Apr 22, 2017

ஒன்றே முக்கால் துளி

ஓரிரு மாதங்களுக்கு முன்பாக பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிறைய பத்திரிக்கையாளர்கள் வந்திருந்தார்கள். அவர்களிடம் ‘நாங்கள் செய்து கொண்டிருக்கும் எந்தச் செய்தியும் பத்திரிக்கையில் வர வேண்டாம். செய்திகளை வெளியிடச் சொல்லியும் உங்களைச் சந்திக்கவில்லை. ஓர் அறிமுகத்துக்கான சந்திப்புதான் இது. ஜூன் மாதம் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை ஆரம்பமாகும். தகுதியான மாணவர்களின் கோரிக்கை வந்தால் சொல்லுங்கள்’ என்றுதான் பேசினேன். இதை வெளிப்படையாக எழுத வேண்டியதில்லை என நினைத்திருந்தேன். ஆனால் எழுத வேண்டும் போலிருக்கிறது.

இதுவரையிலும் எப்படிக் கணக்குப் போட்டாலும் கிட்டத்தட்ட எழுபத்தைந்து லட்ச ரூபாய்க்கான பணிகளையாவது நிசப்தம் அறக்கட்டளை வழியாகச் செய்திருக்கிறோம். கடலூர் சென்னை வெள்ள சமயத்தைத் தவிர வேறு எப்பொழுதும் துண்டுச் செய்தி கூட நாளிதழ்களில் வந்ததில்லை. வெள்ளத்தின் போதும் கூட பத்திரிக்கையாளர்களாக வந்து பார்த்து எழுதியவைதான். பத்திரிக்கைகளில் செய்தி தர முடியாது என்றில்லை- அவசியமில்லை என்கிற எண்ணம்தான்.

இத்தகைய விளம்பரங்களும் செய்திகளும் நம்மைப் பற்றிய எந்தப் புரிதலுமில்லாத ஒரு கூட்டத்துக்கு தேவையில்லாத எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும். அப்படியான விளம்பரங்களின் வழியாக நம்மைப் பற்றித் தெரியாதவர்களுக்கு நாம் உருவாக்கக் கூடிய எதிர்பார்ப்புகளும் குழப்பங்களை உண்டாக்கக் கூடியவை. நிசப்தம் என்பது சிறு வட்டம். அது மெல்ல மெல்ல விரிவடையட்டும். அப்படி மெல்ல விரிவடையும் போது நம் வட்டத்திற்குள் இருக்கும் அத்தனை பேருக்குமே நமது செயல்பாடுகள் குறித்தான பரிச்சயம் இருக்கும். அப்படியான புரிதல் மிகுந்தவர்களுக்குள் செயல்படுவதுதான் திருப்தியும் சந்தோஷமும்.

அதனால்தான் அதீத வெளிச்சமும் பத்திரிக்கைச் செய்திகளும் தேவையற்றவை என நினைக்கிறேன். 

நாம் செய்து கொண்டிருக்கிற காரியங்களை வெளிப்படையாகவும் அதே சமயம் விரிவாகவும் அடுத்தவர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய தேவை இருக்கிறதுதான். ஆனால் எதையெல்லாம் சொல்ல வேண்டும், யாரிடம் சொல்ல வேண்டும் என்கிற அளவீடுகள் இருக்கின்றன. முன்னிலைப்படுத்த வேண்டியவற்றை முன்னிலைப்படுத்தியும், நம்மை ஒளித்துக் காட்டிக் கொள்ள வேண்டிய இடத்தில் ஒளித்துக் காட்டிக் கொள்வதும் அவசியமாக இருக்கிறது. செய்தித்தாள்களிலும் நாளிதழ்களிலும் விளம்பரம் செய்து கடை பரப்ப வேண்டியதில்லை. இத்தகைய காரியங்களை அப்படியான விளம்பரத்திற்கு செய்வதாக இருப்பின் செய்கிற முறையும் அணுகுமுறையுமே வேறாக இருக்கும். ட்யூப்லைட்டில் ‘உபயம்: பெருமாள் சாமி, மூலைக்கடை வீதி, தூக்கநாய்க்கன்பாளையம்’ என்று செல்போன் எண்ணோடு எழுதுவதற்கும் நாளிதழ்களில் ஜிகினா ஒட்டுவதற்கும் பெரிய வித்தியாசமில்லை என்று நம்புகிறேன்.

வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால் இதுவரைக்கும் விசிட்டிங் கார்ட், லெட்டர் பேட் என்று கூட எதுவும் வைத்துக் கொண்டதில்லை. அதுவே கூட மறைமுகமான விளம்பரம்தானே? பகட்டோடும் விளம்பரத்தோடும் காரியங்களைச் செய்தால் அடுத்தடுத்து செய்கிற ஒவ்வொரு காரியத்திலும் மனம் விளம்பரத்தைத்தான் எதிர்பார்க்குமே தவிர, திருப்தியை எதிர்பார்க்காது. 

நிசப்தம் எப்படிச் செயல்படுகிறது என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான். நன்கொடையாளர்களிடமிருந்து வருகின்ற நிதியை வைத்துக் கொண்டு நாம் முடிவு செய்யும் திட்டங்களுக்கு பணம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. (Crowd funding). இதுவரையிலும் ‘இந்தக் குறிப்பிட்ட பணிக்கு இந்த நிதியை ஒதுக்குங்கள்’ என்று எந்த நன்கொடையாளரும் சொன்னதில்லை. நானும் அதைச் செய்ததில்லை. சமீபத்தில் அப்படி ஒரு காரியத்தை ஒத்துக் கொண்டேன். அதைப் பற்றி விரிவாகப் பேச விரும்பவில்லை. 

ஒவ்வொரு களமும் ஒரு அனுவம்தான். இனிமேல் இப்படி ஒத்துக் கொள்ளப் போவதில்லை. அவரவரவருக்கு அவரவர் விருப்பங்கள். சிலருக்கு நிழற்படங்கள் அவசியமாக இருக்கும். சிலருக்கு பத்திரிக்கைகளில் செய்தி வர வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். வாட்ஸப்பிலும் ஃபேஸ்புக்கிலும் பரவ வேண்டும் என்று விரும்புவார்கள். அவரவருக்கான நிர்பந்தங்கள், அபிலாஷைகள் அவை. அதற்கெல்லாம் நாம் முதுகைக் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. நமது நோக்கமும் எண்ணமும் கூட திசை மாறிவிடக் கூடும். 

எந்த எதிர்பார்ப்புமில்லாமல் அமைதியாக தோள் கொடுக்கக் கூடிய மனிதர்கள் பல நூறு பேர்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் நமக்குச் சரி. அவர்கள் போதும். எப்பொழுதும் சொல்வது போல - நிசப்தம் என்பது பணத்தை வாங்கிக் கொண்டு வேலை செய்து தரும் NGO இல்லை. 

நேற்று வந்திருந்த மின்னஞ்சல் இது- 

அன்புள்ள மணி,

முன்பே சொன்னது போல ரூ 1,10,000 நிசப்தம் அறக்கட்டளைக்கு அனுப்பி உள்ளேன். சரி பார்த்துக் கொள்ளவும். வேலைப் பளு காரணமாக இந்த தாமதம். வழமை போல பெயர் மறைத்து விடவும்.

நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துப் பணிகளையும் இறைவன் துணையிருந்து வழிநடத்தவும், உங்கள் குடும்பத்தை ஆசிர்வதிக்கவும் மனதார வேண்டுகிறேன்.

அன்புடன்,
***

தமது பெயரைக் கூட வெளியில் காட்டிக் கொள்ள விரும்பாத மனிதர்களும் இருக்கிறார்கள். இத்தகையவர்களை நினைத்துக் கொள்கிறேன். இவர்களால்தான் ஒன்றே முக்கால் துளியாவது மழை பெய்கிறது.

1 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துப் பணிகளையும் இறைவன் துணையிருந்து வழிநடத்தவும், உங்கள் குடும்பத்தை ஆசிர்வதிக்கவும் மனதார வேண்டுகிறேன்.//
அதையே நானும் சொல்லிக் கொள்கிறேன்.