Apr 7, 2017

எப்படி நேரம் கிடைக்கிறது?

சில நண்பர்கள் ‘எப்படி நேரம் கிடைக்கிறது?’ என்று கேட்பதுண்டு. வெளியில் இருந்து பார்த்தால் அப்படித் தெரியும் போலிருக்கிறது. அப்படி பில்ட்-அப் செய்து வைத்திருக்கிறேன். எனக்கு அப்படித் தோன்றவில்லை. என்னதான் மண்டை காய்ந்து யோசித்தாலும் அலுவலகம், குடும்பம், எழுதுவதற்கு, அறக்கட்டளை பணிகள், பயணம், வாசிப்பு (அ) படம் பார்த்தல் என்பதைத் தவிர வேறு எதையும் செய்வதில்லை. திட்டமிட்டுக் கொள்வதுண்டு. தினசரி காலையிலும் மாலையிலும் மொத்தமாக ஒன்றரை மணி நேரம் இரு சக்கர வாகனம் ஓட்டுகிறேன். அந்த நேரம் யோசிக்கவும் திட்டமிடவும் போதுமானதாக இருக்கிறது.

எங்கள் அலுவலகத்தைப் பொறுத்தவரை நேரங்காலம் கிடையாது. எப்பொழுது வேண்டுமானாலும் வந்து செல்லலாம். ஆனால் எட்டரை மணி நேரமாவது அலுவலகத்தில் இருந்தாக வேண்டும். இல்லையென்றால் மின்னஞ்சல் அனுப்பிவிடுவார்கள். பலரும் பத்து அல்லது பதினோரு மணிக்குத்தான் அலுவலகத்துக்கு வருவார்கள். நான் எட்டரை அல்லது ஒன்பது மணிக்கு ஆஜராகியிருப்பேன். அலுவலகமே காற்று வாங்கிக் கொண்டிருக்கும். உள்ளே நுழைவதற்கே சந்தோஷமாக இருக்கும். வந்தவுடன் மின்னஞ்சல்களைப் பார்த்து, பதில் அனுப்பி ‘இன்னைக்கு இதுதான் வேலை’ என்கிற முடிவுக்கு ஒன்பதரை அல்லது பத்து மணிக்கு வந்துவிடலாம். அப்பொழுது தொடங்கில் மாலை ஐந்து அல்லது அறு மணி வரைக்கும் வேலை செய்தால் ஏகப்பட்ட நேரம் கிடைக்கும். அனுபவஸ்தர்களுக்குத் தெரியும்.

பதினோரு மணிக்கு அலுவலகத்துக்கு வந்த காலமும் உண்டு. ஒரு மணி நேரம் மின்னஞ்சல்களைப் படித்து பனிரெண்டரை மணிக்கு மதிய உணவை முடித்து இரண்டு மணிக்குத் திரும்ப வந்து அமர்ந்தால் தூக்கம்தான் வரும். மாலை மூன்றரை அல்லது நான்கு மணிக்கு முசுவு வந்து வேலையைப் படபடவென்று ஆரம்பித்தால் எட்டு ஒன்பது வரைக்கும் இழுத்தடித்துவிடும். அதன்பிறகு பெட்டியைக் கட்டி எட்டு மணிக்குக் கிளம்பிச் சென்றால் வீட்டில் எல்லோரிடமும் தூக்கக் களை வந்திருக்கும். ஒரு நாளே வீணாகப் போன மாதிரிதான். 

நம்மை அலுவலகத்திற்கு நேர்ந்துவிட்டிருக்கிறார்களா என்ன? அதனால்தான் ஒழுங்குபடுத்திக் கொண்டேன். அமெரிக்கா போன்ற நாடுகளில் இதில் தெளிவாக இருப்பார்கள். காலையில் நேரத்தில் வந்து மாலை விரைவில் கிளம்பிச் சென்றால் மகனோடு விளையாடலாம். பாடம் சொல்லித் தரலாம். வீட்டில் உள்ளவர்களிடம் பேசலாம். சண்டையிடலாம். எல்லோரும் தூங்கச் சென்ற பிறகு நமக்கான வேலைகளைப் பார்க்கலாம். வாரத்தில் எல்லா நாட்களும் இந்த பிராப்தம் கிடைப்பதில்லை. எங்கள் நிறுவனம் அமெரிக்க நிறுவனம் என்பதால் இரவுகளில் மீட்டிங் இருக்கும். திங்கட்கிழமைகளில் இரவு பதினொன்றரை வரைக்கும் கூட பிடித்துக் கொள்வார்கள். அத்தகைய தினங்கள் விதிவிலக்கு. சம்பளம் கொடுக்கிறார்கள்- தொலைந்து போகட்டும் என்று விட்டுவிடுவதுண்டு. ஆனால் மற்ற பெரும்பாலான நாட்களை மேற்சொன்ன மாதிரி அமைத்துக் கொள்கிறேன்.

