என்னது பாடமாக வைத்திருக்கிறார்களா என்ற கட்டுரைக்கு தமிழ்த்துறைத் தலைவர் மகுடீஸ்வரனும், பதிப்பாளர் ஜீவகரிகாலனும் பதில் அளித்திருந்தார்கள். இரண்டையுமே பதிவு செய்வது சரியாக இருக்கும் எனத் தோன்றுகிறது.
ஜீவ கரிகாலன்:
ஆமாம்பா பாடமா தான் வச்சுருக்காங்க.
மணி, அன்றைய தினம் ஆயிரத்து ஐநூறு புத்தகங்கள் வேண்டும்னு சொன்னபோது ஏதோ கலாய்க்கிறார் என்றுதான் நினைத்தேன் . எங்கள் மாமாவின் ஊர் கோபிச்செட்டிப்பாளையம் தான். மாமா வீட்டிற்கு அடுத்த வாரம் வரேன் அவரை நேரில் பார்க்க முடியுமான்னும் கேட்டேன். உண்மைக்கே முழுமையான நம்பிக்கை வரவில்லைதான். நம்மால் சில பத்திரிக்கைகளில் ‘வரப்பெற்றோம்’ பக்கத்தில் கூட புத்தகங்களைக் கொண்டுவர வைக்க முடியலையே இது எப்படி சாத்தியம் என்கிற சந்தேகம் வராமலில்லை.
அப்படி ஒரு வெள்ளிக்கிழமை மாலை கோபி வந்து சேர்ந்து மணியை அழைத்துப் பேசினேன். அவரும் அங்கே வந்து என்னை அழைத்துச் சென்றார்.
பேராசிரியர் மகுடீஸ்வரன் – கோபி அரசு கலைக்கல்லூரியில் – தமிழ்த்துறைத் தலைவர். மிகவும் எளிய மனிதர், இலக்கிய நண்பர்கள் பதிப்பாளர்கள் என பலரும் இவரோடு நேரடி அறிமுகம் கொண்டிருக்கிறார்கள். தமிழில் வந்திருக்கும் சில முக்கியமான நூல்களுக்கு இவரது ஆய்வுகள், வேலைகள் உதவியாக இருந்திருக்கின்றன என்றெல்லாம் தெரிந்து கொண்டேன்.
இங்கே அவரைப் பற்றி பேசுவதற்கு இன்னுமொரு சுவாரஸ்யமான தகவல். அந்த வட்டாரத்திலேயே கோபி கலைக் கல்லூரி மிகவும் பிரசித்திப்பெற்றது. சமீபத்திய மத்திய மனிதவள தகுதிப் பட்டியலில் தேசிய அளவில் ஐம்பத்தேழாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. அந்தக் கல்லூரியில் சீட் கிடைப்பது பெரிய விஷயம் என்பார்கள். பொதுவாகவே தமிழ்துறை என்பது சமகால இலக்கியத்தோடு சற்று இடைவெளி அதிகமாக விட்டிருக்கும் என்கிற கற்பிதம் உண்டு. மகுடீஸ்வரன் தலைவராக இருக்கும் தமிழ்த்துறை சற்று வித்தியாசமானது, நிறைய சமகால எழுத்தாளர்கள் அந்தக் கல்லூரிக்கு வந்து சென்றிருக்கிறார்கள், அவர்களின் புத்தகங்களும் நூலகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது, இதைவிட முக்கியமான அம்சம் தமிழ்த்துறையில் கல்வெட்டியல் ஆய்வு ஒருபாடமாக இருக்கிறது.
கோபியைச் சுற்றியிருக்கும் வட்டாரப்பகுதியில் கிடைக்கின்ற கல்வெட்டுகள், சிலைகளைக் கொண்டு அவர் துறை சார்பாக கல்லூரியில் ஒரு கலைக்கூடம் ஒன்று நிறுவப்பட்டிருக்கிறது. மாணவர்களை ஆர்வமோடு ஈடுபடுத்தச் செய்கிறார். வா.மவைக் கூட வரலாற்று ரீதியிலான சில கட்டுரைகளை எழுதச்சொன்னார். ஆனால் அவர் இன்னும் அதை கேட்ட பாடில்லை.
மாணவர்களுக்கு புத்தகங்களைக் கொண்டு சேர்ப்பது கடினமான காரியமாக இருக்கும் போது, அது அவர்கள் வாசிக்க உகந்ததாய் இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது அல்லவா? ஆகவே மூன்றாம் நதியை அவர் அவ்வாறு கண்டடைந்ததாகச் சொல்லும் போது குடித்துக்கொண்டிருந்த சாதா டீ, ஸ்பெசல் டீ ஆனது. இது போன்ற ஒரு வாய்ப்பு தான் நம்பிக்கையை மட்டுமே கொண்டிருக்கும் எங்களைப் போன்ற சிறு பதிப்பங்களுக்கு பாதையை புலனாக்கும் செயல். பாரபட்சமின்றி இதுபோன்ற செயல்கள் மூலம் வாய்ப்பளிப்பவர்கள் தான் மிகப்பெரிய மாற்றங்களுக்குக் காரணமாய் இருப்பவர்கள். ஆனால் இவற்றின் எந்தத் துளியும் தன்மீது ஏற்றிக்கொள்ளாத எளிமை, கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது என்று தோன்றச் செய்யும்.
மாணவர்கள் வாசிக்கிறார்கள் என்கிற ஃபீட்பேக் கிடைக்கும் போது, இந்த சந்தோஷம் பன்மடங்கு அதிகரிக்கும். சென்ற புத்தகக்கண்காட்சியில் வாங்கிய ஊமைக்குத்துகளுக்கு எல்லாம் நிவாரணமாக மீண்டும் வா.மணிகண்டனிடமிருந்தே எங்களுக்கு. புத்தகம் அச்சுக்கு ஏப்ரல் 14க்குப் பிறகு செல்கிறது.
இப்படியொரு வாய்ப்பளித்த பேராசிரியருக்கு நன்றி ! தொடர்ந்து எங்களோடு பயணிக்கும் வா.மவுக்கும் எங்கள் நன்றி
பேராசிரியர் மகுடீஸ்வரன்:
முடிந்தவரை எல்லோரும் படித்துப்பார்த்த பின்தான் திருப்தியில் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. பரிந்துரைகள் இல்லை. க.சீ.சிவகுமார், ராம், கீரனூர் சாகிர்ராசா என பல எழுத்தாளர்களின் கதைகள் முதலில் இங்குதான் பாடமாக வைக்கப்பட்டது. அந்த வரிசையில் இன்னொரு பெருமை மணிகண்டன்.
3 எதிர் சப்தங்கள்:
வாழ்த்துக்கள் மணி.
வாழ்த்துக்கள்
Congratulations
Its yet another feather on your cap.
Post a Comment