Apr 5, 2017

என்னது பாடமாக வைக்கிறார்களா?

உள்ளூர் சரக்கு விலை போகாது என்பார்கள். அப்படி உறுதியாகச் சொல்லிவிட முடியாது. சமீபத்தில் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் மகுடீசுவரன் அழைத்திருந்தார். தன்னாட்சிக் கல்லூரி அது. அக்கம்பக்கத்தில் புகழ்பெற்ற கல்லூரியும் கூட.

‘ஒரு விஷயம் பேசணும்’ என்றார். 

‘சொல்லுங்க சார்’

‘மூன்றாம் நதி நாவல் படிச்சேன்..இந்த வருஷத்திலிருந்து முதலாமாண்டு மாணவர்களுக்கு அதைப் பாடத்திட்டமாக வெச்சுக்கலாமா?’ என்றார். இந்த வரியைப் படிக்கும் போது நீங்கள் அதிர்ந்திருக்கக் கூடும் என்று அனுமானிக்க முடிகிறது. ஏனென்றால் நானும்தான் அதிர்ந்தேன். எழுதிய முதல் நாவல் ஒரு கல்லூரியில் பாடமாக வைக்கப்படுகிறது- அதுவும் உள்ளூர் கல்லூரியிலேயே. இதைவிடவும் வேறு என்ன அங்கீகாரம் வேண்டும்?  பெரும்பாலும் ஆண்களின் மனம் உள்ளூர் அங்கீகாரத்தைத்தான் விரும்புகிறது. அப்பா இருந்திருந்தால் வெகுவாக மகிழ்ந்திருப்பார்.

‘மகிழ்ச்சி சார்’ என்றேன். 

நாவல் எளிமையாக இருப்பதும், பக்கங்கள் குறைவாக இருப்பதையும் அவர்கள் பெருமளவு எதிர்பார்க்கிறார்கள். முன்பு சில நாவல்களை பாடத்திட்டத்தில் சேர்த்திருந்த போது மாணவர்களுக்கு தனியாக குறிப்பு எழுதி விளக்க வேண்டியிருந்ததாகவும் முந்நூறு அல்லது நானூறு பக்கங்களில் நாவல் இருந்தால் மாணவர்கள் படிப்பதற்கு பெரும் தயக்கம் காட்டியதாகவும் சொன்னார். 

பதிப்பாளர் ஜீவகரிகாலனின் தொடர்பு எண்ணை அவரிடம் கொடுத்துவிட்டு வந்திருந்தேன். அவரை தமிழ்த்துறை தலைவர் அழைத்து ‘ஆயிரத்து ஐநூறு பசங்க முதல் வருஷப் படிப்புகளில் சேருவாங்க...அதனால ஆயிரத்து ஐநூறு பிரதிகள் அடிச்சு ஜூன் மாசத்துக்குள்ள கொடுக்க முடியுமா?’ என்று கேட்டிருக்கிறார். கரிகாலன் நம்பவில்லை. யாரோ கலாய்க்கிறார்கள் என்று கூட நினைத்திருக்கக் கூடும்.

என்னை அழைத்து ‘பாஸ்..இதெல்லாம் கனவா? நிஜமா?’ என்றார். பதிப்பாளருக்கு நக்கல் அதிகம். அவர் அப்படித்தான். ‘இவன் புக் எப்படி ஆயிரக்கணக்குல விக்குது..இவனே ஆள் செட் செஞ்சு வாங்கிக்குவானோ’ என்று கூட நினைக்கக் கூடிய ஆள். அதனால் நானும் கண்டு கொள்வதில்லை.

மூன்றாம் நதி புத்தகம் வெளியான தருணத்தில் தினமலரில் நாவல் குறித்து தூயன் எழுதினார். தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல்கள் எனக்கு வந்தன. எல்லாவற்றையும் நிசப்தத்தில் பதிவு செய்திருக்கிறேன். அதோடு சரி. வேறு எந்தச் சலனமும் இல்லை. பொதுவாக, யாரும் கண்டுகொள்ளவில்லையென்றால் நாவல் மொக்கை என்று கூட எடுத்துக் கொள்ளலாம் அல்லது அரசியல் என்றும் எடுத்துக் கொள்ளலாம். நாமாகவே சென்று விமர்சனக் கூட்டங்கள் நடத்தச் சொல்லி அடுத்தவர்களிடம் கேட்டுக் கொண்டேயிருப்பது, புத்தகத்தை எழுதியவனே ஒரு விருது பாக்கியில்லாமல் எல்லாவற்றுக்கும் அனுப்பி வைப்பதெல்லாம் அவசியமில்லாத செயல்கள். அதுவொரு வன்முறையும் கூட. ஒவ்வொருவருக்கும் புத்தகத்தைக் கொடுத்து அலைபேசியில் அழைத்தும் மின்னஞ்சல் அனுப்பியும் ‘படிச்சிட்டீங்களா? ஒரு குறிப்பு எழுதுங்க’ என்றெல்லாம் நச்சரிப்பது பாவச் செயல். நிசப்தம் இருப்பதாலேயே என்னவோ இதையெல்லாம் நான் செய்யவில்லை.

