Apr 4, 2017

என்ன செய்கிறோம்?

வேமாண்டம்பாளையம் பஞ்சாயத்து குளம் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. அறுபது ஏக்கருக்கும் மேலான பரப்பு கொண்ட குளம் அது. தவிரவும், அஞ்சானூர் உள்ளிட்ட கிராமத்துக் குட்டைகள் ஜேசிபி எந்திரத்தினால் சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதுவரைக்கும் ஒரு லட்ச ரூபாய்க்கான வேலை நடைபெற்றிருக்கிறது. வேமாண்டம்பாளையம் கிராம பஞ்சாயத்தில் வடுகபாளையம், குளத்துப்பாளையம் உள்ளிட்ட கிராமங்கள் இடம் பெறுகின்றன. தமிழகத்தில் பெரும்பாலான கிராம பஞ்சாயத்துக்கள் இப்படித்தான். ஒன்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் இணைக்கப்பட்டிருக்கும். இந்தப் பஞ்சாயத்தில் இருக்கும் அனைத்துக் குளம் குட்டைகளைச் சுத்தம் செய்த பிறகு புறம்போக்கு நிலங்களைச் சுத்தம் செய்யும் வேலை ஆரம்பமாகியிருக்கிறது. 

குளத்துப்பாளையம், அஞ்சானூர், வடுகபாளையம் உள்ளிட்ட ஒவ்வொரு கிராமத்திலும் வேலை நடைபெறும் போது கிராம மக்களே ஐந்தாறு பேர்கள் சேர்ந்து வந்து நின்று பணியைப் பார்த்துக் கொள்கிறார்கள் என்பதால் நமக்கு பெருமளவு பணிச்சுமை குறைந்திருக்கிறது. உள்ளூரில் மாணிக்கம் மேற்பார்வை செய்து கொள்கிறார். பொதுப்பணித்துறை அலுவலகத்திலிருந்து ஓர் ஊழியர் தினசரி வந்துவிடுகிறார். அது போக பஞ்சாயத்து அலுவலகமும் வேலையை கவனித்துக் கொள்கிறது. தன்னார்வலர்களாக அரசு தாமஸ், கார்த்திகேயன், அபிலாஷ் ஆகியோர் அவ்வப்போது சென்று வருகிறார்கள். நீதிபதி தொடர்ந்து விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்கிறார். எல்லோருமாகச் சேர்ந்து கணக்கு வழக்குகளைத் துல்லியமாக பராமரிக்கிறார்கள். அவ்வப்பொழுது அழைத்தும் சொல்லிவிடுகிறார்கள். வேலை முழுமையாக முடிந்தவுடன் விவரத்தை பதிவு செய்கிறேன்.

ஜேசிபிக்கு ஒரு மணி நேரத்துக்கு எழுநூறு ரூபாய் என்று தொடக்கத்தில் பேசப்பட்டிருந்தது. தமிழகம் முழுக்கவுமே இதுதான் கணக்கு. சில ஊர்களில் எந்நூறு தொள்ளாயிரம் ரூபாய் கூட வாங்குகிறார்கள் போலிருக்கிறது. மாணிக்கமும் உள்ளூர் பெரியவர்களும் ஜேசிபி வண்டிக்காரரை அழைத்து ‘ஏம்ப்பா வெளியூர்க்காரங்க வந்து நம்மூருக்கு வேலை செஞ்சு தர்றாங்க..நீ என்ன ஒரே புடியா நிக்குற’ என்று பேரம் பேசியிருக்கிறார்கள். அவர் டீசல் விலை ஏறிவிட்டது என்று ஏதேதோ காரணங்களைச் சொல்லியிருக்கிறார். கடைசியாக, ஒரு மணி நேரத்துக்கு அறுநூற்றியிருபத்தைந்து ரூபாய் என்று முடிவுக்கு வந்திருக்கிறார்கள். ஒரு மணி நேரத்துக்கு எழுபத்தைந்து ரூபாய் மிச்சம். எனவே ஏற்கனவே திட்டமிட்டத்தை விட பெருமளவு செலவு குறையும் என்ற நம்பிக்கையிருக்கிறது. 