அலுவலகத்தையும் குடும்பத்தையும் சமாளித்துவிட்டால் மற்றதெல்லாம் எளிதாகிவிடுகிறது.

எத்தனை புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்ற இலக்கு எதுவும் வைத்துக் கொள்வதில்லை. அது தேவையில்லாத அழுத்தம். சுற்றிலும் இரண்டு மூன்று புத்தகங்களை வைத்திருப்பதுண்டு. மனநிலைக்குத் தகுந்த மாதிரி வாசிக்க வேண்டியதுதான். இரவு ஒன்பதரை அல்லது பத்து மணியிலிருந்து பதினொன்று வரைக்கும் வாசித்தாலே போதும். நாற்பது அல்லது ஐம்பது பக்கங்கள் வாசித்து முடித்திருப்பேன். அதன் பிறகு நிசப்தம் தளத்துக்காக எழுதுகிற வேலை. மனநிலை ஒத்துழைத்தால் இரண்டு பதிவுகள். இல்லையென்றால் ஒன்று. முன்பெல்லாம் இரவு இரண்டு மணி வரைக்கும் விழிப்பதுண்டு. கண் உறுத்தல், உடல் வெம்மை என்று பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தந்துவிடுகிறது என்பதால் பனிரெண்டு மணிக்கு மேல் ஒரு நிமிடம் கூட விழிப்பதில்லை. ஜட்ஜ் பலராமய்யா புத்தகத்தை வாசித்த பிறகு திருந்திவிட்டேன். 12.01க்கு கணினி மூடப்பட்டுவிடும்.

வாசிக்காத நாட்களில் படம் பார்ப்பது வழக்கம். fmovies தளம்தான் இருக்கிறதே. வாரத்திற்கு அதிகபட்சம் இரண்டு படங்கள். குறைந்தபட்சம் ஒன்று.

இவை தவிர மிச்சமிருக்கிற வேலைகள் அறக்கட்டளையும், பயணமும். அறக்கட்டளை வேலைகள் பெரும்பாலும் அலைபேசி வழியாகத்தான். அலுவலக நேரத்தில் வருகிற அழைப்புகள் பெரும்பாலானவற்றைத் தவிர்த்துவிடுவேன். பணியின் இடையே சலிப்பாக இருக்குமல்லவா? அத்தகைய சமயங்களில் அலைபேசியை வெளியே எடுத்துச் சென்று தவறவிட்ட அழைப்புகளை எல்லாம் பேசி முடித்தால் வேலையும் ஆன மாதிரி; சலிப்பும் போன மாதிரி. பயணத்திற்குத்தான் சனி,ஞாயிறு இருக்கிறது. வீட்டில் விட்டுவிடுகிறார்கள். பிறகென்ன?

வாழ்க்கை சந்தோஷமாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது.

எப்பொழுதுமே தொலைக்காட்சி பார்ப்பதில்லை. அது எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி. காலை உணவின் போது தினத்தந்தியும், ஹிந்துவையும் புரட்டிவிடுவது வழக்கம். அலுவலகத்தில் எந்நேரமும் ஃபேஸ்புக் திறந்திருக்கும். ஆனால் கண்டுகொள்வதில்லை. நேரம் கிடைக்கும் போது scroll செய்து கொண்டிருப்பேன். 

அதீதமாக வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறவனைப் போல உடான்ஸ் எதுவுமில்லை. இயல்பான வேலைகள்தான். செய்யவே முடியாத வேலையென்றெல்லாம் எதுவுமில்லை. நமக்குப் பிடித்தமான வேலைகளாக இருந்தால் திட்டமிடாவிட்டாலும் கூட நம்மால் எளிதில் செய்துவிட முடியும். பிடித்த வேலைகளாக இருந்து திட்டமிட்டால் இன்னமும் சிறப்பு. மனதுக்குப் பிடித்தால் மட்டுமே வேலைகளைக் கையில் எடுப்பதால் வெறுப்பு எதுவுமில்லை. 

