Apr 6, 2017

யாரிடம் சொல்வீர்கள்?

பெங்களூரில் எங்கள் வீட்டிற்கு அருகாமையில் ஒரு ஏரி இருக்கிறது. அக்கம்பக்கத்து பெரும் கட்டிடங்களின் கழிவு நீரைக் கொண்டு வந்து இறக்கிக் கொண்டிருந்தார்கள். நாற்றம்பிடித்த ஏரி. எப்படியோ போகட்டும்- அது இருப்பதனால் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் இருந்து கொண்டேயிருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பாக ஏரி நீரைத் திறந்து சாக்கடையில் விட்டார்கள். எனக்கு ஒரே அங்கலாய்ப்பு. ஏரி காலி ஆனால் போர்வெல் காலி ஆகும். போர்வெல்லில் தண்ணீர் தீர்ந்து போனால் என்னையுமறியாமல வீட்டில் மற்றவர்கள் குளியலறைக்குள் எவ்வளவு தண்ணீரைத் திருகிவிடுகிறார்கள், பாத்திரம் கழுவ எவ்வளவு நீர் வீணாகிறது, வாசல் தெளிக்க எத்தனை வாளி நீரை ஊற்றுகிறார்கள் என்றெல்லாம் கவனிக்கத் தொடங்கிவிடுவேன். ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்பாக வீட்டில் ஆழ்குழாயில் நீர் இல்லாமல் வாரம் இரண்டு மூன்று முறை லாரியில் தண்ணீர் வாங்கிய போது இப்படித்தான் மனநோய் வந்து கிடந்தேன். அரை வாளியில் நீர் பிடித்து மேலே தெளித்துக் கொண்டு ‘ஆச்சு..குளிச்சாச்சு’ என்று வந்துவிடுவேன். அவ்வளவு கஞ்சத்தனம்.

ஏரியில் நீர் மட்டம் குறைந்து கொண்டே வந்தது. தண்ணீர் அளவு குறையக் குறைய மீன்பிடிக்காரர்கள் வந்து மிச்சம் மீதியிருந்த மீன்களை அள்ளி எடுத்தார்கள். இனி ஏரி அவ்வளவுதான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நீர் மட்டம் முழுமையாகக் குறைந்த பிறகு தூர் வாரி, கரைகளை பலப்படுத்தி, சுற்றிலும் நடப்பதற்கான பாதையை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இனி பூங்கா ஒன்று கூட அமைக்கப் போகிறார்களாம். பெங்களூரு மாநகராட்சி ஆட்கள் ஓய்வின்றி வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ‘அதிகாரிகள் வேலை செஞ்சா விளங்கின மாதிரிதான்’ என்று தமிழகத்தை மனதில் வைத்துக் கொள்ள வேண்டாம். ஒப்பீட்டளவில் தமிழக அதிகாரிகளுக்கு கர்நாடக அதிகாரிகள் எவ்வளவோ தேவலாம். லஞ்ச லாவண்யமெல்லாம் இங்கும் உண்டுதான். ஆனால் பெரும்பாலானவர்கள் வாங்குகிற காசுக்கு ஒழுங்காக வேலையைச் செய்வார்கள். இன்னும் சில நாட்கள் கழித்து ஏரியின் படங்களைக் காட்டுகிறேன்.

இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் மழைப் பருவம் தொடங்கிவிடும். அதற்குள்ளாக பணிகளை முடித்து ஏரியைத் தயார் செய்துவிடுவார்கள் போலிருக்கிறது. இப்படி ஒவ்வொரு வருடமும் சில ஏரிகளைத் தொடர்ந்து பராமரிக்கிறார்கள். அதுவும் முடிந்தளவுக்கு சீராக.