ஏற்கனவே உறுதியளித்திருந்தது போல நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. அதே பஞ்சாயத்தில் பிற பகுதிகளைச் சுத்தம் செய்தல், பள்ளிக்கூடம், மயானம் ஆகிய பொதுவிடங்களில் வளர்ந்திருக்கும் சீமைக்கருவேல மரங்களை அழித்தல் ஆகிய வேலைகளுக்கு இந்தத் தொகை பயன்படுத்தப்படும். ஒருவேளை கிராமம் முழுக்கவும் சுத்தம் செய்யப்பட்ட பிறகும் பணம் மிச்சமிருந்தால் அடுத்த பணியைத் திட்டமிட வேண்டும். எவ்வளவு மிச்சமாகும் என்றோ தொகை முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுவிடுமா என்று இப்பொழுது சொல்ல முடியவில்லை. வேலை தொடர்ந்து நடக்கட்டும். ஒரு வாரம் கழித்து முடிவு செய்து கொள்ளலாம்.

இன்று வேமாண்டம்பாளையம் சென்று வந்தவர்கள் அழைத்துப் பேசினார்கள். ‘அருமையாக பணி முடிந்திருக்கிறது’ என்றார்கள். திருப்தியாக இருக்கிறது. வேமாண்டம்பாளையத்திற்கு சென்று வர முடியும் என்று யாருக்காவது தோன்றினால் ஒரு எட்டு பார்த்துவிட்டு வந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இடங்களை அழைத்துச் சென்று காட்டுவதற்கும் உள்ளூரில் யாரையாவது ஏற்பாடு செய்கிறேன்.

நிழற்படங்களை பார்வைக்கு இணைக்கிறேன்.




வெயில்தான் மண்டையைப் பிளந்து கொண்டிருக்கிறதாம். ஆனாலும் தொடர்ந்து சுத்திகரிப்பு வேலை நடந்து கொண்டேயிருக்கிறது. இன்னமும் ஒரு வாரத்திற்கு பணி நடைபெறும் போது ஊர் முழுமையாகத் தயாராகிவிடும். நாமும் தயார். மழை மட்டும்தான் பாக்கி. வருணன் கருணை காட்ட வேண்டும். பெருமழை ஒன்று பெய்தாலும் கூட போதும். குளம் குட்டைகளுக்கு நீர் வந்து சேர்ந்துவிடும். எப்பொழுது பெய்யும் என்றுதான் தெரியவில்லை.

கடும் வறட்சியில் ஒரு வேலையை ஒழுங்காகச் செய்திருக்கிறோம். அதற்குப் பரிசாக கடவுளிடம் மழையை மட்டும்தான் கேட்கத் தோன்றுகிறது. இப்போதைக்கு அது மட்டும்தான் ஒரே எதிர்பார்ப்பு.

தொடர்பான முந்தைய பதிவுகள்:

4 எதிர் சப்தங்கள்:

Elavarasi said...

Excellent Mani Sir :)

Itsdifferent said...

Congratulations, and appreciate all you guys are doing.
When I read your last line requesting rain from GOD, I thought of this post from a long time ago. See if it makes sense in this situation, and can be implemented to capture water from nearby areas.
http://www.badriseshadri.in/2012/01/blog-post_3735.html
http://www.badriseshadri.in/2012/01/2_23.html

NAGARATHAN said...

கடல் கடந்து இருக்கின்றோம். ஆனாலும் எங்கள் உள்ளம் தமிழகத்தைச் சுற்றியே இருக்கிறது. தங்களை போன்றவர்கள் முன்னெடுக்கும் பணிகளைப் பார்க்கும்போது நிச்சயம் வருணன் மனம் கனிவான் என்ற நம்பிக்கை இருக்கிறது. நல்லதே நடக்கும்.

Saravanan Sekar said...

Kudos to you & Nisaptham people & all other involved people for making this happen..
Though, I am in abroad , thoughts are with this kind of activities. Surely, will take part in field work in the future..