சொல்ல எளிமையாகத்தானே இருக்கிறது? எளிதுதான். மாதமானால் சம்பளம் வந்துவிடுகிறது. குடும்பத்தில் பெரிய பிரச்சினைகள் இல்லை. எளிதாக என்னால் சொல்லிவிட முடிகிறது. எல்லோருக்கும் சாத்தியமில்லை என்றும் தெரியும். தொழில் அழுத்தம், கடன், நோய்மை, குடும்பச் சிக்கல்கள் என்று ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு பிரச்சினைகள் இருக்கக் கூடும். அதனால் ஆளாளுக்கு வேறுபடலாம்.

ஆனால் ஒன்றேயொன்று-

நாம் செய்து கொண்டிருக்கிற ஒவ்வொரு வேலையையும் சமாளித்துக் கொண்டிருக்கிற ஒவ்வொரு பிரச்சினையையும் உலகின் எங்காவது ஒரு மூலையில் வேறு யாராவது சந்தித்துக் கொண்டுதான் இருப்பார்கள். ‘நமக்குத்தான் இந்த தலைவலியெல்லாம்’ என்று நினைத்துக் கொள்வது நம்மை நாமே சலிப்படையச் செய்து கொள்கிற உபாயம். ‘அவனுக்கு மட்டும் எப்படி நேரம் கிடைக்குது’ என்பதும் கூட நம்முடைய திட்டமிடலில் இருக்கும் பிரச்சினைதான். திட்டமிடலிலும் எல்லாவற்றையும் நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதிலும்தான் சூட்சமம் இருக்கிறது. வாழ்க்கையையும் நமக்குக் கிடைத்திருக்கும் நேரத்தையும் so simple என்கிற கோணத்திலிருந்து பார்த்தால் போதும். அவை அப்படித்தான் தெரியும்.

8 எதிர் சப்தங்கள்:

NDM Gopal Krishnan said..."அதீதமாக வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறவனைப் போல உடான்ஸ் எதுவுமில்லை. இயல்பான வேலைகள்தான்"..... யதார்த்தமான நிஜங்கள், இடையில் அதை சற்று அழுத்தமாக சொல்லியிருக்கும் விதம்.... நிசப்தம் ...

ADMIN said...

so simple

இரா.கதிர்வேல் said...

சார் உங்ககிட்ட பிடித்ததே வெளிப்படையா சும்மா நச்சுனு எழுதுறதுதான். உங்கள் பதிவுகளை படிக்கும்போது அந்த பதிவுகளில் ஏதாவது ஒன்று எனக்கு பயனுள்ளதாக க்ளிக் ஆகிவிடும் அதை அப்படியே பிடிச்சுக்குவேன். இந்த பதிவில் அலுவலகத்தில் எப்படி நேரத்தை நிர்வாகம் செய்வதுனு ஒரு புது ஐடியா கிடச்சிருக்கு. நானும் மென்பொருள் துறையில் இருப்பதால் இந்த பதிவு எனக்கு சாலப் பொருத்தமாக அமையும். ஆனால் உங்க அளவுக்கு என்னால் உழைக்க முடியாது அறக்கட்டளை வேலை, எழுத்தாளர், இன்னும் பிற... அதனால் இவைகள் தொடர்பாக நீங்கள் கூறியிருப்பதெல்லாம் என்னை மாதிரி சாதரண ஆட்களுக்கு பொருந்தாது. கட்டுரையில் அலுவலகம் தொடர்பாக சொல்லியிருப்பது பொருந்தும்.

Vinoth Subramanian said...

பிடிச்சி போனா எல்லாமெ ஈசிதான். எழுதுங்க. நாங்க வாசிக்கிறோம்.

சேக்காளி said...

//வாழ்க்கை சந்தோஷமாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது.//

இதுதான் முக்கியம்.

சேக்காளி said...

//ஒழுங்குபடுத்திக் கொண்டேன்.//
இதனால் தான் முடிகிறது.

சேக்காளி said...

//வாசிக்காத நாட்களில் படம் பார்ப்பது வழக்கம்.//
முடிஞ்சா இந்த படத்தை (https://www.youtube.com/watch?v=1vCkI74W3pU )பாருங்க மணி.பார்க்கும் போது வாய் விட்டு நல்லா சிரிச்சேன்.குறிப்பா நாயகனின் போன் ரிங் டோன் ஒலிக்கும் சீன்.என்னா மா கதையோடு நக்கலை பிண்ணி பிசைந்திருக்கிறார்கள்.

ர. சோமேஸ்வரன் said...

See this "Local Kungfu" - ASSAMESE comedy movie in you tube with English subtitles. (https://www.youtube.com/watch?v=oR0OYPdHsAQ)