நாம் தேர்ந்தெடுக்கிற ஒன்றிரண்டு குளம் குட்டைகளைக் கூட இப்படித்தான் சுத்தம் செய்ய வேண்டும் என்று ஆசை. இந்தளவுக்கு பணியைச் செய்தால் முன்/பின் என்று படம் எடுத்துப் போட்டால் ஷங்கர் படக் காட்சியைப் போல இருக்கும். ஆனால் நம்மூரில் இவ்வளவு அருமையாகச் செய்வதெல்லாம் சாத்தியமில்லை. ‘வேலி முள்ளை வெட்டி ஏலம் விட்டு அந்தப் பணத்தை டீசலுக்குப் பயன்படுத்திக்குங்க’ என்று நல்ல அதிகாரி சொல்லிவிட்டுச் சென்றுவிடுவார். ஆனால் அதை விற்பதற்குள் தாவு தீர்ந்துவிடும். வேறொரு அதிகாரி வந்து அமர்ந்து மர விற்பனையில் கமிஷன் அடிக்கப் பார்ப்பார். ‘இவனுக ஏலம் விட்டா எழுநூறு ரூபாய் வந்தால் மொத்தமா இவனுக எடுத்துக்குவானுக..நாம ஏலம் விட்டால் நானூறுன்னு அரசாங்கத்துக்குக் கணக்கு எழுதி முந்நூறை சட்டைப்பையில் போட்டுக்கலாம்’ என்று ஆசைப்படுவார். இதையெல்லாம் நேரடியாகப் பார்க்க நேர்கிறது. சிறு துரும்பைக் கிள்ளிப் போடாவிட்டாலும் தொலைகிறது. வந்து குறுக்கே அமர்ந்து கொள்கிறவர்கள் அதிகம். 

அதிகாரிகள் மட்டத்தில் களையெடுக்காவிட்டால் எதுவும் சாத்தியமில்லை. அது எப்படி களையெடுக்க முடியும்? இப்பொழுதுதான் பணி ஆணை பெற ஒரு கட்டணம், மாற்றல் வாங்க ஒரு கட்டணம் என்று நிர்ணயித்துக் கொடுத்துவிட்டு வருகிறார்களே. பணிக்காலத்தில் மீட்டெடுக்க வேண்டாமா? மேலிருந்து கீழே வரை கச்சடாதான். கர்நாடகாவில் காவிரி நதி பாய்கிற வழியில் எல்லாம் குட்டைகளைத் தோண்டி நீரைச் சேகரித்து வைத்திருக்கிறார்கள். நேரிலேயே பார்த்திருக்கிறேன். சிறு சிறு கிராமக் குட்டைகள்தான். ஆற்றில் நீர் ஓடும் போது குட்டைகளை நிரப்பிவிடுகிறார்கள். நிலத்தடி நீர் மட்டம் பெருகுகிறது. இந்த வருடம் கர்நாடகாவிலும் வறட்சிதான். இல்லையென்று மறுக்க முடியாது. ஆனால் தம்மால் முடிந்த பணிகளையெல்லாம் செய்திருக்கிறார்கள். இயற்கை பொய்த்திருக்கிறது. 

நம்மூரில் என்ன வேலைகளைச் செய்திருக்கிறார்கள்? மூச்சுவிடக் கூடாது. மீறினால் தமிழகம்தான் ஜொலிக்கிறது என்று கிளம்பி வருவார்கள். ஜொலித்தோம்தான். ஆனால் நாம் பல துறைகளில் சீரழிந்து சின்னாபின்னமானகிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். கடந்த பத்தாண்டுகளில் நம் ஊர்களில் எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டிருக்கின்றன? யாராவது ஒரு புதிய தடுப்பணையைச் சுட்டிக் காட்டுங்கள். எத்தனை குட்டைகள் புதிதாக வெட்டப்பட்டிருக்கின்றன? வரிசையாகக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். சமீபமாக இருக்கிற குட்டைகளில் குடி மராமத்து பணி என்ற பெயரில் கொள்ளையடிக்கிறார்கள். ஜேசிபியை விட்டு மண்ணை அள்ளி எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். தூர் வாருதல் என்பது பரப்பு முழுவதும் சமமானதாக இருக்க வேண்டும். இவர்கள் ஒரிடத்தில் மட்டும் ஓராள் குழி தோண்டுகிறார்கள். அதே குட்டையில் இன்னோர் இடத்தில் பாறையைக் கூட புரட்டுவதில்லை. தி இந்துவில் சஞ்சீவிகுமார் இது குறித்து ஒரு நல்ல கட்டுரையை எழுதியிருக்கிறார். இப்படிக் குண்டுங்குழியுமாக மாற்றுவதற்கு பெயர் குடிமராமத்துப் பணி. அரசியல்வாதிகளுக்குக் கமிஷன்; அதிகாரிகளுக்கு கமிஷன்; ஒப்பந்ததாரருக்கு லாபம். உள்ளூர்க்காரனுக்கு பெரும் மொட்டை. இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