வாசிக்கிறவர்கள் வாசிக்கட்டும். இல்லையென்றால் யாருக்கும் எந்த நஷ்டமும் ஆகிவிடப் போவதில்லை. 

இனி ஆயிரத்து ஐநூறு கல்லூரி மாணவர்கள் மூன்றாம் நதி நாவலை வாசிக்கப் போகிறார்கள். அடுத்த மூன்று வருடங்களாகவது பாடமாக இருக்குமாம். ஆக, நான்காயிரத்து ஐநூறு மாணவர்கள். பாதிப் பேர் படிக்காமல் பிட் அடித்துக் கொள்ளலாம் என்று நம்பினாலும் கூட மீதிப் பேராவது படிப்பார்கள் அல்லவா? ஊருக்குச் செல்லும் போதெல்லாம் கல்லூரிக்குச் சென்று மாணவர்களிடம் உரையாடி அவர்களின் கருத்துக்களைத் தெரிந்து கொள்வேன். அதே கல்லூரியில் நாற்பது நாட்கள் படித்திருக்கிறேன். இளங்கலை இயற்பியல் சேர்த்துவிட்டிருந்தார்கள். பின்னர் கலந்தாய்வில் பொறியியல் படிப்பு கிடைத்ததும் விட்டுவிட்டு வந்துவிட்டேன். தினசரி காலையில் மிதிவண்டியில் கல்லூரிக்குச் சென்று மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்து சென்று கொண்டிருந்தேன். 

இப்பொழுது வீட்டில் மிதிவண்டி இல்லை. ஆனால் அப்பாவின் டிவிஎஸ் 50 இருக்கிறது. 

‘நம்ம ஊர் பையன்..எழுதிட்டு இருக்கான்’ என்று யாரோ கல்லூரி நிர்வாகத்திடம் பரிந்துரைத்திருக்கக் கூடும். பரிந்துரைத்தவருக்கு நன்றி. கல்லூரியின் செயலர் உள்ளிட்ட மேலாண்மைக் குழுவுக்கும், நண்பர் குமார் பழனிசாமிக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

முதல் கவிதைத் தொகுப்பு வெளிவரத் தயாராகிக் கொண்டிருந்த சமயத்தில் ‘புத்தகம் வெளியானால் எப்படியும் பிரளயம் வந்துவிடும்’ என்று நம்பினேன். அந்தத் தொகுப்பு புத்தகக் கண்காட்சியில் மூன்று பிரதிகள் கூட விற்கவில்லை என்று தெரிய வந்த போது கூழாங்கற்கள் தொண்டைக்குள் சிக்கியது போல விக்கிக் கிடந்தேன். பல வருடங்களுக்குப் பிறகு மூன்றாம் நதி எழுதிய போது ஒரு வெங்காயமும் உரியாது என்று எனக்கே தெரியும். ஆனால் நாவலை பாடமாக வைக்கிறார்கள் என்று சொன்னால்தான் பிரளயம் வரக் கூடும். வரட்டும். வரட்டும். இப்படித்தான் நடக்க வேண்டும் என்றிருந்தால் விதியை யாரால் மாற்ற முடியும்?

என்னை நெருக்கமானவனாக உணர்ந்து மகிழும் அத்தனை பேருக்கும் நன்றி. 

16 எதிர் சப்தங்கள்:

இரா.கதிர்வேல் said...

வாழ்த்துகள் சார். உண்மைதான். பக்கங்கள் குறைவாக இருந்ததால் ஒரு ஞாயிற்றுக்கிழமையின் மாலை வேலையிலேயே படித்து முடித்தேன் மூன்றாம் நதி நாவலை. பக்கங்கள் குறைவாக இருப்பதால் மாணவர்களுக்கும் படிப்பதற்கு எளிமையாக இருக்கும்.

Unknown said...

Mani Anna,

We are waiting for your next novel.

With Regards
Boopathi.V

vic said...

வாழ்த்துகள்

Senthil Prabu said...

வாழ்த்துகள் நண்பரே!!

lakshmi said...

வாழ்த்துக்கள் ��

முனைவர் இரத்தின.புகழேந்தி said...

மிக்க மகிழ்ச்சி நண்பரே. வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுவதற்கு இதுபோன்ற அங்கீகாரங்கள் ஊக்கமளிக்கும்

Trade said...

Wowww..Congrats Mani :-)

Saravanan Sekar said...

Read your novel during my vacation in India, reading pleasure guaranteed but I felt its too short. After reading, I gave it to my father, he liked the novel.

Happy to know that novel is chosen for including in First year syllabus! Its perfect for non-detailed story...

Unknown said...

I am very happy Bro��

Bala said...

Congrats Mani !!

Unknown said...

உங்களின் எழுத்து நடை தொடர்ந்து வாசிக்க வைக்கிறது. நன்றி

Babu said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் - பாபு

Mother's Organic Farm said...

Hearty congratulations. It is an acknowledgement of your sincere writing.

Jaypon , Canada said...

Happy for you.

சேக்காளி said...

அட

Ravi said...

Heartiest congratulations Mani!