாசிக்கிறவர்கள், நான்கு பேரிடம் நல்லபடியாகச் சொல்கிறவர்கள் என அத்தனை பேருக்கும் நன்றி. இது எல்லாமே ஏதோவொரு விதத்தில் இணைந்து செயல்படுவதைப் போலத்தான். 

இனியும் இணைந்தே செயல்படுவோம். கேள்விகள் இருப்பின் கேளுங்கள்.

ம்க்கும். கேட்டுட்டாலும்ம்ம்ம்ம்....2 எதிர் சப்தங்கள்:

Unknown said...

""ம்க்கும். கேட்டுட்டாலும்ம்ம்ம்ம்...."""

அட்டகாசம்!அட்டகாசம்!!

Anonymous said...

"என்னய்யா உங்க கணக்கு!"
"அது இல்லாட்டியும் போச்சாது..நீங்க சாமி சாமின்னு நல்லா இருப்பீங்களாமா...ஸ்டேட்மெண்ட்டையாவது அனுப்புங்கள்"

சிரிப்பை எவ்வளவு தடுத்தாலும் நிறுத்த முடியவில்லை.. இது மாதிரியான ஊர்ப்புற வழக்கு மொழிச் சொற்றொடர்களைப் பல வருடங்களுக்குப்பின் படிக்கும்பொழுது, உறங்கிய உயிர் துளிர்த்தெழுவதைப்போல் உள்ளது....
அற்புதம் தங்கள் எழுத்துக்கள்! நன்றிகள் பல!