ஒன்றும் பேசுவதற்கில்லை. ‘இப்படியெல்லாம் நடக்குதுங்க’ என்று யாரிடம் புகார் அளிப்பது? இங்கே யாரிடம் கடிவாளம் இருக்கிறது என்றே தெரியவில்லை. 

சசிகலாவின் செய்தி ஒன்று நேற்றும் இன்றும் கர்நாடக நாளேடுகளில் வந்திருக்கிறது. தமிழில் பிரசுரம் செய்வார்களா என்று தெரியவில்லை. நரசிம்ம மூர்த்தி என்றொருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சிறைத்துறையிடம் சில கேள்விகளைக் கேட்டிருக்கிறார். அதன்படி சசிகலாவுக்கு பார்வையாளர்களைச் சந்திக்க பனிரெண்டு முறை அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. குற்றவாளி என்று தீர்ப்புக்குப் பிறகு சிறையில் இருப்பவர்களுக்கு பதினைந்து நாட்களுக்குத்தான் ஒரு முறை பார்வையாளர்களைச் சந்திக்க அனுமதி என்ற விதி உள்ளதாம். சசிகலா எச்சுல பொறந்த கச்சாயம் என்பதால் இந்த விதி மீறல் போலிருக்கிறது. தம்பிதுரை, தினகரன், செங்கோட்டையன் என்று வரிசையாக வந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். மற்றவர்களுக்கு ஐந்து மணி வரைதான் பார்வையாளர்களைச் சந்திக்க அனுமதி. இவர்களுக்கு ஏழரை மணி வரைக்கும் கூட அனுமதியளித்திருக்கிறார்கள். வாய்ப்பிருந்தால் நரசிம்ம மூர்த்தியைச் சந்தித்துப் பேச வேண்டும்.

கர்நாடக அதிகாரிகள் பரவாயில்லை என்று எழுதிய விரல்களேதான் இதையும் தட்டச்சு செய்கிறது. கண்றாவி. 

அலுவலகத்தில் கன்னடக்காரன் ஒருத்தன் ‘உங்க முதலமைச்சர்தான் தினகரனுக்கு பூத் ஏஜெண்ட்டாமே’ என்கிறான். நம்மவர்கள் வைக்கிற அதே விமர்சனம்தான். இவன் காதுகள் வரைக்கும் எட்டியிருக்கிறது. கிண்டுகிறானாம். முதல்வர்தான் பூத் ஏஜெண்ட், பரப்பன அக்ரஹாராதான் நமக்குத் தலைமைச் செயலகம் என்று எல்லாமும்தான் பேசுவார்கள். கேட்டுக் கொள்ள வேண்டியதுதான். 

2 எதிர் சப்தங்கள்:

Jaikumar said...

http://bangaloremirror.indiatimes.com/bangalore/cover-story/citys-tanker-water-is-unfit-to-drink/articleshow/57978941.cms

சேக்காளி said...

//தமிழில் பிரசுரம் செய்வார்களா என்று தெரியவில்லை//
14 பேர் சந்தித்திருக்கிறார்கள் என தினமலரில் வந்திருந்தது.